Girivraja | Ayodhya-Kanda-Sarga-068 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரதனையும், சத்ருக்னனையும் திரும்ப அழைத்து வருமாறு தூதர்களிடம் சொல்லி அனுப்பிய வசிஷ்டர்; கிரிவ்ரஜத்தை அடைந்த தூதர்கள்...
அவர்களின் சொற்களைக் கேட்ட வசிஷ்டர், அந்த மித்ராமாத்ய கணங்களுக்கும் {நண்பர்களின் கூட்டத்திற்கும், அமைச்சர்களின் கூட்டத்திற்கும்}, சர்வ பிராமணர்களுக்கும் இந்த சொற்களில் மறுமொழி கூறினார்:(1) "இராஜ்ஜிய தத்தம் செய்யப் பெற்ற பரதன், தன்னுடன் பிறந்த சத்ருக்னனுடன் சேர்ந்து, மாதுலகுலத்துடன் {தாய்மாமன் வீட்டாருடன்} பரமசுகமாக வசித்திருக்கிறான். எனவே, அந்த வீர சகோதரர்களை அழைத்து வருவதற்காக வேகமான தூதர்கள் துரிதமான ஹயங்களில் {குதிரைகளில்} சீக்கிரமாகச் செல்ல வேண்டும். நாம் வேறென்ன ஆலோசிப்பது?" {என்றார் வசிஷ்டர்}.(2,3)
அப்போது அவர்கள் அனைவரும் வசிஷ்டரிடம், "செல்லட்டும்" என்ற வாக்கியத்தைச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த சொற்களைக் கேட்ட வசிஷ்டர், இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(4) "சித்தார்த்தா, விஜயா, ஜயந்தா, அசோகா, நந்தனா வருவீராக[1]. என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்லப் போகிறேன் கேட்பீராக.(5) வேகமாகச் செல்லும் ஹயங்களில் {குதிரைகளில்} இங்கிருந்து சீக்கிரமாகச் சென்று ராஜகிருஹபுரத்தை[2] அடைந்த பிறகு, நீங்கள் சோகத்தில் இருந்து விடுபட்டு, பரதனிடம் என் சாசனமாக இதைச் சொல்வீராக:(6) "சர்வபுரோஹிதர்களும், மந்திரிமார்களும் உன்னை குசலம் {உன் நலத்தை} விசாரிக்கின்றனர். சீக்கிரம் புறப்படுவாயாக. அதி அவசர காரியம் உனக்கு இருக்கிறது" {என்று சொல்வீராக}.(7) நீங்கள் அங்கே சென்றதும், ராமன் நாடு கடத்தப்பட்டதையும், பிதாவின் {தசரதனின்} மரணத்தையும், ராகவர்களுக்கு {ரகு குலத்திற்கு} ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரிடரையும் அவனிடம் சொல்ல வேண்டாம்.(8) இராஜனுக்கும், பரதனுக்குமான பட்டு வஸ்திரங்களையும், அதிசிறந்த பூஷணங்களையும் {ஆபரணங்களையும்} எடுத்துக் கொண்டு சீக்கிரம் செல்வீராக" {என்றார் வசிஷ்டர்}.(9)
[1] பாலகாண்டம் 7ம் சர்க்கம் 3ம் சுலோகத்தில் https://ramayanam.arasan.info/2021/09/Ramayanam-Balakandam-Sarkam-07.html தசரதனின் அமைச்சர்கள் எண்மரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் ஜயந்தன், விஜயன் என்ற பெயர்கள் இடம்பெறுகின்றன. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்குச் சொல்லுகிற சித்தார்த்தன் முதலியவர்கள் மந்த்ரிகளல்லர். மந்த்ரிகளின் பேரைப் போன்ற பேருடைய வேறு சிலர். ஆனது பற்றியே இவர்களோடு மந்த்ரியாகாத நந்தனனென்பவனும் சேர்த்துச் சொல்லப்பட்டனன்" என்றிருக்கிறது.
[2] இராமாயணத்தில் கேகயநாட்டுத் தலைநகரம் கிரிவ்ரஜம் என்றும், ராஜகிருஹபுரமென்றும் அழைக்கப்பட்டது. மஹாபாரதத்தில் காந்தாரம் {இன்றைய காந்தகார்} தலைநகராகச் சொல்லப்பட்டது.
கேகயத்திற்குப் புறப்படும் அந்தத் தூதர்களுக்கு, வழியில் தேவைப்படும் உணவு கொடுக்கப்பட்டதும், அவர்கள் அழகிய ஹயங்களில் ஏறிக்கொண்டு தங்கள் தங்கள் நிவேசனங்களுக்கு {வீடுகளுக்குச்} சென்றனர்.(10) அந்த தூதர்கள், பயணத்திற்குத் தேவையான மீதி காரியங்களைச் செய்த பிறகு, வசிஷ்டரால் அனுமதிக்கப்பட்டு விரைந்து புறப்பட்டனர்.(11) அந்தத் தூதர்கள், அபரதாலத்திற்கும் {அபரதால மலைக்கும்}, பிரலம்பத்தின் {பிரலம்ப மலையின்} வட எல்லைக்கும் மத்தியில் உள்ள மாலினி நதியை ஒட்டியவாறு சென்றனர்.(12) அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் கங்கையைக் கடந்தனர். மேற்கு நோக்கிச் சென்ற அவர்கள், பாஞ்சாலத்தின் வழியாகச் சென்று குருஜாங்கலத்தின் மத்தியை அடைந்திருந்தனர்[3].(13) அந்தத் தூதர்கள், அழகிய பொய்கைகளையும், தெளிந்த நீரைக் கொண்ட நதிகளையும் பார்த்துக் கொண்டே காரியத்தின் அவசரத்தால் வேகமாகச் சென்றனர்.(14)
[3] கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சென்றால் வங்கம், அங்கம், மகதம், கோசலம், பாஞ்சாலம், குருஜாங்கலம், பாஹ்லீகம், கேகயம் என்று நேரும். இங்கே 13ம் சுலோகத்தில் முதலில் ஹஸ்தினாபுரத்தில் கங்கையைக் கடந்து, அதன்பிறகு பாஞ்சாலத்தை அடைந்து, அதன்பிறகு மேற்கு நோக்கி குருஜாங்கலத்தை அடைந்ததாகப் பொருள் வருகிறது. ஹஸ்தினாபுரம் குருஜாங்கலத்தின் தலைநகரமாகும். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவர்கள் ஹஸ்தினபட்டணத்தில் கங்கையைத் தாண்டி, மேற்குநோக்கிச் செல்லுகின்றவர்களாய் குருஜாங்கலம் வழியாய் பாஞ்சால நாட்டை அடைந்து சென்றார்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவர்கள் ஹஸ்தினாபுரத்தினருகில் கங்கையைத் தாண்டி, மேற்கு முகமாகத் திரும்பி குருக்ஷேத்திரத்திலடங்கி ஜாங்கல தேசத்தின் மத்ய மார்க்கமாகப் போய் பாஞ்சாதேதஞ்சேர்ந்து" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "மாலினி நதியின் கரைவழியாக வடக்கு முகமாகச் சென்று, ஹஸ்தினபட்டணத்தினருகில் கங்காநதியைத் தாண்டி மேற்குமுகமாகச் சென்று, பாஞ்சாலதேசஞ்சேர்ந்து, அதற்குங் குருஜாங்கல தேசத்திற்கும் நடுவாக நடந்து" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "புவியியல் சார்ந்த இந்த இடங்களை அடையாளம் காண்பது கடினமானது; இவை பல யூகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இயல்பாகவே இவை யூகங்களாகத் தெரிவதால், இத்தகைய குறிப்புகளை நாம் வேண்டுமென்றே தவிர்க்கிறோம்" என்றிருக்கிறது. ஆனால், இந்த சுலோகத்தைப் பின்வருமாறு பொருள் கொண்டால் சரியாக இருக்கமெனத் தோன்றுகிறது: "பாஞ்சால தேசத்தை அடைந்த அந்தத் தூதர்கள், தெளிந்த நீர் நீறைந்த தடாகங்களையும், நதிகளையும் கண்டவாறே மேற்கு நோக்கிச் சென்று குருஜாங்கலத்தின் மத்தியில் ஹஸ்தினாபுரத்தில் கங்கையைக் கடந்து காரியத்தின் அவசரத்தால் வேகமாகச் சென்றனர்" {என்று கொண்டால் சரியாகத் தெரிகிறது}.(13,14) அல்லது மூலத்தில் பாஞ்சாலம் என்பது ஐந்து நதிகளை உள்ளடக்கிய இன்றைய பஞ்சாபைக் குறிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
திவ்யமானதும், தெளிந்த ஜலம் நிறைந்ததும், பலவித பறவைகளுடன் கூடியதுமான சரதண்டம் எனும் நதியை அவர்கள் வேகமாகக் கடந்து சென்றனர்.(15) திவ்யமானதும், கரையில் இருப்பதும், சத்யோபயாசனம் {வேண்டிய வரத்தைக் கொடுப்பது} என்று அழைக்கப்படுவதுமான விருக்ஷத்தை {மரத்தை} அடைந்து அதை வலம் வந்த அவர்கள், குலிங்காபுரிக்குள் பிரவேசித்தனர்.(16) அங்கேயிருந்து அபிகாலத்தை {அபிகாலம் என்ற கிராமத்தை} அடைந்தனர். அங்கே அவர்கள், பித்ரு பிதாமஹருடன் {தசரதனின் தந்தைவழி பாட்டனுடன்} தொடர்புடையதும், போதிபவனத்தில் {போதிபவன மலையில்} இருந்து பாய்வதும், புண்ணியமானதுமான இக்ஷுமதியை {இக்ஷுமதி ஆற்றைக்}[4] கடந்தனர்.(17) அஞ்சலிபானர்களும் {குவிந்த உள்ளங்கைகளில் நிறையும் நீரை மட்டுமே பருகி உயிர் வாழ்பவர்களும்}, வேதபாரகர்களுமான பிராமணர்களை அங்கே கண்ட அவர்கள், பாஹ்லீகத்தின் மத்தியில் சுதாமம் எனும் பர்வதத்தை நோக்கிச் சென்றனர்.(18)
[4] மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 3ல், 141ம் சுலோகத்தில், தக்ஷகன் குருக்ஷேத்திரத்தின் அருகில் இக்ஷுமதி நதியில் வசித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
விஷ்ணு பதத்தை சேவிக்கும் {விஷ்ணுவின் பாதத்தை அல்லது விஷ்ணு பதம் எனும் நகரத்தை சேவிக்கும்} விபாசையையும் {விபாசை எனும் ஆற்றையும்}[5], இலவ மரம், நதிகள், வாபிகள் {ஓடைகள்}, தடாகங்கள், பல்வலங்கள் {ஏரிகள்}, சரஸ்கள் {தடாகங்கள்} ஆகியவற்றையும், பற்பல சிம்மம், வியாகரம் {புலி} போன்ற மிருகங்களையும் கண்டவாறே தங்கள் பர்த்தாவின் {தலைவரான வசிஷ்டரின்} ஆணையை நிறைவேற்றும் பணியில் அவர்கள் உயர்ந்த நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.(19,20) நெடிய பாதையில்[6] களைத்துப் போன குதிரைகளுடன் கூடிய அந்த தூதர்கள், சிறந்த நகரமான கிரிவ்ரஜத்தை[7] இவ்வாறே சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் அடைந்தனர்.(21) தங்கள் பர்த்தாவின் {தலைவரின்} பிரிய நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்காகவும், குலத்தை ரக்ஷிப்பதற்காகவும், பர்த்தாவின் {தலைவரின்} வம்சத்து அந்தஸ்த்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அந்தத் தூதர்கள் விரைவாகவும், மதிப்புடனும் அந்த ராத்திரி வேளையில் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(22)
[5] விபாசை ஆறு ஹிமாச்சல் பிரதேசத்தில் உற்பத்தியாகி, பஞ்சாபில் பாயும் இன்றைய பியாஸ் நதி என்று சொல்லப்படுகிறது.
[6] இந்த நீண்ட நெடிய பாதைதான் மேற்கண்ட நில வரைபடத்தில் உத்தேசமாக புள்ளிகளாலான கோட்டின் மூலம் உணர்த்தப்படுகிறது. இந்தப் பாதையும், கிரிவ்ரஜ நகரமும் மேற்கண்ட படத்தில் கிரிவ்ரஜம் என்று குறிக்கப்பட்டுள்ள புள்ளியின்ன் சுற்றுவட்டாரத்தில் எங்கு வேண்டுமானாலும் அமைந்திருக்கலாம். இங்கே உத்தேசமாகவே காட்டப்பட்டிருக்கிறது.
[7] இன்றைய பீகாரில் இருக்கும் மஹாபாரத கால மகதநாட்டின் தலைநகரமும், இதேபோல கிரிவ்ரஜம் என்றும், மகதமன்னனின் அரண்மனை இருந்த இடம் ராஜகிருஹமென்றும் அழைக்கப்பட்டது. இங்கே குறிப்பிடப்படும் கேகய நாட்டு கிரிவ்ரஜம் இன்றைய வடகிழக்கு பாகிஸ்தானில் ஏதோவொரு இடமாக இருக்க வேண்டும். அங்கே கேகய நாட்டு ராஜன் வசித்த இடம் ராஜகிருஹபுரம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றைய கேகயம் இன்றைய ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதிகளையும், இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 068ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |