Shardula's commentary | Yuddha-Kanda-Sarga-030 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரப் படை குறித்து ராவணனிடம் விரிவாக விளக்கிச் சொன்ன சார்தூலன்...
அப்போது, சுவேல சைலத்தில் முகாமிட்டிருக்கும் கலங்கடிக்கப்பட முடியாத படையைக் குறித்தும், ராகவனை {ராமனைக்} குறித்தும் சாரர்கள் {ஒற்றர்கள்} லங்காதிபதியிடம் தெரிவித்தனர்.(1) பெரும்படையுடன் ராமன் முகாமிட்டிருப்பதை சாரர்களின் மூலம் கேட்ட ராவணன், கொஞ்சம் கலக்கமடைந்தவனாக, சார்தூலனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(2) "நிசாசரா, உன் வர்ணம் {முகவொளி} எப்படி இருக்குமோ, அப்படி இல்லை. நீ தீனனாக இருக்கிறாய். குரோதங்கொண்ட அமித்ரர்களின் {பகைவரின்} வசம் நீ அகப்படவில்லை அல்லவா?" {என்று கேட்டான் ராவணன்}.(3)
இவ்வாறு அவனால் {ராவணனால்} கேட்கப்பட்ட போது, பயத்தில் மூழ்கிய சார்தூலன், ராக்ஷச சார்தூலனிடம் மந்தமாக {ராக்ஷசர்களில் புலியான ராவணனிடம் மெதுவாக} இந்தச் சொற்களைக் கூறினான்:(4) "இராஜரே, விக்ராந்தர்களும், பலவான்களும், ராகவனால் {ராமனால்} ரக்ஷிக்கப்படுபவர்களுமான அந்த வானரபுங்கவர்களை வேவு பார்ப்பது சாத்தியமில்லை.(5) அவர்களிடம் {விஷயத்தைக்} கேட்டுப் பெறுவதோ, பேசுவதோகூட சாத்தியமில்லை. பர்வதங்களுக்கு ஒப்பான வானரர்கள், பாதைகள் எங்கும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.(6) அவர்களின் படைக்குள் பிரவேசித்த மாத்திரத்தில் நான் கண்டுபிடிக்கப்பட்டேன். இராக்ஷசர்கள் {காவலர்கள் / விபீஷணனுடன் இருந்த ராக்ஷசர்கள்} என்னை பலவந்தமாகப் பிடித்ததும், பலவாறாக விசாரிக்கப்பட்டேன்.(7) சீற்றம் மிக்க ஹரிக்கள் {குரங்குகள்}, முழங்கால்களாலும், முஷ்டிகளாலும், பற்களாலும், உள்ளங்கைகளாலும் கடுமையாகத் தாக்கி, படையின் மத்தியில் என்னை இழுத்துச் சென்றனர்.(8)
{இவ்வாறு} எங்கும் இழுத்துச் செல்லப்பட்ட நான், சர்வ அங்கங்களிலும் உதிரம் வழிய, இந்திரியங்கள் கலங்கி, நடுக்கத்துடன் கூடியவனாக ராமனின் ஸம்ஸதத்திற்கு {சபைக்கு} கொண்டு செல்லப்பட்டேன்.(9) ஹரிக்களால் {குரங்குகளால்} அடித்துக் கொல்லப்படுகையில், கைகளைக் கூப்பி யாசித்ததால், ராகவனால் காப்பாற்றப்பட்டு, யதேச்சையாக ஜீவனுடன் வந்தேன் {தற்செயலாகப் பிழைத்து வந்தேன்}.(10) அந்த ராமன், சைலங்களையும் {மலைகளையும்}, பாறைகளையும் மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} நிறைத்து, ஆயுதங்களுடன் கூடியவனாக லங்கையின் துவாரத்தில் {வாயிலில்} நிற்கிறான்.(11) என்னை விடுவித்த மஹாதேஜஸ்வி {வலிமைமிக்க ராமன்}, எங்கும் சூழ்ந்திருந்த ஹரிக்களை {குரங்குகளை} கருட வியூஹத்தில் அணிவகுக்கச் செய்து[1], லங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(12) அவன் பிராகாரத்தை {மதிற்சுவரை} அடையும் முன், ஏதேனும் ஒன்றை சீக்கிரம் செய்வீராக. சீதையைத் திருப்பிக் கொடுப்பீராக; அல்லது நல்ல யுத்தத்தைக் கொடுப்பீராக" {என்றான் சார்தூலன்}.(13)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "வியூஹம் என்பது யுத்தத்திற்காக வகுக்கப்படும் ஓர் அணிவகுப்பாகும். இங்கே அது கருடனின் வடிவில் இருக்கிறது" என்றிருக்கிறது.
அப்போது அதைக் கேட்ட ராக்ஷசாதிபனான அந்த ராவணன், தன் மனத்தில் ஆலோசனை செய்தபிறகு, சார்தூலனிடம் {பின்வரும்} மஹத்தான வாக்கியத்தைச் சொன்னான்:(14) "தேவ, கந்தர்வ, தானவர்களே என்னுடன் யுத்தம் செய்தாலும், சர்வலோகமும் எனக்கு பயத்தை விளைவித்தாலும் சீதையை நான் கொடுக்க மாட்டேன்" {என்றான் ராவணன்}[2].(15)
[2] இதே சுலோகம் யுத்தகாண்டம் 24ம் சர்க்கத்தில் 37ம் சுலோகமாக ஏற்கனவே வந்திருக்கிறது.
இதைச் சொல்லிவிட்டு, மஹாதேஜஸ்வியான ராவணன், மீண்டும் {பின்வருமாறு} கூறினான், "நீ சேனையைச் சுற்றிப் பார்த்தாயா? அங்கே உள்ள பிலவங்கமர்களில் சூரர்கள் யாவர்?(16) இராக்ஷசா, சௌம்யா, அணுகுதற்கரிய அந்த வானரர்களின் பிரபாவம் என்ன? {அவர்கள்} என்ன வகையானவர்கள்? {அவர்கள்} யாருடைய புத்திரர்கள்? பௌத்திரர்கள் {பேரன்கள்}? அவற்றை நீ விவரிப்பாயாக.(17) அவர்களின் பலாபலத்தை {பலம், பலவீனங்களை} அறிந்த பிறகு, என்ன செய்வது என்பதை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். யுத்தத்தை இச்சிக்கும் அவர்களின் எண்ணிக்கையையும், பலத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்" {என்றான் ராவணன்}.(18)
இராவணன் இவ்வாறு சொன்னபோது, உத்தம சாரனான சார்தூலன், ராவணனின் சன்னிதானத்தில் {முன்னிலையில்} இந்த வசனத்தைச் சொல்ல ஆரம்பித்தான்:(19) "நிச்சயம் ரிக்ஷரஜஸின் புத்திரனான ராஜா {சுக்ரீவன்}, யுத்தத்தில் வெல்வதற்கரியவனாவான். ஜாம்பவான் என்ற புகழ்பெற்ற கத்கதனின் புத்திரன் அங்கே இருக்கிறான்.(20) அதே கத்கதனின் புத்திரன் மற்றொருவனும் {தூம்ரனும்} இருக்கிறான். தனியொருவனாக ராக்ஷசர்களை அழித்தவன் எவனுடைய புத்திரனோ, அவன் சதக்ரதுவுடைய குருவின் புத்திரனாவான் {இந்திரனின் குருவான பிருஹஸ்பதியின் புத்திரன் கேசரியும் அங்கே இருக்கிறான்}[3]. (21) இராஜரே, வீரியவானும், தர்மாத்மாவும் தர்மனின் புத்திரனுமான சுஷேணன் அங்கே இருக்கிறான்[4]. சௌம்யனும், சோமாத்மஜனுமான {சந்திரனின் மகனுமான} ததிமுகன் என்ற கபி இருக்கிறான்.(22) சுமுகன், துர்முகன், வேகதர்சி என்றழைக்கப்படும் வானரர்கள் நிச்சயம் ஸ்வயம்புவால் வானர வடிவில் சிருஷ்டிக்கப்பட்ட மிருத்யுக்கள் ஆவர்.(23)
[3] தேசிராஜுஹனுமாந்த ராவ் -கேம்கே மூர்த்தி பதிப்பில், "அதே கத்கதனின் மற்றொரு மகனும் இருக்கிறான். இராக்ஷசர்களை அழித்த ஹனுமான் எவனுடைய மகனோ, அவன் தேவர்களின் தலைவன் இந்திரனின் குரு பிருஹஸ்பதியின் மகன். கேசரி என்று அழைக்கப்படுகிறான்" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "கத்கதனின் மற்றொரு மகன் தூம்ரன் இருக்கிறான். இராக்ஷசர்கள் பலரைக் கொன்ற ஹனுமான், இந்திரனின் குரு பிருஹஸ்பதியின் மகனான கேசரியின் மகனாவான்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "கத்கதனின் மற்றொரு மகனும், பல ராக்ஷசர்களைக் கொன்ற குரங்கின் தந்தையும், சதக்ரதுவின் ஆன்ம குருவின் மகனும் பின்தொடர்கிறார்கள்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பில், "கத்கதனின் மகன்களில் மற்றொருவனும் அங்கே இருக்கிறான். சதக்ரதுவுடைய குருவின் மகன் மற்றொருவனும் இருக்கிறான். இவனது மகனே ராக்ஷசர்கள் பலரைக் கொன்றவன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சதக்ரதுவின் குரு பிருஹஸ்பதி. பிருஹஸ்பதியின் மகன் கேசரி. கேசரியின் மகன் ஹனுமான்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "கத்கதனுக்கே இன்னொரு புதல்வன் எவனுடைய புதல்வன் ஒருவனாலேயே அரக்கர்களுக்கு நாசம் விளைவிக்கப்பட்டதோ அவன் இந்திரனது குருவாகிய பிருகஸ்பதியின் புதல்வன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "கத்கதனுடைய பிள்ளையே மற்றொருவன் தூம்ரனென்பவன் உளன். யுத்தத்தில் அக்ஷன் முதலிய பல ராக்ஷஸர்களைத் தானொருவனேயாகிக் கொன்ற ஹனுமான் எவனுடைய பிள்ளையோ, அந்தக் கேஸரியென்பவன் பிருஹஸ்பதியின் புதல்வன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "கத்கதனுக்கு இன்னொரு மைந்தன் உண்டு. (அவன் பெயர் தூம்ரன்). இந்திரனுடைய குருவான பிருகஸ்பதியின் புதல்வன் கேஸரி. அவனுடைய மைந்தன் (அனுமான்) தான் தனியொருவனாக வந்து, அரக்கர்களை நாசம் செய்துவிட்டுப் போனவன்" என்றிருக்கிறது. இங்கே குறிப்பிடப்படுபவன் கேசரியே, ஹனுமான் அல்ல. இதே சர்க்கத்தின் 24ம் சுலோகத்தில் ஹனுமான் தனியாகக் குறிப்பிடப்படுகிறான்.
[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, 'ஸுஷேண꞉ ச அபி தர்ம ஆத்மா புத்ரோ தர்மஸ்ய வீர்யவான்' என்பது மூலம். இங்கு ஸுஷேணன் தர்மதேவதையின் புதல்வனென்று சொல்கிறது. 'வருணோ ஜநயாமாஸ ஸுஷேணம் நாம வானரம்' என்று ஸுஷேணன் வருணபுத்ரனாகச் சொல்லிற்று. இந்த விரோத்ததிற்குப் பரிஹார மெப்படியெனில், அவ்வருணனே இங்கு தர்மனென்று சொல்லப்பட்டனென்று கண்டு கொள்வது. அல்லது சார்த்தூலன் பயத்தினால் மனங்கலங்கப் பெற்றிருக்கையால் மற்றொருவிதமாக இதை ப்ரமித்திருப்பான். அன்றியே, அந்த ஸுஷேணன் மற்றொருவனென்றும் சிலர் கூறுவர். இங்ஙனமே மற்றை இடங்களிலும் கண்டு கொள்க" என்றிருக்கிறது. வானரர்கள் நான்கு திசைகளிலும் பிரிந்து சீதையைத் தேடிய போது, வருணதிசையான மேற்கு திசை நோக்கிச் சென்ற வானரப்படைக்குத் தலைமையேற்றவன் சுஷேணன் ஆவான். இவன் வாலியின் மனைவியான தாரையின் தந்தையுமாவான். அதேவேளையில் அங்கதனின் தலைமையில் தென்திசையில் சீதையைத் தேடிச் சென்ற வானரப்படையிலும் என்று ஒரு சுஷேணன் இருந்தான். காண்க: கிஷ்கிந்தா காண்டம் 65ம் சர்க்கம், 9ம் சுலோகம்
அங்கே இருக்கும் சேனாபதியான நீலன் தான் ஹுதவஹனின் {அக்னி தேவனின்} புத்திரன் ஆவான். அங்கே ஹனுமான் என்று நன்கறியப்பட்ட அநிலபுத்திரன் இருக்கிறான்.(24) யுவனும் {இளைஞனும்}, பலவானும், தடுக்கப்பட முடியாதவனுமான அங்கதன் இந்திரனின் பேரனாவான். பலசாலிகளான மைந்தன், துவிவிதன் என்ற இருவரும் அஷ்வினிகளின் புதல்வர்களாகவர்.{25} காலாந்தகனுக்கு ஒப்பானவர்களான கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன் என்ற வைவஸ்வதனின் {யமனின்} புத்திரர்கள் ஐவரும் அங்கே இருக்கின்றனர்.{26} சூரர்களும், யுத்தத்தை விரும்புகிறவர்களும், ஸ்ரீமான்களும், தேவபுத்திரர்களுமான பத்துக் கோடி வானரர்கள் அங்கே இருக்கின்றனர். எஞ்சியவர்களைக் குறித்து என்னால் சொல்ல இயலாது.(25-27)
எவனால் தூஷணனும், அப்படியே கரனும், திரிசிரனும் கொல்லப்பட்டனரோ, அந்த யுவன் {இளைஞன்} சிங்கம்போன்ற உடல்படைத்த தசரதபுத்திரனாவான் {ராமனாவான்}.(28) எவனால் விராதனும், அந்தகனுக்கு ஒப்பான கபந்தனும் கொல்லப்பட்டனரோ, அந்த ராமனின் விக்கிரமத்திற்கு நிகரானவன் புவியில் எவனும் இல்லை.(29) எவனால் ஜனஸ்தானத்தில் இருந்த ராக்ஷசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனரோ, அந்த ராமனின் குணங்களைச் சொல்வதற்கு இந்த க்ஷிதியில் {பூமியில்} உள்ள எந்த நரனும் சக்தனல்லன்.(30)
எவனுடைய பாணங்கள் தாக்கினால் வாசவனாலும் {இந்திரனாலும்} ஜீவிக்க முடியாதோ, தர்மாத்மாவும், மாதங்கங்களின் ரிஷபனுமான {சிறந்த யானையைப் போன்றவனுமான} லக்ஷ்மணன் அங்கே இருக்கிறான்.(31) பாஸ்கரனின் {சூரியனின்} மகன்களான சுவேதனும், ஜியோதிர்முகனும் அங்கே இருக்கின்றனர். பிலவங்கமனான {தாவிச் செல்லும் குரங்கான} ஹேமகூடன், வருணனின் மற்றொரு புத்திரனாவான்.{32} வீரனும், பிலவங்கம சத்தமனுமான {தாவிச் செல்லும் குரங்குகளில் சிறந்தவனுமான} நளன், விஷ்வகர்மாவின் மகனாவான். விக்ராந்தனும், வேகவானும், வசுபுத்திரனுமான அந்த துர்தரனும் அங்கே இருக்கிறான்.(32,33)
இராக்ஷசர்களின் தலைவரும், உம்முடன் பிறந்தவருமான விபீஷணர், ராகவனின் {ராமனின்} ஹிதத்தை விரும்பி லங்காபுரியை அடைந்திருக்கிறார்.(34) இவ்வாறே சுவேல சைலத்தில் நிலைத்திருக்கும் வானரப் படை குறித்த அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன். இனி ஆக வேண்டியதற்கு நீரே கதி" {என்றான் சார்தூலன்}.(35)
யுத்த காண்டம் சர்க்கம் – 030ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |