Entering into fire | Yuddha-Kanda-Sarga-116 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: : இராமனுக்குத் தகுந்த மறுமொழி கொடுத்து, சிதை உண்டாக்குமாறு லக்ஷ்மணனை வேண்டி, அக்னி தேவனை வணங்கி, நெருப்புக்குள் நுழைந்த சீதை...
இவ்வாறு ரோஷத்துடன் கூடிய ராகவனால் ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக சொல்லப்பட்டதைக் கேட்ட வைதேஹி பெரும் கலக்கமடைந்தாள்.(1) அந்த மைதிலி, மஹத்தான ஜனங்களின் மத்தியில் பூர்வத்தில் கேட்கப்படாத, கோரமான பர்த்தாவின் சொற்களைக் கேட்டபோது, லஜ்ஜையால் {வெட்கத்தால்} தலைகுனிந்தவள் ஆனாள்.(2) அந்த ஜனகாத்மஜை, தன் சொந்த காத்திரங்களுக்குள் சுருங்குவதை {உடல் கூனிக்குறுகியதைப்} போன்று, சல்லியங்களுடன் கூடிய அந்த வாக்குச் சரங்களால் துளைக்கப்பட்டவளைப் போலப் பெரிதும் கண்ணீர் வடித்தாள்.(3)
பிறகு கண்ணீரால் நனைந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, அடைபட்ட குரலில் மெதுவாகத் தன் பர்த்தாவிடம் இதைச் சொன்னாள்:(4) "பிராகிருதையிடம் பிராகிருதனைப் போல {சாதாரணப் பெண்ணிடம் சாதாராணமானவனைப் போல}, வீரரே, எனக்குக் கேட்பதற்குப் பயங்கரமான இத்தகைய கடும் வாக்கியங்களை ஏன் என்னைக் கேட்கச் செய்கிறீர்?(5) மஹாபாஹோ, நீர் என்னை நினைப்பது எப்படியோ, அப்படிப்பட்டவள் நானல்ல. சொந்த சாரித்ரத்தால் {என் ஒழுக்கத்தால்} சபதம் செய்கிறேன். என்னிடம் நம்பிக்கை வைப்பீராக.(6) அற்ப ஸ்திரீகளின் நடத்தையால் ஜாதியிடம் {மொத்த பெண் இனத்திடமே} நீர் சந்தேகம் கொள்கிறீர். உம்மால் நான் பரீக்ஷிக்கப்பட்டிருந்தால் இந்த சந்தேகத்தைக் கைவிடுவீர்.(7)
பிரபோ, காத்திரங்கள் ஸ்பரிசித்தலை அடைந்தபோது, நான் வசமிழந்தவளாக இருந்தேன். அதில் காமகாரம் {விருப்பத்தை நிறைவேற்றும் தன்மை} என்னிடம் இல்லை. இங்கே தைவமே அபராதம் செய்தது {விதியே குற்றமிழைத்தது}.(8) எது என் அதீனத்தில் {கட்டுப்பாட்டில்} இருந்ததோ, அத்தகைய என் ஹிருதயம் உம்மில் நிலைத்திருந்தது. பராதீனமடைந்த காத்திரங்களுடன் கூடிய அநீஷ்வரியான {பிறர் கட்டுப்பாட்டில் இருந்த உடலுடன், உரியவற்றுக்குத் தலைவியாக இல்லாத} என்னால் என்ன செய்திருக்க முடியும்?(9) மானதரே {மதிப்பை அளிப்பவரே}, நம் உணர்வுகளை ஒன்றாக வளர்த்தும், நாம் கூடி வாழ்ந்தும், இத்தகைய நான் உம்மால் அறிந்து கொள்ளப்படவில்லை எனில், அதனால் {அத்தகைய உமது அறியாமையால்} நான் சாஸ்வதம் {என்றும்} அழிந்தவளானேன்.(10)
