Entering into fire | Yuddha-Kanda-Sarga-116 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: : இராமனுக்குத் தகுந்த மறுமொழி கொடுத்து, சிதை உண்டாக்குமாறு லக்ஷ்மணனை வேண்டி, அக்னி தேவனை வணங்கி, நெருப்புக்குள் நுழைந்த சீதை...
இவ்வாறு ரோஷத்துடன் கூடிய ராகவனால் ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக சொல்லப்பட்டதைக் கேட்ட வைதேஹி பெரும் கலக்கமடைந்தாள்.(1) அந்த மைதிலி, மஹத்தான ஜனங்களின் மத்தியில் பூர்வத்தில் கேட்கப்படாத, கோரமான பர்த்தாவின் சொற்களைக் கேட்டபோது, லஜ்ஜையால் {வெட்கத்தால்} தலைகுனிந்தவள் ஆனாள்.(2) அந்த ஜனகாத்மஜை, தன் சொந்த காத்திரங்களுக்குள் சுருங்குவதை {உடல் கூனிக்குறுகியதைப்} போன்று, சல்லியங்களுடன் கூடிய அந்த வாக்குச் சரங்களால் துளைக்கப்பட்டவளைப் போலப் பெரிதும் கண்ணீர் வடித்தாள்.(3)
