Seetha, thinking of Suicide | Sundara-Kanda-Sarga-26 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்த சீதை, ராமன் இல்லாத வாழ்வைக் கைவிடத் தீர்மானித்தது...
தொடர்ந்து கண்ணீர் சிந்திய முகத்துடன் கூடியவளும், பாலையுமான ஜனகாத்மஜை {சிறுமியும், ஜனகனின் மகளுமான சீதை}, தொங்கிய முகத்துடன் இவ்வாறு பேசிக் கொண்டே {பின்வருமாறு} அழத்தொடங்கினாள்.(1) உன்மத்தம் பிடித்தவள் {பித்தேறியவள்} போலும், பிரமத்தம் {வெறி} கொண்டவள் போலும், பிராந்த சித்தமுடையவள் {சித்தங்கலங்கியவள்} போலும் அழுது கொண்டிருந்தவள், புரளும் கிஷோரீயை {பெண் குதிரையைப்} போல, மஹீதலத்தில் விழுந்து புரண்டாள்.(2)
{சீதை}, “ராகவர் கவனமற்றிருந்தபோது, காமரூபியான ராக்ஷசன் ராவணன், அழுது கொண்டிருந்த என்னை பலவந்தமாகக் கொண்டுவந்தான்.(3) இராக்ஷசிகளின் வசமடைந்த நான், பயங்கரமாக அச்சுறுத்தப்படுகிறேன். துக்கத்தில் மூழ்கி வேதனை அடையும் எனக்கு, ஜீவிப்பதில் உற்சாகமில்லை.(4) மஹாரதரான ராமரை விட்டுப் பிரிந்து, ராக்ஷசிகள் மத்தியில் வசிக்கும் எனக்கு, ஜீவிதத்தால் அர்த்தமேதும் {வாழ்வால் ஆக வேண்டிய காரியம் ஏதும்} இல்லை; அர்த்தத்தாலும், பூஷணங்களாலும் இல்லை {செல்வத்தாலும், ஆபரணங்களாலும் ஆக வேண்டியது ஏதுமில்லை}.(5) அல்லது, மூப்பும், மரணமும் அடையாதிருப்பதால் என்னுடைய இந்த ஹிருதயம் நிச்சயம் கல்லாலானதாக இருக்க வேண்டும். {இல்லையெனில் என் இதயம்} துக்கத்தால் அழியாமல் இருப்பதேன்?(6) நான் ராமரை விட்டுப் பிரிக்கப்பட்டு பாபஜீவிதமடைந்தும், ஒரு முஹூர்த்தமேனும் ஜீவிதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறேன். அத்தகைய அநாரியையும், அசதீயுமான எனக்கு ஐயோ {பெருமையிழந்தவளும், கணவரைப் பின்பற்றாதவளுமான என்னை ஒழித்துக் கொள்ள வேண்டும்}.(7)
சாகரத்தை அந்தமாகக் கொண்ட வசுதையின் தலைவரும், பிரியமாகப் பேசுபவருமான பிரியரை {ராமரைப்} பிரிந்த எனக்கு, ஜீவிதத்திலோ, சுகத்திலோ சிரத்தை ஏது?(8) நான் சரீரத்தைக் கைவிடுவேன். அது {துண்டுகளாகப்} பிளக்கப்படட்டும், அல்லது பக்ஷிக்கப்படட்டும். பிரியரைப் பிரிந்த நான், நீண்ட காலம் துக்கத்தை சகித்துக் கொள்ள மாட்டேன்.(9) நிசாசரனும் {இரவுலாவியும்}, கண்டிக்கத்தக்க நடத்தை கொண்டவனுமான ராவணனை என் இடது சரணத்தாலும் {பாதத்தாலும்} ஸ்பரிசிக்கமாட்டேன் எனும்போது, விருப்பம் குறித்து என்ன சொல்வது {அவனை எப்படி விரும்புவேன்}?(10) கொடூர சுபாவத்தைக் கொண்ட எவன், என்னிடம் பிரார்த்தனை செய்ய விரும்புகிறானோ, அவன் {ராவணன்}, தான் நிராகரிக்கப்படுவதையோ, தன் குலத்தையோ அறிகிறானில்லை.(11) வெட்டப்பட்டாலும், துண்டுகளாக்கப்பட்டாலும், எரியும் அக்னியில் சுடப்பட்டாலும், ராவணனை நெருங்கமாட்டேன் எனும்போது, {நீங்கள்} நீண்ட நேரம் பிதற்றுவதால் பயனென்ன?(12)
பிராஜ்ஞராகவும் {விவேகியாகவும்}, கிருதஜ்ஞராகவும் {நன்றிமறவாதவராகவும்}, இரக்கமுள்ளவராகவும், நன்னடத்தையுள்ளவராகவும் புகழ்பெற்ற ராகவர், என் பாக்கியத்தின் அழிவால் இரக்கமற்றவராகிவிட்டாரென சந்தேகிக்கிறேன்.(13) எவரால் மட்டுமே ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் ராக்ஷசரர்கள் நிர்மூலமாக்கப்பட்டனரோ, அவர் {ராமர்} என்னைக் காக்காமல் இருப்பதேன்?(14) என் பர்த்தா {கணவர் ராமர்}, போரில் ராவணனைக் கொல்லும் சாமர்த்தியம் வாய்ந்தவராக இருப்பினும், அல்பவீரியமுள்ள ராக்ஷசன் ராவணனால் நான் தடுக்கப்படுகிறேன்.(15) எந்த ராமர், தண்டகாரண்யத்தில் நடந்த போரில் ராக்ஷசபுங்கவனான விராதனைக் கொன்றாரோ, அவர் என்னை வந்து மீட்காமல் இருப்பதேன்?(16) சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் இந்த லங்கையைத் தாக்குவது கடினமென்றாலும், ராகவரின் பாணங்களுடைய கதியை {பாய்ச்சலை} நிறுத்த முடியாது.(17) திட பராக்கிரமரான ராமர், ராக்ஷசனால் அபகரிக்கப்பட்ட இஷ்ட பாரியையை எதனால் காக்கவில்லையோ, அந்தக் காரணமென்ன?(18) இலக்ஷ்மணபூர்வஜர் {லக்ஷ்மணரின் அண்ணனான ராமர்}, நான் இங்கிருப்பதை அறிந்தாரில்லை என சந்தேகிக்கிறேன். அறிந்ததும் அந்த தேஜஸ்வி, இந்த மீறலை சகித்துக் கொள்வாரா?(19)
எவர் ராகவரை அணுகி, நான் அபகரிக்கப்பட்டதை தெரிவிப்பாரோ, அந்த கிருத்ரராஜாவும் {ஜடாயுவும்} போரில் ராவணனால் கொல்லப்பட்டார்.(20) விருத்தராக {முதிர்ந்தவராக} இருந்தும், ராவணனுடன் துவந்தத்தில் நின்றவாறு, என்னைக் காக்க முயன்றதன் மூலம், அந்த ஜடாயு மஹத்தான கர்மத்தைச் செய்தார்.(21) நான் இங்கே இருப்பதை அந்த ராகவர் அறிந்தால், பெருங்கோபத்தை அடைந்து, இப்போதே தன் பாணங்களால் இவ்வுலகை ராக்ஷசர்களற்றதாக்கிவிடுவார்.(22) மஹோததியை {பெருங்கடலை} வற்றச் செய்து, இலங்காபுரியை ஊதித் தள்ளி, ராவணனின் நாமத்தையும், கீர்த்தியையும் {பெயரையும், புகழையும்} நாசஞ்செய்வார்.(23) பிறகு, இப்போது நான் எப்படி அழுகிறேனோ, அதே நிலையே, கிருஹத்துக்குக் கிருஹம் நாதர்கள் {கணவர்கள்} கொல்லப்பட்ட ராக்ஷசிகளுக்கும் ஏற்படும். இதில் சந்தேகமேதுமில்லை.(24) இராமரும், லக்ஷ்மணரும் ராக்ஷசர்களின் லங்கையைத் தேடுவார்கள். அவர்களால் காணப்படும் பகைவன், ஒரு முஹூர்த்தமும் ஜீவித்திருக்கமாட்டான்.(25) இந்த லங்கை அதிவிரைவிலேயே சிதைகளின் புகை நிறைந்து, கிருத்ரங்கள் {கழுகுகள்} சூழ்ந்த சுடலையை {சுடுகாட்டைப்} போலாகப் போகிறது.(26)
குறுகிய காலத்திலேயே {என்} மனோரதத்தை நிறைவேற்றுவேன். இந்த துஷ்பிரஸ்தானம் {தீய நடை} உங்கள் அனைவருக்கும் விபரீதத்தையே அறிவிக்கிறது.(27) இங்கே லங்கையில், எவையெல்லாம் அசுபமாகக் காணப்படுகிறதோ, அவற்றின் மூலம் விரைவான காலத்திலேயே {இந்த லங்கை} பிரபையிழந்து போகப் போகிறது.(28) பாபியும், ராக்ஷசாதமனுமான {ராக்ஷசர்களில் இழிந்தவனுமான} ராவணன் கொல்லப்படுவான்; அடைதற்கரிய லங்கை, விதவையான பிரமதையை {கணவனை இழந்த பெண்ணைப்} போன்ற நிலையை நிச்சயம் அடையப் போகிறது.(29) புண்ணிய உத்ஸவங்கள் நிறைந்த லங்காபுரி, ராக்ஷசிகளுடன் கூடிய தலைவனை இழந்து, பர்த்தாவை {கணவனை} இழந்த அங்கனையை {பெண்ணைப்} போலாகப் போகிறது.(30) குறுகிய காலத்திலேயே இங்கே கிருஹத்துக்கு கிருஹம், துக்கத்தால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் ராக்ஷசிகளின் துவனியை நிச்சயம் கேட்கப்போகிறேன்.(31) இராமரின் சாயகங்களால் {கணைகளால்} எரிக்கப்படும் லங்காபுரி, ராக்ஷசபுங்கவர்கள் {சிறந்த ராக்ஷசர்கள்} கொல்லப்பட்டு, ஒளியிழந்து, இருளடையும்.(32)
சூரரும், கடைக்கண்கள் சிவந்தவருமான அந்த ராமர், ராவணனின் நிவேசனத்தில் நான் இருப்பதை அறிந்தால்,(33) கொடூரனும், அதமனுமான {இழிந்தவனுமான} ராவணன் எந்த சமயத்தை {ஒருவருடக்கெடுவை} விதித்தானோ, அந்தக் காலம் இப்போதே வாய்க்கும். எனக்கு விதிக்கப்பட்ட அந்த மிருத்யு {மரணம்}, இந்த துஷ்டனுக்கு நல்லதைச் செய்யாது.(34,35அ) அதர்மத்தினால் அகாரியத்தை {செய்யத்தகாததை} அறியாமல், பாபகாரியங்களைச் செய்யும் நைர்ருதர்கள் {ராக்ஷசர்கள்} எவருக்கும் இனி மஹத்தான உத்பாதம் நேரப் போகிறது. பிசிதாசனர்களான {இறைச்சியுண்ணிகளான} இந்த ராக்ஷசர்கள் தர்மத்தை அறியமாட்டார்கள்.(35ஆ,36) இராக்ஷசன் நிச்சயம் என்னைக் காலைத்தீனிக்கு ஆளாக்குவான். அத்தகைய நான், பிரியதரிசனந்தரும் ராமர் இல்லாமல் என்ன செய்வேன்? கடைக்கண்கள் சிவந்த ராமரைப் பார்க்காமல், அதிக துக்கத்தை அடைகிறேன்.(37,38அ) இப்போது, விஷத்தைத் தருபவர்கள் எவராவது இங்கே இருந்தால், பதி இல்லாத {கணவனைப் பிரிந்த} நான், சீக்கிரமே வைவஸ்வத தேவனை {யமனைக்} காண்பேன்.(38ஆ,39அ)
இலக்ஷ்மணபூர்வஜரான {லக்ஷ்மணரின் அண்ணனான} அந்த ராமர், நான் ஜீவித்திருப்பதை அறியமாட்டார். அவர்கள் இருவரும் அறிந்தால், பூமி முழுவதிலும் என்னைத் தேடாமல் இருக்க மாட்டார்கள்.(39ஆ,40அ) இலக்ஷ்மணாக்ரஜரான அந்த வீரர் {லக்ஷ்மணரின் அண்ணனும், வீரருமான ராமர்}, என்னைக் குறித்த சோகத்தில் மஹீதலத்தல் தேஹத்தைக் கைவிட்டு, நிச்சயம் இங்கிருந்து தேவலோகம் சென்றிருப்பார்.(40ஆ,41அ) இராஜீவலோசனரான என் பதி {தாமரை மலரைப் போன்ற கண்களைக் கொண்டவரான என் கணவர்} ராமரைப் பார்க்கும் தேவர்களில், கந்தர்வர்களுடன் கூடிய சித்தர்களில், பரமரிஷிகளில் எவரும் தன்யர்களே {நற்பேறு பெற்றவர்கள்}.(41ஆ,42அ) அல்லது, தர்மத்தில் காமங்கொண்டவரும், மதிமிக்கவரும், ராஜரிஷியும், பரமாத்மாவுமான[1] அந்த ராமருக்கு, பாரியையாக என்னாலாகும் அர்த்தமென்ன {என்னால் ஆகப்போகும் காரியம் என்ன}?(42ஆ,43அ)
[1] முதன்முறையாக ராமன் பரமாத்மாவாகக் குறிப்பிடப்படுகிறான்.
காணப்படுவதில் பிரீதிபாவம் உண்டாகும் {கண்ணெதிரே காணப்படும் ஒன்றில் அன்பு தோன்றும்}. பார்க்கப்படாதவரிடம் நட்பு உண்டாகாது. கிருதக்னர்களே {செய்நன்றிமறந்தவர்களே, அன்பையும், நட்பையும்} நாசம் செய்வார்கள். ஆனால் ராமரோ {அன்பையும், நட்பையும்} நாசமடைய விடமாட்டார்.(43ஆ,44அ) எந்த பாமினியான {பெண்ணான} நான், முக்கியரான ராமர் இல்லாமல் அழிந்து கொண்டிருக்கிறேனோ, அத்தகைய எனக்கு குணங்கள் ஏதும் இல்லையா? அல்லது, நான் பாக்கியத்தை இழந்துவிட்டேனா?(44ஆ,45அ) அகிலிஷ்டசாரித்ரரும் {குற்றமில்லாத நடத்தையைக் கொண்டவரும்}, சூரரும், சத்ருக்களை அழிப்பவரும், மஹாத்மாவுமான ராமரிடம் இருந்து பிரிக்கப்பட்ட எனக்கு, ஜீவிப்பதைவிட மரணமே மேலானது.(45ஆ,46அ) ஒரு வேளை, நரசிரேஷ்டர்களான அவ்விரு பிராதாக்களும் {மனிதர்களில் சிறந்தவர்களும், உடன்பிறந்தவர்களுமான அவ்விருவரும்}, வனத்தில் சஸ்திரங்களைக் கைவிட்டு, கிழங்குகளையும், பழங்களையும் உண்ணும் வனகோசரர்கள் {வனத்தில் திரிபவர்கள்} ஆகியிருக்க வேண்டும்.(46ஆ,47அ) அல்லது, சூரர்களும், பிராதாக்களுமான {உடன்பிறந்தவர்களுமான} ராமலக்ஷ்மணர்கள் இருவரையும், துராத்மாவும், ராக்ஷசேந்திரனுமான ராவணன் வஞ்சகத்தால் கொன்றிருக்க வேண்டும்.(47ஆ,48அ) இந்த கதியிலும், காலத்திலும் அத்தகைய நான் எல்லாவகையிலும் மரணம் அடையவே விரும்புகிறேன். இந்த துக்கத்திலும் {எனக்கு} மிருத்யு {மரணம்} விதிக்கப்படவில்லை.(48ஆ,49அ)
மஹாத்மாக்களும், கில்பிஷங்களை {குற்றங்களை / பாபங்களைக்} கைவிட்டவர்களும், ஜிதாத்மர்களும் {மனத்தை வென்றவர்களும்}, மஹாபாக்கியவான்களும், பிரியாபிரியங்கள் {விருப்புவெறுப்பு} இல்லாதவர்களுமான முனிவர்களே, நிச்சயம் தன்யர்கள் {நற்பேறுபெற்றவர்கள்}.(49ஆ,50அ) {அவர்களுக்கு} பிரியத்திலிருந்து துக்கமும், அபிரியத்திலிருந்து அதிகபயமும் சம்பவிப்பதில்லை. அவற்றில் {பிரியாபிரியங்களில் / விருப்புவெறுப்புகளில்} இருந்து விடுபட்ட அத்தகைய மஹாத்மாக்களை வணங்குகிறேன்.(50ஆ,51அ) விதிதாத்மரும், பிரியருமான ராமரைப் பிரிந்து, பாபியான ராவணனின் வசம் அடைந்திருக்கும் இத்தகைய நான், பிராணனைக் கைவிடப் போகிறேன்” {என்றாள் சீதை}.(51ஆ,52)
சுந்தர காண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள்: 52
Previous | | Sanskrit | | English | | Next |