The harshness of Rama | Yuddha-Kanda-Sarga-115 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: : வெற்றி அடைந்ததற்கான தன் முயற்சிகளை சீதையிடம் சொன்ன ராமன்; சீதை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் என்று சங்கடமான முறையில் கூறியது...
இராமன், தன் பக்கத்தில் தலைகுனிந்து நின்று கொண்டிருந்த மைதிலியைக் கண்டு, தன் ஹிருதய அந்தரங்கத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கினான்:(1) "பத்ரே {மென்மையானவளே}, போர்முனையில் சத்ரு வீழ்த்தப்பட்டு, நீ வென்றெடுக்கப்பட்டிருக்கிறாய். பௌருஷத்தால் {ஆண்மையால்} எது அனுஷ்டிக்கப்பட வேண்டுமோ, அஃது என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.(2) கோபத்தின் அந்தத்தை {எல்லையை} அடைந்து விட்டேன். அவமதிப்புக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அவமானமும், பகைமையும் ஒரே நேரத்தில் என்னால் அழிக்கப்பட்டன.(3) இப்போது என் பௌருஷம் {ஆண்மை} காணப்பட்டது. இன்று என் சிரமம் பலனளித்துள்ளது. இப்போது என் பிரதிஜ்ஞை தீர்க்கப்பட்டது {உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது}. இப்போது ஆத்ம பிரபு ஆகிவிட்டேன் {என் சுயத்தின் தலைவன் ஆகிவிட்டேன் / சுதந்திரமடைந்துவிட்டேன்}.(4) சஞ்சல சித்தம் கொண்ட ராக்ஷசனால் கொண்டு செல்லப்பட்டு எப்படி {என்னிடம் இருந்து} நீ பிரிக்கப்பட்டாயோ, அப்படிப்பட்ட தைவ சம்பாத்ய தோஷம் {தெய்வத்தால் / விதியால் வருவிக்கப்பட்ட தீமை} மானுஷனான என்னால் வெல்லப்பட்டது.(5)
தனக்கு வாய்த்த அவமானத்தைத் தன் தேஜஸ்ஸால் துடைக்காதவன் எவனோ, அந்த அற்ப அறிவு படைத்தவன், மஹத்தானவனாகவே இருந்தாலும், அவனது பௌருஷத்திற்கான {ஆண்மைக்கான} அர்த்தமென்ன?(6) சமுத்திரத்தை லங்கணம் செய்ததும் {கடந்ததும்}, லங்கையை மர்தனம் செய்ததுமான {அடக்கியதுமான} இந்த ஹனுமானின் சிலாக்கிய கர்மத்திற்கு {போற்றத்தகுந்த செயலுக்கு} இப்போது பலன் கிடைத்தது.(7) யுத்தத்தில் விக்ரமத்துடனும், அதே போல ஹிதமான மந்திரத்துடனும் {நலம் பயக்கும் ஆலோசனையுடனும்}, சைனியத்துடனும் கூடிய சுக்ரீவனின் பெரும் முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்தது.(8) அதேபோல, எவன் குணமற்ற பிராதாவை {உடன் பிறந்தவனான ராவணனைக்} கைவிட்டு ஸ்வயமாக என்னை அடைந்தானோ, இந்த விபீஷணனின் முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்தது" {என்றான் ராமன்}.(9)
சீதை, ராமன் இவ்வாறு சொன்ன அந்த சொற்களைக் கேட்டபோது, மிருகீயை {பெண் மானைப்} போன்ற அவளுடைய கண்களை அகல விரித்து கண்ணீர் பெருக்கினாள்.(10) இராமன், தன் ஹிருதயத்திற்குப் பிரியமானவள் சமீபத்தில் இருப்பதைப் பார்த்தான். ஜனவாதத்திற்கு {மக்கள் பேசப்போவதை நினைத்து} பயந்த அந்த ராஜாவின் {ராமனின்} ஹிருதயம் பிளவுபட்டது.[1](11) உத்பல {தாமரை} இதழ்களைப் போன்ற கண்களையும், நீல நிறத்தில் சுருண்ட தலைமுடியையும், சிறந்த இடையையும் கொண்ட சீதையிடம், வானர ராக்ஷசர்கள் மத்தியில் அவன் {பின்வருமாறு} பேசினான்:(12) "அவமதிப்பைத் துடைக்க மனுஷ்யனால் எது செய்யப்பட வேண்டுமோ, அது ராவணனைக் கொன்றதன் மூலம் மானத்தைக் காக்க விரும்பிய என்னால் செய்து முடிக்கப்பட்டது.(13) தபத்தால் ஆத்மத் தூய்மை அடைந்த அகஸ்தியரால் ஜீவலோகத்தில் வெல்வதற்கரிய தக்ஷிண திக்கைப் போல {என்னால் நீ} வென்றெடுக்கப்பட்டாய் {அடைதற்கரிய தென்திசை அகஸ்தியரால் மீட்கப்பட்டதைப் போல நீ என்னால் மீட்கப்பட்டாய்}.(14)
[1] இந்த 10, 11ம் சுலோகங்கள், தமிழ்ப்பதிப்புகளில் வேறு பொருளுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. உதாரணமாக தர்மாலயப் பதிப்பில், "மிகுந்த நெய்வார்க்கப்பட்டு ஜ்வலிக்கும் அக்னிக்கு எவ்வண்ணமோ அவ்வண்ணமே அவளை (சீதாதேவியை) பார்க்கும் ஸ்ரீராமருக்கு கோபமானது முன்னிலுமதிகமாய் பொங்கியெழுந்தது. அவர் முகத்தில் புருவம் நெறித்து குறுக்காகப் பார்க்கும் கண்களுற்றவராய் வானர அரக்கர்களின் நடுவில் ஸீதாதேவியை நோக்கி கடுமையாய் பின்வருமாறு மொழிந்தார்" என்றிருக்கிறது.
அறிந்து கொள்வாயாக. நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. நண்பர்களுடைய வீரியத்தின் துணையுடன் கூடிய இந்தப் போர் முயற்சி உன் அர்த்தத்திற்காக என்னால் செய்யப்பட்டதல்ல.{15} என்னால் ரக்ஷிக்கப்பட வேண்டிய விருத்தத்திற்காக {நன்னடத்தையைத் தொடர்ந்து பேணுவதற்காக}, பிரசித்தி பெற்ற என் வம்சத்தின் மீதான அவதூறும், எங்குமுள்ள அபவாதமும் {பழிச் சொற்களும்} துடைக்கப்பட்டன.(15,16) என் முன் சந்தேஹத்திற்குரிய சாரித்ரத்துடன் {நடத்தையுடன்} நிற்கும் நீ, நேத்திர ஔரஸ்யனுக்கு தீபத்தைப் போல {கண் நோயுற்றவனுக்கு விளக்கைப் போல}[2], எனக்கு திடமாக பிரதிகூலமானவளே {நிச்சயம் வேண்டாதவளே}.(17) எனவே, ஜனகாத்மஜே {ஜனகனின் மகளே}, இனி நீ யதேஷ்டமாக தசா திசைகளிலும் {உன் விருப்பத்திற்கேற்றவாறு பத்துத் திசைகளிலும்} செல்வாயாக. பத்ரே, உன்னால் எனக்கு {ஆக வேண்டிய} காரியம் ஏதுமில்லை.(18) நற்குலத்தில் பிறந்தவனும், தேஜஸ்வியும், புமானுமான {மதிப்புமிக்கவனுமான} எவன், பர கிருஹத்தில் {பிறன் வீட்டில்} வசித்த ஸ்திரீயை மீண்டும் நட்பார்ந்த உள்ளத்துடன் ஏற்றுக் கொள்வான்?(19) {என்} மஹத்தான குலம் குறித்துச் சொன்ன நான், ராவணனின் அங்கத்தில் {மடியில்} இருந்தவளும், {அவனது} துஷ்டக் கண்களால் பார்க்கப்பட்டவளுமான உன்னை மீண்டும் எப்படி ஏற்றுக் கொள்வேன்?(20)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இங்கு நேத்ரரோக முடையவனுக்கு தீபம்போல் ப்ரதிகூலமாயிருப்பதற்குக் காரணம் தன்னுடைய ஸந்தேஹமாகிற தோஷமேயன்றி ஸீதையிடத்தில் ஒரு தோஷமும் இல்லையென்று கருதுவதாகத் தெரிகிறது" என்றிருக்கிறது.
புகழ் என்னால் மீட்கப்பட்டது. அந்த அர்த்தத்திற்காகவே என்னால் நீ வென்றெடுக்கப்பட்டாய். எனக்கு உன்னை அரவணைக்கும் பற்று இல்லை. யதேஷ்டமாக {உன் விருப்பத்திற்கேற்றவாறு} இங்கிருந்து நீ செல்வாயாக.(21) எனவே, பத்ரே, புத்தியில் அமைத்துக் கொண்டு {தீர்மானத்துடன்} இன்று என்னால் இது சொல்லப்படுகிறது. எது {உனக்கு} சுகமோ, அதன்படி லக்ஷ்மணனிடம், அல்லது பரதனிடம் {உன்} புத்தியை அமைத்துக் கொள்வாயாக.(22) சீதே, உனக்கு எது சுகமோ, அதன்படி சத்ருக்னன், அல்லது சுக்ரீவன், அல்லது ராக்ஷசன் விபீஷணனிடம் உன் மனத்தை நிலைநிறுத்துவாயாக[3].(23) சீதே, ராவணன், மனோஹரமான திவ்யரூபத்துடன் {மனத்தைக் கொள்ளை கொள்ளும் தெய்வீக வடிவத்துடன்} கூடிய உன்னைக் கண்டும், வெகு காலம் சொந்த கிருஹத்தில் {தன் வசிப்பிடத்தில்} அடைத்திருந்தும் பொறுத்திருக்க மாட்டான்[4][5]" {என்றான் ராமன்}.(24)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு லக்ஷ்மணாதிகளிடம் 'மனம் வைப்பாய், புத்தியை வைப்பாய்' என்னில் - பர்த்தா கைவிடப் பெற்ற பெண்டிர்க்கு பந்துக்ருஹத்தில் வாஸம் விதித்திருக்கிற தாகையாலும் பெண்டிர்க்கு ஸ்வாதந்த்ர்யத்தை விதிக்காமையாலும் புத்ரர் போன்ற லக்ஷ்மணாதிகளின் க்ருஹங்களில் அவருடைய ரக்ஷணத்தின் கீழிருந்து காலங்கழிப்பாளென்று பொருள்" என்றிருக்கிறது. மேற்கண்ட சுலோகத்தின் பொருள் அவ்வாறானதாகத் தெரியவில்லை.
[4] தர்மாலயப் பதிப்பில், "ராவணன் சிறந்த வனப்புற்று மனத்தைக்கவர்ந்து தனது வீட்டில் இருந்து வரும் உன்னைக் கண்டுவிட்டு வெகுநாளாய் மறந்திருக்க மாட்டான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸீதே, திவ்யமான ரூபம் அமைந்து அழகியளாயிருக்கின்ற நீ, வேறு கதியில்லாமல் ராவணனகத்திலேயே தகையுண்டிருக்கையில், அவன் இத்தகையாளான உன்னைப் பார்த்துக் கொண்டே வெகுகாலம் பொறுத்து வெறுமனே இருப்பானா? வெறுமனே இருக்கமாட்டான்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "சீதே! இராவணன் நிகரில்லா அழுகுடைய உன்மேல் ஆசை வைத்து, உன்னை எடுத்துக் கொண்டு போய், தன் வீட்டில் வெகுகாலம் வைத்திருந்தான். அவன் வசத்திலிருந்த உன்னை, அவன் தொடாமல் இருந்திருப்பானா?" என்றிருக்கிறது.
[5] ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்படமாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர்ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ- கம்பராமாயணம் 10013ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: {இராக்ஷசனின் வசிப்பிடத்தில்} உணவை உண்ண விரும்பி நெடுநாள் இருந்தாய். ஒழுக்கம் பாழ்பட்டாலும் சாகாமல் உயிருடன் இருக்கிறாய். நீதிநெறி பிறழ்ந்த ராக்ஷசனின் மாநகரத்தில் அவனுக்கு அடங்கியிருந்தாய். அச்சம் தீர்ந்து, {நீ} இங்கே திரும்பி வந்தது எதைக் கருதி, "{ராமன்} என்னை விரும்புவான்" என்பதோ?
பிரியத்திற்குத் தகுந்தவற்றையே கேட்டுப்பழகிய மைதிலி, தன் பிரியனின் அப்பிரியத்தை {பிரியமற்ற வார்த்தைகளைக்} கேட்டு, கஜேந்திரனால் தாக்கப்பட்ட வல்லரீயைப் போல {தலைமை யானையின் தாக்குதலுக்குள்ளான யானைவணங்கிக் கொடியைப் போல} பெரிதும் நடுங்கியவாறே நீண்ட நேரம் கண்ணீர் வடித்தாள்.(25)
யுத்த காண்டம் சர்க்கம் – 115ல் உள்ள சுலோகங்கள்: 25
| Previous | | Sanskrit | | English | | Next |
