Akampana again | Yuddha-Kanda-Sarga-055 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போரிடச் செல்லுமாறு அகம்பனனிடம் சொன்ன ராவணன்; தீய சகுனங்களைக் கண்டும் கலங்காமல் போரிடச் சென்ற அகம்பனன்...
வஜ்ரதம்ஷ்ட்ரன் வாலிபுத்திரனால் {அங்கதனால்} கொல்லப்பட்டதைக் கேட்ட ராக்ஷசேஷ்வரன் ராவணன், {தன் அருகில்} கைகளைக் கூப்பி நின்றிருந்த பலாதியக்ஷனிடம் {படைத் தலைவனிடம்} இதைச் சொன்னான்:(1) “வெல்லப்பட முடியாத பீமவிக்கிரமர்களான ராக்ஷசர்கள், சர்வ சஸ்திர, அஸ்திர கோவிதரான அகம்பனரை[1] முன்னிட்டுக் கொண்டு சீக்கிரம் புறப்பட்டுச் செல்லட்டும்.(2) யுத்தத்தில் சாஸ்தரும், கோப்தரும், நேதாவுமான இந்த சத்தமர் {போரில் தண்டிப்பவரும், பாதுகாக்கிறவரும், தலைவரும், ஆளுமைகளில் சிறந்தவருமான இந்த அகம்பனர்}, நித்யம் எனக்கு நன்மையை விரும்புகிறவர்; நித்யம் சமரில் {போரில்} பிரியங் கொண்டவர்.(3) இவர் காகுத்ஸ்தர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, மஹாபலம் பொருந்திய சுக்ரீவன் ஆகியோரை வென்று, கோரமான மற்ற வானரர்களைக் கொல்வார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை” {என்றான் ராவணன்}.(4)
[1] அகம்பனன், ஆரண்ய காண்டம் 31ம் சர்க்கத்தில் சீதையைக் கடத்துமாறு ராவணனைத் தூண்டியவனாவான். சுமாலிக்கும் கேதுமதிக்கும் பிறந்த பத்து மகன்களில் இந்த அகம்பனனும் ஒருவன். பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், காலகாமுகன், தூம்ராக்ஷன், தண்டன், சுபார்ஷ்வன், சாம்ஹ்ரதன், பிராக்வாடன், பாஸகர்ணன் ஆகியோரே அந்த பத்து மகன்கள். இதில் பிரஹஸ்தன் ராவணனின் அமைச்சராக இருப்பவன்; தூம்ராக்ஷன் யுத்தகாண்டம் 52ம் சர்க்கத்தில் ஹனுமானால் கொல்லப்பட்டான். இந்தப் பத்து மகன்களுடன் வேகை, புஷ்போதகை, கைகசி, ராகை ஆகிய நான்கு மகள்களும் இருந்தனர். இதில் கைகசிக்கும் விஷ்ரவசுக்கும் பிறந்தவர்களே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர். இவ்வகையில் பிரஹஸ்தன், அகம்பனன், தூம்ராக்ஷன் உள்ளிட்ட பத்து பேரும், ராக்ஷசேஷ்வரன் ராவணனுக்கு தாய்மாமன்கள் ஆவர். யுத்த காண்டம் 7ம் சர்க்கம் முதல் அடிக்குறிப்பையும் காணவும்.
மஹாபலவானும், லகுபராக்கிரமனுமான அவன் {அகம்பனன்}, ராவணனின் அந்த ஆணையை ஏற்றுக் கொண்ட பிறகு, தன் பலத்தை {படையை} ஆயத்தமாக்கினான்.(5) அப்போது, பீமாக்ஷர்களும், பீமதரிசனர்களும் {பயங்கரக் கண்களைக் கொண்டவர்களும், பயங்கரத் தோற்றமுடையவர்களுமான முக்கிய ராக்ஷசர்கள் பலாத்யக்ஷனின் {படைத்தலைவனின்} ஆணைக்கு இணங்க விரைந்து வந்தனர்.(6) பிறகு, மேகத்தைப் போன்றவனும், மேகவர்ணம் கொண்டவனும், மேக ஸ்வனம் போன்ற மஹாஸ்வனம் {பெருங்குரல்} கொண்டவனுமான அகம்பனன், தப்த காஞ்ச பூஷணங்களுடன் {புடம்போட்ட பொன்னாலான ஆபரணங்களுடன்} பெரும் ரதத்தில் ஏறிக் கொண்டு, கோரமான ராக்ஷசர்கள் சூழப் புறப்பட்டுச் சென்றான்.(7,8அ) அவர்களில் {ராக்ஷசர்களில்} ஆதித்யனைப் போன்ற தேஜஸைக் கொண்டவனாக இருந்ததால், பெரும்போரில் ஸுரர்களாலும் {தேவர்களாலும்} அகம்பனனை[2] அசைக்கமுடியவில்லை.(8ஆ,9அ)
[2] அகம்பனன் என்ற பெயர், "அசைக்கப்பட முடியாதவன்" என்ற பொருளைக் கொண்டது. ஆரண்ய காண்டம் 31ம் சர்க்கத்தில் ராவணனிடம் நடுங்குபவனாகவே அகம்பனன் காட்டப்படுகிறான். ஆனால் அந்த சர்க்கம் இடைச்செருகலாக இருக்கக்கூடும் என்ற ஐயமும் உண்டு.
யுத்தம் செய்யும் ஆவலுடன் அவன் விரைந்து சென்று கொண்டிருந்தபோது, அவனது ரதத்தை இழுத்துச் சென்ற ஹயங்கள் {குதிரைகள்} திடீரென தைனியமடைந்தன {சோர்வடைந்தன}.(9ஆ,10அ) யுத்தம் செய்வதில் உற்சாகம் கொண்டவனான அவனது சவ்ய நயனம் {இடது கண்} துடித்தது; முகவர்ணம் தன் வர்ணத்தை இழந்தது {முகம் ஒளி குன்றியது}; அவனது ஸ்வனம் {குரல்} தழுதழுத்தது.(10ஆ,11அ) காலத்தில் நல்ல தினமானது, கடுங்காற்று வீசும் துர்தினமானது {முன்பு தெளிவாக இருந்த பகலானது, புயற்காற்று வீசும் இருள் நிறைந்த தினமானது}. எங்கும் பறவைகளும், மிருகங்களும் குரூரமான, பயங்கரமான சத்தத்துடன் கூவின.(11ஆ,12அ)
சிங்கம் போன்ற தோள்களையும், புலி போன்ற விக்கிரமத்தையும் கொண்ட அவன் {அகம்பனன்}[3], அந்த உத்பாதங்களைக் குறித்துச் சிந்திக்காமல் {அலட்சியம் செய்து}, போர்க்களத்தை நோக்கி விரைந்தான்.(12ஆ,13அ) இராக்ஷசர்கள் சஹிதனாகச் சென்ற அந்த ராக்ஷசன் இவ்வாறு முன்னேறியபோது, சாகரத்தையே கலங்கடிப்பது போன்ற மஹத்தான நாதம் எழுந்தது.(13ஆ,14அ) போருக்கான ஆயத்தத்துடன் மரங்களையும், பாறைகளையும் ஆயுதமாகக் கொண்டிருந்த வானரர்களின் மஹா சம்மு {பெரும்படை}, இந்த சப்தத்தால் திகிலடைந்தது.(14ஆ,15அ) இராமராவணர்களின் அர்த்தத்திற்காகத் தங்கள் ஜீவனையே இழக்கத் தயாராக இருந்த அந்தக் கபிராக்ஷசர்களுக்கிடையில் மஹாரௌத்திரமான யுத்தம் நடந்தது.(15ஆ,16அ) பரஸ்பரம் கொல்ல விரும்பிய சர்வ ஹரயர்களும் {குரங்குகளும்}, ராக்ஷசர்களும், அதிபலவான்களாகவும், சூரர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் பர்வதங்களுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர்.(16ஆ,17அ) கோபத்துடனும், வலிமையுடனும் அவர்கள் செய்த பெரும் கர்ஜனையின் நாதம் போர்க்களத்தில் மஹத்தான சப்தமாகக் கேட்கப்பட்டது.(17ஆ,18அ)
[3] மலைப் பெருங்கழுதை ஐஞ்ஞாற்று இரட்டியான் மனத்தின் செல்லும்தலைத் தடந்தேரன் வில்லன் தாருகன் என்னும் தம்மைக்கொலைத் தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான்சிலைத் தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான்.- கம்ப ராமாயணம் 8563ம் பாடல், யுத்த காண்டம், பிரமாத்திரப் படலம்பொருள்: மலையை ஒத்தவையும், பெரியவையுமான ஆயிரம் கழுதைகளால் இழுக்கப் பெற்றவனும், மனத்தின் வேகத்துடன் செல்லும் தலைமையான தேரில் செல்பவனுமான அந்த வில்லேந்தியவன் {அகம்பனன்}, தாருகன் என்னும் பெயரைக் கொண்டவனும், கொலைத் தொழில் செய்பவனுமான அவுணனை, வில் வளைக்கும் குமரன் {முருகன்} கொல்ல, முற்காலப் போரில் உயிர் நீங்கி, பிற்காலத்தில் {அகம்பனன் என்னும்} ராக்ஷச வேடத்தைக் கொண்டான்.முற்காலத்தில் முருகனால் போரில் கொல்லப்பட்ட தாருகன் என்னும் அவுணனே இப்போது அகம்பனன் எனும் ராக்ஷசனாகத் தோன்றி நிற்கிறான் என்பது கம்பராமாயணத்தின் கருத்து. தாருகன் கதை கந்தபுராணத்தில் காணக்கிடைக்கும். புராணங்களில் காளியால் கொல்லப்பட்ட மற்றொரு தாருகனும் உண்டு.
ஹரிராக்ஷசர்களால் உண்டான அடர்த்தியான செந்நிறப் புழுதி, மிகப் பயங்கரமாகப் பத்துத் திசைகளையும் மறைத்தது.(18ஆ,19அ) பட்டால் மூடப்பட்டதுபோல வெளுத்த அந்தப் புழுதி போர்க்களத்தில் உள்ள பூதங்களை {உயிரினங்களை} மறைத்ததால் அன்யோன்யம் {அவர்கள் ஒருவரையொருவர்} பார்த்துக் கொள்ள முடியவில்லை.(19ஆ,20அ) அந்தப் புழுதியால், துவஜங்களையோ, பதாகைகளையோ, கேடயங்களையோ, துரகங்களையோ {குதிரைகளையோ}, ஆயுதங்களையோ, சியந்தனங்களையோ {தேர்களையோ பார்க்க} முடியவில்லை.(20ஆ,21அ) யுத்தத்தில் ஒருவரையொருவர் நோக்கி விரைந்து செல்லும் அவர்களின் மஹத்தான ஆரவார சப்தம் கேட்கப்பட்டாலும், ரூபங்கள் ஏதும் புலப்படவில்லை.(21ஆ,22அ) அப்போது இருளில் கோபமடைந்த ஹரயர்கள் ஹரிக்களையும், ராக்ஷசர்கள், ராக்ஷசர்களையும் தாக்கிக் கொண்டனர்.(22ஆ,23அ) பிறரையும், தங்கள் சொந்தங்களையும் கொன்ற அந்த வானரராக்ஷசர்கள், அப்போது மஹீயை {பூமியை} உதிரத்தில் நனைத்து, அந்தச் சேற்றால் பூசப்பட்டனர்.(23ஆ,24அ) சரீரங்களும், சவங்களும் நிறைந்த வசுந்தரை {பூமி} வெளிப்படும் வகையில் உதிர ஓடை பெருகி நனைந்ததும் புழுதி அடங்கியது.(24ஆ,25அ)
மரங்கள், சக்திகள் {ஈட்டிகள்}, பாறைகள், பராசங்கள் {கத்திகள்}, கதைகள், பரிகங்கள் {உழல்தடிகள்}, தோமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஹரயர்களும் {குரங்குகளும்}, ராக்ஷசர்களும், துரிதமாகவும், ஓஜஸ்ஸுடனும் அன்யோன்யம் போரிட்டனர்.(25ஆ,26அ) போரில் பீமகர்மங்களைச் செய்பவர்களும், பர்வதங்களுக்கு ஒப்பானவர்களுமான ஹரயர்கள் {குரங்குகள்}, பரிகங்களுக்கு ஒப்பான தங்கள் கைகளைக் கொண்டு ராக்ஷசர்களைத் தாக்கினர்.(26ஆ,27அ) அங்கே பெரும் குரோதம் கொண்ட ராக்ஷசர்களும், பரம பயங்கர பராசங்கள், தோமரங்கள், பாணங்கள் உள்ளிட்ட சஸ்திரங்களைக் கொண்டு கபிக்களைக் கொன்றனர்.(27ஆ,28அ)
இராக்ஷசர்கள் சம்முபதியும் {படைத்தலைவனும்}, பெரும் குரோதம் கொண்டவனும், பீமவிக்கிரமனுமான அகம்பனன், அங்கே சர்வ ராக்ஷசர்களுக்கும் உற்சாகமளித்தான்.(28ஆ,29அ) வீரியமிக்க ஹரயர்களும், சஸ்திரங்களைக் கொண்டு தாக்கும் ராக்ஷசர்களை, பெரும் மரங்கள், பெரும் பாறைகள் ஆகியவற்றைக் கொண்டு அழித்தனர்.(29ஆ,30அ)
அதே வேளையில், அங்கே வீர ஹரயர்களான குமுதன், நளன், மைந்தன் ஆகியோர் பரமகுரோதத்தையும், உத்தம வேகத்தையும் வெளிப்படுத்தினர்.(30ஆ,31அ) மஹாவீரியர்களான அந்த ஹரிபுங்கவர்கள் சம்முவின் {படையின்} முன்னிலையில் விருக்ஷங்களக் கொண்டு லீலையை {விளையாட்டைப்} போல் ராக்ஷசர்களிடம் மஹத்தான கதனத்தை {பேரழிவை} உண்டாக்கினர். அவர்கள் அனைவரும் நானாவித ஆயுதங்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் ராக்ஷசர்களை வதைத்தனர்.(31ஆ,32)
யுத்த காண்டம் சர்க்கம் – 055ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |