Sampaati | Kishkindha-Kanda-Sarga-56 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அங்கதனையும், பிற குரங்குகளையும் கண்ட சம்பாதி, தன் சகோதரன் ஜடாயுவின் மரணத்தைக் குறித்துக் கேள்விப்பட்டது...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படங்களின் தொகுப்பு |
அந்த சர்வ ஹரயர்களும் {குரங்குகள் அனைவரும்}, எந்த கிரி ஸ்தலத்தில் பிராயத்தில் அமர்ந்திருந்தனரோ, அந்த தேசத்திற்கு ஒரு கிருத்ரராஜா {கழுகு மன்னன்} வந்து சேர்ந்தான்.{1} சம்பாதி என்ற பெயரில் அறியப்பட்ட சிரஞ்சீவியும், விஹங்கமனும் {பறவையானவனும்}, ஜடாயுவுடன் பிறந்தவனுமான அந்த ஸ்ரீமான், புகழ்பெற்ற பலவானாகவும், பௌருஷம் {ஆண்மை} நிறைந்தவனாகவும் இருந்தான்.(1,2) அவன், மஹாகிரியான விந்தியத்தின்[1] குகையில் இருந்து வெளிப்பட்டு, அங்கே அமர்ந்திருந்த ஹரிக்களை {குரங்குகளைக்} கண்டு, ஆன்ம மகிழ்ச்சியடைந்து, {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(3) “உலகத்தில், விதியின் விதத்தையே நரர்கள் பின்பற்றுகிறார்கள். அப்படியே வெகுகாலத்திற்குப் பிறகு எனக்காக விதிக்கப்பட்ட இந்த பக்ஷணம் {தின்பண்டம் தானாக} என்னருகில் வந்திருக்கிறது.(4) {இங்கே} இறப்பதும், இறக்கப்போகிறதுமான வானரர்களின் பரம்பரையை பக்ஷிக்க விரும்புகிறேன்” என்றிவ்வாறே அந்தப் பிலவங்கமர்களை {தாவிச் செல்லும் குரங்குகளைக்} கண்ட பக்ஷியானவன் {பறவையான சம்பாதி} சொன்னான்.(5)
[1] இங்கேயும் விந்திய மலைத்தொடர் குறிப்பிடப்படுகிறது. ஆனால் வானரர்கள் பிராயத்தில் இருப்பதோ தென் கடற்கரை.
பக்ஷணத்தில் {சிற்றுண்டியில்} பேராசை கொண்ட பக்ஷியானவனுடைய அந்த வசனத்தைக் கேட்ட போது, பரம ஆயஸ்தமடைந்த {பெருந் திகிலடைந்த} அங்கதன், ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(6) “சீதையின் பெயரில், சாக்ஷாத் வைவஸ்வதனான {சூரியனின் மகனான} யமனே, வானரர்களின் அழிவுக்காக இந்த தேசத்தை அடைந்திருக்கிறான்; பாரும்.(7) இராமரின் காரியம் நிறைவேறவில்லை. ராஜசாசனமும் {அரசக்கட்டளையும்} நிறைவேற்றப்படவில்லை. ஹரிக்களுக்காகவே {குரங்குகளுக்காகவே} எதிர்பாராத இந்த விபத்து திடீரென வாய்த்திருக்கிறது.(8) வைதேஹிக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பிய கிருத்ர ராஜர் {கழுகரசர்} ஜடாயு, அங்கே {ஜனஸ்தானத்தில்} செய்த கர்மத்தை மிச்சமில்லாமல் நீங்கள் கேட்டீர்கள்.(9) அதேபோலவே, திர்யக் யோனியில் ஜனித்த சர்வ பூதங்களும் தங்கள் பிராணன்களைத் துறந்து {விலங்குகளின் பெண்குறியில் பிறந்த உயிரினங்களான நாம் அனைவரும் உயிரைத் துச்சமாக மதித்து} ராமருக்குப் பிரியமானதைச் செய்து வருகிறோம்.(10) சினேகம், காருண்யம் என்ற உள்ளுணர்வின் மூலம் அன்யோன்யம் உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே, அவரது {ராமரின்} உபகாரத்தின் நிமித்தம், நாமே நம்மை {நம் ஆத்மாவைத்} துறக்கிறோம்.(11)
தர்மஜ்ஞரான ஜடாயு, {தர்மத்தை அறிந்தவரான ஜடாயு, ராமருக்கு உபகாரஞ் செய்வதற்காக மகிழ்ச்சியுடன் உடலைத் துறந்து}, ராமருக்குப் பிரியமானதைச் செய்தாரே. நாமோ ராகவருக்காகக் களைத்து, நம் ஜீவிதத்தைத் துறந்து, காந்தாரங்களை {அடைதற்கரிய இடங்களை} அடைந்தும் மைதிலியைக் கண்டோமில்லை.(12,13அ) இரணத்தில் {போரில்} ராவணனால் கொல்லப்பட்ட அந்த கிருத்ரராஜா {கழுகரசர் ஜடாயு} சுகத்தையே அடைந்தார். சுக்ரீவர் மீது கொள்ள வேண்டிய பயத்தில் இருந்து விடுபட்டு, பரம கதியையும் அடைந்தார்.(13ஆ,13இ) ஜடாயுவும், ராஜா தசரதரும் இறந்ததாலும், வைதேஹி ஹரணத்தினாலும் ஹரயர்களுக்கு {குரங்குகளுக்கு} சந்தேகம் உண்டானது[2].(14) இராமலக்ஷ்மணர்கள், சீதை சகிதராக அரண்யத்தில் வசிக்க நேரிட்டதைப் போலவே, ராகவரின் பாணத்தால் வாலி வதம் நடந்ததைப் போலவே,{15} ராமரின் கோபத்தால் ராக்ஷச வதமும் மிச்சமில்லாமல் நடந்ததைப் போலவே நடக்கக்கூடாத இதுவும் கைகேயிக்கான வரதானத்தாலேயே நடக்கிறது” {என்றான் அங்கதன்}.(15,16)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே, “ஜடாயு கொல்லப்படவில்லை என்றால் சீதை கடத்தப்பட்டிருக்க மாட்டாள். சீதை கடத்தப்பட்டிருந்தாலும், ஜடாயு வாழ்ந்திருந்தால் அந்தக் கடத்தலைக் குறித்து அதிகம் சொல்லியிருப்பான். அதனால் ராமன் கிஷ்கிந்தைக்குச் செல்லாமல் நேரடியாக லங்கைக்கே சென்றிருப்பான். குறைந்தது தசரதன் இறக்கவில்லை என்றால் அவன் ராமனை அயோத்திக்குத் திரும்ப அழைத்திருப்பான். எனவே, சீதையின் அபகரிப்பு குறித்த கேள்வி எழாது. இவர்கள் இருவரும் இறந்ததாலேயே சீதை கடத்தப்பட்டாள். அவர்களது மரணமே எங்களை சங்கடத்தில் ஆழ்த்தியது” என்பதே பொருள்” என்றிருக்கிறது
கீர்த்தியுடன் கூடிய சுகமில்லாத அந்தச் சொற்களாலும், புவியில் கிடந்த வானரர்களைக் கண்டும், மஹாமதி படைத்தவனான அந்த கிருத்ரராஜா {கழுகரசன் சம்பாதி}, பெரிதும் சஞ்சலமடைந்து மதியுடன், கிருபைக்குரிய சொற்களில் பேசினான்[3].(17) கூரிய அலகுடையவனும், மஹாஸ்வனம் கொண்டனுமான அந்த கிருத்ரன் {பெருங்குரலுடையவனுமான அந்தக் கழுகு [சம்பாதி]}, அங்கதனின் முகத்தில் {வாயில்} இருந்து இவ்வாறு வெளிப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(18) “எனக்குப் பிராணனைவிடப் பிரியமானவனும், என்னுடன் பிறந்தவனுமான ஜடாயு வதம் செய்யப்பட்டான் என்று என் மனத்தை உலுக்குவதைப் போலத் தன் குரலால் பறைசாற்றும் இவன் யார்?(19)
[3] சில பதிப்புகளில் இத்துடன் இந்த சர்க்கம் நிறைவடைகிறது. பின்வருபவை அடுத்த சர்க்கத்தில் தொடர்கின்றன.
என்னுடன் பிறந்தவனின் இந்தப் பெயரை நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று நான் கேட்கிறேன். ஜனஸ்தானத்தில் ராக்ஷசனுக்கும், கிருத்ரனுக்குமான {கழுகுக்குமான} யுத்தம் எப்படி உண்டானது?(20) இந்த கிரிதுர்கத்தில் இருந்து நீங்கள் என்னை இறக்க விரும்புகிறேன். குணங்களை அறிந்தவனும், விக்ரமத்திற்காக சிலாகிக்கத்தகுந்தவனுமான இளையவனின் {என் தம்பியின்} கீர்த்தியைக் கேட்டு மிக நீண்ட காலத்திற்குப் பிறகு மகிழ்ச்சியடைகிறேன்.(21,22அ) எனவே, வானரரிஷபர்களே, நான் ஜனஸ்தானத்தில் வசித்து வந்தவனும், என்னுடன் பிறந்தவனுமான அந்த ஜடாயுவின் அழிவைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன்.(22ஆ,23அ) குரு ஜனப் பிரியனான {பெரியோரால் விரும்பப்படுகிறவனான} ராமன், எவனுடைய பிரிய ஜியேஷ்ட புத்திரனோ {அன்பிற்குரிய மூத்த மகனோ}, அந்த தசரதன் என்னுடன் பிறந்தவனின் சகாவானது எவ்வாறு?(23ஆ,24அ) அரிந்தமர்களே, சூரியனின் கதிர்களால் சுடப்பட்ட இறகுகளை அகல விரிக்க இயலாதவனான நான் இந்த பர்வதத்தில் இருந்து இறங்க விரும்புகிறேன்” {என்றான் சம்பாதி}.(24ஆ,இ)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 56ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |