Jabali's Atheism | Ayodhya-Kanda-Sarga-108 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நாட்டை ஆள ராமனை சமாதானப்படுத்த ஜாபாலி செய்த முயற்சிகள். அவர் வேத நடைமுறைகளில் நம்பிக்கையற்றோரின் கோட்பாட்டை ஆதரித்துப் பேசியது...
பிராமணோத்தமரான ஜாபாலி, பரதனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தவனும், தர்மத்தை அறிந்தவனுமான ராமனிடம், தர்மத்திற்கு மாறான இந்தச் சொற்களை {பின்வருமாறு} சொன்னார்:(1) "இராகவா, ஆரியபுத்திக்கும், உயர்ந்த மனத்திற்கும் புகழ்பெற்றவனான நீ, சாதாரண நரனைப் போல புத்தி மோகத்திற்கு ஆளாகாதே.(2) எந்த புருஷன் எவனுக்கு பந்து {உறவினன்}? ஒவ்வொரு ஜந்துவும் {உயிரினமும்} தனியாகவே பிறந்து, தனியாகவே இறக்கிறது என்பதால், எவன், எதனை, எவனிடம் இருந்து அடையப் போகிறான்?(3) எனவே, ராமா, "இவன் என் பிதா, இவள் என் மாதா" என்ற பற்று கொள்ளும் நரன் உன்மத்தனாகவே {பைத்தியக்காரனாகவே} அறியப்பட வேண்டும். எவனும் எவனுக்கும் இல்லை {உரியவனல்ல / உறவினனல்ல}.(4) காகுத்ஸ்தா {ராமா}, கிராமங்களைக் கடந்து செல்லும் எந்த நரனும், எங்கோ வசித்து, அடுத்த நாள் அவ்விடத்தை விட்டுப் பயணத்தைத் தொடர்வான். அதைப் போலவே, மாதா, பிதா ஆகியோரும், கிருஹம் {இல்லம்}, உடைமைகள் {செல்வம்} ஆகியவையும் மனுஷ்யர்களின் வசிப்பிடங்கள் மாத்திரமே. ஸத்ஜனங்கள் {விவேகிகள்} இவற்றில் ஒருபோதும் பற்று கொள்வதில்லை.(5,6)
நரோத்தமா {மனிதர்களில் முதன்மையானவனே}, துக்கம் நிறைந்ததும், {பயணிக்கக்} கடினமானதும், முட்கள் நிறைந்ததுமான தனிமையான காட்டில் வசிப்பதற்காக, உன் பிதாவின் ராஜ்ஜியத்தைக் கைவிடுவது விவேகமாகாது; அஃது உனக்குத் தகாது.(7) செழிப்பான அயோத்தியில் நீ அபிஷேகம் செய்து கொள்வாயாக. அந்த நகரம், {ஒரு பதிவிரதையைப் போல} ஒற்றைப் பின்னலுடன் உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.(8) பார்த்திவாத்மஜா {இளவரசே}, உனக்குத் தகுந்த ராஜபோகத்தை அனுபவிப்பாயாக. சொர்க்கத்தில் சக்ரனை {இந்திரனைப்} போல நீ அயோத்தியில் விளையாடித் திரிவாயாக.(9)
உனக்கு தசரதனும், அவனுக்கு நீயும் {உறவெனக் கொள்ள} ஏதுமில்லை. அந்த ராஜனும், நீயும் வெவ்வேறானவர்கள். எனவே, {நான்} சொன்னதைச் செய்வாயாக.(10) ஒரு ஜந்துவுக்கு {ஓர் உயிரினத்திற்குப்} பிதாவானவன், {அதன்} வித்தாக மாத்திரமே இருக்கிறான். மாதாவிடம் சரியான நேரத்தில் கலக்கும் உதிரசுக்லமே {வெண்குருதியே / விந்தணுவே} இஹத்தில் {இம்மையில்} புருஷனாக {மனிதனாகப்} பிறக்கிறது.(11) அந்த நிருபதி {தசரத மன்னன்} எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சென்றுவிட்டான். இதுவே {இவ்வாறு செல்வதே} அனைத்தின் விதியாகும். நீ இன்னும் வருந்திக் கொண்டிருப்பது தேவையற்றது.(12)
எவரெவர் அர்த்தத்திலும் {பொருளிலும்}, தர்மத்திலும் அர்ப்பணிப்புடன் இருந்து இஹத்தில் {உலகில்} துக்கத்தை அனுபவித்து, பிரேதமாகி அழிவடைகிறார்களோ அவர்கள் அனைவருக்காகவும் நான் வருந்துகிறேனேயன்றி {காமத்தில் / இன்பத்தில் அர்ப்பணிப்புள்ள} மற்றவர்களுக்காக அல்ல {நான் வருந்தவில்லை}.(13) இந்த ஜனங்கள், "எட்டாம் நாளில் பித்ருதைவத்யம் {பித்ருக்களுக்கான சிராத்தம் செய்யப்பட வேண்டும்}" என்று சொல்கின்றனர். அன்னத்திற்கு உண்டாகும் உபத்ரவத்தைப் பார் {உணவு வீணாவதைப் பார்}. மரித்தவன் எதை உண்பான்?(14) இஹத்தில் எவனாலும் புசிக்கப்பட்டது {உண்ட உணவு} மற்றொருவனின் தேஹத்தை {உடலை} அடையுமென்றால், நெடும்பயணம் மேற்கொள்வோருக்கும் சிராத்தம் அளிக்கலாமே. அஃது {அந்த சிராத்தம்} அவர்களின் பாதையில் உணவாகப் பயன்படாதா? {இது பலனளிக்கும் என்றால் பயணிகள் வழியில் உணவு தேடாமல், நாம் இங்கிருந்தே உண்டு அவர்களுக்கு அளிக்கலாமே}.(15)
"வேள்விகளைச் செய், கொடையளி, தீக்ஷை பெறு, தபம் செய், அனைத்தையும் துற" என்ற கிரந்தங்கள் {உரைகள்} பிறர் தானம் செய்வதற்காகவே மேதாவிகளால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.(16) மதிமிக்கவனே, பரம் {மறுமை} என்ற ஏதுமிங்கில்லை {இஹத்தைத் தவிர வேறேதும் இல்லை} என்ற புத்தியை அடைவாயாக. புலன்களால் உணர்வனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிவுக்கு அப்பாற்பட்டவற்றில் இருந்து விலகிச் செல்வாயாக.(17) உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த புத்தியை முன்னிட்டு, பரதனின் வேண்டுதலுக்கு இணங்கி ராஜ்ஜியத்தை ஏற்பாயாக" {என்றார் ஜாபாலி முனிவர்}.(18)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 108ல் உள்ள சுலோகங்கள்: 18
Previous | | Sanskrit | | English | | Next |