வீரரே, எப்போது வீரனான ஹனுமான் அவலோககனாக {கவனித்து வருபவனாக} உம்மால் அனுப்பப்பட்டானோ, அப்போதே லங்கையில் இருந்த என்னை ஏன் நீர் கைவிடவில்லை?(11) வீரரே, {அப்போதே நீர் என்னைக் கைவிட்டிருந்தால்} உம்மால் கைவிடப்பட்ட நான், அந்த வாக்கியத்தைக் கேட்ட உடனேயே, இந்த வானரனின் {ஹனுமானின்} கண்களுக்கு முன்னால் ஜீவிதத்தைக் கைவிட்டிருப்பேன்[1].(12) {முன்பே என்னை நீர் கைவிட்டிருந்தால்} ஜீவிதத்தை சந்தேகத்தில் நிறுத்திய இத்தகைய உமது சிரமம் வீணாகி இருக்காது. உம்முடைய நண்பர்களின் இந்த அல்லலும், இன்னலும் வீணாகி இருக்காது.(13) எனினும், நிருப சார்தூலரே {மன்னர்களில் புலியே}, லகுவான மனுஷ்யனை {பாமர மனிதனைப்} போல, ரோஷத்தையே {கோபத்தையே} மேற்கொண்ட உம்மால் ஸ்த்ரீத்வம் {பெண்தன்மை} முன்னிறுத்தப்பட்டுள்ளது.(14) விருத்தஜ்ஞரே {நடத்தைகளை அறிந்தவரே}, ஜனகரிடமிருந்து எனக் குறிப்பிட்டாலும் வசுதாதலத்தில் உற்பத்தியானவள் நான். எனது பெரும் விருத்தமும் {நடத்தையும்} உம்மால் முன்னிறுத்தப்படவில்லை.(15) பால்யத்தில் பற்றப்பட்ட என் கைகளும் மதிக்கப்படவில்லை. என் பக்தியும், சீலமும் {ஒழுக்கமும்} என அனைத்தும் உம்மால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன" {என்றாள் சீதை}.(16)
[1] ஆரண்ய காண்டம் 45ம் சர்க்கம் 36, 37ம் சுலோகங்களில் ராமர் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று லக்ஷ்மணனிடம் உறுதிகூறுகிறாள் சீதை. சுந்தர காண்டம் 26ம் சர்க்கத்தில் 52ம் சுலோகத்தில் ராமனும், லக்ஷ்மணனும் ராவணனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதி தற்கொலை செய்ய நினைக்கிறாள் சீதை. சுந்தர காண்டம் 28ம் சர்க்கத்தில் 19ம் சுலோகத்தில் அதற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறாள்.
அழுது கொண்டே கண்ணீரால் அடைபட்ட குரலுடன், இவ்வாறு பேசிய சீதை, தீனமாக தியானத்தில் ஆழ்ந்திருந்த லக்ஷ்மணனிடம் {துன்பத்துடன் சிந்தனையில் ஆழ்ந்திருந்த லக்ஷ்மணனிடம் பின்வருமாறு} சொன்னாள்:(17) "சௌமித்ரரே, இந்த விசனத்திற்கான தீர்வாக {மருந்தாக} எனக்கு ஒரு சிதையைச் செய்வீராக. பொய்யான அபவாதங்களால் {போலிக் குற்றச்சாட்டுகளால்} தாக்கப்பட்டவளாக ஜீவித்திருப்பதில் {எனக்கு} உற்சாகமில்லை.(18) குணங்களில் அப்பிரீதியடைந்திருக்கும் பர்த்தாவால் {கணவனால்}, ஜனசம்ஸதிக்கு {மக்கள் கூட்டத்துக்கு} மத்தியில் கைவிடப்பட்டவளான எனக்கு எந்த கதி தகுந்ததோ, அந்த க்ஷமத்தை {பொறுமையை} அடைவதற்கு ஹவ்ய வாஹனத்திற்குள் பிரவேசிக்கப் போகிறேன் {தேவர்களுக்குக் கொடுக்கப்படும் ஹவ்யங்களை எடுத்துச் செல்லும் வாகனமான நெருப்புக்குள் நுழையப்போகிறேன்}" {என்றாள் சீதை}.(19)
வைதேஹியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவீரர்களை அழிப்பவனான லக்ஷ்மணன், கோபவசமடைந்தவனாக ராகவனை உற்று நோக்கினான்.(20) வீரியவானான அந்த சௌமித்ரி, ராமனின் தோற்றம் சுட்டிக்காட்டிய அவனது மனத்தின் போக்கை அறிந்து கொண்டு ராமனின் மதத்திற்கு {வெறிக்கு / விருப்பத்திற்கு} ஏற்ப ஒரு சிதையை ஏற்படுத்தினான்[2].(21) அப்போது கால, அந்தக, யமனுக்கு ஒப்பான ராமனை சம்மதிக்க வைக்கவோ, பேசவோ, பார்க்கவோ கூட நண்பர்களால் முடியவில்லை.(22) பிறகு, வைதேஹி, முகம் கவிழ்ந்து நின்ற ராமனை[3] மெதுவாகப் பிரதக்ஷிணஞ் செய்து {வலம் வந்து}, ஒளிர்ந்து கொண்டிருந்த ஹுதாசனத்தை {ஆகுதிகளை உண்ணும் நெருப்பை} நோக்கிச் சென்றாள்.(23)
[2] இளையவன் தனை அழைத்து இடுதி தீ எனவளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான்- கம்பராமாயணம் 10029ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: ஒலிக்கின்ற வளையல் அணிந்த முன்கையைக் கொண்டவள் {சீதை}, இளையவனை {லக்ஷ்மணனை} அழைத்து, "தீயை மூட்டுக" என்று தன் வாயினால் சொன்னாள். வருந்திய மனத்தை அடைந்தவன் {லக்ஷ்மணன்}, உலகம் யாவுக்கும் துன்பம் நீக்குபவனை {ராமனை} வணங்க, அவன் {ராமன்} தன் கண்ணின் குறிப்பாலேயே {நெருப்பிடு என்று} கூறினான்.
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்பொழுது ராமன் "ஒரு நிபமும் {காரணமும்} இல்லாமல் பதிவ்ரதை செய்யும் ப்ரத்யயத்தை எங்ஙனம் பார்க்கலாம்" என்று வெட்கமுற்று, "ஸீதையின் முகத்தைக்காணில் தாக்ஷிண்யம் உண்டாம்" என்று தலைவணங்கிக் கொண்டிருக்கையில், ஸீதை ராமனது மேனியை அனுபவித்துக் கொண்டே மெதுவாக அவனை ப்ரதக்ஷிணஞ் செய்து ஜ்வலிக்கின்ற அக்னியின் அருகே வந்தனள்" என்றிருக்கிறது.
அக்னியின் சமீபத்திலிருந்த மைதிலி, கைகளைக் கூப்பியவளாக தைவங்களையும், பிராமணர்களையும் வணங்கிவிட்டு இதைச் சொன்னாள்:(24) "என் ஹிருதயம் ராகவரிடம் இருந்து நித்யம் அகலாதிருப்பது {உண்மையெனில்} எப்படியோ, அப்படியே உலகத்தின் சாக்ஷியாக இருக்கும் பாவகன் {அனைத்தையும் தூய்மையாக்கும் அக்னி} அனைத்துப் பக்கங்களிலும் என்னைப் பாதுகாக்கட்டும்.(25) இராகவர் துஷ்டையாகக் கருதும் நான் எப்படி சுத்த சரிதையோ {தூய நடத்தை கொண்டவள் என்பது உண்மையெனில்}, அப்படியே உலகத்தின் சாக்ஷியாக இருக்கும் பாவகன் அனைத்துப் பக்கங்களிலும் என்னைப் பாதுகாக்கட்டும்.(26) சர்வதர்மஜ்ஞரான ராகவருக்கு {தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவரான ராமருக்கு}, கர்மத்தாலும் {செயலாலும்}, மனத்தாலும், வாக்காலும் நான் மீறி நடவாதிருப்பது {உண்மையெனில்} எப்படியோ, அப்படியே பாவகன் என்னைப் பாதுகாக்கட்டும்.(27) பகவான் ஆதித்யன், வாயு, திசைகள், அப்படியே சந்திரனும், பகலும், அப்படியே சந்திகளும், ராத்திரியும், அப்படியே பிருத்வியும்,{28} பிறரும் சாரித்ரத்துடன் {நன்னடத்தையுடன்} கூடியவளென அறிவது {உண்மையெனில்} எப்படியோ, அப்படியே ஆகட்டும் {அப்படியே என்னை பாவகன் பாதுகாக்கட்டும்" என்றாள் சீதை}.(28,29அ)
வைதேஹி இதைச் சொல்லிவிட்டு, ஹுதாசனனை {ஆகுதிகளை உண்பவனான அக்னியைச்} சுற்றி வந்து சந்தேகமற்ற அந்தராத்மாவுடன் ஒளிரும் தழலுக்குள் நுழைந்தாள்.(29ஆ,30அ) பாலர்கள், விருத்தர்கள் {சிறுவர்கள், முதியவர்கள்} உள்ளிட்ட பெரும் ஜனக்கூட்டம், அங்கே ஹுதாசனத்திற்குள் பிரவேசித்து ஒளிரும் மைதிலியைக் கண்டனர்.(30ஆ,31அ) புடம்போட்ட ஹேமத்தைப் போல, தப்த காஞ்சன பூஷணங்களுடன் {புடம்போட்ட பொன்னாலான ஆபரணங்களுடன்} கூடியவளுமான அவள், உலகத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஒளிரும் தழலுக்குள் பாய்ந்தாள்.(31ஆ,32அ) அப்போது, விசாலாக்ஷியும், ருக்மவேதியை {நீள்விழியாளும், பொற்பீடத்தைப்} போலத் தெரிபவளுமான அந்த சீதை, ஹவ்யவாஹனத்துக்குள் {நெருப்புக்குள்} இறங்குவதை சர்வ ரூபங்களும் {வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும்} கண்டன.(32ஆ,33அ)
மஹாபாகையான அந்த சீதை, புண்ணியமான நெய்யாலான ஆஹுதியைப் போல ஹுதாசனத்துக்குள் பிரவேசிப்பதை திரிலோகங்கள் மொத்தமும் கண்டன.(33ஆ,34அ) சர்வ ஸ்திரீகளும் அத்வரத்தில் {யாகத்தில்} மந்திரங்களால் சம்ஸ்கிருதமாக்கப்பட்ட வசுதாரையை {புனிதமாக்கப்பட்ட நெய்யின் தாரையைப்} போல அவள் ஹவ்யவாஹனத்துக்குள் {நெருப்புக்குள்} இறங்குவதைக் கண்டு கதறினர்.(34ஆ,35அ) மூன்று உலகங்களும், தேவ, கந்தர்வ, தானவர்களும், திரிதிவத்திலிருந்து {தேவலோகத்திலிருந்து} சபிக்கப்பட்டு நிரயத்தில் {நரகத்தில்} விழும் தேவதையைப் போல அவளைக் கண்டனர்.(35ஆ,36அ) அவள் அக்னிக்குள் நுழைந்தபோது, "ஹா, ஹா" என்ற ஒப்பற்ற பெரும் ஸ்வனம் ராக்ஷசர்களிடம் இருந்தும், வானரர்களிடம் இருந்தும் எழுந்தது.(36ஆ,37)
யுத்த காண்டம் சர்க்கம் – 116ல் உள்ள சுலோகங்கள்: 37
| Previous | | Sanskrit | | English | | Next |


