Wednesday 4 September 2024

சாரணன் வர்ணனை | யுத்த காண்டம் சர்க்கம் - 027 (48)

Commentary of Sharana | Yuddha-Kanda-Sarga-027 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இன்னும் அதிக வானரர்களையும், ரிக்ஷர்களையும் ராவணனுக்குச் சுட்டிக்காட்டிய சாரணன்...

Vanara Army


{சாரணன் தொடர்ந்தான்}, "பராக்கிராந்தர்களான எவர்கள், ராகவ அர்த்தத்திற்காக ஜீவிதத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்களோ, அந்த யூதபர்களைக் குறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் உமக்கு நான் சொல்கிறேன்.(1) கோர கர்மங்களைச் செய்பவனான எவனுடைய லாங்கூலத்தின் மயிர், பல வியாமங்கள் {வாலின் மயிர் பல மார்பளவுகள்}[1] நீண்டதாகவும், மென்மையானதாகவும், சிவப்பு, மஞ்சள், சாம்பல், வெள்ளை வண்ணங்களில் ஆடிக் கொண்டும்,{2} சூரியனின் கதிர்களைப் போல ஒளிர்ந்து கொண்டும், நிமிர்ந்த நிலையில், பிருத்வியில் இழுக்கப்படுகிறதோ, இவன் ஹரன் என்று அழைக்கப்படும் யூதபனாவான்.(2,3) ஹரிராஜனின் கிங்கரர்களாக {சுக்ரீவனின் பணியாட்களாக} இருக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான யூதபர்கள், விரைவில் லங்கை மீது ஏறும் நோக்கத்துடன் விருக்ஷங்களை எடுத்துக் கொண்டு இவனை {ஹரனைப்} பின்தொடர்கின்றனர்.(4,5அ) 

[1] "இரு கைகளையும் விரித்தால் என்ன அளவு வருமோ அதுவே வியாமம்; நான்கு முழ அளவு" என்று தமிழ் லெக்சிக்கனில் குறிப்பிடப்படுகிறது. தர்மாலயப் பதிப்பில், "கொடுந்தொழிலையுடைய எவனுடைய வாலிலிருக்கின்ற மயிர்கள் மழமழவென்றும், பல மார்பளவுள்ளவைகளாகவும், சிவந்தும், மஞ்சள் நிறமுற்றும், வெளுத்தும், சுருண்டும், அடர்ந்துமிருக்கின்றனவோ" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பயங்கரமான செயல்களைச் செய்யுந் தன்மையுடைய இவனது லாங்கூலத்தினிடையிலுள்ள மயிர்கள் அனேகம் மார்பளவு நீண்டிருப்பவைகளும், வெளுத்தும், கறுத்தும் மேல் நெரித்துக் கொண்டிருக்கையால் இடைவெளியுடையவைகளும் மேகங்களில் பரவிப் பலவகை வர்ணங்களோடு கூடி இந்த்ர தனுஸ்ஸின் உருவமாய்த் தோற்றும் ஸூர்ய கிரணங்கள் போல் ப்ரகாசிக்கின்றன" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இவனுடைய மிக நீளமான வாலில், சிவப்பு, மஞ்சள், பழுப்பு, வெளுப்பு போன்ற நிறங்களில் மிகமிக நீண்ட உரோமங்கள் சூரியனுடைய கிரணங்களைப் போல் பளிச்சென்று ஒளி வீசுகின்றன" என்றிருக்கிறது.

மஹாமேகங்களைப் போல நீலமாக {கறுப்பாகத்} தெரியும் எவர்களை நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீரோ,{5ஆ} கரிய அஞ்சனத்திற்கு ஒப்பானவர்களும், யுத்தத்தில் சத்திய பராக்கிரமர்களும், எண்ணிக்கையில் அதிகமானவர்களும், உததியின் {பெருங்கடலின்} மறு கரையைப் போல விளக்கப்பட முடியாதவர்களும்,{6} பர்வதங்களிலும், சமவெளிகளிலும், நதிகளிலும் இருப்பவர்களுமான இந்த ரிக்ஷர்கள் {கரடிகள்}, ராஜரே, பெருஞ்சீற்றத்துடன் உம்மை நோக்கியே வருகின்றனர்.(5ஆ-7) இராஜரே, பயங்கரக் கண்களுடனும், பயங்கரத் தோற்றத்துடனும், மேகங்களால் {சூழப்பட்ட} பர்ஜன்யனைப் போல அனைவராலும் சூழப்பட்டவனாக எவன் இவர்களின் மத்தியில் நிற்கிறானோ,{8} இவன் கிரிக்களில் சிறந்த ருக்ஷவந்தத்தில் வசித்து, நர்மதையின் நீரைப் பருகி, சர்வ ரிக்ஷர்களுக்கும் {கரடிகளுக்கும்} அதிபதியாக இருக்கும் தூம்ரன் என்றழைக்கப்படும் யூதபனாவான்.(8,9)

இவனுடன் பிறந்த இளையோனும் {தூம்ரனின் தம்பியும்}, பர்வதத்திற்கு ஒப்பானவனும், ரூபத்தில் உடன் பிறந்தானுக்கு ஒப்பானவனும், பராக்கிரமத்தில் சிறந்தவனுமான இவனைப் பார்ப்பீராக.(10) பெரியோரிடம் மதிப்புடன் நடந்து கொள்பவனும், போரில் பொறுமையற்றவனும், ஜாம்பவான் என்றழைக்கப்படுபவனுமான இவன் {படைகளை} அணிவகுக்கச் செய்யும் மஹாயூதபர்களின் யூதபனாவான்.(11) மதிமிக்கவனான இந்த ஜாம்பவதன், தேவாஸுரப் போரில், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} மஹத்தான சஹாயத்தைச் செய்து, பல வரங்களை பெற்றிருக்கிறான்.(12) பர்வத உச்சிகளில் ஏறித் திரிந்து பெரும் மேகங்களுக்கு ஒப்பான பாறைகளை வீசக்கூடியவர்களும், பேருடல் படைத்தவர்களும், மிருத்யுவுக்கு அஞ்சாதவர்களும்,{13} தோற்றத்தில் ராக்ஷசர்களையும், பிசாசர்களையும் போன்றவர்களும், அடர்ந்த ரோமங்களைக் கொண்டவர்களும், அமிதௌஜஸனான இவனது {அளவில்லா ஆற்றல் படைத்தவனான ஜாம்பவானின்} சைனியத்தில் அக்னியின் தேஜஸ்ஸுடன் திரிந்து கொண்டிருக்கின்றனர்.(13,14)

எவன் கலக்கத்துடன் தாவிச் சென்றாலும், நின்று கொண்டிருந்தாலும் சர்வ வானரர்களும் நின்று பார்க்கிறார்களோ, இவன் யூதபர்களின் யூதபனாவான் {குழுத்தலைவர்களின் தலைவனாவான்}.{15} இராஜரே, சஹஸ்ராக்ஷத்தில் {சகஸ்ராக்ஷ மலையில்} படையுடன் வசிப்பவனும்[2], பலவானுமான இந்த ஹரீஷ்வரன், தம்பன் என்றழைக்கப்படுகிறான்.(15,16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கே.எம்.கே. மூர்த்தி, ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில் இப்படி இருக்கிறது. ஹரிபிரசாத்சாஸ்திரி பதிப்பில், இவன் பெயர் ரம்பன் என்று குறிப்பிடப்படுகிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "அவன் ஆயிரங்கண் இந்திரனைப் போல பலமிக்கப் படையால் சூழப்பட்டிருக்கிறான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், இவனை ரம்பன் என்று குறிப்பிட்டு, "குரங்குகளின் தலைவனான இவன் ஆயிரங்கண் தேவனின் அருகில் வசிக்கிறான்" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பில், இவனை ரம்பன் என்று குறிப்பிட்டு, "குரங்குகளின் தலைவனான இவன் ஆயிரங்கண்களைக் கொண்டவனை வழிபட்டு வருகிறான்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இந்த பரிபூர்ண பலசாலியான வானரோத்தமன் தனது பலத்தால் இந்திரனை ஆச்ரித்திருக்கிறான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவ்வானரேஷ்வரன் மிகுதியும் பலிஷ்டனாகையால் தன் பலத்தைக் காட்டி தேவேந்த்ரனுக்கு ஸந்தோஷத்தை விளைவிக்குந்தன்மையன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "எவனை ஆயிரங்கண்ணுடைய இந்திரனும் போற்றிப் பாராட்டுகிறானோ" என்றிருக்கிறது.

எவன் ஒரு யோஜனை தள்ளி நின்று ஓரடியில் சைலத்தை {மலையை} நெருங்கி சேவிப்பானோ, அதேபோல தன் உடலைக் கொண்டு ஒரு யோஜனை உயரத்தை அடைவானோ,{17} எவனைவிடப் பெரிய ரூபம், சதுஷ் பாதர்களில் {நான்கு கால்களைக் கொண்டோரில்} இல்லையோ, இவன் வானரர்களின் பிதாமஹன் {பாட்டன்} ஸந்நாதன் என்று அறியப்படுகிறான்.{18} மேலும், பூர்வப் போரில் சக்ரனுடன் {இந்திரனுடன்} யுத்தம் செய்தவனும், மதிமிக்கவனுமான இவன், ஒருபோதும் தோல்வியடையாத யூதபனாவான்.(17-19) விக்கிரமத்தில் இவன் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான பராக்கிரமம் கொண்டவன். இவன், கிருஷ்ணவர்த்மனுக்கு {அக்னி தேவனுக்கு} ஒரு கந்தர்வகன்னியிடம் பிறந்து,{20} தேவாஸுர யுத்தத்தில் அங்கே திரிதிவௌகசர்களுக்கு உதவினான் {தேவர்களுக்கு உதவுவதற்காகப் பிறந்தவனாவான்}.(20,21அ)  

எங்கே வைஷ்ரவண ராஜா ஜம்பூவை சேவிக்கிறாரோ {எங்கே மன்னர் குபேரர் நாவல் மரத்தை சேவித்துக் கொண்டிருக்கிறாரோ},{21ஆ} இராக்ஷசாதிபரே, எது உம்முடன் பிறந்தவருக்கு {குபேரனுக்கு} நித்யம் சுகத்தில் திளைக்க வைக்கிறதோ, எங்கே கின்னரர்களால் சேவிக்கப்படும் பர்வதேந்திரம் {மலைகளின் மன்னனான இமயம்} இருக்கிறதோ,{22} அங்கே ஸ்ரீமானும், பலவானும், வானரரிஷபனும், சொல்வதற்கரிய ஆற்றல் படைத்தவனும், நித்யம் யுத்தத்தில் திளைப்பவனும், கிரதனன் என்ற பெயரைக் கொண்டவனுமான இந்த யூதபன் இருக்கிறான்.(21ஆ-23) ஆயிரங்கோடி ஹரிக்களால் {குரங்குகளால்} சூழப்பட்டவனாக நிற்கும் இவன் {கிரதனன்}, தன் அனீகனியை {படையைக்} கொண்டு லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்புகிறான்.(24)

எவன் ஹஸ்திகளுக்கும் {யானைகளுக்கு}, வானரர்களுக்கும் இடையிலான பூர்வ வைரத்தை நினைவில் கொண்டு, கஜயூதபர்களை {தலைமை யானைகளை} அச்சுறுத்தியபடியே கங்கையில் திரிந்து,{25} பெரும் மரங்களை வேருடன் பிடுங்கி, கர்ஜிப்பானோ, காட்டு கஜங்களை வீழ்த்தும் தலைவனான இந்த யூதபதி {பிரமாதி} கிரியின் குகைகளில் வசிப்பவனாவான்.(25,26) ஹரிக்களின் வாஹினியில் {குரங்குகளின் படையில்} முக்கியனும், ஹைமவதீ நதியை அடுத்துள்ள {கங்கைக் கரையிலுள்ள} உத்தம பர்வதங்களான மந்தரத்திலும், உசீரபீஜத்திலும் வசிப்பவனுமான{27} இவன் {பிரமாதி} திவியில் சக்ரனை {சொர்க்கத்தில் இந்திரனைப்} போல் ஸ்வயமாக மகிழ்ச்சியில் திளைக்கும் வானரசிரேஷ்டனாவான் {சிறந்த வானரனாவான்}.(27,28அ) வீரியத்திலும், விக்கிரமத்திலும் செருக்குற்று நாதம் செய்பவர்களும் பலவான்களுமான ஆயிரக்கணக்கான, நூறாயிரக்கணக்கானோர் {பத்து கோடி பேர்} இவனைப் பின்தொடர்கின்றனர்.(28ஆ,29அ) மஹாத்மாக்களான இந்த வானரர்களுக்கு இவனே தலைவனாகத் திகழ்கிறான். இராஜரே, வெல்வதற்கரியவனான இவன் பிரமாதி என்றழைக்கப்படும் யூதபனாவான்.(29ஆ,30அ) வாதத்தால் {காற்றால்} தூண்டப்பட்ட மேகத்தைப் போல, எவனை நீர் பார்க்கிறீரோ,{30ஆ} வேகமானதும், சீற்றமிக்கதுமான வானரர்களின் அனீகத்தால் {வானரப்படையால்}, பவனன் {வாயு தேவன்} எங்கும் செம்புழுதியை எழச் செய்து,{31} அங்கே {பிரமாதி இருக்குமிடத்தில்}, ஏராளமான தூசிகளை பலமுறை சுழன்றடித்துப் பரப்புகிறான்[3].(30ஆ-32அ)  

[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "காற்று வேகத்தினால் மேற்கிளம்பின மேகம்போல் உனக்குப் புலப்படுகின்ற இந்த யூதபதி ப்ரமாதி யென்பவன். பகைவரை உருமாய்க்க வல்லவன்; எவராலும் எதிர்க்கமுடியாதவன்; காற்றினால் நாற்புறங்களிலும் கிளம்பியிருக்கிற சிவந்த காந்தியுடைய இந்தப் பெருந்தூளானது எந்த இடத்தில் புலப்படுகிறதோ, அவ்விடத்தில் மிக்க பரபரப்புற்றதும், மஹாபலமுடையதுமாகி விளங்கும் அவ்வானர ஸைன்யமும் ப்ரமாதியினுடையதே" என்றிருக்கிறது.

கரிய முகம் கொண்டவர்களும், கோரர்களும், மஹாபலவான்களும், நூற்றுக் கணக்கானவர்களும், நூறாயிரக்கணக்கானவர்களும் {நூறு லக்ஷம் எண்ணிக்கையிலானவர்களும்}, சேது பந்தனத்தைக் கண்டவர்களுமான இந்த கோலாங்கூலர்கள்,{32ஆ,33அ} சீற்றத்துடன் லங்கையை மர்த்தனம் செய்யும் விருப்பத்தில், மஹாவேகம் கொண்டவனும், கோலாங்கூலனும், கவாக்ஷன் என்ற பெயரைக் கொண்டவனுமான யூதபனைச் சூழ்ந்திருக்கின்றனர்.(32ஆ-34அ)

எங்கே சர்வகாலத்திலும் பழங்கள் விளைந்து, தேனீக்கள் வசிக்கும் மரங்கள் இருக்கின்றனவோ,{34ஆ} {எங்கே} தனக்குத் துல்லியமான ஒளியுடன் கூடிய பர்வதத்திற்கு சூரியன் செல்வானோ, எங்கே மிருகபக்ஷிகள் {விலங்குகள், பறவைகள்} அனைத்தும் அதனதன் வர்ணங்களில் ஒளிருமோ,{35} எங்கே மஹாத்மாக்களான மஹரிஷிகள் பிரஸ்தங்களை {தாழ்வரைகளை} விட்டகலாமல் வசிப்பார்களோ, {எங்கே} சுவைமிக்க பழங்கள் விளையும் விருக்ஷங்கள் இருக்கின்றனவோ,{36} எங்கே மதிப்புமிக்க மது {தேன்} விளையுமோ, ராஜரே, அத்தகைய ரம்மியமான சிறந்த பர்வதமான காஞ்சனபர்வதத்தில் மகிழ்ச்சியுடன் திரிபவனே{37} வானர முக்கியர்களில் முக்கியனும், கேஸரி {கேசரி} என்ற பெயரைக் கொண்டவனுமான இந்த யூதபனாவான்[4].(34ஆ-38அ)

[4] உவன்காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன்காண்
இவன்காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன்காண்
சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்
அவன்காண் நெடுங் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான்.

- கம்பராமாயணம் 6889ம் பாடல், யுத்தகாண்டம், இலங்கை காண் படலம்

பொருள்: அதோ நடுவில் இருப்பவன் குமுதன், அவன் அருகினில் இருப்பவன் குமுதாக்கன், இதோ இப்பக்கம் பார்க்கிறானே இவன் கவயன். கவயாக்கன் என்பவனும் இதோ இங்கு காணப்படுகிறான். இவன் சிவனே, இவன் பிரம்மனே என்று சொல்லப்படும் தூதனை {ஹனுமானைப்} பெற்ற செல்வன், அதோ அவன்தான் கேசரி என்றழைக்கப்படும் பேராற்றல்மிக்கவன்.

அனகரே {பாபமற்றவரே}, ரம்மியமான காஞ்சன பர்வதத்தில், அறுபதாயிரம் கிரிகள் இருக்கின்றன. இராக்ஷசர்களுக்கு மத்தியில் உம்மைப் போலவே, அங்கே சிறந்த கிரி ஒன்று இருக்கிறது.{38ஆ,39அ} அங்கே இந்த கபில {பழுப்பு} நிறமுடையவர்களும், வெள்ளை நிறமுடையவர்களும், சிவந்த வாயுடையவர்களும், {தேன் போன்ற} மதுபிங்கள நிறமுடையவர்களும், கூரிய பற்களைக் கொண்டவர்களும், நகங்களை ஆயுதங்களாகக் கொண்டவர்களும் அந்த உத்தம கிரிகளில் வசிக்கின்றனர்.{39ஆ,40அ} இவர்கள் அனைவரும் சிம்ஹங்களைப் போன்ற நான்கு கோரைப் பற்களுடையவர்கள். புலிகளைப் போல அணுகுதற்கரியவர்கள். வைஷ்வநரனுக்கு {அக்னிதேவனுக்குச்} சமமானவர்கள். சீறும் விஷமிக்க பாம்புகளுக்கு ஒப்பானவர்கள்.{40ஆ,41அ} மிக நீண்ட அழகிய லாங்கூலங்கள் {வால்களைக்} கொண்டவர்கள். மத்தமாதங்கங்களுக்கு {மதங்கொண்ட யானைகளுக்கு} ஒப்பானவர்கள். மஹாபர்வதங்களைப் போன்றவர்கள். பெரும் மேகங்களின் கர்ஜனையைக் கொண்டவர்கள்.{41ஆ,42அ} பிங்கள வர்ணமாகவும், சிவப்பாகவும் உள்ள உருண்டைக் கண்களைக் கொண்டவர்கள். அதிபயங்கரச் செயலும், குரலும் உடையவர்கள். இவர்கள் அனைவரும் உமது லங்கையை இப்போதே மர்த்தனம் செய்பவர்களை {நசுக்கப் போகிறவர்களைப்} போல நிற்கிறார்கள்.(38ஆ-43அ) இவர்களின் மத்தியில் எவன் நிற்கிறானோ, இந்த வீரியவான் இவர்களின் அதிபதியாவான். நித்யம் ஆதித்யனை வணங்குபவனும், புத்திமானும், வெற்றியை விரும்புகிறவனும்,{43ஆ,44அ} பிருத்வியில் புகழ்பெற்றவனுமான இவன் சதபலி என்ற பெயரில் அழைக்கப்படுகிறான். இவன், தன் அனீகனியை {படையைக்} கொண்டு லங்கையை மர்த்தனம் {நசுக்க} விரும்புகிறான்.(43ஆ-45அ) விக்ராந்தனும், பலவானும், சூரனும், தன் பௌருஷத்தைக் கைவிடாதவனுமான இந்த ஹரி, ராமபிரிய அர்த்தத்திற்காக {குரங்கான சதபலி, ராமனின் விருப்பத்திற்காக} தன் பிராணன்களையும் பொருட்படுத்தாதவனாக இருக்கிறான்.(45ஆ,46அ)

கஜன், கவாக்ஷன், கவயன், நளன், நீலன் உள்ளிட்ட வானர யூதபர்களில் ஒவ்வொருவரும் பத்துக் கோடி போர்வீரர்களால் சூழப்பட்டவர்களாக இருக்கின்றனர்.(46ஆ,47அ) அதே போல, விந்திய பர்வதவாசிகளான பிற வானர சிரேஷ்டர்களும், லகுவிக்கிரமர்களாகவும், எண்ணிக்கையில் அடங்காதவர்களாகவும் இருக்கிறார்கள்.(47ஆ,48அ) மஹாராஜாவே, இவர்கள் அனைவரும் மஹாபிரபாவமிக்கவர்கள். இவர்கள் அனைவரும் மஹா சைலங்களுக்கு ஒப்பான பேருடல் படைத்தவர்கள். இவர்கள் அனைவரும் ஒரே கணத்தில் சைலங்களைப் பொடியாக நொறுக்கி, பிருத்வியை சமமாக்கவல்லவர்கள்" {என்றான் சாரணன்}.(48ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 027ல் உள்ள சுலோகங்கள்: 48

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை