Sunday, 31 March 2024

கிங்கர ஹதம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 42 (43)

Kinkaras killed | Sundara-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை விசாரித்து, ராவணனிடம் தகவல் தெரிவித்த ராக்ஷசிகள்; ராவணன் அனுப்பிய கிங்கரர்கள்; எண்பதாயிரம் கிங்கரர்களைக் கொன்ற ஹனுமான்...

Hanuman attacking Kinkaras

அப்போது, பக்ஷிகளின் {பறவைகளின்} நாதத்தையும், விருக்ஷங்கள் {மரங்கள்} முறியும் ஸ்வனத்தையும் கேட்ட சர்வ லங்காவாசிகளும் திகிலுடன் கூடிய குழப்பத்தையடைந்தனர்.(1) பயத்தால் திகிலடைந்து, அங்குமிங்கும் ஓடிய மிருகபக்ஷிகள் கூச்சலிட்டன. இராக்ஷசர்களின் முன்னிலையில் குரூரமான நிமித்தங்கள் {கொடிய சகுனங்கள்} தோன்றின.(2) நித்திரையில் ஆழ்ந்திருந்தவர்களும், விகார முகம் படைத்தவர்களுமான ராக்ஷசிகள், வீரனான அந்த மஹாகபியால் {பெருங்குரங்கான ஹனுமானால்} பங்கமடைந்த அந்த வனத்தைக் கண்டனர்.(3) மஹாபாஹுவும், மஹாசத்வனும், மஹாபலவானுமான அவன் {பெரும் தோள்களையும், பெருந்துணிவையும், பெரும்பலத்தையும் கொண்டவனான ஹனுமான்}, அந்த ராக்ஷசிகளைக் கண்டு, அவர்களை பயமுறுத்தும் வகையிலான மஹத்தான ரூபத்தை ஏற்றான்.(4)

இராக்ஷசிகள், மஹாபலத்தையும், கிரிக்கு ஒப்பான பேருடலையும் கொண்ட அந்த வானரனைக் கண்டபோது, ஜனகாத்மஜையிடம் {சீதையிடம் பின்வருமாறு} கேட்டனர்:(5) "இவன் யார்? யாருடையவன்? எங்கிருந்து வந்தவன்? எதன் நிமித்தம் இங்கே இவன் வந்திருக்கிறான்? மேலும், உன்னுடன் அவன் என்ன பேசினான்?(6) விசாலாக்ஷியே, எங்களுக்குச் சொல்வாயாக. பாக்கியவதியே, பயம் வேண்டாம். கறுத்த கடைக்கண்களைக் கொண்டவளே, உன்னிடம் அவன் என்ன பேசினான்?" {என்று கேட்டனர்}.(7)

அப்போது, சாத்வியும், சர்வாங்க சுந்தரியுமான {கற்புடையவளும், அங்கங்கள் அனைத்திலும் அழகமைந்தவளுமான} சீதை, பின்வருமாறு சொன்னாள், "பீம ரூபங்களுடன் {பயங்கர வடிவங்களுடன்} கூடிய ராக்ஷசர்களைக் குறித்து அறிவதற்கு எனக்கு என்ன கதியிருக்கிறது?(8) அவன் யார்? என்ன செய்கிறான்? என்பன குறித்து உங்களுக்கு மட்டுமே தெரியும். பாம்பின் பாதம் பாம்புக்கு மட்டுமே தெரியும். இதில் சந்தேகமில்லை.(9) நானும் அவனால் பீதியடைந்திருக்கிறேன். அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே வந்தவன் காமரூபியான ராக்ஷசன் {விரும்பிய வடிவை ஏற்கவல்ல ஒரு ராட்சசன்} என்பது மட்டும் எனக்குத் தெரியும்" {என்றாள் சீதை}[1].(10)

[1] தர்மாலயப் பதிப்பில், "இஷ்டமானபடி உருவங்களை எடுக்கவல்ல அரக்கர்களின் காரியத்தில் தலையிட்டுக் கொள்ளல் எனக்கு ஏன்? எந்த இவன் இதை செய்யப்போகிறானோ, அதை நீங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டியது; வழிப்போக்கனுடைய காலடி வைப்புகளை கொடியன் தப்பாமல் விசாரித்தறிந்தேவிடுவான்; ஸந்தேகம் வேண்டாம். இங்கு வந்திருக்கிற இவனை அரக்கர்களின் இயல்பை ஒத்த இஷ்டமானபடி உருவங்களெடுக்கவல்லவனாய் அறிகிறேன். இவன் எம்மட்டுடையான் என்று இவனை அறிகிலேன். நானும் இவன் விஷயத்தில் கவலை கொண்டவளாய் இருக்கிறேன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "தம் விருப்பப்படி உருவம் எடுக்கக்கூடிய அரக்கர்களின் வினைநுட்பங்களை நான் எவ்வாறு அறிவேன்? இவன் யார்? என்னதான் செய்யப் போகிறான்? என்பதை நீங்கள்தான் அறிவீர்கள். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதில் சந்தேகமில்லை. நானும் இவனைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறேன். இவனை நான் அறியேன். இவன் யாரோ? இங்கு வந்திருக்கும் இவனை, இஷ்டம்போல் உருவம் எடுக்கவல்ல ராட்சஸனாகவே கருதுகிறேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராக்ஷஸர்கள் பயங்கரமான நானாவித உருவங்களைத் தரிக்கவல்லவர்; அப்படிப்பட்டவர்களை அறிதற்கு எனக்கு எப்படி முடியும்? பாம்பின் கால் பாம்புக்கே தெரியுமன்றி மற்றெவர்க்குந் தெரியாது; அங்ஙனமே நீங்களும் ராக்ஷஸர்களாகையால் ராக்ஷஸர்களின் ஸங்கதி உங்களுக்கே தெரியும். ஆகையால் இவன் எப்படிப்பட்டவனோ எந்தக் கார்யத்தை இவன் செய்வானோ அதெல்லாம் உங்களுக்கே தெரியும். இதில் ஸந்தேஹம் இல்லை. இவனைப் பார்த்து நானுங்கூடப் பயந்திருக்கின்றனன். இவன் எவனோ எனக்குத் தெரியவில்லை. இவன் யாவனோ நீங்கள் எனக்கு மொழிவீராக. இவனைக் கண்டால் காமரூபியாகிய ராக்ஷஸனெவனோ இவ்வானரரூபந்தரித்து வந்தானென்று தோற்றுகிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "'விவாஹகாலே ரதிஸம்ப்ரயோகே ப்ராணாத்யயே ஸர்வதநாபஹாரே மித்ரஸ்ய சார்தே ப்யந்ருதம் வதேத பஞ்சாந்ருதான்யாஹுரபாதகானி' என்னும் ப்ரமாணத்தின்படி ஸ்னேஹிதனை ரக்ஷிக்கும் பொருட்டுப் பொய்சொல்வது பாபமன்றாகையால் சீதை இங்கு ஹனுமான் விஷயத்தில் பொய் பேசினாளென்று தெரிகிறது" என்றிருக்கிறது. மஹாபாரதம், கர்ண பர்வம் 69ம் அத்தியாயம் 32ம் சுலோகத்தின் மூலம், "விவாஹகாலே ரதிஸம்ப்ரயோகே ப்ராணாத்யயே ஸர்வதனாபஹாரே விப்ரஸ்ய சார்தே ஹ்யந்ருதம் வதேத பஞ்சாந்ருதான்யாஹுரபாதகானி" என்றிருக்கிறது. அதாவது, "திருமணத்தின் போதோ, பெண்ணுடன் இன்பமாக இருப்பதற்காகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுங்காலத்திலோ, ஒருவனது மொத்த சொத்தும் பறிபோகும் நிலையிலோ, ஒரு பிராமணனுக்காகவோ பொய்ம்மை சொல்லப்படலாம். இந்த ஐவகைப் பொய்மைகள் பாவமற்றவையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன" என்பது பொருள். 

Rakshasis complaining to Ravana

வைதேஹியின் வசனத்தைக் கேட்ட ராக்ஷசிகளில் சிலர் திகைத்து நின்றனர். வேறு சிலர், ராவணனிடம் தெரிவிப்பதற்காக திசைகளில் சிதறி ஓடினர்.(11) விகார முகம் படைத்த ராக்ஷசிகள், ராவணனின் சமீபத்தை அடைந்து[2], பயங்கரமான வடிவம் கொண்ட வானரனைக் குறித்து {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினர்:(12) "இராஜனே, பயங்கர உடலுடன் கூடியவனும், அமித விக்ரமனுமான கபி {எல்லையில்லா ஆற்றல் படைத்தவனுமான ஒரு குரங்கானவன்}, அசோகவனத்தின் மத்தியில் சீதையுடன் பேசிக் கொண்டிருந்தான்.(13) நாங்கள் பலவாறு கேட்டாலும், மான்விழியாளும், ஜானகியுமான சீதை, அந்த ஹரியை {குரங்கைக்} குறித்துச் சொல்ல விரும்பவில்லை.(14) அவன் வாசவனின் {இந்திரனின்} தூதனாகவோ, வைஷ்ரவணனின் {குபேரனின்} தூதனாகவோ, சீதையைத் தேடும் விருப்பத்தில் ராமனால் அனுப்பப்பட்டவனாகவோ இருக்கலாம்.(15) அற்புத ரூபத்துடன் கூடிய அவன், நானாவித மிருககணங்களால் {விலங்குக்கூட்டங்களால்} நிறைந்ததும், மனோஹரமானதுமான உமது பிரமதாவனத்தைத் துடைத்தெறிந்துவிட்டான்.(16) 

[2] வால்மீகியில் ராக்ஷசிகள் சென்று ராவணனிடம் தெரிவிக்கும் இச்சம்பவம், கம்பனில் பருவ தேவர்கள் சென்று ராவணனிடம் தெரிவிப்பதாக அமைகிறது. அது பின்வருமாறு.

நீர் இடுதுகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்குப்
பீரிடும் உருவர் தெற்றிப் பிணங்கிடு தாளர் பேழ்வாய்
ஊரிடு பூசல் ஆர உளைத்தனர் ஓடு உற்றார்
பாரிடு பழுவச் சோலை பாரிக்கும் பருவத் தேவர்

- கம்பராமாயணம் 5483ம் பாடல், பொழில் இறுத்தபடலம்

பொருள்:  அச்சம் என்ற நெருப்பு மூளப்பெற்ற நெஞ்சுடன் கூடியவர்களும், சிறுநீர் நனைந்த ஆடையைக் கொண்டவர்களும், உடல் பிழிந்து குருதி பெருக்கெடுத்து ஓடும் வடிவங்கொண்டவர்களும், நடக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்ட கால்களை உடையவர்களும், பாரில் ஒரு பகுதியாகத் திகழும் அந்தச் சோலையைப் பாதுகாப்பவர்களும், ஆறு பருவங்களுக்கும் உரியவர்களுமான தேவர்கள், ஊர் மக்கள் வாய்திறந்து செய்கிற ஆரவாரம் நிறையும்படி ஊளையிட்டபடியே {ராவணனிடம்} ஓடி போய்ச் சேர்ந்தனர்.

அவனால் நாசம் செய்யப்படாத எந்த இடமும் அங்கே இல்லை. ஜானகியான சீதை எங்கிருக்கிறாளோ, அது {அவ்விடம்} மட்டுமே அவனால் நாசம் செய்யப்படவில்லை.(17) இது ஜானகியை ரக்ஷிப்பதற்காகவா? அல்லது சிரமத்தினாலா? என்பது தெரியவில்லை. அதில் அவனுக்கு என்ன சிரமம்? அவள் மட்டுமே அவனால் பாதுகாக்கப்பட்டாள்.(18) நன்கு வளர்ந்ததும், அழகிய தளிர்களும், புஷ்பங்களும் நிறைந்ததுமான எதனை {எதனடியை} சீதை தானே நாடிச் சென்றாளோ, அந்த சிம்சுபத்தை {சிம்சுபா மரத்தை} மட்டுமே அவன் விட்டு வைத்திருக்கிறான்.(19) எவன் சீதையிடம் பேசிவிட்டு, அந்த வனத்தையும் அழித்தானோ, அந்த உக்கிர ரூபம் கொண்டவனுக்கு உக்கிரமான தண்டமென ஆணையிடுவதே {கொடுந்தண்டனையை விதிப்பதே} உமக்குத் தகும்.(20) இரக்ஷோகணேஷ்வரா {ராக்ஷசக்கூட்டத்தின் தலைவா}, எவன் ஜீவிதத்தைக் கைவிடக்கூடியவனோ, அவனைத் தவிர வேறு எவன்தான் உமது மனத்தைக் கவர்ந்தவளான அந்த சீதையிடம் பேசுவான் {பேசத்துணிவான்}?" {என்றனர் ராக்ஷசிகள்}.(21)

இராக்ஷசேஷ்வரனான ராவணன், ராக்ஷசிகளின் சொற்களைக் கேட்டு, கோபத்துடன் கண்களை உருட்டியபடியே, ஹுதாக்னியை {வேள்வி நெருப்பைப்} போல எரிந்து கொண்டிருந்தான்.(22) ஒளிமிக்க தீபங்களில் {விளக்குகளில்} இருந்து வழியும் எண்ணெய்த்துளிகளைப் போலக் குரோதமடைந்த அவனது நேத்திரங்களில் {கண்களில்} இருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்தன.(23) அந்த மஹாதேஜஸ்வி {ராவணன்}, கிங்கரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும்[3], தனக்கு இணையானவர்களுமான சூர ராக்ஷசர்களுக்கு ஹனுமதனை நிக்ரஹம் செய்யும்படி {அடக்கும்படி} கட்டளையிட்டான்.(24) கூடங்களையும் {இரும்புத்தடிகளையும்}, முத்கரங்களையும் {சம்மட்டிகளையும்} கையில் கொண்டவர்களும், வேகம் மிகுந்தவர்களுமான அந்த எண்பதாயிரம் கிங்கரர்களும் அந்த பவனத்தை {வீட்டை} விட்டு வெளியே வந்தனர்.{25} பெரும் வயிற்றையும், பெரும் தந்தங்களையும் {கோரைப்பற்களையும்}, கோர ரூபத்தையும் கொண்ட மஹாபலவான்களான அவர்கள் அனைவரும், யுத்தத்திற்கான ஆவலுடனும், ஹனூமதனைப் பிடிக்கும் துடிப்புடனும் இருந்தனர்.(25,26)

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிங்கரர்கள் என்றால் பணியாள்கள் என்பது பொருள்" என்றிருக்கிறது.

தோரணத்தின் {நுழைவாயிலின்} அருகில் நின்று கொண்டிருந்த கபீந்திரனை {குரங்குகளின் தலைவனான ஹனுமானை} அணுகிய அவர்கள், பாவகனிடம் பதங்கங்களை {நெருப்பிடம் செல்லும் விட்டிற்பூச்சிகளைப்} போல மஹாவேகத்துடன் விரைந்து சென்றனர்.(27) அவர்கள், காஞ்சனப்பிடிகளுடன் {பொன்னாலான கைப்பிடிகளுடன்} கூடிய கதைகள் {கதாயுதங்கள்}, பரிகங்கள், ஆதித்யனுக்கு ஒப்பான சரங்கள் ஆகியவற்றால் வானரசிரேஷ்டனை {வானரர்களிற் சிறந்த ஹனுமானை} அடித்துப் புடைத்தனர்.(28) அவர்கள், முத்கரங்கள் {சம்மட்டிகள்}, பட்டிசங்கள், சூலங்கள், பிராசங்கள், தோமரங்கள் {வேல்கள்}, சக்திகள் ஆகியவற்றுடன் திடீரென ஹனூமந்தனின் முன் சூழ்ந்து நின்றனர்.(29) தேஜஸ்வியும், ஸ்ரீமானும், பர்வதத்திற்கு ஒப்பானவனுமான ஹனுமானும், லாங்கூலத்தை {தன் வாலைத்} தரையில் அடித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான் {பேரொலியை எழுப்பி முழங்கினான்}.(30) மாருதாத்மஜனான அந்த ஹனுமான், பேருடல் படைத்தவனாகி, பலமாகத் தன் தோள்களைத் தட்டும் சப்தத்தால் லங்கை முழுவதையும் நிறைத்தான்.(31) 

அவனது தோள்களைத் தட்டி உண்டான மஹத்தான சப்தத்தின் எதிரொலியுடன் சேர்ந்து, ககனத்தில் {வானில்} இருந்து பறவைகள் விழுந்தபோது, {ஹனுமான்} இவ்வாறு உரக்கக்கூவினான்:(32) "அதிபலவானான ராமருக்கும், மஹாபலவானான லக்ஷ்மணருக்கும் ஜயம் உண்டாகட்டும். இராகவரால் ஆளப்படும் {ராமனின் பாதுகாப்பில் இருக்கும்} ராஜா சுக்ரீவருக்கு ஜயம் உண்டாகட்டும்.(33) களைப்பின்றி கர்மங்களைச் செய்பவரும், கோசலேந்திரருமான ராமரின் தாசனான {கோசல நாட்டின் தலைவருமான ராமரின் அடியவனான} நான், சத்ரு சைனியங்களை அழிக்கவல்லவனும், மாருதாத்மஜனுமான {பகைவரின் படைகளை அழிக்கவல்லவனும், வாயுமைந்தனுமான} ஹனுமான் ஆவேன்.(34) ஆயிரக்கணக்கான கற்களையும், மரங்களையும் கொண்டு தாக்கவல்லவனான எனக்கு, யுத்தத்தில் ஆயிரம் ராவணர்களும் பிரதிபலம் {என்னை எதிர்க்குமளவிற்கான பலம்} கொண்டவராக மாட்டார்கள்.(35) சர்வராக்ஷசர்களின் கண்ணெதிரிலேயே, லங்காம்புரியை அழித்து, மைதிலியை வணங்கி, அர்த்தம் {நோக்கம்} நிறைவேறியவனாகவே திரும்பிச் செல்லப் போகிறேன்" {என்றான் ஹனுமான்}.(36)

Hanuman fighting with Doorway pillar in his hand

அவனுடைய பெருஞ்சப்தத்தால் உண்டான பயத்தில் திகிலடைந்தவர்கள் {பீதியடைந்த கிங்கரர்கள்}, சந்தியாகால மேகத்தைப் போல் உயர்ந்து நிற்கும் ஹனூமந்தனைக் கண்டனர்.(37) அதன்பிறகு, அந்த ராக்ஷசர்கள், ஸ்வாமியின் சந்தேசத்தால் {தலைவனான ராவணனின் ஆணையால்} திகில் நீங்கி, பயங்கரமானவையும், சித்திரமானவையுமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, அந்தக் கபியை {குரங்கான ஹனுமானை} நோக்கி விரைந்து சென்றனர்.(38) சூரர்களான அவர்களால் எங்கும் சூழப்பட்ட அந்த மஹாபலவான் {ஹனுமான்}, தோரணத்தில் இருந்ததும், பயங்கரமானதுமான ஓர் இரும்புப் பரிகத்தை {உழல்தடியைப்} பற்றினான்.(39) அந்தப் பரிகத்தை எடுத்தவன் ரஜனீசரர்களை {ஹனுமான் இரவுலாவிகளான அந்த ராக்ஷசர்களைக்} கொன்றான். வீரனான அந்த மாருதி, {பாம்பை} பன்னகத்தைச் சுமந்து திரியும் வினதாசுதனை {வினதையின் மகனான கருடனைப்} போல, பரிகத்தை எடுத்துக் கொண்டு அம்பரத்தில் {வானத்தில்} உலாவினான்.(40,41அ) 

வீரனான அந்த மாருதாத்மஜன் {வாயுமைந்தன் ஹனுமான்}, வீரராக்ஷசர்களான கிங்கரர்களைக் கொன்றுவிட்டு, யுத்தம் செய்யும் விருப்பத்துடன் மீண்டும் தோரணத்தை {நுழைவாயிலை} அடைந்தான்.(41ஆ,42அ) அப்போது, சில ராக்ஷசர்கள், அங்கே அந்த பயத்திலிருந்து விடுபட்டுச் சென்று, சர்வ கிங்கரர்களும் கொல்லப்பட்டதை ராவணனிடம் தெரிவித்தனர்.(42ஆ,43அ) இராக்ஷசர்களின் மஹத்தான படை கொல்லப்பட்டதைக் கேட்ட அந்த ராஜா {ராவணன்}, கண்களை உருட்டியபடியே, சமரில் வெல்லப்பட முடியாதவனும், பராக்கிரமத்தில் ஒப்பற்றவனுமான பிரஹஸ்தபுத்திரனுக்கு {ஜம்புமாலிக்கு} ஆணையிட்டான்.(43ஆ,இ,ஈ,உ)

சுந்தர காண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள்: 43


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை