Monday, 25 August 2025

இராவணன் புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் - 095 (49)

Ravana sets off to battle | Yuddha-Kanda-Sarga-095 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கோபத்தில் மூர்ச்சித்து, வானரப்படையைப் பழிவாங்கக் கட்டளையிட்டு, போர்க்களத்தில் தன் வீரத்தை வெளிப்படுத்தி ராக்ஷசர்களைப் பின்தொடரச் செய்த ராவணன்...

Ravana setout for battle

இலங்கையில் குலாகுலத்தில் {ஒவ்வொரு வீட்டிலும்} துயருற்று, பரிதாபத்திற்குரிய வகையிலும், கருணையை ஏற்படுத்தும் வகையிலும் அழுத ராக்ஷசிகளின் சப்தத்தை ராவணன் கேட்டான்.(1) தீர்க்கமாக மூச்சுவிட்டு, ஒரு முஹூர்த்தம் தியானத்தில் நிலைத்த அந்த ராவணன், பரமகுரோதத்துடன் பயங்கரத் தோற்றத்தை அடைந்தான்.(2) குரோதத்தால் கண்கள் சிவந்தவன், பற்களால் உதடுகளைக் கடித்தபடியே, ராக்ஷசர்களாலும் பார்க்கமுடியாத வகையில் காலாக்னியைப் போல மூண்டான் {குரோதத்தில் வளர்ந்தான்}.(3) இராக்ஷசேஷ்வரன், தன் சமீபத்தில் இருந்த ராக்ஷசர்களிடம் பேசினான். கண்களால் எரித்துவிடுபவனைப் போலிருந்த அவன், பயம் வெளிப்படும் குழறிய சொற்களில்,{4} மஹோதரன், மஹாபார்ஷ்வன்[1], விரூபாக்ஷன்[2] ஆகிய ராக்ஷசர்களிடம் "என் ஆணையின் பேரில் சைனியங்களை சீக்கிரம் புறப்படச் சொல்வீராக" {என்று சொன்னான் ராவணன்}[3].(4,5)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இம்மஹோதரனும், இம்மஹா பார்ஷ்வனும் ராவணனுடைய மந்த்ரிகள். முன்பு யுத்தத்தில் அடியுண்ட மஹோதர மஹாபார்ஷ்வர்கள் மத்தனென்றும் ப்ரமத்தனென்றும் வேறு பேருடையவரான ராவணன் தம்பிகள்" என்றிருக்கிறது. ஆங்கிலச் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "மஹோதரனும், மஹாபார்ஷ்வனும் ஏற்கனவே கொல்லப்பட்டவர்கள். எனினும், ராவணன் குழம்பியிருக்கவும் கூடும். அவன் சொன்னதை ராக்ஷசர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது ஒரு தடையும் இருக்கிறது. ஆனால், மஹோதரனும், மஹாபார்ஷ்வனும் மீண்டும் கொல்லப்படுவதில் உள்ள முரண்பாடு தெளிவாகத் தெரிகிறது" என்றிருக்கிறது. யுத்த காண்டம்  70ம் சர்க்கத்தில், 32ம் சுலோகத்தில் மஹோதரன் நீலனால் கொல்லப்படுவதும், 33ம் சுலோகத்தில், அந்த மஹோதரன் திரிசிரனின் சிற்றப்பன், அதாவது ராவணனின் தம்பி என்றும்,  65ம் சுலோகத்தில் மஹாபார்ஷ்வன் ரிஷபனால் கொல்லப்படுவதும், 67ம் சுலோகத்தில் அவன் ராவணனின் தம்பி என்றும் சொல்லப்படுகிறது. அந்த 70ம் சர்க்கத்தில் உள்ள 3ம் அடிக்குறிப்பைக் காண்க. அதில் மஹாபார்ஷ்வனே மத்தன், மஹோதரனே பிரமத்தன் என்ற ராவணனின் தம்பியர் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கே சொல்லப்படுவது ராவணனின் மந்திரிகள். மேலும் மஹோதரன் என்ற சொல்லுக்குப் பெரும் வயிறு படைத்தவன் என்றும், மஹாபார்ஷ்வன் என்ற சொல்லுக்கு பெரும் பக்கவாட்டுகளைக் கொண்டவன் என்றும் பொருள் வருகிறது. எனவே, மஹோதரன், மஹாபார்ஷ்வன் என்ற சொற்கள் அடைமொழிகளாகவே தெரிகின்றன. இருப்பினும், இந்த முரண், எந்த சர்க்கத்திலோ நடந்திருக்கும் இடைச்செருகலின் விளைவாகவும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அடுத்த அடிக்குறிப்பையும் சேர்த்துக் கணக்கில் கொண்டால் இங்கே குறிப்பிடப்படும் மூவரும் ராவணனின் அமைச்சர்களாகவே தெரிகிறார்கள்.

[2] இங்கே குறிப்பிடப்படும் விரூபாக்ஷன் சுந்தரகாண்டம் 46ம் சர்க்கத்தில்  ராவணனுடைய சேனையின் ஐந்து முன்னணி நாயகர்களில் ஒருவனாகக் குறிப்பிடப்படுகிறான். எஞ்சிய நால்வர், யூபாக்ஷன், துர்த்தரன், பிரகஸன், பாஸகர்ணன் ஆகியோராவர். இதில் யூபாக்ஷன், யுத்தகாண்டம் 76ம் சர்க்கத்தில்  மைந்தனால் கொல்லப்படுகிறான். துர்த்தரன், சுந்தரகாண்டம் 49ம் சர்க்கத்தில் ராவணனின் ராக்ஷச மந்திரிகள் நால்வரில் ஒருவனாகவும் குறிப்பிடப்படுகிறான். பிரகஸன், யுத்த காண்டம் 89ம் சர்க்கத்தில், 12ம் சுலோகத்தில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் குறிப்பிடப்படுகிறான். எஞ்சியிருக்கும் பாஸகர்ணன், யுத்த காண்டம், 55ம் சர்க்கத்தில், அகம்பனனுடன் பிறந்தோரைக் குறிப்பிடும் 1ம் அடிக்குறிப்பில், ராவணனின் தாய்மாமனாகக் குறிப்பிடப்படுகிறான். எனவே, இங்கே குறிப்பிடப்படும் நால்வரும் ராவணனின் அமைச்சர்களாக இருந்ததற்கான வாய்ப்பே அதிகம். 

[3] பூதரம் அனைய மேனி புகை நிறப் புருவச் செந்தீ
மோதரம் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு ஏற்றுக என்றான்..

- கம்ப ராமாயணம் 9642ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் தேர் ஏறு படலம்

பொருள்: மலை போன்ற உடலையும், புகை போன்ற கரிய புருவங்களையுடைய செந்தீ போன்ற மகோதரன் எனும் பெயருள்ள ஒருவனை முறைப்படி பார்த்து, "இறக்காத சேனை எது உள்ளது? இலங்கைக்குள் இருந்த படை அனைத்தையும் எழுக என அறிவிக்க அழகிய முரசை யானையில் ஏற்றுக" என்றான்.

அவனது அந்த வசனத்தைக் கேட்டு, பயத்தால் பீடிக்கப்பட்ட அந்த ராக்ஷசர்கள், கலக்கமடையாத அந்த ராக்ஷசர்களை நிருபனின் {அரசனின்} ஆணைப்படி தூண்டினர்.(6) பயங்கரத் தோற்றங்கொண்ட அந்த சர்வ ராக்ஷசர்களும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, சுவஸ்தியயனம் {தீமை அண்டாததற்கான மங்கலச் சடங்குகளைச்} செய்தனர். பிறகு, அவர்கள் அனைவரும் ரணபூமியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.(7)

நியாயம் எதுவோ, அதன்படி ராவணனைப் பூஜித்த அந்த சர்வ மஹாரதர்களும் {பெருந்தேர்வீரர்களான அவர்கள் அனைவரும்}, தங்கள் தலைவனின் விஜயத்தில் விருப்பத்துடன், கூப்பிய கைகளுடன் நின்றனர்.(8) குரோதத்தில் மூர்ச்சித்த ராவணன், பிறகு சிரித்துக் கொண்டே, ராக்ஷசர்களான மஹோதரன், மஹாபார்ஷ்வன், விரூபாக்ஷன் ஆகியோரிடம் {பின்வருமாறு} சொன்னான்:(9) "என் தனுவில் இருந்து விடுவிக்கப்படுபவையும், யுகாந்த ஆதித்யனுக்கு {யுக முடிவில் எழும் சூரியனுக்கு} ஒப்பானவையுமான பாணங்களால், ராகவனையும் {ராமனையும்}, லக்ஷ்மணனையும் இதோ யமசாதனத்திற்கே {யமனின் வசிப்பிடத்திற்கே} அனுப்பப் போகிறேன்.(10) சத்ருவதத்தால் {பகைவரைக் கொல்வதால்}, கரன், கும்பகர்ணன், பிரஹஸ்தர், இந்திரஜித் ஆகியோருக்கான பழியை இதோ நான் தீர்க்கப் போகிறேன்.(11) என் பாண ஜாலங்களால் மறைக்கப்படும் அந்தரிக்ஷத்தாலும் பிரகாசிக்க முடியாது; திசைகளாலும் முடியாது; தியுவாலும் {வானத்தாலும்} முடியாது; சாகரத்தாலும் அசைய முடியாது.(12) என் தனுசில் இருந்து ஏவப்படுபவையும், இறகுகளுடன் கூடியவையுமான சர ஜாலங்களால் {கணைவலைகளால்}, வானர முக்கியர்களின் யூதங்களை பாகங்களாக்கி {குழுக்களை வகுத்து} இதோ அழிக்கப் போகின்றன.(13) 

பவன ஓஜஸ்ஸுடன் கூடிய ரதத்தில் ஏறி {வாயு வேகம் கொண்ட தேரில் ஏறி}, இதோ என் தனு சமுத்திரத்தில் பிறந்த சர அலைகளால் {வில்லெனும் கடலில் இருந்து ஏவப்படும், கணைகள் எனும் அலைகளைக் கொண்டு} வானர சைனியங்களை இதோ நசுக்கப் போகிறேன்.(14) முற்றும் மலர்ந்த பத்மங்களுக்கு ஒப்பான முகங்களுடன், பத்ம கேசரன் {தாமரைத் தாது} போல் ஒளிரும் யூத தடாகங்களை கஜம் போல {குரங்குக் குழுக்கள் எனும் தடாகங்களை அழிக்கும் யானையைப் போல} இதோ நான் அழிக்கப் போகிறேன்.(15) சரங்கள் துளைத்த வதனங்களுடன் போர்க்களத்தில் கிடக்கும் வானர யூதபர்கள், தண்டுகளுடன் கூடிய பங்கஜங்களை {தாமரைகளைப்} போல, வசுதையை {பூமியை} அலங்கரிக்கப் போகிறார்கள்.(16) மரங்களைக் கொண்டு யுத்தம்புரியும் யுத்த பிரசண்டர்களான ஹரீக்களை {கடுமைமிக்க போர்வீரர்களான குரங்குகளை}, யுத்தத்தில் ஏவும் ஒவ்வொரு கணைகளாலும், நூறு நூறு பேராக இதோ பிளக்கப் போகிறேன்.(17) 

யாவரின் கணவன்மார் கொல்லப்பட்டனரோ, பிராதாக்கள் {உடன் பிறந்தோர்} கொல்லப்பட்டனரோ, தனயன்மார் {மகன்கள்} கொல்லப்பட்டனரோ, அவர்களின் கண்ணீரை, இதோ ரிபுக்களை {பகைவரை} வதைத்துத் துடைக்கப் போகிறேன்.(18) இதோ யுத்தத்தில் எனது பாணங்களால் பிளக்கப்பட்டு உயிரிழந்து சிதறிக் கிடக்கும் வானரர்களால், மஹீயின் தலத்தை  யத்னம் {பூமியின் தரையை முயற்சி} செய்தால் மட்டுமே புலப்படுவதாக்கப் போகிறேன்.(19) காகங்கள், கிருத்ரங்கள் {கழுகுகள்} அகியவற்றையும், மாமிசங்களை எவை உண்ணுமோ அத்தகைய பிற அனைத்தையும், என் சரங்களால் கொல்லப்பட்ட சத்ருக்களின் மாமிசங்களால் இதோ திருப்தியடையச் செய்யப் போகிறேன்.(20) சீக்கிரம் என் ரதத்தை ஆயத்தம் செய்வீராக. சீக்கிரம் தனுவைக் கொண்டு வருவீராக. இங்கே இருக்கும் நிசாசரர்கள் எவரும் யுத்தத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வருவீராக" {என்றான் ராவணன்}.(21)

அவனது {ராவணனின்} அந்த வசனத்தைக் கேட்ட மஹாபார்ஷ்வன், "பலம் {படை} விரைவாக ஆயத்தமாகட்டும்" என்ற சொற்களை அங்கே நின்றிருந்த பலாதியக்ஷர்களிடம் {படைத் தலைவர்களிடம்} கூறினான்.(22) இலகுபராக்கிரமர்களான பலாதியக்ஷர்கள், பரபரப்புற்று, கிருஹாகிருஹங்களில் {ஒவ்வொரு வீட்டிலும்} உள்ள அந்த ராக்ஷசர்களைத் துரிதப்படுத்தியவாறே லங்கையைச் சுற்றி வந்தனர்.(23)

அப்போது பயங்கரத் தோற்றம் கொண்டவர்களும், பயங்கர வதனங்களைக் கொண்டவர்களுமான ராக்ஷசர்கள், கைகளில் பல்வேறு ஆயுதங்களுடன் ஒரு முஹூர்த்தத்தில் வெளிப்பட்டனர்.{24} கத்தி, பட்டிசங்கள் {பட்டயக்கத்தி}, சூலங்கள், கதைகள், முஸலங்கள் {உலக்கைகள்}, ஹலங்கள், கூர்முனை கொண்ட சக்திகள் {வேல்கள்}, கூடமுத்கரங்கள் {பெரும் சம்மட்டிகள்},{25} யஷ்டிகள் {தடிகள்}, விமலமான சக்கரங்கள், கூரிய பரசுகள் {கோடரிகள்}, பிண்டிபாலங்கள், சதக்னிகள், வேறு சிறந்த ஆயுதங்கள் ஆகியவற்றுடன் இருந்தனர்.(24-26) அப்போது பலாதியக்ஷன் ராவணனின் ஆணையால் துரிதமாகச் செல்லும் ரதம் ஒன்றைக் கொண்டு வந்தான். தன்னொளியில் ஒளிரும் அந்த திவ்ய ரதத்தில் அவன் ஏறினான்.{27} அந்த ரதம் சூதனுடன் கூடியதாகவும், எட்டு துரகங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதாகவும் இருந்தது.(27,28அ) பிறகு, ராவணன், சத்வகாம்பீர்யத்தால் மேதினியைப் பிளந்துவிடுபவனைப் போல {வலிமையாலும், திண்மையினாலும் பூமியைப் பிளந்துவிடுபவனைப் போல}, ஏராளமான ராக்ஷசர்கள் சூழத் திடீரெனப் புறப்பட்டுச் சென்றான்[4].(28ஆ,29அ) 

[4] யுத்த காண்டம் 59ம் சர்க்கத்தில் ராமனால் மகுட பங்கமடைந்து லங்கைக்குத் திரும்பிய ராவணன், கும்பகர்ண உள்ளிட்ட தன் தம்பிகளின் வதம், இந்திரஜித் உள்ளிட்ட தன் பிள்ளைகளின் வதம் ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் இந்த சர்க்கத்தில் போர்க்களம் புகுகிறான். இந்த சர்க்கத்தைப் படிக்கும்போது, ஏற்கனவே ராமனிடம் ராவணன் தோற்றோடியதை இந்த சர்க்கம் கணக்கில் கொள்ளாததைப் போலத் தெரிகிறது. எனவே, ராவணன் முதன்முதலாக தற்போதுதான் ராமனுடன் போரிடப் போவது போலவும் தெரிகிறது. 

அப்போது, ராக்ஷசர்களின் கலகத்வனியுடன் சேர்ந்து, தூரியங்கள், மிருதங்கங்கள், படஹங்கள், சங்கங்கள் ஆகியவற்றின் மஹாநாதம் ஆங்காங்கே எழுந்தது.(29ஆ,30அ) "குடை, சாமரத்துடன் கூடியவராக ராக்ஷச ராஜா {ராவணன்} வருகிறான்.{30ஆ} சீதையை அபகரித்தவன், துர்விருத்தன் {தீய நடத்தை கொண்டவன்}, பிரஹ்மக்னன் {பிராமணர்களைக் கொன்றவன்}, தேவகண்டகன் {தேவர்களுக்கு முள்ளாகத் திகழ்பவன்}, ரகுவரருடன் {ரகுக்களில் சிறந்த ராமருடன்} யுத்தம் செய்யப் போகிறான்" என்ற கலஹத்வனி கேட்டது.(30ஆ,31) மஹத்தான அந்த நாதம் பிருத்வியை நடுங்கச் செய்தது. அந்த சப்தத்தைக் கேட்ட உடனேயே பயத்தில் வானரர்கள் ஓடினர்.(32) மஹாபாஹுவும், மஹாதேஜஸ்வியுமான ராவணனும், அமைச்சர்கள் சூழ, ஜயத்தைத் தேடி விஜயம் செய்தான்[5].(33)

[5] 23 முதல் 33ம் சுலோகம் வரையுள்ள இந்தப் பகுதி பல பதிப்புகளில் இல்லை.

வெல்வதற்கரியவர்களான மஹாபார்ஷ்வன், மஹோதரன், விரூபாக்ஷன் ஆகியோர் ராவணன் அனுமதித்தபோது தங்கள் ரதங்களில் ஏறினர்.(34) அந்த ராக்ஷசர்கள், தங்கள் மகிழ்ச்சி நாதத்தால் மேதினியைப் பிளந்துவிடுபவர்களைப் போல, ஜயத்தில் விருப்பத்துடன் கோரமான நாதத்தை வெளியிட்டபடியே புறப்பட்டுச் சென்றனர்.(35) அப்போது,  காலாந்தகனுக்கு ஒப்பான அந்த தேஜஸ்வி {ராவணன்}, ரக்ஷோகணபலத்துடன் {ராக்ஷசக் கூட்டத்தின் படையுடன்}, தனுவை உயர்த்தியபடியே யுத்தத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.(36) பிறகு, அந்த மஹாரதன் {பெருந்தேர் வீரனான ராவணன்}, ராமலக்ஷ்மணர்கள் இருவரும் எங்கிருந்தனரோ, அந்த துவாரத்திற்கு {வடக்கு வாயிலுக்கு} வேகமான அஷ்வங்களால் {குதிரைகளால்} இழுக்கப்பட்ட ரதத்தில் புறப்பட்டுச் சென்றான்.(37)

அப்போது, சூரியன் தன் பிரபையை இழந்தான்; திசைகள் இருளால் சூழப்பட்டன; துவிஜங்கள் கோரமான ஒலியை எழுப்பின. மேதினியும் கடுமையாக நடுங்கினாள்.(38) தேவர்கள் உதிர மழை பொழிந்தனர்; துரங்கங்கள் {குதிரைகள்} இடறி விழுந்தன; துவஜத்தின் உச்சியில் கிருத்ரம் {கழுகு} இறங்கியது; சிவங்கள் அசிவ நாதம் செய்தன {நரிகள் மங்கலமற்ற ஊளையிட்டன}.(39) இடது நயனம் {கண்} துடித்தது; இடது கை நடுங்கியது. வதனம் வர்ணமிழந்தது; ஸ்வனம் {குரலொலி} கொஞ்சம் குறைந்தது.(40) இராக்ஷசன் தசக்ரீவன் யுத்தத்திற்குப் புறப்பட்டபோது, அவனது மரணத்தை அறிவிக்கும் இந்த ரூபங்கள் அனைத்தும் ரணத்தில் {போர்க்களத்தில்} தோன்றின.(41) இடிக்கு ஒப்பான ஸ்வனத்துடன் அந்தரிக்ஷத்தில் இருந்து உல்கம் {எரிகொள்ளி} விழுந்தது; கிருத்ரங்கள் வாயஸங்களுடன் சேர்ந்து அசிவமாக இரைச்சலிட்டன {கழுகுகள், காகங்களுடன் சேர்ந்து மங்கலமின்றி இரைச்சலிட்டன}.(42) இராவணன், கோரமாக எழுந்த இந்த உத்பாதங்களைக் குறித்து மோஹத்தால் {அறியாமையால்} சிந்திக்காமல், காலனால் தூண்டப்பட்டவனாகத் தன் வதத்தின் அர்த்தத்திற்காகப் புறப்பட்டுச் சென்றான்.(43)

மஹாத்மாக்களான அந்த ராக்ஷசர்களின் ரத கோஷத்தால், வானரர்களின் சம்முவும் யுத்தம் செய்வதற்காக எதிர்த்து நின்றது.(44) ஜயத்தை இச்சித்து, குரோதத்துடன் அன்யோன்யம் அறைகூவியழைத்த அந்த கபிராக்ஷசர்களுக்கிடையில் பயங்கர யுத்தம் நடந்தது.(45) அப்போது குரோதமடைந்த தசக்ரீவன், காஞ்சன பூஷணங்களுடன் கூடிய சரங்களால் வானரர்களின் அனீகத்துடன் ஒரு மஹத்தான கதனத்தை {பெரும்போரை} நடத்தினான்.(46) இராவணனால் சில வலீமுகர்கள் தங்கள் சிரங்கள் அறுபட்டனர்; சிலர் ஹிருதயங்கள் பிளக்கப்பட்டனர்; சிலர் தங்கள் காதுகளை இழந்தனர்.(47) சிலர் மூச்சற்றவர்களாகக் கொல்லப்பட்டனர்; சிலர் தங்கள் பக்கவாட்டுகள் பிளக்கப்பட்டனர்; சிலர் சிரசுகள் சிதைக்கப்பட்டனர்; சிலர் கண்களை இழந்தவர்களாகச் செய்யப்பட்டனர்.(48) குரோதத்தில் நேத்திரங்கள் சுழல, தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, போரில் எங்கெங்கு சென்றானோ, அங்கங்கு அந்த ஹரியூதபர்களால் {குரங்குக் குழு தலைவர்களால்} அவனது சரவேகத்தை தாங்க முடியவில்லை.(49)

யுத்த காண்டம் சர்க்கம் – 095ல் உள்ள சுலோகங்கள்: 49

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை