Spies again | Yuddha-Kanda-Sarga-025 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுகனையும், சாரணனையும் ஒற்றர்களாக அனுப்பிய ராவணன்; வானர வடிவை ஏற்று வானரப்படைக்குள் அவர்கள் நுழைந்தது; விபீஷணன் அடையாளம் கண்டது; அவர்களை விடுவித்த ராமன்...
தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், தன் படையுடன் சாகரத்தைக் கடந்ததும், ஸ்ரீமானான ராவணன் தன் அமைச்சர்களான சுக, சாரணர்களிடம் {பின்வருமாறு} கூறினான்:(1) "சர்வ வானரப் படையும், கடப்பதற்கரிய சாகரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரையில்லாத சேதுபந்தனத்தை சாகரத்தில் ராமன் செய்திருக்கிறான்.(2) சாகரத்தில் அந்த சேதுபந்தனத்தை எச்சூழ்நிலையிலும் நம்பியிருக்கமாட்டேன். அவசியம் அந்த வானரப் படையை நான் கணக்கில் கொள்ள வேண்டும்.(3)
நீங்கள் இருவரும், {மற்றவர்களின்} கவனத்தைக் கவராமல் வானர சைனியத்திற்குள் பிரவேசித்து, அதன் பரிமாணம், வீரியம், அந்தப் பிலவங்கமர்களில் முக்கியர்கள்,{4} ராமனுக்கும், சுக்ரீவனுக்கும் உரிய மந்திரி சங்கத்தினர், பிலவங்கமர்களில் முன்னணியில் நிற்கக்கூடிய சூரர்கள்,{5} நீர்க்கொள்ளிடமான சாகரத்தின் மத்தியில் அந்த சேது பந்தனம் செய்யப்பட்டது எப்படி? மஹாத்மாக்களான அந்த வானரர்கள் இருக்கும் தேசம் {இடம்} எங்கே?{6} அதேபோல ராமனின் வியவசாயம் {முயற்சிகள்}, வீரியம், தாக்கும் முறைகள், லக்ஷ்மணனின் வீரியம் ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே அறிவீராக.(4-7) மஹாத்மாக்களான அந்த வானரர்களின் சேனாபதி யார்? என்பதையும் உள்ளது உள்ளபடியே அறிந்து கொண்டு சீக்கிரம் திரும்பி வருவீராக" {என்றான் ராவணன்}[1].(8)
[1] 20ம் சர்க்கத்தில் சுக்ரீவனிடம் தூது வந்த சுகன் இவை யாவற்றையும் அறிந்திருப்பான். அவனையே ஒற்றனாக அனுப்புவது இங்கே பொருத்தமானதாகத் தெரியவில்லை. அந்த 20ம் சர்க்கம் செம்பதிப்பான விவேக் தேவ்ராயின் பதிப்பில் இடம்பெறவில்லை. இந்த சர்க்கம் இடம்பெற்றிருக்கிறது.
இவ்வாறு ஆணையிடப்பட்ட ராக்ஷச வீரர்களான சுக, சாரணர்கள் இருவரும் ஹரி {குரங்கு} ரூபம் தரித்துக் கொண்டு, வானரப்படைக்குள் பிரவேசித்தனர்.(9) பிறகு, சிந்தனைக்கு அப்பாற்பட்டதும், ரோமஹர்சணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்துவதுமான அந்த வானர சைனியத்தை இவ்வளவென்று அந்த சுக, சாரணர்களால் அப்போது கணக்கிட முடியவில்லை.(10) பர்வத உச்சிகள், மலையருவிகள், குகைகள், சமுத்திர தீரம் {கடற்கரை}, வனங்கள், உபவனங்கள் ஆகியவற்றில் {படையினர்} இருந்தனர்.{11} {சமுத்திரத்தைக்} கடந்து கொண்டிருப்பவர்கள், கடந்துவிட்டவர்கள், முழுமையாகக் கடக்க விரும்புகிறவர்கள், முகாமிட்டவர்கள், முகாமிட்டுக் கொண்டிருப்பவர்கள், பயங்கர நாதம் செய்து கொண்டிருந்த மஹாபலவான்கள்{12} என அந்த பலார்ணவம் {கடலைப் போன்ற படை} எல்லையற்றதாக இருப்பதை நிசாசரர்கள் {இரவுலாவிகளான சுகன், சாரணன் ஆகிய} இருவரும் கண்டனர்.(11-13அ)
மஹாதேஜஸ்வியான விபீஷணன், மாறுவேடத்தில் இருக்கும் அவ்விருவரையும் கண்டான்.[2] அவன், சுக, சாரணர்கள் இருவரையும் பிடித்து ராமனிடம் {பின்வருமாறு} கூறினான்:(13ஆ,14அ) "பரபுரஞ்ஜயரே {பகை நகரங்களை வெற்றி கொள்பவரே}, அந்த ராக்ஷசேந்திரரின் {ராவணரின்} மந்திரிகளான இந்த சுக, சாரணர்கள் இருவரும் லங்கையில் இருந்து சாரர்களாக {ஒற்றர்களாக} இங்கே வந்திருக்கின்றனர்" {என்றான் விபீஷணன்}.(14ஆ,15அ)
[2] இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரைப்பற்றினன் என்ப மன்னோபண்டு தான் பல நாள் செய்தநல்தவப் பயன் தந்து உய்ப்ப முந்துறப் போந்த நம்பி- கம்பராமாயணம் 6768ம் பாடல், யுத்த காண்டம், ஒற்றுக் கேள்விப் படலம்பொருள்: காலம் இப்படி இருக்க இலங்கை வேந்தனின் {ராவணனின்} ஏவலால் ஒற்றர்கள் வந்து {வானரப் படையின்} அளவு நோக்கி, குரங்குகள் போல வேடமிட்டுத் திரிபவர்களை, தான் முன்பு பலநாள் செய்த நல்ல தவப் பயனால் விளைந்து {பின்னின்று} செலுத்த, முன்னதாக உய்ய வந்த நம்பி {விபீஷணன் அவர்களைப்} பற்றிக் கொண்டான்.
இராமனைக் கண்ட அவர்கள் இருவரும், மனவேதனையுடன், ஜீவிதத்தில் ஆசையை இழந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(15ஆ,16அ) "இரகுநந்தனரே, சௌமியரே, நாங்கள் இருவரும், இந்தப் படை முழுவதையும் குறித்து அறிந்து கொள்ள ராவணரால் அனுப்பப்பட்டு இங்கே வந்தோம்" {என்றனர்}.(16ஆ,17அ)
தசரதாத்மஜனும், சர்வபூதஹிதரதனும் {உயிரினங்கள் அனைத்தின் நலத்தையும் விரும்புகிறவனுமான} ராமன், அவர்கள் இருவரின் அந்த வசனத்தைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(17ஆ,18அ) "சர்வ படையையும் பார்த்துவிட்டீர்கள், எங்களையும் நன்றாகப் பார்த்துவிட்டீர்கள், சொல்லப்பட்டபடியே காரியத்தைச் செய்து முடித்துவிட்டீர்கள் என்றால், விரும்பியபடி திரும்பிச் செல்வீராக.(18ஆ,19அ) ஏதாவது காணவில்லையென்றால் அதையும் பாருங்கள். இல்லையென்றாலும் விபீஷணர் மீண்டும் மொத்தமாக உங்களுக்குக் காட்டுவார்.(19ஆ,20அ) இப்படிப் பிடிபட்டு அகப்பட்டோமே என்று உங்கள் ஜீவிதத்திற்காக பீதியடைய வேண்டாம். சஸ்திரமில்லாமல் பிடிபடும் தூதர்கள் வதைக்கப்படத் தகுந்தவர்களல்லர் {என்று அந்த ஒற்றர்களிடம் சொல்லிவிட்டு, விபீஷணனிடம்}(20ஆ,21அ) விபீஷணரே, சத்ரு பக்ஷத்தை சதா பிளக்க விரும்பும் சாரர்களான இந்த ராத்ரிம்சரர்கள் {இரவுலாவிகள்} இருவரும், வேண்டிக் கேட்பதால் விடுவிப்பீராக {என்று விபீஷணனிடம் சொல்லிவிட்டு, மீண்டும் அந்த ஒற்றர்களிடம்}(21ஆ,22அ) இலங்கா நகருக்குத் திரும்பிச் சென்று, தனதானுஜனான ராக்ஷச ராஜனிடம் {குபேரனின் தம்பியும், ராக்ஷச மன்னனுமான ராவணனிடம்} என் வசனத்தை நான் சொன்னபடியே நீங்கள் சொல்வீராக:(22ஆ,23அ) 'எந்த பலத்தை நம்பி, என் சீதையை அபகரித்துச் சென்றாயோ, அதை {அந்த பலத்தை} சைனியத்துடனும், பந்துக்களுடனும் {உறவினர்களையும்} உன் விருப்பப்படியே காட்டுவாயாக.(23ஆ,24அ) நாளை காலை, என் சரங்கள் ராக்ஷச பலத்தையும், பிராகாரம், தோரணங்களுடன் கூடிய லங்காநகரியையும் நொறுக்கப் போவதைப் பார்ப்பாய்.(24ஆ,25அ) இராவணா, நாளை காலையில், வஜ்ரவானான வாசவன் {இந்திரன்}, தானவர்களின் மேல் {ஏவிய} வஜ்ரத்தைப் போல, நான் சைனியத்துடன் கூடிய உன் மீது என் பயங்கர குரோதத்தை விடுவிக்கப் போகிறேன்'" {என்று நான் சொன்னதாக ராவணனிடம் சொல்வீராக என்றான் ராமன்}.(25ஆ,26அ)
இவ்வாறு ஆணையிடப்பட்ட ராக்ஷசர்கள் சுக, சாரணர்கள் இருவரும்,{26ஆ} அதேபோல தர்மவத்ஸலனான ராகவனிடம், "{உமக்கு} ஜயம் உண்டாகட்டும்" என்று வாழ்த்திவிட்டு, லங்காநகரியை அடைந்து, ராக்ஷசாதிபனிடம் {பின்வருமாறு} கூறினார்கள்[3]:(26ஆ,27) "இராக்ஷசேஷ்வரரே, வதைக்கும் அர்த்தத்தில் விபீஷணனால் பிடிக்கப்பட்டோம். தர்மாத்மாவும், அமிததேஜஸ்வியுமான ராமன் {எங்களைக்} கண்டு விடுவித்தான்.(28) லோகபாலர்களுக்கு சமமான சூரர்களும், அஸ்திரம் தரித்தவர்களும், திட விக்கிரமர்களுமான {உறுதியும், வீரமும் கொண்டவர்களுமான} நான்கு புருஷரிஷபர்கள் ஏகஸ்தானத்தை அடைந்திருக்கின்றனர் {ஓரிடத்தைச் சேர்ந்து இணைந்திருக்கிறார்கள்}.{29} தாசரதியான ராமன், ஸ்ரீமான் லக்ஷ்மணன், விபீஷணன், மஹாதேஜஸ்வியும், மஹேந்திரனுக்கு சமமான விக்கிரமம் கொண்டவனுமான சுக்ரீவன் ஆகியோர்,{30} சர்வ வானரர்களையும் ஒதுக்கிவிட்டாலும், {அந்த நால்வரும்} பிராகாரங்களுடனும், தோரணங்களுடனும் கூடிய லங்காம்புரீயை பெயர்த்து விடும் சக்தியுடையவர்கள்.(29-31)
[3] இந்த இடத்தில் சுகன், சாரணன் இருவரும் சேர்ந்து பொதுவாக ராவணனிடம் பேசுவதாக வந்தாலும், அடுத்த சர்க்கத்தின் தொடக்கத்தில், "சாரணன் சொன்னதைக் கேட்ட ராவணன்" என்ற அர்த்தத்தில் தொடங்குவதால், இந்த சர்க்கத்தின் 28 முதல் 34ம் சுலோகம் வரை உள்ள சுலோங்களை இருவரும் அடுத்தடுத்து சொல்லியிருக்கலாம் என்றும், இறுதியாக வரும் 34ம் சுலோகத்தையோ, கடைசி மூன்று சுலோகங்களையோ சாரணன் சொல்லியிருக்கலாம் என்றும் யூகிக்க வேண்டியிருக்கிறது.
இராமனின் அந்த ரூபத்தையும், ஆயுதங்களையும் பார்த்தாலே போதும். அந்த மூவரை ஒதுக்கிவிட்டாலும், ஏகனாகவே {தனியாகவே அவன்} லங்காம்புரீயை அழித்துவிடுவான்.(32) இராமலக்ஷ்மணர்களாலும், சுக்ரீவனாலும் காக்கப்படும் அந்த வாஹினி, சர்வ ஸுராஸுரர்களாலும் {தேவ, அசுரர்களாலும்} வெல்வதற்கரியதாக இருக்கிறது.(33) யுத்தம் செய்ய விரும்பும் மஹாத்மாக்களுடன் கூடிய வனௌகஸர்களின் துவஜினியில் {காட்டுவாசிகளான வானரர்களின் படையில்} இப்போது போர்வீரர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். விரோதம் போதும். அமைதியை ஏற்படுத்திக் கொள்வீராக. தாசரதியிடம் மைதிலியைக் கொடுப்பீராக" {என்றார்கள் சுகனும், சாரணனும்}[4].(34)
[4] அடுத்த சர்க்கமானது, இங்கே 28 முதல் 34ம் சுலோகம் வரையுள்ள வசனங்களை சாரணன் சொல்வதாகக் குறிப்பிட்டுத் தொடங்குகிறது. அவ்வாறெனில் இந்த சர்க்கத்தின் 27ம் சுலோகத்துடன் அது முரண்படுகிறது. இங்கிருந்து நேரடியாக யுத்த காண்டம் 29ம் சர்க்கத்தின் 6ம் சுலோகத்திற்குச் சென்றால் கதையின் போக்கு சரியாகத் தொடர்கிறது. 26, 27, 28ம் சர்க்கங்கள் இந்தப் போக்குடன் ஒட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த 3 சர்க்கங்களும் இடைச்செருகல்கள் தவிர்க்கப்பட்ட செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பிலும் இடம்பெற்றுள்ளன.
யுத்த காண்டம் சர்க்கம் – 025ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |