Sunday, 2 April 2023

வெஞ்சின விதி | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 45 (40)

Wrathful fate | Aranya-Kanda-Sarga-45 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் உதவிக்கு விரைந்து செல்லுமாறு லக்ஷ்மணனை வேண்டிய சீதை; ராமனுக்கு உதவி தேவையில்லை என்ற லக்ஷ்மணன்; இலக்ஷ்மணனை வசைபாடிய சீதை...

Sita lashes at Lakshmana

சீதை, வனத்திலிருந்து தன் பர்த்தாவின் {கணவனின்} குரலைப் போலவே ஒலித்த துன்பக் குரலை உணர்ந்து, லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னாள், "இராகவரைக் குறித்து அறியச் செல்வீராக.(1) பரம துன்பத்தில் இருப்பவரின் உரத்த அலறல் சப்தத்தை நான் கேட்டேன். என் ஹிருதயமும், ஜீவிதமும் நிலை கொள்ளவில்லை. வனத்தில் கதறிக் கொண்டிருக்கும் உமது சகோதரரைக் காப்பதே உமக்குத் தகும்.(2,3அ) சிங்கங்களுக்கு மத்தியில் விருஷத்தை {காளையைப்} போல ராக்ஷசர்களின் வசப்பட்டு பாதுகாப்பை நாடும் உமது சகோதரரிடம் சீக்கிரம் நீர் ஓடிச் செல்வீராக" {என்றாள் சீதை}.(3ஆ,4அ)

இவ்வாறு சொல்லப்பட்டாலும் அவன் {லக்ஷ்மணன்}, தன் சகோதரனின் சாசனத்தை {தன் அண்ணன் ராமனின் ஆணையை} நினைவுகூர்ந்து அப்படிச் செல்லாமல் இருந்தான். இதனால் கலக்கமடைந்த அந்த ஜனகாத்மஜை {சீதை}, அப்போது அவனிடம் {லக்ஷ்மணனிடம் பின்வருமாறு} சொன்னாள்:(4ஆ,5அ) "சௌமித்ரியே {லக்ஷ்மணரே}, இத்தகைய அவஸ்தையிலும் சகோதரரிடம் செல்லாமல் இருக்கிறீர். நீர் உமது சகோதரருக்கு மித்ர ரூபத்திலான சத்ருவாகவே {நண்பனின் வடிவிலான பகைவனாக} இருக்கிறீர்.(5ஆ,6அ) இலக்ஷ்மணரே, எனக்காக ராமர் அழியவேண்டும் என்று நீர் விரும்புகிறீர். நிச்சயம் என்மீது கொண்ட லோபத்தாலேயே {பேராசையாலேயே} ராகவரைப் பின்தொடர்ந்து செல்லாமல் இருக்கிறீர்.(6ஆ,7அ) உமக்கு இந்த விசனம் பிரியமானது {உமக்கு ராமரின் துன்பம் விருப்பத்திற்குரியது} என்றே நான் நினைக்கிறேன். உமது சகோதரரிடம் உமக்கு சினேகம் இல்லை. பேரொளியுடன் திகழ்பவரான அவரைப் பார்க்க முடியாத போதும், பதட்டமின்றி {நிம்மதியாக} நிற்கிறீர்.(7ஆ,8அ) எவரைப் பிரதானமாகக் கொண்டு நீர் இங்கே வந்தீரோ, அவரின் நிலையே சந்தேகத்திற்குரியதாக இருக்கும்போதும், இங்கே என்னுடன் இருப்பதில் உமக்கு என்ன காரியம் என்பதில் வியப்படைகிறேன்" {என்றாள் சீதை}.(8ஆ,9அ)

இவ்வாறு பேசிவிட்டு, சோகத்துடன் கண்ணீர் சிந்தி, மருட்சியுடன் கூடிய மிருகவதுவை {பெண் மானைப்} போல நின்ற வைதேஹியான சீதையிடம் லக்ஷ்மணன் {பின்வருமாறு} சொன்னான்:(9ஆ,10அ) "வைதேஹி {விதேஹ இளவரசியே}, பன்னகர்கள் {பாம்புகள்}, அசுரர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள் ஆகியோரும் உன் பர்த்தாவை {கணவரை} வெற்றி கொள்வது சாத்தியமல்ல. இதில் சந்தேகம் வேண்டாம்.(10ஆ,11அ) சோபனையே {பிரகாசிப்பவளே}, தேவி, சமரில் வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ராமரை எதிர்த்து யுத்தம் செய்யவல்லவன் எவனும் தேவர்களிலோ, மனுஷ்யர்களிலோ, கந்தர்வர்களிலோ, பதத்ரிகளிலோ {பறவைகளிலோ}, ராக்ஷசர்களிலோ, பிசாசங்களிலோ, கின்னரர்களிலோ, மிருகங்களிலோ, ஏன் கோரமான தானவர்களிலோ கூட கிடையாது.(11ஆ-13அ) 

இராமர், சமரில் வதம் செய்யப்பட முடியாதவர். நீ இப்படிப் பேசுவது உனக்குத் தகாது. ராகவர் இல்லாமல் உன்னை இந்த வனத்தில் தனியாக விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.(13ஆ,14அ) பலவான்களின் பலமும் {படையும்}, அவர்களின் ஈசுவரர்களுடனும், அமரர்களுடனும், மூவுலகத்தாருடனும் சேர்ந்து எதிர்த்து வந்தாலும் அவரது {ராமரின்} பலம் அடக்கப்பட முடியாததாகும்.(14ஆ,15அ) உன் ஹிருதயத்தைத் திருப்புவாயாக. உன் சந்தாபம் {துன்பம்} விலகட்டும். உன் பர்த்தா {கணவர்} அந்த உத்தம மிருகத்தைக் கொன்று, சீக்கிரமே திரும்பி வருவார்.(15ஆ,16அ) அது தைவதத்தை {தேவனைப்} போன்ற அவருடைய சுவரமல்ல {குரலல்ல} என்று தெளிவாகத் தெரிகிறது. எவனோ ஒருவன் செய்யும் மாயையே இவ்வாறு வெளிப்படுகிறது. கந்தர்வ நகரத்தின் விளைவை {மேகங்களைப்} போன்ற அஃது அந்த ராக்ஷசனுடைய {அந்த குரல் மாரீசனின்} மாயையே.(16ஆ,17அ) 

சிறந்த பெண்ணே, வைதேஹி {விதேஹ இளவரசியே}, மஹாத்மாவான ராமர், உன்னை நியாசபூதமாக {அடைக்கலப் பொருளாகக்} கொடுத்திருக்கிறார். நீ என் நியாசம் {அடைக்கலம் / என்னிடம் ஒப்படைக்கப்பட்டவள்}. இங்கே உன்னைவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை.(17ஆ,18அ) கல்யாணி {மங்கலமானவளே}, தேவி, நாம் ஜனஸ்தானத்தை அழித்து, கரனைக் கொன்றதால், இந்த நிசாசரர்களை {இரவுலாவிகளை} நம் வைரிகளாக்கிக் கொண்டோம் {பகைவராக்கிக் கொண்டோம்}.(18ஆ,19அ) வைதேஹி {விதேஹ இளவரசியே}, மஹாவனங்களில் ஹிம்சை செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்ட ராக்ஷசர்கள் பயன்படுத்தும் விதவிதமான சொற்களை {குரல்களை} சிந்தனையில் கொள்வது தகாது" {என்றான் லக்ஷ்மணன்}.(19ஆ,20அ)

இலக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், கண்கள் சிவந்து குரோதமடைந்த அவள், சத்தியவாதியான லக்ஷ்மணனிடம் {பின்வரும்} கடும் வாக்கியங்களைச் சொன்னாள்:(20ஆ,21அ) "அநாரியா, கருணையற்றனே, கொடுமை செய்ய ஆரம்பிப்பவனே, குலத்தைக் கெடுக்க வந்தவனே, ராமரின் மஹத்தான விசனம் {துன்பம்} உனக்குப் பிரியமானதாக இருப்பதாகவே {ராமரின் துன்பத்தை நீ விரும்புவதாகவே} நான் நினைக்கிறேன்.(21ஆ,22அ) இலக்ஷ்மணா, ராமரின் விசனத்தை {துன்பத்தைக்} கண்ட பிறகே, இவை அனைத்தையும் சொல்லி {பிதற்றிக்} கொண்டிருக்கிறாய். நித்தியம் மறைந்து திரியும் கொடூரனான உன்னைப் போன்ற பகைவர்கள், பாபம்  செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.(22ஆ,23) 

பரமதுஷ்டனான நீ, எனக்காக தனியாகவோ, பரதனால் நியமிக்கப்பட்டோ உன்னை மறைத்துக் கொண்டு வனத்தில் தனியாக ராமரைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறாய்[1].(24) சௌமித்ரியே, உன்னாலோ, பரதனாலோ எதையும் நிறைவேற்ற முடியாது. பத்மத்தை {தாமரையைப்} போன்று பிரகாசிக்கும் கண்களைக் கொண்டவரும், கருநெய்தல் போன்ற கரிய நிறத்தைக் கொண்டவருமான ராமர் பர்த்தாவாக {கணவராக} அருகில் இருக்கும்போது, சாதாரண ஜனத்தை எவ்வாறு நான் விரும்புவேன்?(25,26அ) சௌமித்ரியே,  உன் முன்னிலையில் பிராணனைத் தியாகம் செய்வேன். சந்தேகம் வேண்டாம். இராமர் இல்லாமல் ஒரு க்ஷணமும் பூதலத்தில் நான் ஜீவிக்கமாட்டேன்" {என்றாள் சீதை}.(26ஆ,27அ) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதை லக்ஷ்மணனின் ரகசிய நடவடிக்கை என்று இங்கே எதைச் சொல்கிறாள். "ஒன்றுவிட்ட சகோதரனான பரதன் ராமனிடம் இருந்து ராஜ்ஜியத்தைப் பறிக்கிறான், மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரனான நீ அவனுடைய மனைவியைப் பறித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா" என்ற பொருளில் சீதை கேட்கிறாள். அதாவது, "நீ உன் உறவினர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ரகசிய நோக்கத்துடனே எங்களுடன் தனியாக வந்திருக்கிறாய். அல்லது, பரதன் ராஜ்ஜியத்துடன் சேர்த்து என்னையும் விரும்பி, அதன் காரணமாக உன்னை தூண்டி, ராமன் இறந்த பிறகு என்னை அழைத்து வரும்படி உன்னைத் தனியாக அனுப்பியிருக்கிறான்" என்ற பொருளில் அவள் இப்படிக் கேட்கிறாள்" என்றிருக்கிறது.

விஜிதேந்திரியனான {புலனடக்கம் கொண்டவனான} லக்ஷ்மணன், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் இவ்வாறான கடும் வாக்கியங்களை சீதை அவனிடம் சொன்னதும், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு சீதையிடம் பின்வருமாறு சொன்னான்:(27ஆ,28அ) "மைதிலி {மிதிலை இளவரசியே}, எனக்கு தைவதமான {தெய்வமான} உன்னிடம் மறுத்துப் பேசத் துணியேன்[2]. ஸ்திரீகளிடம் இந்த அப்ரதிரூப வாக்கியங்கள் {பெண்களிடம் இதுபோன்ற பொருத்தமற்ற வாக்கியங்கள்} ஆச்சரியமில்லை. இது நாரீகளின் சுபாவமாகவே {பெண்களின் இயல்பாகவே} இந்த உலகத்தில் காணப்படுகிறது.(28ஆ,29) ஸ்திரீகள் தர்மத்தில் இருந்து விடுபட்டவர்கள் {அறநெறி துறந்தவர்கள்}, சபலங் கொண்டவர்கள் {சஞ்சல புத்தி கொண்டவர்கள்}, கடுமையானவர்கள், பேதம் {வேற்றுமையை} உண்டாக்குபவர்கள். ஜனகாத்மஜையே {ஜனகரின் மகளே}, வைதேஹி {விதேஹ இளவரசி}, இந்தக் காதுகள் இரண்டுக்கும் இடையில் தகிக்கும் {காய்ச்சிய} நாராசங்களைப் போலச் செல்லும் இவ்வகை வாக்கியங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.(30,31அ) 

[2] துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான்
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி
இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் 
வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ

- கம்பராமாயணம் 3333ம் பாடல், இராவணன் சூழ்ச்சிப் படலம்

பொருள்: "நீ ஏன் இறக்க வேண்டும்? நீர் சொன்ன சொல்லைக் கேட்டு நான் அஞ்சுகிறேன், உமது ஆணையை மறுக்க மாட்டேன். அவலம் தீர்ந்து இங்கேயே இருப்பீராக. அடியேன் செல்கிறேன். வெஞ்சினம் கொண்ட விதியை வெல்ல நம்மால் முடியுமா?" {என்றான் லக்ஷ்மணன்}

நான் நியாயவாதியாக இருந்தாலும், நீ இவ்வாறான கடுமையான வாக்கியங்களை என்னிடம் சொல்வதை சர்வ வனசரர்களும் {காட்டில் திரிபவர்கள் அனைவரும்} சாக்ஷியாக இருந்து கவனமாகக் கேட்கட்டும்.(31ஆ,32அ) உனக்கு ஐயோ, இப்போது குருவின் {அண்ணனின்} வாக்கியத்திற்குக் கீழ்ப்படிந்து இங்கே இருக்கும் என்னை துஷ்ட சுபாவம் கொண்ட ஸ்திரீத்வத்தால் {பெண் தன்மையால்} இப்படி நீ சந்தேகிக்கிறாய். தொலைந்து போவாயாக.(32ஆ,33அ) அழகிய முகம் கொண்டவளே, காகுத்ஸ்தர் {ராமர்} எங்கே இருக்கிறாரோ அங்கே செல்கிறேன். நீ நலமாக இருப்பாயாக. விசாலாக்ஷியே {அகன்ற விழிகளைக் கொண்டவளே}, வனதேவதைகள் அனைத்தும் உன்னைக் காக்கட்டும்[3].(33ஆ,34அ) ஜனகாத்மஜையே, வைதேஹி {விதேஹ இளவரசியே}, கோரமான நிமித்தங்கள் எனக்குத் தோன்றுகின்றன. மீண்டும் ராமருடன் திரும்பி வரும்போது உன்னை நான் பார்ப்பேனா? இல்லையா? நான் அறியமாட்டேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(34ஆ,இ)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இலக்ஷ்மணன் முதலில் "தொலைந்து போ" என்கிறான், பிறகு அவனே, "நலமாக இருப்பாயாக" என்று சொல்லி வன தேவதைகளின் அருளை வேண்டுகிறான். இது லக்ஷ்மணனின் தரப்பில் இருந்து பார்த்தால் சுயமுரணாகத் தெரிகிறது. இருப்பினும் இது சரியே. முதலில் கோபத்துடன் அவ்வாறு சொல்லிவிட்டாலும், அதை உடனே அறிந்து, "அவள் நலமாக இருக்கட்டும்" என்று திருத்திக் கொள்கிறான். இராமனுக்கு உரியவளான அவள் செழிப்பாக இருக்கவே அவன் விரும்பினான். இராமனுக்கு உரியவை எதுவும் கேலிக்கு அப்பாற்பட்டவை, அதிலும் குறிப்பாகத் தன் தாய்க்கு ஒப்பான அண்ணி நிச்சயம் கேலிக்கு அப்பாற்பட்டவளே" என்றிருக்கிறது.

இலக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும் அந்த ஜனகாத்மஜை, கண்ணீரைப் பெருக்கி அழுது கொண்டே, தீவிரமான வாக்கியங்களால் {கூர்மையான சொற்களால் பின்வருமாறு} பதிலளித்தாள்:(35) "இலக்ஷ்மணரே, ராமர் இல்லையென்றால் நான் கோதாவரியில் பிரவேசிப்பேன்; அல்லது சுருக்கிட்டுக் கொள்வேன்; அல்லது உயரங்களில் இருந்து விழுந்து என் தேஹத்தைத் துறப்பேன்.(36) கொடிய விஷத்தைப் பருகுவேன், அல்லது நான் ஹுதாசனத்திற்குள் {தீயில்} பிரவேசிப்பேன். இராகவரை {ராமரைத்} தவிர அந்நிய புருஷனை {மற்றொரு மனிதனை} பாதத்தாலும் நான் ஸ்பரிசிக்க மாட்டேன்" {என்றாள் சீதை}.(37)

சீதை, லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, துக்கத்திலும், மனச்சோர்விலும் பீடிக்கப்பட்டவளாக இரு கைகளாலும் தன் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாள்.(38) உற்சாகமற்ற சௌமித்ரி {இலக்ஷ்மணன்}, அந்த விசாலமான நேத்திரங்களைக் கொண்டவள் {சீதை}, துக்கத்துடன் அழுது கொண்டிருப்பதைக் கவனித்து, மனம் நொந்து அவளை ஆசுவாசப் படுத்த முயன்றான். சீதையோ பர்த்தாவுடன் {கணவனுடன்} பிறந்தவனைப் பார்த்து ஒன்றும் பேசாதிருந்தாள்.(39) அப்போது ஆத்மவானான {சுயமரியாதை கொண்டவனான} லக்ஷ்மணன், சீதையிடம் கைக்கூப்பி வணங்கிய பிறகு, சற்றுத் தயங்கியவாறே தலைக் கவிழ்த்து வணங்கிவிட்டு, மீண்டும் மீண்டும் மைதிலியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அந்த ராமனின் சமீபத்தை அடைந்தான்[4].(40)

[4] இலக்ஷ்மணன், சீதையை இவ்வாறு விட்டுச் செல்லும்போது அந்தக் குடிலைச் சுற்றி கோடு கிழித்து விட்டுச் சென்றான் என்றும், சீதை அதைத் தாண்டிய பிறகே ராவணனால் அவளைக் கடத்த முடிந்தது என்றும் ஏற்கனவே நாம் கேள்விப்பட்ட எதுவும் இங்கே வால்மீகி ராமாயணத்தில் காணப்படவில்லை.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 45ல் உள்ள சுலோகங்கள்: 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்