Tuesday, 11 February 2025

பிரஹஸ்தன் | யுத்த காண்டம் சர்க்கம் - 057 (46)

Prahasta | Yuddha-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தலைமைத் தளபதியான பிரஹஸ்தனைப் போர்க்களத்திற்கு அனுப்பிய ராவணன்...

Ravana and Prahastha Speaking

அகம்பனன் வதம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, சற்றே தீன முகத்துடன் தன் அமைச்சர்களைப் பார்த்தான்.(1) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், ஒரு முஹூர்த்தம் சிந்தித்து, மந்திரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, முற்பகலில்,{2} சர்வ குல்மங்களையும் {படைகள் அனைத்தையும்} பார்வையிட்டபடியே லங்காம்புரீயைச் சுற்றி வந்தான்.(2,3அ) ஏராளமான குல்மங்களால் {படைகளால்} சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசகணங்கள், பதாகைகள், துவஜங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட லங்கா நகரத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக்  கண்டான்.(3ஆ,4அ) 

இராக்ஷசேஷ்வரனான ராவணன், நகரம் முற்றுகையிடப்பட்டிருப்பதைக் கண்டு, யுத்த கோவிதனும், காலத்தில் ஆத்ம ஹிதம் செய்பவனுமான பிரஹஸ்தனிடம்[1] {போர்க்கலையில் திறன்பெற்றவனும், முக்கிய நேரங்களில் தன்னுடைய நன்மையை விரும்புகிறவனுமான பிரஹஸ்தனிடம் பின்வருமாறு} சொன்னான்:(4ஆ,5அ) “யுத்த விசாரதரே {போரிடுவதில் வல்லவரே, பிரஹஸ்தரே}, புரம் {இந்த நகரம்}, திடீரென அன்னியர்களால் பீடிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தைத் தவிர வேறு எந்த மோக்ஷத்தையும் {மீட்பையும்} நான் காணவில்லை.(5ஆ,6அ) நானோ, கும்பகர்ணனோ, என் சேனாபதியான நீரோ, இந்திரஜித்தோ, நிகும்பனோ தான் இத்தகைய பாரத்தைத் தாங்க வேண்டும்.(6ஆ,7அ) எனவே, அத்தகைய நீர், சீக்கிரமே பலத்தை {படையை} அழைத்துக் கொண்டு, அதன் மத்தியில் இருந்து கொண்டு, சர்வ வனௌகசர்களும் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்கள் அனைவரும்} இருப்பது எங்கேயோ அங்கே விஜயத்திற்காக {வெற்றிக்காகப்} புறப்பட்டுச் செல்வீராக.(7ஆ,8அ) நீர் சென்ற உடனேயே ஹரிவாஹினி {குரங்குப்படை} நிலையற்றதாகி, ராக்ஷசேந்திரர் {ராக்ஷசர்களின் தலைவரான நீர்} கர்ஜிக்கும் நாதத்தைக் கேட்டதும் ஓடிவிடும்.(8ஆ,9அ)  வானரர்கள் சபலர்கள் {நிலையற்றவர்கள்}; துடுக்குத்தனம் மிக்கவர்கள்; நிலையற்ற சித்தத்தைக் கொண்டவர்கள். சிம்மத்தின் நாதத்தை {கேட்கும்} துவீபங்கள் {யானைகள்} எப்படியோ, அப்படியே உமது நாதத்தை அவர்கள் சஹித்துக் கொள்ள மாட்டார்கள்.(9ஆ,10அ) பிரஹஸ்தரே, அந்த பலம் {படை} தப்பி ஓடும்போது, சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்} சஹிதனான ராமன் ஆதரவற்றவனாகி, வசமிழந்தவனாக உம் வசத்தில் விழுவான்.(10ஆ,11அ) சந்தேகத்திற்குரிய ஆபத்தே நல்லது; சந்தேகமற்றது அல்ல {சந்தேகமற்ற ஆபத்து நல்லதல்ல}. கேட்பதற்கு விரும்பத்தக்கதானாலும், விரும்பத்தகாததானாலும் இங்கே நமக்கு ஹிதமென {நன்மையானது என} எதை நீர் நினைக்கிறீர்?[2]” {என்று கேட்டான் ராவணன்}.(11ஆ,12அ)

[1] பிரஹஸ்தன், ராவணனின் தாய்மாமனாவான். யுத்த காண்டம் 55ம் சர்க்கத்தில் உள்ள 1ம் அடிக்குறிப்பைப் பார்க்கவும். 

[2] ஆங்கிலத்தில், தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், “நிச்சயமான ஒன்றைவிட சந்தேகத்திற்கிடமான ஆபத்தே சிறந்தது. கேட்பதற்கு விரும்பத்தக்கதாக இருப்பினும், இல்லாவிடினும் நமக்கு சாதகமாக நீர் கருதுவதைச் சொல்வீராக” என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், “நிச்சயமற்ற மரணம் நல்லதுதான். ஆனால் மோதாமல் வருவது {போரிடாமல் வரும் மரணம்} நல்லதல்ல. உமக்கு எது ஏற்புடையது, எது ஏற்பில்லாதது என்பதைச் சிந்திப்பீராக. அதுவே எனக்கும் ஏற்புடையது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், “இதில் நீர் கொல்லப்படுவது நிச்சயமற்றது, ஆனால் வெற்றியோ நிச்சயமானது. நமது நன்மையையோ, அல்லதையோ இனி நீரே தீர்மானிப்பீராக” என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், “நிச்சயமான ஒன்றை{ஆபத்தை}விட, சந்தேகத்திற்குரிய ஆபத்தே சிறந்தது. கேட்பதற்கு விரும்பத்தக்கதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நமக்கு சாதகமாக நீர் கருதுவதைச் சொல்வீராக” என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், “நிச்சயமற்ற ஆபத்தை நிச்சயம் செய்வதே சிறந்தது. சாதகமானதோ, இல்லையோ, எதுவாக இருப்பினும் நமக்கான சிறந்த வழிமுறையென எதை நீர் நினைக்கிறீர்?” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “இராக்ஷசர்கள் தாக்குதலுக்காகக் காத்திருந்தால் ஆபத்து நிச்சயமற்றது. இராக்ஷசர்கள் தாக்குதல் தொடுத்தால் ஆபத்து நிச்சயமானது என்பதே இங்கே பொருளாகத் தெரிகிறது” என்றிருக்கிறது. தமிழில், தர்மாலயப் பதிப்பில், “கோரிக்கைக்கு மாறாய் நடைபெறுதலென்பது சந்தேகப்பட வேண்டியதாக இல்லவேயில்லை. சந்தேகத்திற்கிடமில்லாதவாறு உன்னால் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு இதற்கு மேம்பட்டதாய் நன்மை பயப்பதாய் என் அபிப்ராயத்திற்கு எதிரிடையாய் இருந்தாலும் ஒத்ததாய் இருந்தாலும் எதை நீ உத்தேசிக்கின்றனை?” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “யுத்தத்தில் நமக்குக் கெடுதி விளையக்கூடுமாகையால் அதைச் செய்யாதிருத்தலே மேல் என்கிறாயோ? நாம் யுத்தஞ் செய்யாதிருப்பின் சத்ருக்கள் விடமாட்டார்களாகையால் அவரால் நமக்கு மரணம் நேருவது நிச்சயம். யுத்தஞ் செய்தால் மரணமே நேருமோ, ஜயமே நேருமோ, நிச்சயிக்க முடியாது. ஆகையால் மரணம் விளைவது ஸந்தேஹம். இங்ஙனம் யுத்தஞ் செய்யாத பக்ஷத்தில் ஸந்தேஹமில்லாமல் நேரக்கூடிய மரணத்தைக் காட்டிலும் யுத்தஞ் செய்கையில் ஸந்தேஹமாய் நேரும்படியான மரணமே நன்று. ஆகையால் யுத்தஞ் செய்யாதிருப்பதைக் காட்டிலும் யுத்தஞ்செய்வதே மேல். இதுவே என் அபிப்ராயம். இனி இதற்கு ப்ரதிகூலமாயாவது, அனுகூலமாயாவது, நீ நமக்கு எது ஹிதமென்று நினைக்கிறாயோ, அதைச் செய்வாயாக. அதுவே எனக்கும் ஹிதமாம்” என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், “போர்க்களமும், அதில் மரணமும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருப்பவை. போரில் மரணமடையலாம்; அல்லது உயிர் பிழைத்தும் திரும்பலாம். ஆனால், புறங்காட்டாமல் போரிட்டு மடிவது என்பது போற்றத்தக்கது. இதற்கு எதிராக நடந்தால், அதாவது போர்வீரன் ஒருவன் போர் செய்யாமலிருக்கும் போதும் இயற்கையாகவே ஒரு நாள் மரணமடைந்தே தீருவான். இத்தகைய மரணம் சிறப்புடையதல்ல என்று நான் கருதுகிறேன். அதனால், இந்த என் எண்ணத்திற்கு மாறாக, நமக்கு நன்மை விளைவிக்கக்கூடியதாக உன் கருத்து ஏதேனும் இருந்தால், அதைச் சொல்வாயாக” என்றிருக்கிறது. 

இராவணனால் இவ்வாறு சொல்லப்பட்ட வாஹினிபதியான {படைத்தலைவனான} பிரஹஸ்தன், அசுரேந்திரனிடம் உசனனை {அசுரர்களின் தலைவனான பலியிடம் சுக்கிராசாரியரைப்} போல ராக்ஷசேந்திரனிடம் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனிடம்} இதைச் சொன்னான்,(12ஆ,13அ) “இராஜனே, குசலர்களான மந்திரிகளுடன் {நன்மையில் விருப்பமுள்ள அமைச்சர்களுடன்} முன்பு ஆலோசித்துப் பரஸ்பரம் கருத்துகளைக் கவனமாக மதிப்பிடும்போது, நமக்குள் விவாதம் எழுந்தது.(13ஆ,14அ) சீதையைக் திருப்பிக் கொடுத்தால் நன்மையும், கொடுக்காவிட்டால் யுத்தமும் நேரும் என நான் எட்டிய முடிவையே {என்ற என் முடிவு சரியானது என்பதையே இப்போது} காண்கிறேன்[3].(14ஆ,15அ) தானங்களினாலும், மானங்களினாலும் {கொடைகளினாலும், மரியாதைகளினாலும்}, விதவிதமான புகழுரைகளினாலும் உரிய காலங்களில் சதா {எப்போதும்} உன்னால் நான் பூஜிக்கப்படுகிறேன். அத்தகைய நான், உனக்கு ஹிதமானதைச் செய்யமாட்டேனா என்ன?(15ஆ,16அ) எனக்கு ஜீவிதமோ, புத்திரர்களோ, தாரங்களோ, தனங்களோ ரக்ஷித்துக் கொள்ளப்பட வேண்டியவையல்ல. யுத்தத்தில் உன் அர்த்தத்திற்காக நான் ஜீவிதத்தை அர்ப்பணம் செய்வதை நீ பார்ப்பாய்” {என்றான் பிரஹஸ்தன்}.(16ஆ,17அ)

[3] யுத்த காண்டம் 8:5ல், “நீர் செய்த அபராதத்தால் உண்டான துக்கம் உம்மைக் கொஞ்சமும் அண்டாது” என்று சொன்னதன் பொருளை பிரஹஸ்தன் இங்கே உணர்த்துவதாகத் தெரிகிறது. 

வாஹினிபதியான பிரஹஸ்தன், தன் தலைவனான ராவணனிடம் இவ்வாறு கூறிய பிறகு, தன் முன்னே இருந்த பலாதியக்ஷர்களிடம் {படைப்பிரிவுகளின் தலைவர்களிடம்} இதைச் சொன்னான்:(17ஆ,18அ) “இராக்ஷசர்களின் மஹத்தானபலத்தை {பெரும்படையை} சீக்கிரம் திரட்டிக் கொண்டு என்னுடன் வருவீராக.{18ஆ} அசனி {இடி} போன்ற என் பாணங்களின் வேகத்தினால் போர்க்களத்தில் கொல்லப்படுவோரின் {கொல்லப்படும் வானரர்களின்} மாமிசத்தைக் கொண்டு கானனௌகச பக்ஷிகள் இன்று திருப்தியடையட்டும் {காட்டில் வசிக்கும் ஊனுண்ணும் பறவைகள் நிறைவடையட்டும்”, என்றான் பிரஹஸ்தன்}.(18ஆ,19)

அவனது அந்த வசனத்தைக் கேட்ட மஹாபலவான்களான பலாதியக்ஷர்கள், விரைந்து சென்று அந்த ராக்ஷச மந்திரத்தில்[4] பலத்தை {படையை} ஆயத்தம் செய்தனர்.(20) ஒரு முஹூர்த்தத்திற்குள், நானாவித ஆயுதங்கள் தரித்தவர்களும், கஜங்களுக்கு ஒப்பானவர்களும், பயங்கரர்களுமான அந்த ராக்ஷச வீரர்களால் அந்த லங்கை நிறைந்தது.(21) அவர்கள் {ராக்ஷசர்கள்} ஹுதாசனனை {அக்னியை காணிக்கைகளால்} திருப்திப்படுத்தி, பிராமணர்களை நமஸ்கரித்த போது, நெய்யின் கந்தத்தை {மணத்தைச்} சுமந்தபடி, நறுமணமிக்க மாருதம் {காற்று} வீசிற்று.(22) அப்போது போருக்கு ஆயத்தமாக இருந்த ராக்ஷசர்கள், விதவிதமான வடிவங்களிலானவையும், மந்திரிக்கப்பட்டவையுமான மாலைகளை மகிழ்ச்சியுடன் சூடிக் கொண்டனர்.(23) தங்கள் தனுசுகளுடனும் {விற்களுடனும்}, கவசங்களுடனும் கூடிய ராக்ஷசர்கள், ராஜாவான ராவணனைக் கண்டதும், வேகமாக தாவிச் சென்று, பிரஹஸ்தனைச் சூழ்ந்து கொண்டனர்.(24)

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “ராக்ஷஸ மந்திரமாவது - இங்கு ராவணக்ருஹம். ஸேனையை அவ்விடத்திற்கு வரவழைத்தனனென்று கருத்து” என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “ராவணனின் இல்லம்” என்றிருக்கிறது.

அப்போது பிரஹஸ்தன், ராஜாவிடம் விடைபெற்றுக் கொண்டு, பயங்கரமான பேரிகையை முழக்கியபடியே ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்த திவ்யமான ரதத்தில் {தெய்வீகத் தேரில்} ஏறினான்.{25} மஹாவேகங்கொண்ட ஹயங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், சூதனால் {தேரோட்டியால்} நன்கு கட்டுப்படுத்தப்பட்டதும், பெரும் மேகத்திற்கு ஒப்பான ஒலியை எழுப்புவதும், சாக்ஷாத் சந்திரனையும், அர்க்கனையும் {சூரியனையும்} போல் ஒளிர்வதும்,{26} உரக துவஜத்துடன் கூடியதும் {பாம்புக் கொடியைக் கொண்டதும்}, வெல்வதற்கரியதும், சிறந்த மேற்போர்வையையும், நல்ல சக்கரங்களையும் கொண்டதும், சுவர்ண ஜாலங்களால் {தங்க வலைகளால்} அலங்கரிக்கப்பட்டதுமான அஃது அழகுடன் சிரிப்பதைப் போலிருந்தது {அந்தத் தேரானது தன்னொளியால் ஒளிகொள்ளும் மற்ற பொருட்களைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது}.(25-27) அப்போது, ராவணனால் சாசனமளிக்கப்பட்டவன் {ஆணையிடப்பட்ட பிரஹஸ்தன்}, ரதத்தில் ஏறிக் கொண்டு, தன் மஹத்தான பலம் {படை} சூழ லங்கையிலிருந்து உடனடியாகப் புறப்பட்டான்.(28)

இப்படி வாஹினிபதி {படைத்தலைவன் பிரஹஸ்தன்} பிரயாணித்தபோது, துந்துபிகளின் கோஷமும், வாத்தியங்களின் நாதமும், சங்குகளின் சப்தமும், பர்ஜன்யனின் {பெரும் மேகத்தின்} நாதத்திற்கு ஒப்பாகவும், மேதினியை நிறைப்பதைப் போலவும் கேட்கப்பட்டன.(29,30அ) பயங்கரரூபம் கொண்டவர்களும், பேருடல் படைத்தவர்களும், கோரமான ஸ்வரங்களில் நாதம் செய்பவர்களுமான ராக்ஷசர்கள் பிரஹஸ்தனுக்கு முன்னே சென்று கொண்டிருந்தனர்.(30ஆ,31அ) பிரஹஸ்தனின் ஆலோசகர்களான {அமைச்சர்களான} நராந்தகன், கும்பஹனு, மஹாநாதன், சமுந்நதன் ஆகியோர்  அவனைச் சூழ்ந்தபடியே சென்றனர்.(31ஆ,32அ) எதிர்க்கப்பட முடியாததும், வியூஹமாக அணிவகுக்கப்பட்டதும், கஜயூதத்திற்கு {யானைக்கூட்டத்திற்கு} ஒப்பானதுமான மஹத்தான பலத்தின் {படையின்} மத்தியில் பூர்வ துவாரத்தில் இருந்து அவன் {கிழக்கு வாயிலில் இருந்து பிரஹஸ்தன்} வெளிப்பட்டான்.(32ஆ,33அ) காலாந்தக யமனுக்கு ஒப்பான {காலத்தின் அந்தத்தில் தோன்றும் யமனுக்கு ஒப்பான / காலன், அந்தகன், யமன் ஆகியோருக்கு ஒப்பான} அந்த பிரஹஸ்தன், சாகரத்திற்கு நிகரான அந்த பலத்தால் {படையால்} சூழப்பட்டவனாகக் குரோதத்துடன் வெளிப்பட்டான்.(33ஆ,34அ) 

போர்க்கூச்சலிடும் ராக்ஷசர்களுடன் அவன் புறப்பட்டு வரும் கோஷத்தால், லங்கையில் இருந்த சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்} விகாரமான ஸ்வரங்களில் கூச்சலிட்டன.(34ஆ,35அ) மாமிசம், சோணிதம் ஆகிவற்றை போஜனமாகக் கொண்ட ககங்கள் {பறவைகள்}, மேகமற்ற ஆகாசத்தில் புகுந்து, ரதத்தைச் சுற்றி அபஸவ்ய[5] மண்டலங்களில் {வலமிருந்து இடமாக வட்டமிட்டுப்} பறந்தன.(35ஆ,36அ) கோரமான நரிகள் பாவக ஜுவாலைகளை {நெருப்புத் தழல்களைக்} கக்கிக் கொண்டே ஊளையிட்டன. அந்தரிக்ஷத்தில் இருந்து உல்கங்கள் {வானத்தில் இருந்து எரி கொள்ளிகள்} விழுந்தன. வாயு {காற்று} கடுமையுடன் வீசியது.(36ஆ,37அ) கிரகங்கள் அன்யோன்யம் வக்கிரமடைந்து {கோள்கள் ஒன்றோடொன்று பகையுடன்} பிரகாசமற்று இருந்தன.{37ஆ} கடுமையான கோஷத்துடன் கூடிய மேகங்கள் ராக்ஷச ரதத்தின் மேல் உதிரத்தைப் பொழிந்தன {பிரஹஸ்தனுடைய தேரின் மேல் ரத்தத்தைப் பொழிந்தன}; முன்னே சென்று கொண்டிருந்தவர்களையும் நனைத்தன.(37ஆ,38) ஒரு கிருத்ரம், அவனது கேதுவின் மூர்த்தத்தில் தக்ஷிணமுகமாக அமர்ந்து {ஒரு கழுகு பிரஹஸ்தனின் கொடிக்கம்பத்தின் நுனியில் தெற்கு முகமாக அமர்ந்து கொண்டு}, அதன் இரண்டு பக்கத்திலும் கொத்தி அதன் அழகை முற்றிலும் அழித்தது.(39) போர்க்களத்தில் நுழைந்து ஹயங்களை {குதிரைகளைச்} செலுத்துவதில் திறமையுள்ள சாரதியான சூதனின் கையிலிருந்த சாட்டையானது பலமுறை நழுவி விழுந்தது.(40)  {பிரஹஸ்தன்} புறப்படும்போது {அவனிடம்} இருந்த அரிதான ஒளிப்பெருக்கானது, ஒரு முஹூர்த்தத்தில் நசிந்து போனது. சமதளத்திலும் அவனது ஹயங்கள் {குதிரைகள்} இடறி விழுந்தன.(41)

[5] தமிழில், கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், “ரதத்தை இடதுபுறமாக வட்டமிட்டன” என்றும், தர்மாலயப் பதிப்பிலும், நரசிம்மாசாரியர் பதிப்பிலும், “ரதத்தைச் சுற்றி அப்பிரதக்ஷிணமாய் வட்டமிட்டன” என்றும் இருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “’வ்யப்ரம் ஆகாஷம் ஆவிஷ்ய மாம்ஸ ஷோணித போஜனா꞉ || மண்டலான்ய் அபஸவ்யானி ககாஷ் சக்ரூ ர²ம் ப்ரதி’ என்பது மூலம். இதற்கு, “கருடப் பறவைகள் ரதத்தின் மேல் ப்ரதக்ஷிணமாக வட்டமிட்டன” என்றும் பொருள் கூறலாம். “அபஸவ்யந்து உக்ஷிணம்” என்று அமரன். கருடன் ப்ரதக்ஷிணமாகச் சுற்றுவதும் அபசகுனம் - கோவிந்தராஜர்” என்றிருக்கிறது. ஆங்கிலத்தில், தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி, ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில், “ரதத்தை நோக்கி இடமிருந்து வலமாக {from left to right}” என்றும், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், “இடஞ்சுழியாக {anticlockwise} என்றும், மன்மதநாததத்தர் பதிப்பில், “தேரின் வலப்பக்கத்தில் வட்டமிடத் தொடங்கின {began to gyrate at the right hand of the car}” என்றும், விவேக் தேவ்ராய் பதிப்பில், “இடஞ்சுழியாக {counterclockwise direction}” என்றும் இருக்கிறது. இங்கே மூலச்சொல், “அபஸவ்யம்” என்பதாகும். ஸவ்யம் என்றால் இடது என்றும், அபஸவ்யம் என்றால் இடது அல்லாமல் என்றும் பொருள். நம் கோவில்களில் நாம் இடமிருந்து வலப் பக்கமாக சுற்றுவதை {வலம் வருவதைப்} பிரதக்ஷிணம் என்றும், அதற்கு நேர்மாறாகச் இடப் பக்கமாக சுற்றுவதை அப்ரதக்ஷிணம் என்றும் சொல்வார்கள். இந்தப் பறவைகள் அந்த ரதத்தைச் சுற்றி இடமிருந்து வலமாக {பிரதக்ஷிணமாக} இல்லாமல் வலமிருந்து இடமாக வட்டமிட்டதையே {அப்ரதக்ஷிணமாக சுற்றியதையே} இந்த சுலோகம், குறிப்பிடுவதாகத் தெரிகிறது. 

பௌருஷ குணத்திற்காகவும் {ஆண்மைக்காகவும்}, துணிச்சலுக்காகவும் நன்கறியப்பட்டவனான அந்த பிரஹஸ்தன் போரிட வருவதைக் கண்ட கபிசேனை {குரங்குப் படை}, நானாவிதப் போர்க்கருவிகளுடன் யுத்தத்தில் {அவனை} எதிர்த்து நின்றது.(42) அப்போது மரங்களைப் பிடுங்கிக் கொண்டும், பெரும்பாறைகளைப் பெயர்த்துக் கொண்டும் இருந்த ஹரீக்களுக்கு {குரங்குகளுக்கு} மத்தியில் ஆரவார கோஷம் எழுந்தது.(43) இராக்ஷசர்கள் நாதம் செய்யும்போதும், வானரர்கள் கர்ஜிக்கும்போதும், வனௌகச, ராக்ஷச கணங்களாகிய அவ்விரு சைனியங்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தன.{44} வேகமானவர்களும், சமர்த்தர்களும், அன்யோன்யம் வதைப்பதில் விருப்பம் கொண்டவர்களும், பரஸ்பரம் அறைகூவி அழைப்பவர்களுமான அவர்களது கர்ஜனை பெரிதாகக் கேட்டது.(44,45)

மரணத்தருவாயில் இருந்தாலும், சலபம் விபாவசுக்குள் நுழைவதை {விட்டிற்பூச்சி நெருப்புக்குள் விழுவதைப்} போல, துர்மதி கொண்ட பிரஹஸ்தன், அப்போது வெற்றி அடையும் விருப்பத்துடன் கபிராஜனின் வாஹினிக்குள் நுழைந்தான் {குரங்கு மன்னனான சுக்ரீவனின் படைக்குள் நுழைந்தான்}.(46) 

யுத்த காண்டம் சர்க்கம் – 057ல் உள்ள சுலோகங்கள்: 46

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை