Jambumali killed | Sundara-Kanda-Sarga-44 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானைக் கணைகளால் துளைத்த ஜம்புமாலி; பெரும் பாறையையும், பெரும் சால மரத்தையும், பரிகத்தையும் வீசி ஜம்புமாலியைக் கொன்ற ஹனுமான்...
இராக்ஷசேந்திரனால் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனால்} ஆணையிடப்பட்டவனும், பலவானும், பெரும்கோரைப்பற்களைக் கொண்டவனும், பிரஹஸ்தனின் மகனுமான ஜம்புமாலி, தனுவை {வில்லை} எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.{1} செந்நிற மாலைகளையும், ஆடைகளையும் தரித்தவனும், காதுகளில் அழகிய குண்டலத்தை அணிந்தவனும், பேருடல் படைத்தவனும், உருண்டையான நயனங்கள் {கண்கள்} அமையப்பெற்றவனும், சண்டனும் {கடுமை நிறைந்தவனும்}, சமரில் துர்ஜயனுமான அவன் {போரில் வெல்லப்பட முடியாதவனுமான ஜம்புமாலி}{2}, சக்ரனின் தனுவுக்கு {இந்திரனின் வில்லுக்கு} ஒப்பானதும், வஜ்ரத்திற்கும், அசனிக்கும் சமமான ஸ்வனமுடைய அழகிய சாயகத்துடன் {கணையுடன்} கூடியதுமான மஹத்தான தனுவை {வில்லை} வேகமாக வளைத்தான்.(1-3) அந்த தனுசை வளைத்ததால் உண்டான மஹத்தான கோஷமானது {நாணொலியானது}, திசைகளையும், பிரதிசைகளையும் {திசைகளின் மூலைகளையும்}, ஏன் நபத்தையும் {வானத்தையும்} கூட திடீரென நிறைத்தது[1].(4)
[1] கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி கொன்றவானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான்தேனே புரை கண்கனலே சொரிய சீற்றம் செருக்கினான்தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான்- கம்பராமாயணம் 5590ம் பாடல், சம்புமாலிவதைப்படலம்பொருள்: காட்டையே தங்கள் வாழ்விடமாகக் கொண்ட யானைக்கூட்டங்கள், கோபம் கொண்ட சிங்கத்தால் கொல்லப்பட்டு விண்ணுலகம் செல்ல, தனியாக நிற்கும் மத மயக்கம் கொண்ட யானைக்கு ஒப்பாக, தேன்போல் சிவந்த கண்கள் நெருப்புப் பொறியை வெளிப்படுத்தும் வகையில் கோபம் கொண்டவனாக, தான் ஒருவனே எஞ்சி நின்றான் காலனைப் போன்ற தன்மை கொண்ட சம்புமாலி என்றவன்.
வேகசம்பன்னனான அந்த ஹனுமான், கழுதைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வந்தவனை {வந்த ஜம்புமாலியைக்} கண்டு, மகிழ்ச்சியடைந்து நாதம் செய்தான்.(5) மஹாபாஹுவான ஜம்புமாலி, தோரணத்தின் விடங்கத்தில் {நுழைவாயில் வளைவின் கூரையில் / கோபுரத்தில்} இருந்தவனும், மஹாகபியுமான அந்த ஹனூமந்தனைக் கூரிய சரங்களால் தாக்கினான்.(6) அந்தக் கபீஷ்வரனை, அர்த்தச்சந்திரக் கணையால் வதனத்திலும், ஏககர்ணிகையால் சிரசிலும் {காதுள்ள பாணம் ஒன்றால் தலையிலும்}, பத்து நாராசங்களால் {இரும்புக் கணைகளால்} கைகளிலும் தாக்கினான்.(7) சரத்கால பாஸ்கரனின் {கூதிர் கால சூரியனுடைய} கதிர்களால் துளைக்கப்பட்டு, முற்றும் மலர்ந்த அம்புஜத்தைப் போல, சரத்தால் தாக்கப்பட்ட அந்தச் சிவந்த முகம் ஒளிர்ந்தது.(8) இரத்தம் பூசப்பட்ட அவனுடைய சிவந்த முகம், சந்தன பிந்துக்களால் {துளிகளால்} நனைந்து, ஆகாசத்தில் இருக்கும் மஹாபத்மத்தை {பெரும் தாமரையைப்} போலப் பிரகாசித்தது.(9)
பாணங்களால் தாக்கப்பட்ட மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, ராக்ஷசனிடம் {ஜம்புமாலியிடம்} கோபமடைந்து, அக்கம்பக்கம் நோக்கியபோது, மிகப் பரந்த பெரும்பாறையைக் கண்டான்.(10) உடனே அந்த பலவான் அதைத் தூக்கி, பலத்துடன் வீசியெறிந்தான். குரோதமடைந்த ராக்ஷசன் {ஜம்புமாலி}, பத்து சரங்களால் அதைத் தகர்த்தான்.(11) சண்டவிக்கிரமனும், வீரியவானுமான ஹனுமான், அந்தக் கர்மம் வீணானதைக் கண்டு, பெரும் சாலத்தை {சாலமரத்தை} வேருடன் பிடுங்கி சுழற்றினான்.(12) மஹாபலவானான ஜம்புமாலி, சால விருக்ஷத்தைச் சுழற்றும் மஹாபலம்பொருந்திய கபியைக் கண்டு, எண்ணற்ற பாணங்களை ஏவினான்.(13)
நான்கால் {நான்கு பாணங்களால்} சாலத்தைப் பிளந்து, ஐந்தால் வானரனின் புஜங்களையும், ஏகபாணத்தால் மார்பையும், பத்தால் மார்பின் நடுப்பகுதியையும் தாக்கினான்.(14) சரங்கள் நிறைந்த உடலுடன் கூடியவன் {ஹனுமான்}, மஹத்தான குரோதமடைந்து, அதே பரிகத்தை {உழல்தடியை} எடுத்து, இறுகப்பற்றி, வேகமாகச் சுழற்றினான்.(15) அதிவேகத்துடன் பரிகத்தைச் சுழற்றிய அளவிலா பலம் நிறைந்தவன் {ஹனுமான்}, ஜம்புமாலியின் அகன்ற மார்பில் அதிவேகத்துடன் அதை வீசியெறிந்தான்.(16) அப்போது, அவனது சிரமும் நாஸ்தியானது {ஜம்புமாலியின் தலையும் இல்லாமல் போனது}; முழங்கால்களும் இல்லை; தனுவும் இல்லை; ரதம் இல்லை; அஷ்வங்கள் {குதிரைகள்} இல்லை; கணைகளும் காணப்படவில்லை.(17) மஹாபலவானான ஜம்புமாலி, அங்கங்களும், பூஷணங்களும் சூர்ணமாகி அவனது {ஆபரணங்களும் பொடியாகி ஹனுமானின்} தாக்குதலில் கொல்லப்பட்டவனாகப் பூமியில் விழுந்தான்.(18)
ஜம்புமாலியும், மஹாபலவான்களான கிங்கரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதமடைந்த ராவணன், கோபத்தால் கண்கள் சிவந்தவனானான்.(19) மஹாபலம் நிறைந்த பிரஹஸ்தபுத்திரன் {ஜம்புமாலி} கொல்லப்பட்டதும், கோபத்தால் கண்கள் சிவந்த அந்த நிசாசரேஷ்வரன் {இரவுலாவிகளின் தலைவனான ராவணன்}, அதிவீரிய விக்கிரமர்களான தன் அமைச்சர்களின் புத்திரர்களுக்கு உடனே ஆணையிட்டான்.(20)
சுந்தர காண்டம் சர்க்கம் – 44ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |