Story told by Hanuman | Yuddha-Kanda-Sarga-126 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் நீண்ட பயணத்தையும், அவன் சந்தித்தவர்களையும் குறித்து விளக்கிச் சொன்ன ஹனுமான்...
{பரதன்}, "பல வருஷங்களாக மஹத்தான வனத்திற்குள் சென்றிருக்கும் என் நாதரின் பிரீதிகரமான கீர்த்தனத்தை {இனிமையான துதியை} இப்போது நான் கேட்கிறேன்.(1) "ஒரு நரன் ஜீவந்தனாக இருந்தால் {ஒரு மனிதன் பிழைத்திருந்னானால்}, நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஆனந்தத்தை அடைவான்" என்ற இந்த லௌகிகக் கதை {உலகமொழி} எனக்கு கல்யாணமாக {மங்கலமாக} ஒலிக்கிறது {உண்மையாகத் தெரிகிறது}.(2) இராகவருக்கும், கபிக்களுக்கும் {குரங்குகளுக்கும்} இடையிலான சந்திப்பு எந்த தேசத்தில், ஏன் ஏற்பட்டது? கேட்கும் எனக்கு உள்ளபடி தெரிவிப்பாயாக[1]" {என்றான் பரதன்}.(3)
[1] சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்றஅருக்கன் மாணாக்கனை ஐயன் அன்பினால்பொருக்கென வனத்திடைப் புகுந்த தன்மையைஉருக்கி என் உணர்வுற உரைத்தியால் என்றான்- கம்பராமாயணம் 10209ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: சிறிதாக்கிக் கொண்ட வடிவுடையவனாக வணங்கி நின்ற சூரியனின் மாணவனை {ஹனுமானை}, ஐயன் {பரதன்} அன்பினால், "விரைவாக வனத்தில் நடந்த நிகழ்ச்சிகளை என் உணர்வு உருகும்படி உரைத்திடுவாயாக" என்றான்.
{இவ்வாறு} ராஜாபுத்ரன் கேட்டபோது, அவன் {ஹனுமான் குசப்புல்லாலான} மெத்தையில் அமர்த்தப்பட்டான். பிறகு அவன், வனத்தில் நடந்த ராமனின் சர்வ சரிதத்தையும் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(4) "எப்படி உம் மாதாவுக்கு {கைகேயிக்கு} தத்தம் செய்யப்பட்ட வரத்தால் ராமர் நாடுகடத்தப்பட்டாரோ, எப்படி தசரத ராஜா புத்திர சோகத்தால் மரித்தாரோ,{5} பிரபோ, எப்படி நீர் தூதர்களால் ராஜகிருஹத்திலிருந்து துரிதமாக அழைத்துவரப்பட்டீரோ, எப்படி அயோத்தியில் பிரவேசித்த உம்மால், ராஜ்யம் விரும்பப்படவில்லையோ,{6} எப்படி சதா தர்மத்தையே ஆசரிக்கும் நீர், சித்திரகூட கிரிக்குச் சென்று அமித்ரகர்சனரான பிராதாவை {பகைவரை அழிப்பவரான அண்ணன் ராமரை} ராஜ்ஜியத்திற்கு அழைத்தீரோ,{7} எப்படி {தசரத} ராஜரின் சொற்களைப் பின்பற்றி நீர் ராஜ்ஜியத்தைத் துறந்தீரோ, எப்படி ஆரியரின் {அண்ணன் ராமரின்} பாதுகைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தீரோ,{8} மஹாபாஹோ, அப்படியே {உள்ளபடியே} இவை யாவும் உம்மால் அறியப்பட்டதே. நீர் திரும்பி வந்த பிறகு என்ன நடந்தது என்ற விருத்தாந்தத்தை நான் உமக்குச் சொல்கிறேன்.(5-9)
நீர் சென்ற பிறகு, அந்த வனம் கலவரமுற்ற மிருகதுவிஜங்களுடன் {விலங்குகளுடனும், பறவைகளுடனும்} கூடியதாக பெரிதும் பரிதவிப்பதைப் போலத் தெரிந்தது.(10) அப்போது அவர் {ராமர்}, ஹஸ்தியால் {யானையால்} நசுக்கப்பட்டதும், கோரமான சிம்ம, வியாகர {புலி} மிருக குலங்களுடன் {உள்ளிட்ட விலங்குக் கூட்டங்களுடன்} கூடியதும், ஜனங்களற்றதுமான அந்த மஹத்தான தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்தார்.(11) அடர்ந்த வனத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே அவர்களுக்கு முன்னால் மஹாநாதத்துடன் முழங்கும் விராதன் தோன்றினான்.(12) அவர்கள், கைகளை உயர்த்திக் கொண்டு, குஞ்சரத்தை {யானையைப்} போல மஹாநாதம் செய்த அவனது கால்களைப் பிடித்துத் தலைகீழாகக் குழியில் வீசினர் {புதைத்தனர்}.(13) அந்த செயற்கரிய கர்மத்தைச் செய்த பிராதாக்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும், சாயங்காலத்தில் சரபங்கரின் ரம்மியமான ஆசிரமத்திற்குச் சென்றனர்.(14) சரபங்கர் திவத்தை {சொர்க்கத்தை} அடைந்ததும், சத்தியப்பராக்கிரமரான ராமர், சர்வ முனிவர்களையும் வணங்கிவிட்டு, ஜனஸ்தானத்தை அடைந்தார்.(15)
பிறகு, சூர்ப்பணகை ராமரின் பக்கத்தில் வந்தாள். பின்னர், ராமரின் ஆணையிட்ட உடனேயே லக்ஷ்மணர் எழுந்தார்.{16} கட்கத்தை {கத்தியை} எடுத்துக் கொண்ட அந்த மஹாபலவான் {லக்ஷ்மணர்} அவளது {சூர்ப்பணகையின்} காதுகளையும், மூக்கையும் வெட்டினார்.(16,17அ) அங்கே {ஜனஸ்தானத்தில்} வசித்த மஹாத்மாவான ராகவரால் ஜனஸ்தானவாசிகள் பதினாலாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.(17ஆ,இ) இரணமூர்த்தத்தில் ஒன்று கூடி வந்த ராக்ஷசர்கள், ஏகனான ராமரால் பகலின் நாலில் ஒரு பாகத்தில் மிச்சமில்லாதவர்களாகச் செய்யப்பட்டனர் {முற்றாக அழிக்கப்பட்டனர்}.(18) மஹாபலவான்களும், மஹாவீரியர்களும், தபஸுக்கு விக்னகாரிகளுமான {தடை ஏற்படுத்துபவர்களுமான} தண்டகாரண்யவாசிகள் ராகவரால் போரில் கொல்லப்பட்டனர்.(19,20அ) இரணத்தில் ராக்ஷசர்கள் ஒடுக்கப்பட்டு, கரன் கொல்லப்படுவதற்கு முன்பே, தூஷணனும், அதற்குப் பிறகு திரிசிரனும் கொல்லப்பட்டனர்.(20ஆ,21அ) பிறகு அவர்களால் துன்புற்ற பாலை {மூடப்பெண் / சிறுமி} ராவணனை அணுகினாள்.{21ஆ}
மாரீசன் என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டவனும், ராவணனைப் பின்தொடர்பவனுமான கோர ராக்ஷசன், ரத்னமயமான மிருகமாகி {மானாகி} வைதேஹியை லோபங்கொள்ளச் செய்தான் {சீதைக்கு ஆசை காட்டினான்}.(21ஆ,22அ,ஆ) அதைக் கண்ட சீதை, "இது {இந்த மான்} பிடிக்கப்படட்டும். நமது ஆசிரமம் மனோஹரமாகவும், காந்தமாகவும் இருக்கும் {மனத்தைக் கொள்ளை கொள்வதாக ஈர்க்கும்}" என்று ராமரிடம் கூறினாள்.(23) அப்போது ராமர், தனுஷ்பாணியாக {வில்லும் கையுமாக} அந்த மிருகத்தை விரட்டிச் சென்றார். ஓடிக் கொண்டிருந்த அதை {அந்த மானை}, வளைந்த கணுவுள்ள சரத்தால் அவர் தாக்கினார்.(24)
சௌம்யரே {மென்மையானவரே}, ராகவர் மிருகத்தை விரட்டிச் சென்று, லக்ஷ்மணனும் வெளியேறிய பிறகு தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளுடைய ராவணன்} ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(25) அந்த ராக்ஷசன், கிரகத்தால் {செவ்வாயால் பற்றப்படும்} ரோஹிணியைப் போல, பலவந்தமாக சீதையைக் கைப்பற்றினான். மீட்க விரும்பிய கிருத்ரர் {கழுகான} ஜடாயுவைக் கொன்றான்.{26} பிறகு உடனே சீதையை எடுத்துக் கொண்டு அந்த ராக்ஷசன் விரைந்து சென்றான்.(26,27அ) அப்போது அற்புதத் தோற்றம் கொண்டவர்களும், பர்வதமூர்த்தத்தில் {மலை உச்சியில்} நின்றிருந்தவர்களும்,{27ஆ} பர்வதத்திற்கு ஒப்பானவர்களுமான வானரர்கள், சீதையை எடுத்துக் கொண்டு செல்லும் ராக்ஷசாதிபன் ராவணனின் ஆச்சரியகரமான தோற்றத்தைக் கண்டனர்.(27ஆ,28அ,ஆ) பிறகு, சீக்கிரமாகச் செல்பவனும், மஹாபலவானுமான அவன், மனோவேகத்தில் செல்லவல்ல அந்தப் புஷ்பகவிமானத்தில் வைதேஹியுடன் ஏறினான்.{29} பிறகு லோகராவணனான {உலகத்தைக் கதறச் செய்பவனான} ராவணன், லங்கைக்குள் பிரவேசித்தான்.(29,30அ) அந்த ராவணன், அந்த மைதிலியை ஸுவர்ணத்தாலானதும், சுபமானதுமான மஹத்தான வேஷ்மத்தில் {மாளிகையில்} பிரவேசிக்கச் செய்து, நல்வாக்கியங்களால் அவளை சாந்தப்படுத்த முயற்சித்தான்.(30ஆ,31அ) அவனது பேச்சைப் புல்லாக மதித்த வைதேஹி, அந்த நைர்ருதபுங்கவனைக் குறித்துச் சிந்திக்காமல் அசோக வனிகைக்குச் சென்றாள்.(31ஆ,32அ)
பிறகு, ராமர் வனத்தில் மிருகத்தை {மானைக்} கொன்றுவிட்டுத் திரும்பினார்.{32ஆ} காகுத்ஸ்தர் {ராமர்} திரும்பி வந்தபோது, கிருத்ரரை {கழுகாரான ஜடாயுவைக்} கண்டு திகிலடைந்தார். கொல்லப்பட்டவரும், பிதாவின் பிரியத்திற்குரியவருமான கிருத்ரரை {தந்தை தசரதரின் நண்பரும், கழுகுமான ஜடாயுவை} எரித்தார்.(32ஆ,33அ,ஆ) இராமர், லக்ஷ்மணர் சகிதராக வைதேஹியைத் தேடிக் கொண்டு, கோதாவரியின் புஷ்பித்த வன தேசங்களில் திரிந்தார்.(34) அவர்கள் மஹாரண்யத்தில் சென்று கொண்டிருந்தபோது, கபந்தன் என்ற நாமத்தை {பெயரைக்} கொண்ட ராக்ஷசனை எதிர்கொண்டனர் {கொன்றனர்}. பிறகு, கபந்தனின் வசனத்திற்கேற்ப சத்தியப் பராக்கிரமரான ராமர்,{35} ரிச்யமூககிரிக்குச் சென்று சுக்ரீவரைச் சந்தித்தார்.(35,36அ) அவ்விருவரும் சந்திப்பதற்கு முன்பே ஹிருதயங்களில் அன்பு கொண்டிருந்தனர்.{36ஆ} பூர்வத்தில் சுக்ரீவர், குரோதங்கொண்ட பிராதா {உடன்பிறந்த} வாலியால் விரட்டப்பட்டார். அவர்கள் {ராமரும், சுக்ரீவரும்} உரையாடியதிலிருந்து ஒருவருக்கொருவர் ஆழ்ந்த பற்று உண்டானது.(36ஆ,37அ,ஆ) இராமருடைய கைகளின் வீரியத்தால், மஹாபலம்வாய்ந்தவரும், பேருடல் கொண்டவருமான வாலி சமரில் கொல்லப்பட்டு, ஸ்வராஜ்யம் {சொந்த ராஜ்ஜியம் சுக்ரீவருக்கு / எங்களுக்கு} திரும்பக் கிடைத்தது.(38) இராஜ்ஜியத்தில் ஸ்தாபிக்கப்பட்டதும், சர்வ வானரர்கள் சகிதரான சுக்ரீவர், ராஜபுத்திரியை {சீதையைக்} கண்டடைவதற்கான காரியத்தில் ராமருக்கு பிரதிஜ்ஞை செய்து கொடுத்தார் {வாக்களித்தார்}.(39)
வானரேந்திரரும், மஹாத்மாவுமான சுக்ரீவரின் ஆணைக்கேற்ப, பத்துக் கோடி பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்} சர்வ திசைகளிலும் அனுப்பப்பட்டனர்.(40) பர்வதசத்தமமான விந்தியத்தில்[2] தொலைந்து, பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்ட எங்களுக்கு மஹாகாலம் கடந்து சென்றது.(41) வீரியவானும், கிருத்ரராஜாவின் பிராதாவுமான {கழுகுராஜர் ஜடாயுவின் அண்ணனுமான} சம்பாதி என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டவர், ராவண மந்திரத்தில் உள்ள சீதையின் வசிப்பிடத்தைக் குறித்து எங்களுக்குக் கூறினார்.(42) அத்தகைய நான், துக்கத்தில் மூழ்கியிருந்த ஞாதிகளின் {உறவினர்களின்} அந்த துக்கத்தை அகற்றுவதற்காக, ஆத்மவீரியத்தை நாடி, நூறு யோஜனைகளைத் தாண்டிச் சென்றேன்.(43)
[2] இந்த சர்க்கத்தின் 34ம் சுலோகத்தில் கோதாவரி ஆறு குறிப்பிடப்படுகிறது. அதன்பிறகு இந்த 41ம் சுலோகத்தில் விந்தியம் குறிப்பிடப்படுகிறது. கோதாவரி ஆறு மஹாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் உற்பத்தியாகி ஆந்திராவின் வங்கக்கடலில் கலக்கிறது. அப்படியெனில் கோதாவரிக்கும் தெற்கில் ரிச்யமூக மலை இருக்கிறது. அதாவது கர்னாடகத்தின் துங்கபத்ரை ஆற்றங்கரையில் ரிச்யமூக மலை இருக்கிறது. அதற்கும் தெற்கில் இந்த விந்திய மலை இருந்திருக்க வேண்டும். இன்று நாமறியும் விந்தியம், கோதாவரி ஆற்றுக்கும், நர்மதை ஆற்றுக்கும் வடக்கே மத்தியப்ரதேசத்தில் இருக்கிறது. கிஷ்கிந்தா காண்டம் 53ம் சர்க்கத்தில் உள்ள முதல் அடிக்குறிப்பும், 3ம் அடிக்குறிப்பும், 56ம் சர்க்கத்தின் முதல் அடிக்குறிப்பும், 58ம் சர்க்கத்தின் 3ம் அடிக்குறிப்பும் இங்கே மீண்டும் காணத்தக்கது. இராமாயணக் கூற்றின்படி, விந்தியத்தின் அருகில் தென்கடல் இருக்கிறது. அங்கே சம்பாதி இருக்கிறான். சீதை லங்கையில் இருப்பது அவனுக்குத் தெரிகிறது. அதன்பிறகு ஹனுமான் நூறு யோஜனைகள் நீளமுள்ள கடலைத் தாண்டி அன்றைய லங்கைக்குச் செல்கிறான் என்பதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.
அங்கே அசோக வனிகையில், அழுக்கடைந்த பட்டாடை அணிந்தவளும், புழுதி படிந்தவளும், திட விரதத்துடன் ஆனந்தமற்று இருந்தவளுமான ஒருத்தியைக் கண்டேன்.(44) அநிந்திதையான அவளைச் சந்தித்து, அனைத்தையும் கேட்ட பிறகு, என்னால் ராமரின் அங்குலி {மோதிரம்} அடையாளமாக அவளிடம் கொடுக்கப்பட்டது.(45) நான் {சீதையின்} மணியை அடையாளமாகப் பெற்றுக் கொண்டு, அர்த்தம் நிறைவேறியவனாகத் திரும்பி வந்தேன். திரும்பி வந்த நான், சிரமமின்றி கர்மங்களைச் செய்யக் கூடிய ராமரிடம்,{46} மதிப்புமிக்க அடையாளமான அந்த மஹாமணியைக் கொடுத்தேன்.(46,47அ) இராமரும், அந்த மைதிலியைக் குறித்துக் கேட்டதும், ஜீவிதாந்தத்தை அடையும் நிலையில் அம்ருதம் பருகிய ஆதுரனை {உயிர் போகும் நிலையில் அமுதம் பருகிய நோயாளியைப்} போல, ஜீவிதத்தில் {உயிர் தரிப்பதில்} ஆசை கொண்டார்.(47ஆ,48அ) உலகத்தின் அந்தத்தில், சர்வ லோகங்களையும் அழிக்க விரும்பும் விபாவசுவை {அக்னியைப்} போல, லங்கையை அழிப்பதில் மனத்தைச் செலுத்தி உத்யோகத்தை {அதற்கான தொழிலை / முயற்சியை} மேற்கொண்டார்.(48ஆ,49அ)
சமுத்திரத்தை அடைந்தவர் {ராமர்}, நளனைக் கொண்டு சேதுவைக் கட்டுவித்த பிறகு, அந்த சேதுவின் மூலம் கபிவீரர்களின் வாஹினி கடந்து சென்றது {நளன் கட்டிய பாலத்தின் மூலம் குரங்குப் படை வீரர்கள் கடலைக் கடந்து சென்றனர்} .(49ஆ,50அ) நீலன் பிரஹஸ்தனைக் கொன்றான். ராகவர் கும்பகர்ணனைக் கொன்றார். இலக்ஷ்மணர் ராவணனின் மகனையும், ராமர் ஸ்வயமாக ராவணனையும் {கொன்றனர்}.(50ஆ,51அ) அவர், சக்ரன் {இந்திரன்}, யமன், வருணன் ஆகியோரைச் சந்தித்தார்.{51ஆ} பரந்தபரான அந்தக் காகுத்ஸ்தர் {பகைவரை அழிக்கும் ராமர்}, மஹேஸ்வர ஸ்வயம்பூக்கள் {சிவன், பிரம்மன் ஆகிய} இருவரிடமும், அதே போல, தசரதரிடமும் வரங்களைப் பெற்றார்.{52} ஸுரரிஷிகளிடமும் வரங்களைப் பெற்றார்.(51ஆ-53அ) வரங்கள் தத்தம் பெற்ற அவரும், பிரீதியடைந்தவராக வானரர்களுடன் புஷ்பக விமானத்தில் கிஷ்கிந்தையை அடைந்தார்.(53ஆ,54அ) மீண்டும் கங்கையை அடைந்தவர், முனி சன்னிதானத்தில் {முனிவர் பரத்வாஜரின் முன்னிலையில் அவரது ஆசிரமத்தில்} வசித்திருக்கிறார். நாளை அவிக்னமான புஷ்ய யோகத்தில் {பூசம் நக்ஷத்திரத்தில் சந்திரன் கூடி தடைகளை விலக்கும்போது} நீர் ராமரை தரிசிப்பதே தகும்" {என்றான் ஹனுமான்}.(54ஆ,55அ)
அப்போது பரதன், ஹனூமதனின் மதுரவாக்கியத்தைக் கேட்டு, மகிழ்ச்சியடைந்து, கைகளைக் கூப்பி, "என் நீண்ட கால மனோரதம் பூர்ணமடைந்தது {ஆசை நிறைவேறியது}" என்று, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் இந்தச் சொற்களைச் சொன்னான்.(55ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 126ல் உள்ள சுலோகங்கள்: 55
| Previous | | Sanskrit | | English | | Next |
