Virupaksha killed | Yuddha-Kanda-Sarga-096 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனை அணுக முயற்சித்த ராவணன்; ராக்ஷசர்கள் சிலரைக் கொன்ற சுக்ரீவன்; சுக்ரீவனைத் தாக்கிய விரூபாக்ஷன்; விரூபாக்ஷனைக் கொன்ற சுக்ரீவன்...
தசக்ரீவனின் கணைகளால் காத்திரங்கள் பிளக்கப்பட்ட அந்த ஹரீக்கள் அப்போது அங்கே வசுதையில் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனின் கணைகளால் உடல் உறுப்புகள் பிளக்கப்பட்ட அந்தக் குரங்குகள் அப்போது அங்கே பூமியில்} சிதறிக் கிடந்தனர்.(1) சுடர்மிக்க நெருப்பில் பதங்கங்களை {விட்டிற்பூச்சிகளைப்} போல, ராவணன் ஒருவனால் ஏவப்பட்ட அந்தத் தடுக்கப்பட முடியாத சரங்களின் பாய்ச்சலை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.(2) கூரிய பாணங்களால் துன்புற்ற அவர்கள் {வானரர்கள்}, பாவகனின் {அக்னியின்} சுடர்களால் சூழப்பட்டு, எரிக்கப்படும் கஜங்கள் {யானைகள்} எப்படியோ, அப்படியே அலறியபடி ஓடிச் சென்றனர்.(3) அந்தச் சமரில் ராவணன், பெரும் மேகங்களை {விரட்டும்} மாருதம் {காற்று} போல, பிலவங்கமர்களின் அனீகத்தை {தாவிச் செல்பவர்களான குரங்குகளின் படையை} விரட்டியபடி விரைந்து சென்றான்.(4) அந்த யுத்தத்தில் ராக்ஷசேந்திரன், வனௌகசர்களை கதனம் செய்தவாறே {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களை அழித்தவாறே}, ரணத்தில் ராகவனைத் துரிதமாக அணுகினான்.(5)
இரணத்தில் பங்கமடைந்து, ஓடிச் செல்பவர்களான அந்த கபிக்களை {குரங்குகளைக்} கண்ட சுக்ரீவன், சுஷேணனை குல்மத்தில் {படைக்காவலில்}[1] நிறுத்திவிட்டு, விரைவாகத் தன் மனத்தை யுத்தத்தில் திருப்பினான்.(6) அந்த சுக்ரீவன், தன்னைப் போன்றவனான அந்த வீர வானரனை {தனக்கு நிகரான சுஷேணனை, படைக்காவலில்} நிறுத்திவிட்டு, ஒரு மரத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டு சத்ருவை எதிர்த்துச் சென்றான்.(7) சர்வ வானர யூதபர்களும், மஹாசைலங்களையும், விதவிதமான வனஸ்பதிகளையும் {வானரக்குழுத் தலைவர்கள் அனைவரும், பெரும் மலைகளையும், பெரும் மரங்களையும்} எடுத்துக் கொண்டு அவனுக்கு {சுக்ரீவனுக்குப்} பக்கத்திலும், பின்னாலும் தொடர்ந்து சென்றனர்.(8)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "குல்மம் என்பது ஒரு வகை படை அலகாகும். அல்லது, ஒன்பது யானைகள், ஒன்பது தேர்கள், இருபத்தேழு குதிரைகள், நாற்பத்தைந்து காலாள்கள் கொண்ட ஒரு படைப்பிரிவாகும்" என்றிருக்கிறது.
மஹான் சுக்ரீவன், யுத்தத்தில் மஹத்தான ஸ்வரத்துடன் நாதம் செய்தவாறே {பெருங்குரலில் முழக்கமிட்டபடியே} விதவிதமான அந்நியர்களையும், உத்தம ராக்ஷசர்களையும் தாக்கி வீழ்த்தினான்.(9) யுகாந்த {யுக முடிவின்} சமயத்தில், வளர்ந்த பெரும் மரங்களை {வீழ்த்தும்} வாயு போல, மஹாகாயனான வானரேஷ்வரன் {பேருடல் கொண்டவனும், வானரர்களின் தலைவனுமான சுக்ரீவன்} ராக்ஷசர்களை வீழ்த்தினான்.(10) கானகத்தில் பக்ஷிசங்கத்தின் {பறவைக் கூட்டங்களின்} மீது மேகம் எப்படி கல்மழை பொழியுமோ, அப்படியே ராக்ஷசர்களின் மீது சைல வர்ஷத்தை {மலைகளின் மழையைப்} பொழிந்தான்.(11)
கபிராஜனால் ஏவப்பட்ட சைல வர்ஷத்தில் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவன் ஏவிய மலைகளின் மழையால்} ராக்ஷசர்கள் வீழ்ந்தபோது, சிதறிய சிரசுகள் {தலைகள்} பர்வதங்களைப் போல விழுந்தன.{12} சுற்றிலும் ராக்ஷசர்கள் சுக்ரீவனால் பங்கமடைந்து கீழே விழுந்து துன்புற்று கதறியபோது,{13} வெல்வதற்கரியவனும், தன்வியுமான {வில் வீரனுமான} ராக்ஷசன் விரூபாக்ஷன்[2], தன் நாமத்தை {பெயரை} அறிவித்தவாறே ரதத்தில் இருந்து இறங்கி, ஒரு கஜத்தின் ஸ்கந்தத்தில் {யானையின் தோளில்} ஏறினான்.(12-14) மஹாபலவானான அந்த விரூபாக்ஷன், அந்த துவீபத்தில் {யானையில்} ஏறியபிறகு, பயங்கர முழக்கம் செய்தபடியே வானரர்களை நோக்கி விரைந்து சென்றான்.(15) அவன், சம்மு முகத்தில் {படையின் முன்னணியில்} இருந்த சுக்ரீவன் மீது கோரமான சரங்களை ஏவி, கவலையில் ஆழ்ந்திருந்த ராக்ஷசர்களை மகிழ்ச்சியில் ஸ்தாபித்தான்.(16)
[2] கம்பராமாயணத்தில் விரூபாக்ஷன் என்ற பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் யுத்தகாண்டம், வீடணன் அடைக்கலப் படலத்திற்குப் பிறகு வரும், இலங்கை கேள்விப் படலத்தில் கம்பராமாயணப் பாடல் எண் 6558ல் உள்ள பாடலில் நேரடியாக இல்லையெனினும், உரையில் விரூபாக்கன் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் அவன் கொல்லப்படுவது கம்ப ராமாயணத்தில் எங்கும் காணப்படவில்லை. பின்வருவது மேற்குறிப்பிட்ட அந்தப் பாடலும், அதன் உரையில் உள்ள பொருளும் ஆகும்.இலங்கை நாட்டன்ன எறி கடல் தீவிடை உறையும்அலங்கல் வேற் படையை ஐயிரு கோடிக்கும் அரசன்வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்விலங்குநாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான்- கம்பராமாயணம் 6558ம் பாடல், யுத்த காண்டம், இலங்கை கேள்விப் படலம்பொருள்: இலங்கை நாட்டைப் போன்று அலையெறியும் கடல் நடுவே உள்ள தீவில் வாழும் மாலை சூடிய வேல் படை வீரர்கள் பத்துக் கோடி பேருக்கும் அரசனும், வலிமை மிக்க வாள் போரில் வல்ல விஞ்சையருடன் போரிட்டு வென்று அவர்களது புகழ் மறையும்படி செய்தவனும், தீப்பொறி பறக்க விழிப்பவனுமான விரூபாக்கன் என்ற ஒருவன் உள்ளான். பாடலில் இந்தப் பெயர் விலங்குநாட்டத்தன் என்றும், பொருள் சொல்லும் உரையில் விரூபாக்கன் என்றும் உள்ளது.
அந்த ராக்ஷசனின் கூரிய பாணங்களால் அதிக காயம் அடைந்த அந்த கபீந்திரன் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவன்}, மஹாகுரோதத்துடன் கூச்சலிட்டு, அவனது {விரூபாக்ஷனின்} வதத்தில் மனத்தை நிலைநிறுத்தினான்.(17) நன்கு போர்புரியவல்லவனும், சூரனுமான அந்த ஹரி {குரங்கான சுக்ரீவன்}, ஒரு மரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அவனது அருகில் சென்று, அந்த மஹாகஜத்தின் {பெரும் யானையின்} முகத்தைத் தாக்கினான்.(18) சுக்ரீவனின் அடியால் தாக்கப்பட்ட அந்த மஹாகஜம், தனுர்மாத்ரம் {ஒரு வில்லளவு} பின் சென்று, முழங்கியபடியே கீழே விழுந்தது.(19)
வீரியவானான அந்த ராக்ஷசன் {விரூபாக்ஷன்}, அப்போது தாக்கப்பட்ட யானையில் இருந்து துரிதமாகக் கீழே இறங்கி, எதிர்த்துச் சென்று, சத்ருவான கபியை {சுக்ரீவனை} அணுகினான்.{20} இலகுவிக்ரமனான அவன் {விரூபாக்ஷன்}, எருதுத் தோலாலான கேடயத்தையும், கட்கத்தையும் {கத்தியையும்} கையில் எடுத்துக் கொண்டு, மிக அதட்டுகிறவனாக ஆயத்தமாக இருக்கும் சுக்ரீவனுடன் மோதினான்.(20,21) அவனிடம் பெருங்குரோதமடைந்த அந்த சுக்ரீவன், மேகத்திற்கு ஒப்பான பெரும்பாறையை எடுத்து விரூபாக்ஷன் மீது வீசினான்.(22) விக்ராந்தனான அந்த ராக்ஷசபுங்கவன், பாய்ந்து வரும் அந்த பாறையைக் கண்டு, பின்வாங்கியபடி கட்கத்தால் {வாளால்} அவனைத் தாக்கினான்.(23) பலவானான அந்த ராக்ஷசனுடைய கட்கத்தின் {வாளின்} வீச்சால் தாக்கப்பட்ட வானரன், நனவிழந்தவனைப் போல ஒரு முஹூர்த்தம் பூமியில் கிடந்தான்.(24)
பிறகு விரைவாகக் குதித்தெழுந்த அவன் {சுக்ரீவன்}, தன் முஷ்டியை இறுக்கி, பெரும்போரில் ராக்ஷசனின் மார்பில் வேகமாகத் தாக்கினான்.(25) முஷ்டியின் தாக்குதலால் பெருங்குரோதமடைந்த நிசாசரன் விரூபாக்ஷன், சம்மு முகத்தில் {படையின் முன்னணியில்} இருந்த சுக்ரீவனின் கவசத்தைத் தன் கட்கத்தால் வெட்டி வீழ்த்தினான். இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {சுக்ரீவன்}, கால்களை மடித்து விழுந்தான்.(26,27அ) கீழே விழுந்ததும் எழுந்த அந்தக் கபி {குரங்கான சுக்ரீவன்}, அசனிக்கு சமமாக, பீம ஸ்வனத்தை {பயங்கர ஒலியை} உண்டாக்கவல்ல வகையில் உள்ளங்கையால் அறைந்தான்.(27ஆ,28அ) அறைவதற்காக சுக்ரீவனால் உயர்த்தப்பட்ட உள்ளங்கையில் இருந்து நைபுண்யத்துடன் {நிபுணத்துவத்துடன்} விடுபட்ட அந்த ராக்ஷசன், தன் முஷ்டியால் அவனது {சுக்ரீவனின்} மார்பைத் தாக்கினான்.(28ஆ,29அ)
வானரேஷ்வரனான சுக்ரீவனும் தன் தாக்குதலில் இருந்து அந்த ராக்ஷசன் விடுபட்டதை {தப்பித்ததைக்} கண்டபோது, பெருங்குரோதம் அடைந்தான்.(29ஆ,30அ) அந்த வானரன் அந்த விரூபாக்ஷனைத் தாக்கும் வாய்ப்பைக் கண்டபோது, குரோதத்துடன் தனது பெரும் உள்ளங்கையால் அவனது சங்க தேசத்தில் {நெற்றி எலும்பில்} அறைந்தான்.(30ஆ,31அ) மஹேந்திரனின் அசனிக்கு {இடிக்கு} ஒப்பான உள்ளங்கையால் தாக்கப்பட்டுத் தரையில் விழுந்து,{31ஆ} பிரஸ்ரவணத்தில் இருந்து ஜலத்தைப் போல {அருவியிலிருந்து பாயும் நீரைப் போல, ஒன்பது} வாய்க்கால்களில்[3] இருந்து ஏராளமான சோணிதம் பெருகி அந்த உதிரத்தில் நனைந்தான்.(31ஆ,32) அவர்கள் {வானரர்கள்}, குரோதத்தால் நயனங்கள் {கண்கள்} சுழல்பவனும், {வாயில்} நுரை வழிய, உதிரத்தில் நனைந்து, விரூபாக்ஷனாகவே {விகாரமான கண்களுடன் கூடியவனாகச்} செய்யப்பட்ட விரூபாக்ஷனைக் கண்டனர்[4].(33)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "கண்கள் இரண்டு, நாசித் துளைகள் இரண்டு, காதுத்துளைகள் இரண்டு, வாய், பிறப்புறுப்பு, மலத்துளை ஆகியனவே உடலின் ஒன்பது துளைகள் {வாய்க்கால்கள்} ஆகும்" என்றிருக்கிறது.
[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ஒரு சொல் விளையாட்டு நேர்கிறது. விரூபாக்ஷன் என்ற சொல்லுக்கு சிதைந்த அல்லது விகாரக் கண்களைக் கொண்டவன் என்பது பொருளாகும். இங்கே {அவனது பெயருக்குத் தகுந்தாற்போல} விரூபாக்ஷனின் கண்கள் விகாரமாகின" என்றிருக்கிறது.
உதிரம் வழிய, கருணைக்குரிய வகையில் பக்கவாட்டுகளில் புரண்டு கதறிக் கொண்டிக்கும் தங்கள் ரிபுவை {பகைவனைக்} கபயர்கள் {குரங்குகள்} கண்டனர்.(34) இவ்வாறு போரில் மோதிய பயங்கர ஆற்றல் மிக்க அந்த வானரராக்ஷசர்களின் பலார்ணவங்கள் {படைகளெனும் கடல்கள்} இரண்டும், கரைகள் அழிந்த இரண்டு மஹார்ணவங்களைப் போல முழங்கின.(35) மஹாபலம் பொருந்திய அந்த விரூபநேத்திரன் {விரூபாக்ஷன்} ஹரிபார்த்திபனால் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனால்} கொல்லப்பட்டதைக் கண்ட கபிராக்ஷசர்களின் பலங்கள் {படைகள்}, கரைக்கு அடங்காத கங்கைக்கு ஒப்பானவையாகத் தெரிந்தன.(36)
யுத்த காண்டம் சர்க்கம் – 096ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |