Advice of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-014 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் கணைகள், ராக்ஷசர்களைத் துளைப்பதற்கு முன், சீதையை அவனிடம் கொடுத்துவிடும்படி ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...
நிசாசரேந்திரனின் {இரவுலாவிகளின் தலைவனான ராவணனின்} வாக்கியத்தையும், கும்பகர்ணனின் கர்ஜனையையும் கேட்ட அந்த விபீஷணன், ஹிதமானதும், அர்த்தம் நிறைந்ததுமான வாக்கியத்தை ராக்ஷசராஜர்களில் முக்கியனிடம் {ராவணனிடம் பின்வருமாறு} சொன்னான்:(1) "இராஜரே, தோள்களுக்கு இடைப்பட்ட பகுதியை {மார்பைப்} படமாகவும், சிந்தையை {கவலையை} விஷமாகவும், புன்சிரிப்பைக் கூரிய பற்களாகவும், ஐந்து விரல்களை ஐந்து தலைகளாகவும் கொண்ட சீதை என்ற பேருடல் படைத்த பெரும்பாம்பை நீர் என்னவென்று {நினைத்து} விரும்புகிறீர்?(2)
பர்வதகூட மாத்திரமுள்ளவர்களும் {மலைச்சிகரங்களின் பருமனுள்ளவர்களும்}, பற்களை ஆயுதங்களாகக் கொண்டவர்களும், நகங்களை ஆயுதங்களாகக் கொண்டவர்களுமான வலீமுகர்கள் {குரங்குகள்} யாவரும் லங்கையை அடையும் முன் தாசரதியிடம் மைதிலியை {தசரதரின் மகனான ராமரிடம் சீதையைக்} கொடுத்துவிடுவீராக[1].(3) வஜ்ரத்திற்கு சமமானவையும், வேகத்தில் வாயுவுக்கு சமமானவையம், ராமரால் ஏவப்படுபவையுமான பாணங்கள், ராக்ஷசபுங்கவர்களின் சிரங்களைக் கொய்யும் முன் தாசரதியிடம் மைதிலியைக் கொடுத்துவிடுவீராக.(4) இராஜரே, கும்பகர்ண இந்திரஜித்துகளோ, அதேபோல, மஹாபார்ஷ்வ மஹோதரர்களோ, நிகும்ப கும்பர்களோ, அதேபோல, அதிகாயனோ யுத்தத்தில் ராகவரை எதிர்த்து நிற்கக்கூடிய சமர்த்தர்களல்லர்.(5) நீர், சவித்ரன் {சூரியன்}, அல்லது மருத்துக்களால் காக்கப்பட்டாலும், வாசவன் {இந்திரன்}, அல்லது மிருத்யுவின் {யமனின்} மடியில் அமர்ந்திருந்தாலும், நபம் {வானம்}, அல்லது பாதாளத்திற்குள் பிரவேசித்தாலும் ராமரிடமிருந்து ஜீவனுடன் திரும்பமுடியாது" {என்றான் விபீஷணன்}.(6)
[1] இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்சவசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாதுஅசைவு இல் கற்பின் அவ்வணங்கை விட்டருளுதி இதன்மேல்விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்- கம்பராமாயணம் 6169ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் மந்திரப்படலம்பொருள்: "புகழும், செல்வமும், உயர் குலத்து இயல்பும் விழ, பழியும், கீழ்மையும் எழ, உற்றார் உறவினரோடு மடிந்து போகாமல், தளர்வில்லா கற்புடைய தெய்வமகளை {சீதையை} விட்டருள்வாயாக. இதைவிட மேலான விஜயம் வேறில்லை" எனச் சொன்னான் அறிஞர்களில் சிறந்தவன் {விபீஷணன்}.
பிரஹஸ்தன், விபீஷணனின் வாக்கியத்தைக் கேட்ட பிறகு, {பின்வரும்} வசனத்தைக் கூறினான், "தைவதங்களிடம், அல்லது தானவர்களிடம், {அல்லது வேறு} எவரிடமும் எந்த பயத்தையும் {ஆபத்தையும்} நாம் அறியோம்.(7) யக்ஷ, கந்தர்வ, மஹோரகங்களுடன் {பெரும்பாம்புகளுடன்} போரில் பயம் இல்லை. பதகங்கள் {பறவைகள்}, உரகங்களிடமும் {பாம்புகளிடமும்} இல்லை. நரேந்திரபுத்ரனான ராமனிடம் போரிடுவதில் கொஞ்சமேனும் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?" {என்றான் பிரஹஸ்தன்}(8)
இராஜனின் ஹிதத்தை விரும்புகிறவனும், தர்ம, அர்த்த, காமங்களை புத்தியில் நிலைநிறுத்துபவனுமான விபீஷணன், ஹிதமில்லாத பிரஹஸ்தனின் வாக்கியத்தைக் கேட்டு, மஹா அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(9) "பிரஹஸ்தரே, அதர்மபுத்தியுள்ளவனுக்கு ஸ்வர்க்க கதி எப்படி சாத்தியமில்லையோ, அப்படியே ராஜரும், மஹோதரரும், நீரும், கும்பகர்ணரும் ராமரைக் குறித்த அர்த்தங்களைச் சொல்கிறீர்கள் {நீங்கள் ராமரை எதிர்க்க திட்டமிடும் எதுவும் சாத்தியப்படாது}.(10) பிரஹஸ்தரே, அபிலவன் மஹார்ணவத்தை {மிதவை இல்லாதவன் / நீந்தத் தெரியாதவன் / தாவமுடியாதவன் பெருங்கடலைக்} கடப்பதைப் போல, என்னாலோ, உம்மாலோ, சர்வ ராக்ஷசர்களாலோ, அர்த்த விசாரதரான {அனைத்தையும் அறிந்தவரான} ராமரை எப்படி வதைக்க முடியும்?(11) தர்மத்தையே பிரதானமாகக் கொண்டவரும், மஹாரதரும், இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராஜரும், இவ்விதமான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தேவர்களையே கலங்கடிக்கவல்லவருமான அவரை எதிர்க்கப் போகிறீர்கள்.(12)
கூரியவையும், கங்க இறகுகள் {கழுகின் இறகுகள்} பூட்டப்பட்டவையும், தடுப்பதற்கரியவையும் ராகவரால் விடுவிக்கப்படுபவையுமான பாணங்கள் {இன்னும்} உமது சரீரத்தைப் பிளந்து ஊடுருவாததால், பிரஹஸ்தரே, நீர் பெருமை பேசுகிறீர்.(13) வேகத்தில் அசனிக்கு {இடிக்குத்} துல்லியமானவையும், கூரியவையும், ராகவரால் விடுவிக்கப்படுபவையுமான பிராணாந்தகச் சரங்கள் உமது காயத்தை {உயிரைப் போக்கும் கணைகள் உமது உடலை} ஊடுருவாதவரை நீர் உமது பெருமை பேசுவீர்.(14) இரணத்தில் சக்ரனுக்கு சமமான தாசரதியை {போர்க்களத்தில் இந்திரனுக்கு நிகரானவரும், தசரதரின் மகனுமான ராமரை} எதிர்க்க ராவணரோ, அதிபலவானான திரிசீர்ஷனோ, கும்பகர்ணரோ, நிகும்பனோ, இந்திரஜித்தோ, நீரோ சமர்த்தர்கள் இல்லை.(15) தேவாந்தகனோ, நராந்தகனோ, அதேபோல அதிரதனோ, மஹாத்மாவான அதிகாயனோ, அத்ரி சமான சாரம் கொண்ட {பெருங்கடலுக்கு நிகரான வலிமைமிக்க} அகம்பனரோ யுத்தத்தில் ராகவரை எதிர்க்கவல்லவர்கள் இல்லை.(16) விசனபூதரும் {தீச்செயல்களுக்கு அடிமையானவரும்}[2], இயல்பில் கொடியவரும், சிந்திக்காமல் செயல்படுபவருமான இந்த ராஜா {ராவணர்}, ராக்ஷசர்களின் நாசத்திற்காகவே மித்ர வடிவில் அமித்ரர்களான {நண்பனைப் போன்ற எதிரியான} உங்களை நிறுவி அனுசரிக்கிறார்.(17)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மன்னர்கள் பொதுவாக அடிமையாகும் ஏழு தீச்செயல்கள் பின்வருபவை: பேச்சில் கடுமை, கொடுந்தண்டனை வழங்குதல், ஆடம்பரம் / பகட்டு, மது, பெண்கள், வேட்டை, சூது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "வைதல், குற்றத்திற்கு மீறிய தண்டனை விதித்தல், பொருளை நாசஞ்செய்தல், குடி, பரஸ்த்ரீகமனம், காலமில்லாத காலத்தில் வேட்டையாடுதல், சூது இவைகளைக் கொண்டவர்" என்றிருக்கிறது.
எல்லையற்ற வடிவத்தையும், ஆயிரம் தலைகளையும், மஹாபலத்தையும் கொண்டதும், பயங்கரமானதுமான நாகத்தால் பலமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் இந்த ராஜாவைத் தூக்கி விடுவிப்பீராக.(18) பயங்கர பலம் கொண்ட பூதங்களால் பற்றப்பட்டவனின் கேசத்தை {தலைமுடியைப்} பற்றி இழுப்பதைப் போலவாவது, விருப்பங்கள் பரிபூரணமான {நிறைவேறிய} நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மன்னரை ரக்ஷிக்க வேண்டும்.(19) இராகவசாகரத்தால் {ராமர் எனும் பெருங்கடலால்} அழிவுக்காகச் சூழப்படுபவரும், காகுத்ஸ்த பாதாள முகத்தில் {ராமர் எனும் பாதாளத்தின் வாயில்} விழப்போகிறவருமான இவரை {இந்த ராவணரை}, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து காப்பதே இப்போது தகும்.(20) இராக்ஷசர்களுக்கும், அங்கே புரத்தில் {நகரத்தில்} உள்ள நண்பர்களுக்கும், ராஜருக்கும் பத்தியமான {நலம்பயக்கும்} என் கருத்தை இந்த நல்ல வாக்கியத்தில் சொன்னேன். நரேந்திரபுத்திரரின் பத்தினி {ராஜகுமாரரான ராமரின் மனைவி} கொடுக்கப்பட வேண்டும்.(21) பகைவரின் வீரியத்தையும், தன் பலத்தையும் அறிந்து, அதேபோல ஸ்தானம் {தன் நிலை}, தன் தரப்புக்கு அழிவைத் தருவது, விருத்தியைத் தருவது ஆகியவற்றை புத்தியால் அனுமானித்து, ஸ்வாமிக்கு ஹிதம் விளைவிப்பதைக் கருத்தில் கொண்டு பேசுபவன் எவனோ, அவனே மந்திரியாவான்" {என்றான் விபீஷணன்}.(22)
யுத்த காண்டம் சர்க்கம் – 014ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |