Sunday, 22 January 2023

மெய்ம்மையால் பாரகம் ஆள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 107 (19)

Govern the kingdom as per the promise | Ayodhya-Kanda-Sarga-107 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாட்டுக்குத் திரும்பி ஆட்சி செய்யுமாறு பரதனை அறிவுறுத்திய ராமன்...

Bharata and Rama

அப்போது, ஞாதிகளின் {இனத்தாரின்} மத்தியில் நன்கு மதிக்கப்படும் ஸ்ரீமானான அந்த லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பரதனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(1) "இராஜர்களில் உன்னதரான தசரதருக்குக் கைகேயியிடம் பிறந்த புத்திரனான நீ பேசிய இந்த வாக்கியங்கள் உனக்குப் பொருத்தமானவையே.(2) உடன்பிறந்தானே, பூர்வத்தில் நம் பிதா உன் மாதாவை மணந்த போது, உன் மாதாமஹரிடம் {உன் தாயின் தந்தையான கேகய ராஜன் அசுவபதியிடம்} ஓர் உத்தம ராஜ்யசுல்கத்தை {ராஜ்ஜியத்தையே வரதட்சணையாகத் தரும் நல்ல வரமொன்றை} உறுதியளித்தார்.(3) பிரபுவும், பார்த்திபருமான ராஜா {தசரதர்}, தைவாசுரப் போரில் ஆராதிக்கப்பட்டதால் பெரும் மகிழ்ச்சியடைந்து உன்னைப் பெற்றவளுக்கு ஒரு வரத்தை அளித்தார்[1].(4)

[1] கைகேயி தசரதனிடம் பெற்ற வரங்களில், "பரதனுக்கு ராஜ்யம்" என்ற முதல் வரம், கைகேயியின் தந்தையான அசுவபதிக்கு தசரதன் வரதட்சணையாகக் கொடுத்த வரம். "பதினான்கு ஆண்டுகள் ராமன் நாடுகடத்தப்பட வேண்டும்" என்ற இரண்டாம் வரம் போரில் தசரதனுக்கு உதவியதால் நன்றியறிதலுக்காகக் கைகேயிக்குக் கொடுத்த வரம்.

நரவியாகரா {மனிதர்களில் புலியே}, அந்த நரசிரேஷ்டர் {மனிதர்களில் சிறந்த தசரதர்} வாக்குறுதி அளித்ததால், சிறப்புமிக்கவளும், வரவர்ணினியுமான உன் மாதா {அழகிய நிறம் படைத்தவளுமான உன் அன்னை கைகேயி}, உனக்கு ராஜ்ஜியம், எனக்கு நாடுகடத்தல் என்ற இரு வரங்களைக் கேட்டாள். அதற்குக் கட்டுண்ட ராஜாவும் அந்த வரங்களைக் கொடுத்தார்.(5,6) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, அந்த வரத்தின்படியே சதுர்தச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} வனவாசம் என்று நம் பிதா எனக்கு ஆணையிட்டார்.(7) நானும், ஒப்பற்றவரான பிதாவின் சத்தியவாதத்தை திடப்படுத்தவே {தந்தையின் சொற்களை மெய்யாக்கவே}, லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் ஜனங்களற்ற இந்த வனத்திற்கு வந்தேன்.(8) இராஜேந்திரா {மன்னர்களில் இந்திரனே, பரதா}, நீயும் சீக்கிரமே அபிஷேகஞ் செய்து {முடிசூட்டிக்} கொண்டு நம் பிதாவை சத்தியவாதியாக்குவதே தகும்[2].(9) பரதா, பிரபுவான {தசரத} ராஜாவை எனக்காகக் கடனிலிருந்து விடுவித்து, தர்மத்தை அறிந்தவரான நம் பிதாவையும், மாதாவையும் மகிழ்ச்சியடையச் செய்வாயாக.(10) 

[2] எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால்

- கம்பராமாயணம் 2490ம் பாடல்

பொருள்: என் தந்தை ஆணையிட்ட பதினான்கு ஆண்டு காலம் வரை நான் வனத்துள் வசித்திருக்க, தந்தை அளித்த அரசை {தந்தையின் சத்தியம் தவறாமல்} மெய்ம்மையாக்கும் வகையில் அந்த பதினான்கு ஆண்டுகளும் என் ஆணையால் ஆள்வாயாக. 

தாதா {ஐயா}, பூர்வத்தில் சிறப்புமிக்க {மன்னன்} கயன், பித்ருக் கடனுக்கான வேள்வியை கயையில் {கயா நகரத்தில்} செய்து கொண்டிருந்த போது பாடிய சுருதியைக் கேட்டிருக்கிறோம்.(11) ஒரு மகன், 'புத்' எனும் நரகத்தில் இருந்து பிதாவை விடுவிப்பதாலும், ஆபத்துகள் அனைத்திலும் இருந்து பித்ருக்களை காப்பதாலும் 'புத்திரன்' என்று அழைக்கப்படுகிறான்.(12) குணவான்களாகவும், நல்ல கல்விமான்களாகவும் புத்திரர்கள் பலரைப் பெற விரும்ப வேண்டும். அவர்களில் மிக நெருக்கமான ஒருவனாவது {பித்ருக் கடன் தீர்க்கும் வேள்வியை / சிராத்தத்தைச்} செய்ய கயைக்குச் செல்வான்' {என்பதே அந்த சுருதி}.(13) இராஜநந்தனா {இளவரசே}, ராஜரிஷிகள் அனைவரும் இதை ஏற்கிறார்கள். நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, அதனாலேயே நம் பிதாவை நரகத்திலிருந்து காக்க வேண்டும்.(14) 

வீரா, பரதா, சத்ருக்னனுடனும், துவிஜர்கள் {பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வர்ணத்தார்} அனைவருடனும் அயோத்திக்குச் சென்று, குடிமக்களை மகிழ்விப்பாயாக.(15) இராஜாவே, நானும், வைதேஹி {சீதை}, லக்ஷ்மணன் ஆகிய இருவருடனும் சேர்ந்து தாமதிக்காமல் தண்டகாரண்யத்திற்குள் பிரவேசிப்பேன்.(16) பரதா, நீ நரர்களின் {மனிதர்களின்} ராஜாவாவாயாக. நான் வனத்தில் திரியும் மிருகங்களின் ராஜாவாகப் போகிறேன். அந்தச் சிறந்த நகரத்திற்கு {அயோத்திக்கு} மகிழ்ச்சியுடன் நீ செல்வாயாக. நானும் தண்டகத்திற்குள் மகிழ்ச்சியாகப் பிரவேசிப்பேன்.(17) பரதா, {வெண்கொற்றக்} குடையானது, தினகரனின் ஒளியை விலக்கி, உன் தலைக்கு குளுமையான நிழலைத் தரட்டும். நானும் கானக மரங்களின் பரந்த நிழலின் கீழ் சுகமாகப் படுத்திருப்பேன்.(18) பரதா, நன்மதி படைத்த சத்ருக்னன் உனக்கு சஹாயம் செய்வான். சௌமித்ரி {லக்ஷ்மணன்} என் பிரதான மித்ரன் {முதன்மையான துணைவன்} என அறியப்படுகிறான். சிறந்த தனயர்களான {மகன்களான} நாம் நால்வரும் நரேந்திரரை {மனிதர்களின் இந்திரரான தசரதரை} சத்தியஸ்தராக்குவோம் {சத்தியம் தவறாதவராக்குவோம்}. கவலை வேண்டாம்" {என்றான் ராமன்}.(19)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 107ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை