The hymn in praise of Rama | Yuddha-Kanda-Sarga-117 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: : விமானங்களில் லங்கையை அடைந்து, ராமனை அணுகிய தேவர்கள்; இராமனின் தெய்வீகத் தன்மையை அறிவித்து, அவனது புகழைப் பாடிய பிரம்ம தேவன்...
தர்மாத்மாவான ராமன், இவ்வாறு புலம்பியவர்களின் அழுகுரலைக் கேட்டபோது, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், துயரத்துடனும் ஒரு முஹூர்த்தம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.(1)
அப்போது, ராஜா வைஷ்ரவணனும் {குபேரனும்}, பித்ருக்கள் சகிதனான யமனும், தேவேசனான சஹஸ்ராக்ஷனும் {இந்திரனும்}, ஜலேஷ்வரனான வருணனும்,{2} ஷடர்தநயனனும் {[ஆறில் பாதி] மூன்று கண்களைக் கொண்டவனும்}, ரிஷபத்வஜனுமான ஸ்ரீமான் மஹாதேவனும், சர்வலோக கர்த்தாவான பிரம்மனும், பிரம்மவித்களில் {பிரம்மத்தை அறிந்தவர்களில்} சிறந்தவர்களும்{3} என இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி சூரியனுக்கு ஒப்பான ஒளி கொண்ட தங்கள் விமானங்களில் லங்காம் நகரீயை அடைந்து, ராமனை அணுகினர்.(2-4)
பிறகு அந்த திரிதச சிரேஷ்டர்கள் {தேவர்களில் சிறந்தவர்கள்}, அனைத்து ஆபரணங்களையும் பூண்ட தங்கள் நீளமான புஜங்களை உயர்த்தி, கைகூப்பி நின்ற ராகவனிடம் {பின்வருமாறு} கூறினர்:(5) "சமஸ்தலோகங்களின் கர்த்தாவும் {உலகங்கள் அனைத்தையும் படைத்தவனும்}, சிறந்த ஞானவான்களின் பிரபுவுமான நீ, ஹவ்யவாஹனத்தில் {நெருப்பில்} விழும் சீதையை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?{6} நீ தேவகணங்களின் சிரேஷ்டன் {தேவர்களின் கூட்டத்தில் சிறந்தவன்} என்பதை எப்படி புத்தியில் கொள்ளாமல் {உணராமல்} இருக்கிறாய்?(6,7அ) பூர்வத்தில் நீ {எட்டு} வசுக்களில் ருததாமன்[1] {உண்மையில் / விதிவழி முறைமையில் வசிப்பவன்} என்ற வசு; ஸ்வயம் பிரபு {தானாய் உண்டான தலைவன் / தனக்குத் தானே தலைவன்}, மூன்று உலகங்களின் ஆதிகர்த்தா; பிரஜாபதி.(7ஆ,8அ) உருத்திரர்களில் அஷ்டம {எட்டாமவனான மஹாதேவன் என்ற} ருத்திரன்; {பன்னிரு} சாத்யர்களில் பஞ்சமன் {ஐந்தாமவனான வீர்யவான்}; அஷ்வினிகள் இருவரை உன் காதுகளாகவும், சூரியச்சந்திரர்களை கண்களாகவும் கொண்டவன் நீ.(8ஆ,9அ) பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, உலகத்தினரால் ஆதியிலும், அந்தத்திலும் காணப்படுபவனான நீ, பிராகிருத மானுஷனை {சாதாரண மனிதனைப்} போல வைதேஹியைப் பார்க்கிறாய்?" {என்றனர் தேவர்கள்}.(9ஆ,10அ)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "வசுக்கள் எண்மர். பெயர்கள் வேறுபட்டாலும் பொதுவான பட்டியலில் ருததாமன் என்ற பெயர் இல்லை. ருததாமன் என்பதற்கு சத்தியத்தில் வசிப்பவன் என்று பொருள்" என்றிருக்கிறது.
இதை லோகபாலர்கள் சொன்னதும், உலகத்தின் ஸ்வாமியும், ராகவனும், தர்மத்தின் பாதுகாவலர்களில் முதன்மையானவனுமான ராமன், திரிதசசிரேஷ்டனிடம் {தேவலோகவாசிகளில் சிறந்தவனிடம் பின்வருமாறு கூறினான்}:(10ஆ,11அ) "தசரதாத்மஜனான {தசரதரின் மகனான} ராமன் என்ற மானுஷனாகவே என்னை நான் நினைக்கிறேன். பகவானான நீ எனக்குச் சொல்வாயாக. இத்தகைய நான் எங்கிருந்து, எப்போது இங்கே வந்தேன்?" {என்று கேட்டான் ராமன்}.(11ஆ,12அ)
காகுத்ஸ்தன் {ராமன்} இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரம்மத்தை அறிந்தவர்களில் சிறந்தவனான பிரம்மன் {பின்வருமாறு} கூறினான், "சத்திய பராக்கிரமா, என் சத்திய வாக்கியத்தைக் கேட்பாயாக.(12ஆ,13அ) சக்ராயுதத்துடன் கூடிய தேவனான ஸ்ரீமான் நாராயணப் பிரபு நீ. ஏக சிருங்கம் கொண்ட {ஒற்றைக் கொம்புடைய} பூதபவ்யஸபத்னஜித்தான வராஹம் {கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்த பன்றி} நீ.(13ஆ,14அ) சத்தியத்தின் மத்தியிலும், அந்தத்திலும் அக்ஷரமாக {அழிவற்றவனாக / எழுத்தாக} இருக்கும் பிரம்மன் நீ. உலகங்களின் உயர்ந்த தர்மனும் நான்கு புஜங்களுடன் கூடியவனுமான விஷ்வக்சேனன் {எங்கும் நிறைந்த சக்தி கொண்டவன்} நீ.(14ஆ,15அ) சாரங்க தன்வன் {சாரங்கத்தை வில்லாகக் கொண்டவன்}, ஹ்ருஷீகேசன் {புலன்களின் தலைவன்}, புருஷன் {ஆண்மகன்}, புருஷோத்தமன் {மனிதர்களில் உத்தமன்}, அஜிதன் {வெல்லப்பட முடியாதவன், நந்தகம் என்ற வாளை} கட்கத்தைத் தரித்தவன், விஷ்ணு {நீக்கமற நிறைந்தவன்}, கிருஷ்ணன் {கரிய நிறம் கொண்டவன்}, மஹாபலவான்,(15ஆ,16அ) சேனைத் தலைவனும் {கார்த்திகேயனான முருகனும்}, கிராமத் தலைவனும் நீ, புத்தி நீ, க்ஷமாதமம் {பொறுமையும், புலனடக்கமும்} நீ, தொடக்கமும், முடிவும், மதுசூதனனான உபேந்திரனும் {மது என்ற அசுரனை அழித்தவனும், இந்திரனின் தம்பியும்} நீ.(16ஆ,17அ) இந்திர கர்மனும் {இந்திரனைப் படைத்தவனும் / இந்திரனின் செயல்களைச் செய்பவனும்}, மஹேந்திரனும் {தலைவர்களின் பெருந்தலைவனும்}, பத்மநாபனும் {நாபியில் தாமரை உதித்தவனும்}, போர்களை முடித்து வைப்பவனும் நீ. திவ்ய மஹரிஷிகள், சரணமடைபவர்களுக்கு சரண்யமாக {சரணடைபவர்களுக்கு அடைக்கலனாக} உன்னையே அறிவிக்கிறார்கள்.(17ஆ,18அ) நூறு சாகைகளுடனும் {கிளைகளுடனும்}, ஆயிரம் சிருங்கங்களுடனும் {கொம்புகளுடனும்} கூடிய வேதாத்ம மஹாரிஷபன் நீ,{18ஆ} மூவுலகங்களின் ஆதிகர்த்தாவும், ஸ்வயம்பிரபுவுமான நீ, சித்தர்களுக்கும், சாத்யர்களுக்கும் பூர்வஜனாக {மூத்தவனாக} இருக்கிறாய்.(18ஆ,19அ,ஆ)
யஜ்ஞம் {வேள்வி} நீ, வஷட்காரம் {வஷட் என்ற புனிதச் சொல்} நீ, ஓங்காரம் நீ[2], பராபரன் {உயர்ந்ததனைத்திற்கும் உயந்தவன்} நீ, பிரபவமோ, நிதனமோ {தொடக்கமோ, முடிவோ} இல்லாத உன்னை இன்னாரென்று எவரும் அறியமாட்டார்கள்.(20,21அ) சர்வ பூதங்களிலும், கோக்களிலும் {பசுக்களிலும்}, பிராமணர்களிலும் சர்வ திக்குகளிலும், ககனத்திலும் {வானத்திலும்}, பர்வதங்களிலும் {மலைகளிலும்}, நதிகளிலும் காணப்படுபவன் நீ.(21ஆ,22அ) ஆயிரம் சரணங்கள் {கால்கள்}, நூறு தலைகள், ஆயிரம் கண்கள் ஆகியவற்றுடன் கூடிய ஸ்ரீமானும், பூதங்களையும் {உயிரினங்களையும்}, பர்வதங்களுடன் கூடிய பிருத்வியையும் தாங்குபவனும் நீ.(22ஆ,23அ) இராமா, பூமியின் அடிப்பகுதியில் தண்ணீரில் மஹா உரகமாக {பெரும்பாம்பான சேஷனாகத்} தோன்றி, தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்களுடன் கூடிய மூன்று உலகங்களையும் தாங்குபவன் நீ.(23ஆ,24அ)
[2] ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர்ஓங்காரப் பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும்ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர்- கம்பராமாயணம் 10061ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: பிரணவப் பொருளை ஆராய்ந்தறிபவர்களே உன்னை உணர்வார்கள். பிரணவப் பொருளே என்று உன்னை உணர்ந்து இருவினையும் கழிக்கப்பெற்றோர் முக்தி அடைவார்கள். பிரணவப் பொருளே பரம்பொருளாகும் என்பதை உணரமாட்டாத அறிவுடையோர், நீயே பிரணவப் பொருள் என்றும், இல்லை என்றும் தடுமாறி யுகாந்த காலம் கடந்தாலும் மோட்சமடையார்.
இராமா, {பிரம்மனான} நான் உனது ஹிருதயம். தேவீ சரஸ்வதி {உன்} நாக்கு. பிரபோ, தேவர்கள் உன் சர்வ காத்திரங்களின் ரோமங்களில் {உன் உடலுறுப்புகளில் உள்ள முடிகளில்} என்னால் நிர்மிதம் செய்யப்பட்டிருக்கின்றனர்.(24ஆ,25அ) உன் நிமேஷம் {இமை மூடல்} ராத்திரியாகவும், அதேபோல, உன்மேஷம் {இமை விழித்தல்} பகலாகவும் கருதப்படுகின்றன. உன் சம்ஸ்காரம் {செயலின் முழுமை} வேதங்களாகும். நீ இல்லாமல் எதுவும் இல்லை.(25ஆ,26அ) சர்வ ஜகத்தும் உன் சரீரம். வசுதாதலம் உன் தைரியம். அக்னி {உன்} கோபம். சோமன் {சந்திரன்} உன் அருள். ஸ்ரீவத்சம் {உன்} லக்ஷணம்.(26ஆ,27அ) பூர்வத்தில் உனது திரி விக்ரமத்தால் {மூன்று காலடிகளால்} மூன்று உலகங்களும் தாண்டப்பட்டு, பயங்கரனான பலி {பலிச் சக்கரவர்த்தி} கட்டப்பட்டு, மஹேந்திரன் ராஜாவாக்கப்பட்டான்.(27ஆ,28அ) சீதை லக்ஷ்மி. நீ விஷ்ணு. கிருஷ்ணன் {கரிய நிறம் கொண்டவன்}; தேவன்; பிரஜாபதி. இராவணனுடைய வதத்தின் அர்த்தத்திற்காக இங்கே மானுஷ தநுவில் {மனிதவடிவில்} பிரவேசித்திருக்கிறாய்.(28ஆ,29அ) இராமா, தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனே, அத்தகைய இந்த நமது காரியம் நிறைவேறியது. இராவணன் கொல்லப்பட்டான். மகிழ்ச்சியுடன் திவத்தை {தேவலோகத்தை} ஆக்கிரமிப்பாயாக.(29ஆ,30அ)
தேவா, உன் வீரியம் அமோகமானது {வீண்போகாதது}. உன் பராக்கிரமம் மோகமடையாது {வீண்போகாது}. இராம தரிசனம் அமோகமானது. உன்னைத் துதிப்பது அமோகமானது.(30ஆ,31அ) புவியில் உன் பக்திமான்களாக இருக்கும் நரர்கள் அமோகமானவர்கள் {வீண் போகாதவர்கள்}.{31ஆ} புராணனும், எப்போதும் உள்ளவனும், புருஷோத்தமனும், தேவனுமான உன்னிடம் பக்தி கொண்ட எவரும், இஹத்திலும், பரத்திலும் {இம்மையிலும், மறுமையிலும்} தாங்கள் விரும்பியதை சதா அடைந்து கொண்டேயிருப்பார்கள்.(31ஆ,32அ,ஆ) எந்த நரர்கள் {மனிதர்கள்}, திவ்யமானதும், புராதனமானதும், இதிஹாசமானதுமான இந்த ஸ்தவத்தை முயற்சியுடன் கீர்த்தனை செய்வார்களோ {இந்தத் துதியை முயற்சியுடன் பாடுவார்களோ}, அவர்கள் {கீர்த்தியை அடைவார்களேயன்றி} ஒருபோதும் பராபவத்தை {தோல்வியையோ / அவமானத்தையோ / தீங்கையோ / அழிவையோ} அடையமாட்டார்கள்" {என்றான் பிரம்மன்}.(33,34)
யுத்த காண்டம் சர்க்கம் – 117ல் உள்ள சுலோகங்கள்: 34
| Previous | | Sanskrit | | English | | Next |


