Braid | Sundara-Kanda-Sarga-28 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தலைமுடிப்பின்னலைக் கொண்டு சுருக்கிட்டுக் கொள்ள முனைந்த சீதை; நற்சகுனங்கள் தோன்றியது...
இராக்ஷசேந்திரன் ராவணன் சொன்ன வெறுக்கத்தக்க சொற்களைக் கேட்ட அந்த சீதை, மனம் நொந்து, வனாந்தத்தில் {ஆழ்ந்த காட்டில்}, சிம்ஹத்தால் பிடிக்கப்பட்ட கஜராஜகன்னியை {சிங்கத்தால் பீடிக்கப்பட்ட பெண் யானைக்குட்டியைப்} போல அச்சமடைந்தாள்[1].(1) இராக்ஷசிகள் மத்தியில் ராவணனின் சொற்களால் அச்சுறுத்தப்பட்டு, அந்த அச்சத்தால் பீடிக்கப்பட்டவளான சீதை, காந்தாரத்தின் {அடர்ந்த காட்டின்} மத்தியில் விடப்பட்ட பாலகன்னிகையைப் போல, {பின்வருமாறு} அழுது புலம்பினாள்:(2) “பரிதாபத்திற்குரிய நான், புண்ணியமற்றவளாக இருப்பதாலேயே, இவ்வாறு அச்சுறுத்தப்பட்டாலும் க்ஷணமாவது ஜீவிக்கிறேன். “உலகத்தில் அகால மிருத்யு {மரணம்} நேருவதில்லை” என்று சத்தியசந்தர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஐயோ.(3) சுகமில்லாமல், துக்கத்தால் பூர்ணமாக நிறைந்த என்னுடைய இந்த ஹிருதயம், நிச்சயம் ஸ்திரமாக இருப்பதாலேயே, வஜ்ரத்தால் {இடியால்} தாக்கப்பட்ட அசலசிருங்கத்தை {மலைச்சிகரத்தைப்} போல இன்னும் ஆயிரந்துண்டுகளாகப் பிளக்காமல் இருக்கிறது.(4)
[1] மன்மதநாததத்தர் பதிப்பில் இந்த சர்க்கத்தின் ஆரம்ப அடிக்குறிப்பிலேயே, “28, 29ம் சர்க்கங்கள் எல்லா உரைகளிலும் காணக்கிடைப்பதில்லை. அவை வங்கப்பதிப்பில் காணக்கிடைக்கின்றன. கொர்ரேஸ்ஸியோ என்பவர் இப்படிக் குறிப்பிட்டு மொழிபெயர்க்கிறார், “மங்கல சகுனங்கள் என்ற 28ம் சர்க்கம், வீரகாவியம் பாராயணஞ்செய்யும் பாணர்களால் பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சர்க்கத்தைப் பொறுத்தவரையில் முன், பின் தொடர்பற்றதாகவும், தகவல்கள் இழந்ததாகவும் தெரிகிறது” {என்று கொர்ரேஸ்ஸியோ மொழிபெயர்த்திருக்கிறார்}. இருப்பினும் இதை முழுமையாகக் கொடுப்போம் என்றே நாம் நினைக்கிறோம்” என்று {மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில்} இருக்கிறது. சென்ற சர்க்கத்திற்கு முந்தைய சர்க்கத்தில், ராக்ஷசிகளின் சித்தரவதையும், அதற்கு அடுத்த சர்க்கத்தில் திரிஜடையின் கனவும் சொல்லப்பட்ட பிறகு, இந்த சர்க்கத்தின் தொடக்கத்தில் சீதை ராவணனின் சொற்களை நினைத்து வருந்துவதாகத் தொடங்குவது தொடர்பற்றதாகவே தெரிகிறது. மேலும் சுலோகங்களின் சீர்வரிசையிலும் மாற்றம் தெரிகிறது.
இதில் என்னுடைய தோஷம் ஏதுமில்லை. வெறுக்கத்தக்க தோற்றமுடைய இவனால் வதைக்கப்படக்கூடியவளாக நான் இருக்கிறேன். துவிஜர்கள் அதுவிஜர்களிடம் {இருபிறப்பாளர்கள், இருபிறப்பாளர்களல்லாதவர்களிடம் கொடுக்க முடியாத} மந்திரத்தைப் போல, நான் அவனுக்கு பாவத்தை {என் மனத்தைக்} கொடுக்க இயலாதவளாக இருக்கிறேன்.(5) உலகநாதரானவர் {ராமர்} வரவில்லையெனில், அநாரியனான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, கர்ப்பத்தில் உள்ள ஜந்துவை {உயிரற்ற கருவை அகற்றும்} சல்யகிருந்தனை {நாவிதனைப்} போல, நிச்சயம் கூரிய சஸ்திரங்களால் என் அங்கங்களைத் துண்டித்துவிடுவான்[2].(6) துக்கத்தில் அழுது கொண்டிருக்கும் எனக்கு இரண்டு மாசங்கள், ராஜ அபராதத்தினால் வதைக்க, அடைக்கப்பட்ட கள்வனின் நிசியை {இரவைப்} போல நீண்ட காலமாக இருக்கும். ஐயோ, இது துக்கம்.(7) ஹா ராமரே, ஹா லக்ஷ்மணரே, ஹா சுமித்ரே, ஹா ராமமாதவே {கௌசல்யே}, என்னைப் பெற்றவளே, மஹார்ணவத்தில், வாதத்தால் {பெருங்கடலில் சுழற்காற்றால்} அடிக்கப்படும் மரக்கலத்தைப் போல, என்னுடைய இந்த அல்பபாக்கியத்தால் அவதிப்படுகிறேன்.(8)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் திறன்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்தனர் என்பதையே இந்த சுலோகம் காட்டுகிறது” என்றிருக்கிறது.
மின்னலால் {இடியால் கொல்லப்படும்} சிறந்த சிங்கங்கள் இரண்டைப் போல, மிருகத்தின் ரூபத்தைத் தரித்த சத்வத்தால் {மான்வடிவம் எடுத்து வந்த உயிரினத்தால்}, சுறுசுறுப்புமிக்க மனுஜேந்திர புத்திரர்களான அவர்கள் இருவரும் {தசரதரின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள்} நிச்சயம் என் காரணமாக அழிந்திருக்க வேண்டும்.(9) நிச்சயம் அந்தக் காலனே, மிருகரூபந்தரித்து {மான்வடிவந்தரித்து} அல்ப பாக்கியங்கொண்ட என்னைக் கவர்ந்திருக்க வேண்டும். எனவேதான், மூடப்பெண்ணான நான் ராமானுஜரையும் {ராமரின் தம்பியான லக்ஷ்மணரையும்}, லக்ஷ்மணபூர்வஜரான ஆரியபுத்திரரையும் {லக்ஷ்மணரின் அண்ணனான ராமரையும்} அனுப்பினேன்.(10) ஹா ராமரே, சத்தியவிரதரே, தீர்க்கபாஹுவே {நீண்ட கைகளைக் கொண்டவரே}, ஹா பூர்ண சந்திரனுக்கு ஒப்பான முகம் படைத்தவரே, ஹா ஜீவலோகத்திற்கு ஹிதமளிப்பவரே, ராக்ஷசர்களால் வதம் செய்யப்படும் என்னை நீர் அறியவில்லையா?(11)
தைவதமில்லாதவளின் {கணவரைத் தவிர வேறு தெய்வம் இல்லாதவளான என்} இந்தப் பொறுமை, பூமியில் கிடக்கும் நியமம், என் தர்மம், பதிவிரதாத்வம் ஆகியவை அனைத்தும், மனுஷ்யர்களில் கிருதக்னர்களுக்கு {நன்றி மறந்தவர்களுக்குச்} செய்யப்பட்டதை {செய்யப்பட்ட உதவியைப்} போல வீணாகிவிட்டன.(12) உம்மைக் காணாதவளும், {உம்மைச்} சந்திப்பதில் நிராசையுள்ளவளும் {ஆசையிழந்தவளும்}, மெலிந்தவளும், வர்ணமிழந்தவளுமான எனக்கு, நான் செய்த தர்மம் வீணானதைப் போல, இவையும் அர்த்தமற்றவை ஆகின்றன.(13) நீர் உமது பிதாவின் ஆணையை நியமப்படி நிறைவேற்றும் விரதத்தை நோற்று, கிருதார்த்தராக {நோக்கம் நிறைவேறியவராக}, வனத்திலிருந்து பயமில்லாமல் திரும்பி, நீள்விழிகளைக் கொண்ட ஸ்திரீகளுடன் இன்புற்றிருப்பீர் என நினைக்கிறேன்[3].(14) இராமரே, நீண்டகாலம் உம்மிடம் ஜாதகாமத்துடன் {ஆசையுடனும், அன்புடனும்} கூடியவளாக இருந்த நான், தபத்தையும், விரதத்தையும் வீணாகும்படி முடித்து, நாசமடையும் உறுதியான பாவத்துடன் {மனத்துடன்}, என் ஜீவிதத்தைக் கைவிடப்போகிறேன். என் அல்ப பாக்கியத்திற்கு ஐயோ.(15) அத்தகைய நான், விஷத்தாலோ, கூரிய சஸ்திரத்தாலோ சீக்கிரமே ஜீவிதத்தைக் கைவிடுவேன். ஆனால், ராக்ஷசனின் வேஷ்மத்தில் {வீட்டில்} விஷத்தையோ, சஸ்திரத்தையோ {வாள் போன்ற ஆயுதத்தையோ} எனக்கு தத்தம் செய்யும் எவரும் இல்லையே” {என்றாள் சீதை}.(16)
[3] சீதையின் இந்த ஒரு சொல்லை வைத்து ராமன் ஏகபத்தினி விரதனல்ல என்று வாதிடும் சிலரும் இருக்கின்றனர்.
இவ்வாறும், பலவாறும் புலம்பிய தேவி, தன் ஆத்மாவில் நிறைந்த ராமனை நினைவுகூர்ந்து, வாடிய முகத்துடன் நடுங்கியபடியே, புஷ்பித்திருக்கும் ஓர் உத்தம மரத்தை அணுகினாள்.(17) சோகத்தால் பீடிக்கப்பட்ட சீதை, பலவாறாகச் சிந்தித்த பிறகு, தலைமுடிப்பின்னலைப் பிடித்துக் கொண்டு, {தனக்குள்} “நான் தலைமுடிப்பின்னலைக் கொண்டு, சீக்கிரமே {என் கழுத்தில்} கட்டி, யமனின் மூலத்தை {யமலோகத்தை} அடையப் போகிறேன்” {என்றாள்}.(18)
அப்போது, அங்கங்கள் அனைத்திலும் மிருதுவானவள் {சீதை}, அந்த நகத்தின் சாகையை {மரத்தின் கிளையைப்} பற்றினாள். இராமனையும், ராமானுஜனையும் {ராமனின் தம்பியான லக்ஷ்மணனையும்}, தன் குலத்தையும் குறித்து அந்த சுபாங்கி {சுபமான அங்கங்களைக் கொண்டவளான சீதை} சிந்தித்துக் கொண்டிருந்த போது,{19} சோக நிமித்தமில்லாதவையும், தைரியத்தைத் தோற்றுவிப்பவையும், பூர்வத்திலேயே நற்பயன்களைக் கொடுக்குமென உலகில் உறுதிப்படுத்தப்பட்டவையுமான பல நிமித்தங்கள் {நற்சகுனங்கள்} தோன்றின.(19,20)
சுந்தர காண்டம் சர்க்கம் – 28ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |