Hanuman wondered | Sundara-Kanda-Sarga-49 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனின் தேஜஸ்ஸையும், மகிமையையும் கண்டு ஆச்சரியமடையும் ஹனுமான்...
பிறகு, பீமவிக்கிரமனான அந்த ஹனுமான், அவனுடைய {இந்திரஜித்தின்} கர்மத்தால் வியப்படைந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன் ரக்ஷோதிபனை {ராவணனைக்} கண்டான்.(1)
ஒளிரும் மதிப்புமிக்க காஞ்சன மகுடத்துடன் கூடியவனாக, முத்து ஜாலங்களால் {முத்துச்சரங்களால்} மறைக்கப்பட்டவனாக பெரும்பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தவனும்,(2) வஜ்ரங்கள் {வைரங்கள்} பதிக்கப்பெற்ற சித்திர ஹைம {தங்க} ஆபரணங்களாலும், மனத்தால் செய்யப்பட்டது போல் தெரியும் மதிப்புமிக்க மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும்,(3) விலைமதிப்புமிக்க பட்டாடை அணிந்திருந்தவனும், விசித்திரமான பல்வேறு வடிவங்களில் வரிசையாக செஞ்சந்தனம்[1] பூசப்பட்டவனும்,(4) விசித்திரமான பத்து சிரங்களுடன் {தலைகளுடன்}, பயங்கரமாகத் தெரிந்தாலும், அழகாகக் காட்சியளித்த சிவந்த கண்களுடனும், பிரகாசமான கூரிய பற்களுடனும், துருத்திய உதடுகளுடனும், வீரத்துடனும், பெரும் உடல் உறுதியுடனும் கூடியவனும், நானாவித வியாளங்கள் {பாம்புகள்} நிறைந்ததும், சிகரங்களுடன் கூடியதுமான மந்தரத்தை {மந்தர மலையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தவனும்,(5,6) நீல அஞ்சனக்குவியல் {கரிய மைக்குவியலைப்} போல் தெரிந்தாலும், பூர்ணச்சந்திரனைப் போல ஒளிரும் முகத்துடனும், பால அர்க்கனால் {இளஞ்சூரியனால்} ஒளியூட்டப்பட்ட மேகத்தைப் போல, மார்பில் ஹாரத்துடனும் ஒளிர்ந்து கொண்டிருந்தவனும்,(7)
கேயூரங்கள் பூட்டப்பட்டவையும், உத்தம சந்தனத்தால் பூசப்பட்டவையும், ஒளிரும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ஐந்து சிரங்களைக் கொண்ட உரகங்களை {ஐந்து தலை பாம்புகளைப்} போன்ற கைகளைக் கொண்டவனும்,(8) ஸ்படிகமயமானதும், ரத்தினங்களால் நன்றாக அலங்கரிக்கப்பட்டதும், உத்தமமான விரிப்புகள் பரப்பப்பெற்றதும், சித்திரமானதும், மஹத்தானதுமான சிறந்த ஆசனத்தில் சுகமாக அமர்ந்திருந்தவனும்,(9) கையில் சாமரங்களுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட பிரமதைகளால் {இளம்பெண்களால்} அனைத்துப் பக்கங்களிலும் நெருக்கமாக சேவிக்கப்பட்டவனும்,(10) நான்கு சாகரங்களால் சூழப்பட்ட உலகத்தைப் போலத் தெரியும் வகையில், பலத்தில் கர்வம் கொண்டவர்களும், ராக்ஷசகுலத்தைச் சேர்ந்தவர்களும், ஆலோசனைகளின் நுட்பங்களை அறிந்தவர்களும், துர்த்தரன், பிரஹஸ்தன், மஹாபார்ஷ்வன், நிகும்பன் என்ற நான்கு ராக்ஷஸ மந்திரிகளை அருகில் கொண்டவனும்,(11,12) ஸுரர்களால், ஸுரேஷ்வரனை {தேவர்களால் இந்திரனைப்} போல, ஆலோசனையின் நுட்பங்களை அறிந்தவர்களான மந்திரிகளாலும், சுப புத்தி கொண்ட பிற ராக்ஷசர்களாலும் ஆசுவாசப்படுத்தப்பட்டவனும்,(13) மேருவின் சிகரத்திலுள்ள மழைக்கால மேகத்தைப் போல அதிதேஜஸ்ஸுடன் கூடியவனுமான ராக்ஷசபதியை {ராவணனை} ஹனுமான் கண்டான்.(14)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சைவர்கள் நெற்றியில் கிடைமட்டமாக இடும் மூன்று கோடுகள் {விபூதி பட்டை} இவை" என்றிருக்கிறது.
அவன் {ஹனுமான்}, பீம விக்கிரமம் கொண்ட ராக்ஷசர்களால் அதிகம் பீடிக்கப்பட்டாலும், பரம திகைப்புடன் ரக்ஷோதிபனை {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனைக்} கண்டான்.(15) ஒளிர்ந்து கொண்டிருக்கும் ராக்ஷசேஷ்வரனை {ராவணனைக்} கண்ட ஹனுமான், அவனது தேஜஸ்ஸால் திகைப்படைந்து, மனத்திற்குள் {பின்வருமாறு} சிந்தித்தான்:(16) "அஹோ என்ன ரூபம்? அஹோ என்ன தைரியம்? அஹோ என்ன பலம்? அஹோ என்ன ஒளி? அஹோ ராக்ஷச ராஜனான இவனுக்கு, அஹோ என்ன சர்வலக்ஷண பொருத்தம்? (17) பலவானான இந்த ராக்ஷசேஷ்வரன் மட்டும் அதர்மியாக இல்லாவிட்டால், சக்ரன் {இந்திரன்} உள்ளிட்ட ஸுரலோகத்தையும் ரக்ஷிப்பவனாக {தேவலோகத்தையும் பாதுகாப்பவனாக} இருந்திருப்பான்.(18) குரூரமானவையும், கொடுமையானவையும், உலகத்தால் இகழப்படுபவையுமான இவனது கர்மங்களால் அமரர், தானவர் உள்ளிட்ட சர்வலோகத்தாரும் இவனிடம் பீதியடைந்திருக்கின்றனர். இவன் குரோதமடைந்தால் ஜகத்தையே ஏகார்ணவமாக {மொத்த உலகையே ஒரே கடல்மயமாக} மாற்றவல்லவன் ஆவான்[2]" {என்று நினைத்தான் ஹனுமான்}[3].(19,20அ)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரளய கால முடிவில் இதுவே நேரும் {மொத்த உலகமும் ஒரே கடல்மயமாக மாறும்}" என்றிருக்கிறது.
[3] கொல்லலாம் வலத்தானும் அல்லன் கொற்றமும்வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள்அல்லெலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலைவெல்லலாம் இராமனால் பிறரும் வெல்வரோ- கம்பராமாயணம் 5865ம் பாடல், பிணி வீட்டுப் படலம்பொருள்: {இவன்} கொல்லப்படும் வல்லமை கொண்டவன் அல்லன்; {இவனுடைய} படைப்பெருக்கும் வெல்லத்தக்க தரமுடையதல்ல. முற்காலம் முதல் திரண்ட இருள் முழுவதும் கூடிய {கரிய} நிறம் கொண்டவனான இவனுடைய ஆற்றலை இராமனால்தான் வெல்ல முடியும். வேறு எவரும் {இவனை} வெல்ல முடியுமோ?
மதிமானான ஹரி {மதிநுட்பம் வாய்ந்த குரங்கான ஹனுமான்}, அமிதௌஜசனான ராக்ஷசராஜனின் {அளவிலா ஆற்றலைக் கொண்டவனும், ராக்ஷசர்களின் மன்னனுமான ராவணனின்} பிரபாவத்தைக் கண்டு, இவ்வகையிலும், பலவகைகளிலும் சிந்தனை செய்தான்.(20ஆ,இ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 49ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |