Silver Mountain | Kishkindha-Kanda-Sarga-49 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வெள்ளிமலையில் சீதையை தேடத் துருப்புகளை ஊக்குவித்த அங்கதன்...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உருவாக்கப்பட்டப் படங்களின் தொகுப்பு |
பின்னர், மிகக் களைத்தவனும், பெரும் ஞானம் கொண்டவனுமான அங்கதன், சர்வ வானரர்களுக்கும் ஆறுதல் கூறும் வகையில், மெதுவாக இந்த வாசகங்களைச் சொன்னான்:(1) “வனங்கள், கிரிகள், நதிகள், துர்கங்கள் {கடப்பதற்கரிய இடங்கள்}, கஹனங்களிலும் {ஆழமான பகுதிகளிலும்}, தரீகள் {மலைப்பிளவுகள் / பிலங்கள்}, குகைகள் ஆகியவற்றின் எல்லை வரை நாம் தேடினோம்.{2} நாம் அனைவரும் சேர்ந்து ஆங்காங்கே தேடியும், ஜானகியைக் காணமுடியவில்லை. அதேபோல, சீதையை அபகரித்துத் தீச்செயல்புரிந்த ராக்ஷசனையும் {ராவணனையும்} காணமுடியவில்லை.(2,3) நமக்கு மஹாகாலம் {நீண்ட காலம்} கடந்துவிட்டது. சுக்ரீவரோ, உக்கிர சாசனர் {கொடுந்தண்டனைகளை விதிக்கக்கூடியவர்}. எனவே, நீங்கள் அனைவரும் சேர்ந்து எங்கும் தேடுவீராக.(4)
எதிர்வரும் சோம்பல், சோகம், நித்திரை ஆகியவற்றைக் கைவிட்டு, ஜனகாத்மஜையான சீதையைக் காணும் வரையில் தேடுவீராக.(5) அநிர்வேதமும் {இரக்கமற்ற கவனமும் / விழிப்புணர்வும்}, தாக்ஷ்யமும் {புத்திக்கூர்மையும்}, வெல்ல முடியாத மனசும், காரிய சித்திக்கான {காரியம் நிறைவேறுவதற்கான} காரணங்களெனச் சொல்லப்படுகின்றன என்பதனாலேயே இதை நான் சொல்கிறேன்.(6) வன ஓகஸர்களே {காட்டில் வசிப்பவர்களான குரங்குகளே}, இப்போதுங்கூட கடப்பதற்கரிய இந்த வனத்தில் தேடுவீராக. கேதத்தை {துக்கத்தை / இளைப்பைக்} கைவிடுவீராக. மீண்டும் இந்த வனம் முழுவதும் தேடுவீராக.(7) செயல்படுபவன், அந்தக் கர்மத்தின் {செயலின்} பலனை அவசியம் காண்பான். மறுபுறம், நிர்வேதத்தை அடைந்து {கவனத்தை இழந்து, கண்களை} மூடிக் கொள்வது நமக்குப் பொறுத்துக் கொள்ளத் தக்கதல்ல.(8) வானரர்களே, ராஜா சுக்ரீவர் குரோதரும் {கோபக்காரரும்}, கடுமையாக தண்டிப்பவருமாவார். அவருக்கும், மஹாத்மாவான ராமருக்கும் {நாம்} சதா பயப்பட வேண்டும்.(9) வானரர்களே, உங்கள் ஹிதத்தின் அர்த்தத்திற்காகவே {நலனுக்காகவே} இதைச் சொல்கிறேன். நீங்கள் விரும்பினால் செயல்படுவீராக. அல்லது, எது நம் அனைவராலும் பொறுத்துக் கொள்ளக்கூடியதோ, அதைச் சொல்வீராக” {என்றான் அங்கதன்}.(10)
அங்கதனின் சொற்களைக் கேட்ட கந்தமாதனன், தாகம், சிரமம் ஆகியவற்றுடன், தெளிவற்ற சொற்களில் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(11) “அங்கதன் உங்களிடம் சொன்ன வாக்கியங்கள் நமக்குத் தகுந்தவை; ஹிதமானவை {நன்மை தருபவை}; அனுகூலமானவை. அவன் சொன்னவாறே செயல்படுவோம்.(12) சைலங்கள், குகைகள் ஆகியவற்றிலும், அதே போல பாறைப்பகுதிகளிலும், சூனியமான கானகங்களிலும், கிரிபிரஸ்ரவணங்களிலும் {மலையருவிகளிலும்} மீண்டும் தேடுவோம்.(13) நாம் அனைவரும் சேர்ந்து, மஹாத்மாவான சுக்ரீவர் குறிப்பிட்ட கிரி துர்கங்கள் அனைத்திலும் தேடுவோம்” {என்றான் கந்தமாதனன்}.(14)
அப்போது, மீண்டும் எழுந்த மஹாபலமிக்க வானரர்கள், விந்தியத்தின் காடுகளால் நிறைந்த தக்ஷிண {தெற்குத்} திசையில் தேடினர்.(15) அந்த வானரர்கள், கூதிர் கால மேகத்திற்கு ஒப்பானதும், சிருங்கவந்தமும் {சிகரங்கள் நிறைந்ததும்}, தரீவந்தமுமான {மலைப்பிளவுகள் / பிலங்கள் நிறைந்ததுமான} ஸ்ரீமத் ரஜத பர்வதத்தில் {வெள்ளி மலையில்} ஏறினர்.{16} சீதையைக் காண விரும்பிய அந்த ஹரிவரர்கள் {குரங்குகளில் சிறந்தவர்கள்}, அங்கே இருந்த ரம்மியமான லோத்ர வனத்திலும் {வெள்ளொலுத்தி காட்டிலும்}, சப்தபர்ண வனங்களிலும் {ஏழிலைப்பாலைக் காடுகளிலும் / வாழைத் தோப்புகளிலும்} தேடினர்.(16,17) விபுல விக்ரமர்களான அவர்கள் {பேராற்றல் வாய்ந்த அந்த வானரர்கள்}, அதன் {வெள்ளி மலையின்} உச்சியில் ஏறியும், ராமனின் பிரிய மஹிஷியான வைதேஹியை {விருப்பத்திற்குரிய பட்டத்துராணியான சீதையைக்} காணாமல் களைப்படைந்தனர்.(18) இவ்வாறு தேடிக் கொண்டிருந்த அந்த ஹரயர்கள் {குரங்குகள்}, அந்த சைலத்தில் {மலையில்} இருந்த பல்வேறு குகைகளையும் கண்டு, முழுமையாகத் தேடிய பிறகும், விழிப்புடனேயே இறங்கினர்.(19)
பிறகு, பூமிக்கு இறங்கியதும், களைப்படைந்து, மனம் நொந்தவர்களாக அங்கேயே ஒரு முஹூர்த்தம் தாமதித்து, ஒரு விருக்ஷத்தின் அடியில் {ஒரு மரத்தடியில்} தஞ்சம் புகுந்தனர்.(20) ஒரு முஹூர்த்தம் இளைப்பாறிவிட்டு, கிஞ்சித்தும் களைப்பற்றவர்களாகி, மீண்டும் இவ்வாறே முழுமையாக தக்ஷிண {தெற்குத்} திசையில் தேடப் புறப்பட்டனர்.(21) ஹனுமன் உள்ளிட்ட பிரமுகர்களும், பிலவகரிஷபர்களுமான அவர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளிற் சிறந்தவர்களுமான அந்த வானரர்கள்}, விந்தியத்தையே தொடக்கமாகக் கொண்டு, புறப்பட்டுச் சென்று, எங்கும் {சீதையைத்} தேடிக் கொண்டே இருந்தனர்.(22)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |