Friday, 31 October 2025

பரதனின் ஏற்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் – 127 (62)

The arrangements of Bharata | Yuddha-Kanda-Sarga-127 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை வரவேற்பதற்கு அயோத்தியில் நடந்த ஏற்பாடுகள்; இராமனை வரவேற்கச் சென்ற பரதன்; புஷ்பக விமானத்தை குபேரனிடம் திருப்பி அனுப்பிய ராமன்...

Bharata carries Rama's sandals in his head

சத்தியவிக்ரமனும், பகை வீரரை அழிப்பவனுமான பரதன், அதைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்து, மகிழ்சியுடன் இருந்த சத்ருக்னனைப் பார்த்து {பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "நகரத்தின் சைத்யங்களிலுள்ள சர்வ தைவதங்களும் {கோவில்களில் உள்ள அனைத்து தெய்வங்களும்} சுகந்த மாலைகளாலும், வாத்தியங்களாலும் சுசயர்களான நரர்களால் {தூய மனிதர்களால்} அர்ச்சிக்கப்படட்டும்.(2) ஸ்துதி புராணஜ்ஞர்கள் {துதிகளையும், புராணங்களையும் அறிந்தவர்கள்}, சூதர்கள், அதேபோல சர்வ வைதாளிகர்கள் {அரசரைப் புகழ்ந்து பாடுபவர்கள்}, சர்வ வாதித்ரகுசலர்களின் சங்கங்கள் {வாத்தியங்களில் திறன்பெற்றவர்களின் கூட்டங்கள்}, கணிகையர் {விலைமாதர்கள்},{3} ராஜதாரங்கள் {அரசரின் மனைவியர்}, அதே போல அமைச்சர்கள், சைனியத்தார், சேவாங்கநாகணத்தார் {சேவைகளைச் செய்பவர்களின் கூட்டத்தார்}, ராஜர்கள் {க்ஷத்ரியர்கள்}, பிராமணர்கள், சிறந்த தலைவர்கள் {வைசியர்கள்},{4} அதேபோல கணங்கள் {பின்தொடர்பவர்கள்} ஆகியோர் சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான ராமரின் முகத்தைக் காணச் செல்லட்டும்" {என்றான் பரதன்}.(3-5அ) 

பகை வீரர்களை அழிப்பவனான சத்ருக்னன், பரதனின் சொற்களைக் கேட்டு ஆயிரக்கணக்கான கூலிக்காரர்களை பாகங்களாக வகுத்து,(5ஆ,6அ) "இந்த நந்திகிராமத்திலிருந்து எல்லை {அயோத்தி வரையுள்ள} பள்ளங்களை நிரப்பிச் சீராக்கி, சமமில்லாத, சீரற்ற ஸ்தானங்களை அகற்றி சமமாக்குவீராக.(6ஆ,7அ) வேறு சிலர், பிருத்வியில் எங்கும் பனிபோன்ற குளிர்ந்த நீரைத் தெளித்து, அதன் மேல் எங்கும் பொரிகளையும், புஷ்பங்களையும் தூவுவாராக.(7ஆ,8அ) சூரிய உதயத்திற்குள், உத்தம புரத்தின் {அயோத்தியின் ராஜ} வீதிகளில் உள்ள வேஷ்மங்களை {வீடுகளை} உயர்த்தப்பட்ட பதாகைகளால் அலங்கரிப்பீராக.(8ஆ,9அ) நூறு நரர்கள் {மனிதர்கள்} சுகந்தமான புஷ்ப மாலைகளாலும், புஷ்பங்களாலும், மணங்கமழும் பஞ்சவர்ணப் பொடிகளாலான கோலங்களாலும் நெருக்கமாக ராஜ மார்க்கத்தை அலங்கரிப்பாராக" {என்றான் சத்ருக்னன்}.(9ஆ,10அ)

அப்போது, சத்ருக்னனின் சாசனத்தைக் கேட்டவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.{10ஆ} திருஷ்டி, ஜயந்தன், விஜயன், சித்தார்த்தன், அர்த்தசாதகன், அசோகன், மந்திரபாலன், சுமந்திரன் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர்.(10ஆ,11அ,ஆ) துவஜங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மதங்கொண்ட ஆயிரம் நாகங்களில் {யானைகளில் சிலரும்}, வேறு சிலர் ஹேமகக்ஷங்களுடன் {பொற்பட்டைகளுடன்} கூடிய கஜங்களிலும், கரேணுக்களிலும், நல்ல மஹாரதர்கள் ரதங்களிலும் துரிதமாகப் புறப்பட்டுச் சென்றனர்.(12,13அ) சக்தி, ரிஷ்டி, பாசம் ஆகியவற்றைக் கையில் கொண்டவர்களாலும்,  பதாகைகளை ஏந்திய சத்வ ஜனங்களாலும் {நன்மக்களாலும்},{13ஆ} துரகங்களில் {குதிரைகளில்} இருந்த ஆயிரக்கணக்கான முக்கியர்களாலும், முக்கியர்களின் தரத்தைக் கொண்டவர்களாலும் சூழப்பட்டவர்களாக ஆயிரக்கணக்கான வீரர்கள், காலாட்படையினராகச் சென்றனர்.(13ஆ,14அ,ஆ)

அப்போது சர்வ தசரத ஸ்திரீகளும் யானங்களில் {பல்லக்குகளில்} அமர்ந்து, கௌசல்யை, ஸுமித்ரை ஆகியோரை முன்னிட்டுக் கொண்டு புறப்பட்டனர்.{15} கைகேயி சகிதர்களான அவர்கள் அனைவரும் நந்திகிராமத்தை அடைந்தனர்.(15,16அ)

துவிஜாதி முக்கியர்களாலும் {பிராமணோத்தமர்களாலும்}, சிறந்த தலைவர்களாலும் {வியாபாரிகளுள்ளிட்டவர்களாலும்}, மற்றும் பிறராலும்,{16ஆ} மாலைகளையும், மோதகங்களையும் கையில் வைத்துக் கொண்டிருந்த மந்திரிகளாலும் சூழப்பட்டவனாக, சங்கு, பேரிகை ஆகியவற்றின் நாதத்துடனும், வந்திகளின் துதிகளுடனும்,{17} ஆரியனின் {அண்ணன் ராமனின்} பாதுகைகளை சிரசின் {தலையின்} மீது எடுத்துக் கொண்டவனும், தர்மகோவிதனும், வெண்மாலைகளால் விளங்கும் வெண்குடையையும்,{18} இரு வெண்சாமரங்களையும் கொண்டவனும், ராஜர்களுக்குத் தகுந்தவனும், ஹேமத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், மரவுரியும், கருப்பு மான் தோலும் உடுத்தியவனும், உபவாசத்தால் உடல் இளைத்தவனுமான அவன் {பரதன்},{19}, பிராதாவின் {அண்ணனின்} வரவைக் கேட்டதுமுதல், மன மகிழ்ச்சியுடன் கூடியவனாக, மந்திரிகளுடன் சேர்ந்து ராமனை வரவேற்கச் சென்றான்.(16ஆ-20அ,ஆ) அஷ்வங்களின் குளம்படி சப்தத்தாலும், ரதநேமிகளின் {தேர்ச்சக்கரங்களின்} ஸ்வனங்களாலும், சங்கு, துந்துபி கோஷத்தாலும் மேதினி நடுங்கினாள்.(21) 

அப்போது நகரம் அனைத்தும் நந்திகிராமத்திற்கே வந்து சேர்ந்தது. பரதன் பவனாத்மஜனை நோக்கி {வாயுமைந்தன் ஹனுமானைப் பார்த்துப் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(22) கபிகளுக்குரிய {குரங்குகளுக்குரிய} சஞ்சல சித்தம் கொள்ளப்படவில்லை என்று நான் நம்புகிறேன். பரந்தபரும், காகுத்ஸ்தரும், ஆரியருமான ராமர் காணப்படவில்லை" {என்றான் பரதன்.(23)

இந்த வசனத்தைக் கேட்ட ஹனுமான், சத்தியவிக்ரமனான பரதனிடம், சூழ்நிலையை அறிந்து அர்த்தம் நிறைந்த வகையில் {பின்வருமாறு} கூறினான்:(24) "பரத்வாஜரின் அருளால் விருக்ஷங்கள் {மரங்கள்}, சதா பழங்களையும், மலர்களையும், மதுரச் சாற்றையும் பெருக்குபவையாகவும், மதங்கொண்ட வண்டுகளால் நாதம் செய்யப்படுபவையுமாக இருக்கின்றன.{25} பரந்தபரே {பகைவரை அழிப்பவரே}, சர்வ குணங்களுடன் கூடிய அந்த சைனியத்தின் ஆதித்யத்திற்குரிய {விருந்தோம்பலுக்குரிய} இந்த வரம் வாசவனால் {இந்திரனால்} தத்தம் செய்யப்பட்டது.{26} பெரும் மகிழ்ச்சியிலிருக்கும் வனௌகசர்களின் {வனத்தில் வசிப்பவர்களின்} பயங்கர ஸ்வனம் கேட்கப்படுகிறது. வானர சேனை கோமதீ நதியைக் கடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.(25-27) சாலவனம் புழுதியடையத் தொடங்குவதைப் பார்ப்பீராக. பிலவங்கமர்களால் ரம்மியமான சாலவனம் கலங்கடிக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.(28) தூரத்தில் இவ்வாறு தெளிவாகவும், சந்திரனுக்கு ஒப்பானதாகவும் தெரியும் திவ்யமான புஷ்பக விமானம், பிரம்மனின் மனத்தால் நிர்மிதம் செய்யப்பட்டது.(29) பந்துக்களுடன் கூடிய ராவணனைக் கொன்று, மஹாத்மாவால் {ராமரால்} அடையப்பட்டதும், இளம் ஆதித்யனினுக்கு {சூரியனுக்கு} ஒப்பானதும், ராமரின் வாகனமுமான இந்தப் புஷ்பக விமானம்,{30} தனதனின் {குபேரனின்} அருளால் திவ்யமானதாகவும், மனோவேகம் கொண்டதாகவும் இருக்கிறது.(30,31அ)  இதில்தான் வீரப் பிராதாக்களான ராகவர்கள் இருவரும் {உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, வைதேஹியும், மஹாதேஜஸ்வியான சுக்ரீவரும், ராக்ஷசர் விபீஷணரும் இருக்கின்றனர்" {என்றான் ஹனுமான்}.(31ஆ,32அ)

அப்போது, "இதோ ராமர்" என்று ஸ்திரீ, பால விருத்தர்களும் {பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோர்} மகிழ்ச்சியில் மூழ்கிச் சொன்ன ஸ்வனம் திவத்தை {சுவர்க்கத்தை} முட்டியது.(32ஆ,33அ) இரதகுஞ்சரவாஜிகளில் {தேர், யானை, குதிரைகளில்} இருந்து மஹீக்கு இறங்கிய அந்த நரர்கள், அம்பரத்தில் சோமனை {வானத்தில் சந்திரனைப்} போல, விமானத்தில் இருந்த அவரை {ராமரைக்} கண்டனர்.(33ஆ,34அ) மகிழ்ச்சியுடன் கைகளைக் கூப்பி வணங்கிய பரதன், ராகவனின் முகத்தை நோக்கி, எது தகுமோ அத்தகைய ஸ்வாகதம் {நல்வரவைச்} சொல்லி ராமனைப் பூஜித்தான்.(34ஆ,35அ) நீள்விழிகளைக் கொண்ட பரதாக்ரஜன் {ராமன்}, பிரம்மனின் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்ட விமானத்தில், மற்றொரு வஜ்ரபாணியை {இந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(35ஆ,36அ)

அப்போது பரதன்,  மேருவில் பாஸ்கரன் {வணங்கப்படுவது} எப்படியோ, அப்படியே {புஷ்பக} விமானத்தின் உச்சியில் இருந்த ராமனைக் கைகளைக் கூப்பி வணங்கினான்.(36ஆ,37அ) பிறகு, உத்தமமானதும், ஹம்சத்துடன் {அன்னப்பறவையுன்} கூடியதும், மஹாவேகம் கொண்டதும் அந்த விமானம், ராமனின் அனுமதியின் பேரில் மஹீதலத்தில் இறங்கியது.(37ஆ,38அ) அந்த விமானத்தில் ஏற்றிக் கொள்ளப்பட்டவனும், சத்யவிக்ரமனுமான பரதன், ராமனை நெருங்கி மீண்டும் மகிழ்ச்சியுடன் வணங்கினான்.(38ஆ,39அ)  காகுத்ஸ்தன், நீண்ட காலத்திற்குப் பிறகு தன் பார்வை வரம்புக்குள் வந்த அந்த பரதனைத் தூக்கி, அங்கத்தில் {மடியில்} ஏற்றி மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டான்.(39ஆ,40அ)

அப்போது பரந்தபனான {பகைவரை அழிப்பவனான} பரதன், பிரீதியுடன், லக்ஷ்மணனையும், வைதேஹியையும் அணுகிய பிறகு தன் பெயரை அறிவித்து வணங்கினான்.(40ஆ,41அ) பிறகு அந்த கேகயீ புத்ரன் {பரதன்}, சுக்ரீவனையும், ஜாம்பவந்தனையும், அங்கதனையும், மைந்தனையும், துவிவிதனையும், நீலனையும், ரிஷபனையும் தழுவிக் கொண்டான்.(41ஆ,42அ) சுற்றிலும் இருந்த சுஷேணன், நளன், கவாக்ஷன், கந்தமாதனன், சரபன், பனசன் ஆகியோரையும் தழுவிக்கொண்டான்.(42ஆ,43அ) பிறகு, காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்பவர்களான} அந்த வானரர்கள், மானுஷ ரூபத்தை ஏற்று, மகிழ்ச்சியுடன் பரதனின் குசலத்தை {நலத்தை} விசாரித்தனர்.(43ஆ,44அ)

அப்போது, மஹாதேஜஸ்வியும், தர்மவான்களில் சிறந்தவனுமான ராஜபுத்ரன் பரதன், வானரரிஷபனான சுக்ரீவனைத் தழுவிக் கொண்டு, {பின்வருமாறு} கூறினான்:(44ஆ,45அ) "சுக்ரீவா, எங்கள் நால்வரில் நீ ஐந்தாம் பிராதாவாவாய். உன் நட்பு பற்றில் பிறந்ததாகும். அபகாரம் அரிலக்ஷணமாகும் {சத்ருவின் அடையாளமாகும்" என்றான்}.(45ஆ,46அ)

பிறகு பரதன், விபீஷணனிடம், "உன் சஹாயத்தால் செயற்கரிய கர்மம் செய்யப்பட்டது நற்பேறாலேயே" என்ற ஆறுதல் வாக்கியத்தைக் கூறினான்.(46ஆ,47அ)

அப்போது வீரனான சத்ருக்னன், லக்ஷ்மணனையும், ராமனையும் வணங்கிவிட்டு, சீதையின் சரணங்களை {பாதங்களைப்} பணிவுடன் வணங்கினான்.(47ஆ,48அ) நிறம் மங்கியவளும், சோகத்தால் மெலிந்தவளுமான தன் மாதாவை {கௌசல்யையை} அடைந்த ராமன், மனத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தன் மாதாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டு அவளை வணங்கினான்.(48ஆ,49அ) அவன், சுமித்ரையையும், புகழ்மிக்க கைகேயியையும், சர்வ மாதாக்களையும் வணங்கிய பிறகு புரோஹிதரை {வசிஷ்டரை} அடைந்தான்.(49ஆ,50அ)

சர்வ நகரவாசிகளும், கைகளைக் கூப்பியவாறு, "மஹாபாஹோ, கௌசல்யா ஆனந்த வர்த்தனா {கொசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனே}, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு}" என்று ராமனிடம் கூறினர்.(50ஆ,51அ) பரதாக்ரஜன் {பரதனின் அண்ணனான ராமன்}, நகரவாசிகளை கைக்கூப்பியதை, முற்றும் மலர்ந்த ஆயிரம் பத்மங்களை {தாமரைகளைப்} போலக் கண்டான்.(51ஆ,52அ)

தர்மவித்தான பரதன், ராமனின் அந்தப் பாதுகைகளைத் தானே எடுத்துக் கொண்டு சென்று, நரேந்திரனின் சரணங்களில் {காலடியில்} வைத்தான்.(52ஆ,53அ) பிறகு கூப்பிய கைகளுடன் கூடிய அந்த பரதன், ராமனிடம் {பின்வருமாறு} கூறினான், "நம்பிக்கையுடன் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட சகலத்தையும், இந்த ராஜ்யத்தையும் உம்மிடம் திரும்பத் தருகிறேன்.(53ஆ,54அ) இன்று என் ஜன்மத்தின் அர்த்தம் நிறைவேறியது. என் மனோரதமும் {மனோவிருப்பமும்} நிறைவேறியது. நீர் அயோத்திக்கு திரும்பி வந்து ராஜாவானதை நான் பார்க்கிறேன்.(54ஆ,55அ) உமது கோசம் {கருவூலம்}, கோஷ்டாகாரம் {தானியக்கிடங்கு}, கிருஹம் {வீடு}, பலம் {படை} ஆகியவற்றைப் பார்ப்பீராக. உமது தேஜஸ்ஸின் மூலம் என்னால் சர்வமும் பத்து மடங்காகியிருக்கிறது" {என்றான் பரதன்}.(55ஆ,56அ)

அப்போது, வானரர்களும், ராக்ஷசன் விபீஷணனும், பிராதாவிடம் கொண்ட அன்பினால் அந்த பரதன் இவ்வாறு பேசுவதைக் கண்டு கண்ணீர் சிந்தினர்.(56ஆ,57அ) பிறகு, ராமன் மகிழ்ச்சியுடன் பரதனைத் தன் அங்கத்தில் {மடியில்} ஏற்றிக் கொண்டு, அந்த விமானத்தில் தன் சைனியத்துடன் பரதாஷ்ரமத்திற்குச் சென்றான்.(57ஆ,58அ) பின்னர் ராகவன், தன் சைனியத்துடன் பரதாஷ்ரமத்தில் இறங்கி, விமானத்தின் உச்சியில் இருந்து மஹீதலத்தில் இறங்கி நின்றான்.(58ஆ,59அ)

அப்போது ராமன், உத்தமமான அந்த விமானத்திடம், "நான் உன்னை அனுமதிக்கிறேன். நீ வைஷ்ரவண தேவனிடம் {குபேரனிடம்} செல்வாயாக", என்று கூறினான்.(59ஆ,60அ)

பிறகு, ராமன் கொடுத்த அனுமதியின் பேரில் உத்தமமான அந்த விமானம் தனதாலயத்திற்கு {குபேரனின் வசிப்பிடத்திற்குச் செல்ல} எழுந்து, உத்தர {வடக்கு} திசையில் சென்றது.(60ஆ,61அ) இராக்ஷசனிடம் இருந்து பெறப்பட்டதும், திவ்யமானதுமான அந்த புஷ்பக விமானம், ராமனின் வாக்கியத்தால் தூண்டப்பெற்று, வேகமாக தனதனிடம் {குபேரனிடம்} சென்றது.(61ஆ,62அ) வீரியனான ராகவன் {ராமன்}, தன்னையே போன்றவரான புரோகிதரின் {வசிஷ்டரின்} பாதங்களில், அமராதிபனான சக்ரன் {இந்திரன்} பிருஹஸ்பதியிடம் எப்படியோ, அப்படியே விழுந்து சேவித்து, சுபமான வேறு ஆசனத்தில் அவருடன் சேர்ந்தே அமர்ந்தான்.(62ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 127ல் உள்ள சுலோகங்கள்: 62

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை