Saturday 7 September 2024

சுகன் வர்ணனை | யுத்த காண்டம் சர்க்கம் - 028 (44)

Commentary of Suka | Yuddha-Kanda-Sarga-028 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரப் படையில் உள்ள வானரர்கள், ஹனுமான், ராமன், லக்ஷ்மணன், சுக்ரீவன் ஆகியோரைக் குறித்து ராவணனிடம் விளக்கிச் சொன்ன சுகன்...

Ramas army


சுகன், சாரணனின் சொற்களைக் கேட்ட பிறகு, ராக்ஷசாதிபனான ராவணனிடம் அந்தப் படையைச் சுட்டிக் காட்டியபடியே {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "எவர்களை நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீரோ, இவர்கள் மதங்கொண்ட மஹாத்வீபங்களை {பெரும் யானைகளைப்} போன்றவர்கள்; காங்கேயே ஆலங்களை {கங்கையின் ஆலமரங்களைப்} போன்றவர்கள், ஹைமவத சாலங்களை {இமயத்தின் ஆச்சா மரங்களை/ மராமரங்களைப்} போன்றவர்கள்.{2} இராஜரே, இவர்கள் தடுப்பதற்கரிய பலவான்கள்; காமரூபிகள் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்கள்}; தைத்திய, தானவர்களுக்கு ஒப்பானவர்கள்; யுத்தத்தில் தேவ பராக்கிரமர்கள்.(2,3) இவர்கள் நவ, பஞ்ச, சப்த கோடி சஹஸ்ரங்களாகவும், ஆயிரம் சங்குகளாகவும், நூறு விருந்தங்களாகவும் இருக்கின்றனர்[1].(4) சுக்ரீவனின் தொண்டர்களான {அமைச்சர்களான} இவர்கள் தேவ, கந்தர்வர்களுக்குப் பிறந்தவர்களாவர். காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} இவர்கள், சதா கிஷ்கிந்தையையே தங்கள் நிலயமாகக் கொண்டிருக்கின்றனர்.(5)

[1] தேசிராஜுஹனுமந்தராவ்-கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த அத்தியாயத்தின் இறுதியில் கணக்கிட்டுள்ளபடியே சங்கு, மற்றும் விருந்தங்களுடன் சரியாகப் பொருந்தும் எண்ணிக்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இவர்களுடைய இருபத்தோராயிரம் கோடிக்கணக்குகளும், அப்படியே ஆயிரம் சங்கக்கணக்குகளும், அப்படியே நூறு பிருந்தக் கணக்குகளும் இருக்கின்றார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இக்கணக்குகளின் அளவை வால்மீகிபகவானே இந்த ஸர்க்கத்தின் முடிவில் விளங்க அருளிச் செய்திருக்கிறார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "இவர்கள் ஒன்பதினாயிரங் கோடியும், ஐயாயிரங் கோடியும், ஏழாயிரங் கோடியும், பலவாயிரம் சங்கங்களும், பலநூறு ப்ருந்தங்களுமா யிருக்கின்றனர்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இவர்கள் எண்ணிக்கை இருபத்தோரு கோடிகள்; அநேக ஆயிரம் சங்கங்கள், அநேக நூறு பிருந்தங்கள் ஆகும். (சங்கம், பிருந்தம் என்பன எண்ணிக்கைகள்)" என்றிருக்கிறது.

தேவரூபிகள் இருவருக்கு சமமாக நிற்பவர்களாக எவர்கள் இருவரை நீர் பார்க்கிறீரோ, இவர்கள் மைந்தனும், துவிவிதனும் ஆவர். யுத்தத்தில் இவர்களுக்கு சமமானவர்கள் எவரும் இல்லை.(6) பிரம்மனின் அனுமதியின் பேரில், அம்ருதம் பருகியவர்களான இவ்விருவரும், தங்கள் ஓஜஸ்ஸால் {சக்தியால்} லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்புகிறார்கள்.(7) 

மதங்கொண்ட குஞ்சரத்தை {யானையைப்} போல் நிற்பவனாக எவனை நீர் பார்க்கிறீரோ, குரோதத்துடனும், பலத்துடனும், சமுத்திரத்தையே கடைந்துவிடக்கூடியவனோ,{8} எவன் வைதேஹிக்காகப் பூர்வத்தில் லங்கைக்கு வந்து உம்மைக் கண்டானோ, இந்த வானரன் மீண்டும் வந்திருப்பதைப் பார்ப்பீராக.(8,9) எவன் சாகரத்தை லங்கனம் செய்தானோ {கடலைக் கடந்து வந்தானோ}, இவன் கேஸரியின் மூத்த புத்திரனாவான். வாதாத்மஜனாக {வாயுவின் மைந்தனாக} அறியப்படும் இவன், ஹனுமான் என்று புகழப்படுகிறான்.(10) காமரூபியும், நல்ல பலமும், ரூபமும் கொண்டவனுமான இந்த ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்தவன்}, தடையில்லாமல் திரியும் பிரபுவை {வாயுதேவனைப்} போல சதா திரிந்து கொண்டிருக்கிறான்.(11) 

இவன் பாலனாக இருந்தபோது, உதிக்கும் பாஸ்கரனைக் கண்டு, பக்ஷிக்க விரும்பி, மூவாயிரம் யோஜனைகள் தொலைவுக்குத் தாவிக் குதித்துச் சென்று[2],{12} "ஆதித்யனைப் பிடிக்கப் போகிறேன். இல்லாமல் போனால், என் பசி அடங்காது" என்று, பலத்தில் செருக்குடன் மனத்தில் நிச்சயித்துக் கொண்டான்.(12,13) தேவர்கள், ரிஷிகள், ராக்ஷசர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத பாஸ்கர தேவனை {சூரியனை} அடைய முடியாமல், அவன் உதிக்கும் கிரியில் {உதய கிரியில்} விழுந்தான்.(14) சைல தலத்தில் விழுந்த இந்தக் கபியின் ஏக ஹனு கொஞ்சம் பங்கம் அடைந்தது {மலையில் விழுந்த அந்தக் குரங்கின் ஒரு தாடை கொஞ்சம் முறிந்தது}. திடமான ஹனுவை {தாடையைக்} கொண்ட காரணத்தால், இவன் ஹனுமான் என்றழைக்கப்படுகிறான்.(15) இந்த ஹரியை {குரங்கான ஹனுமானைக்} குறித்த சத்தியத்தை ஆகமயோகத்தால் {என் தொடர்பில் இருக்கும் ஒருவன் மூலம்} அறிந்தேன்[3]. இவனது பலம், ரூபம், பிரபாவம் ஆகியவற்றை விவரிப்பது சாத்தியமற்றது.(16) இவன் தனியாகவே, தன் ஓஜஸ்ஸின் மூலம் லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்புகிறான். இன்னும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தூமகேதுவை {கொள்ளியை}{17} உமது லங்கையில் வைத்தவன் எவனோ, இந்தக் கபியை எவ்வாறு நீர் மறப்பீர்?(17,18அ)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, 'த்ரியோஜந ஸஹஸ்ரம் து அத்வாநம் அவதீர்ய ஹி' என்பது மூலம். மூவாயிரம் யோஜனைகள் இறங்கினானென்று பொருள். அதாவது - ஹனுமானுடைய தந்தையாகிய கேஸரி மேருபர்வதத்தில் வாஸஞ்செய்பவன். அந்தப் பர்வதம் மிகவும் உயரமுள்ளது. ஆகையால், ஸூர்யனுக்கும் அதன் கொடுமுடிக்கும் நடுவுள்ள மார்க்கம் மூவாயிரம் யோஜனை அளவுடையதென்று சொல்லப்பட்டது. ஆனது பற்றியே இறங்கினதாகச் சொல்லிற்றேயன்றி கிளம்பினதாகச் சொல்லவில்லை. அல்லது - ஸூர்யன் பூமிக்கு மேல் லக்ஷயோஜனை தூரத்திலிருக்கிறானாகையால் 'த்ரியோஜந ஸஹஸ்ரம்' என்றது, பலவாயிரங்களுக்கு உபலக்ஷணமாகக் கொள்க. பலவாயிரம் யோஜனைகள் போனானென்று கருத்து.

[3] இவ்வாறே தேசிராஜுஹனுமந்தராவ்-கே.எம்.கே.மூர்த்தி, வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்புகளில் இருக்கிறது. ஹரிபிரசாத்சாஸ்திரி பதிப்பில், "அந்தக் குரங்குகளின் தொடர்பால் நான் இவனது {ஹனுமானின்} வரலாற்றை அறிந்தேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "நான் இந்தக் குரங்கையும், இவனது முன்வரலாறுகள் அனைத்தையும் அறிவேன்" என்றிருக்கிறது. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "யோகம், ஆகமம் ஆகியவற்றின் மூலம், இந்தக் குரங்கு குறித்த சத்தியத்தை நான் அறிந்தேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆகமம் என்பது முக்கியமான சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வகுப்பைச் சார்ந்ததாகும்" என்றிருக்கிறது. தமிழில் தர்மாலயப் பதிப்பில், "இந்த வானரன் முன்வந்த காரணத்தால் எனக்கு உள்ளபடி எல்லாந் தெரிந்தவனா யிருக்கிறான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "எனக்கு நம்பத்தகுந்த ஒரு ஆப்தனால் இந்த ஹனுமானுடைய ஸங்கதி தெரியவந்தது; இது உண்மையே" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "நம்பத்தகுந்த பெரியோர்களுடன் எனக்கு ஏற்பட்ட பரிச்சயத்தால், இந்த வானரனைப் பற்றிய உண்மைகளை அறிய முடிந்தது" என்றிருக்கிறது.

எவன், இவனது {ஹனுமானின்} அருகில் இருக்கிறானோ, சூரனோ, சியாமள வண்ணனோ {கரிய நிறத்தவனோ}, பத்மங்களைப் போன்ற கண்களைக் கொண்டவனோ,{18ஆ} இக்ஷ்வாகுக்களில் அதிரதனோ, பௌருஷத்திற்காக {ஆண்மைக்காக} உலகில் புகழ்பெற்றவனோ, எவன் தர்மத்தில் தடுமாற்றம் இல்லாதவனோ, தர்மத்தை மீறாதவனோ,{19} எவன் பிரம்மாஸ்திரத்தையும், மந்திரங்களையும் கற்றுணர்ந்தவனோ, வேதமறிந்தவர்களில் சிறந்தவனோ, எவன் பாணங்களால் ககனத்தை {ஆகாசத்தைக்} கிழித்து விடக்கூடியவனோ, பர்வதங்களை பிளந்து விடக்கூடியவனோ,{20} எவன் மிருத்யுவை {யமனைப்} போன்ற குரோதம் கொண்டவனோ, சக்ரனை {இந்திரனைப்} போன்ற பராக்கிரமம் கொண்டவனோ, எவனுடைய பாரியையான சீதையை ஜனஸ்தானத்தில் இருந்து நீர் அபகரித்து வந்தீரோ,{21} அத்தகைய இவனே அந்த ராமன். இராஜரே, இவன் உம்முடன் போர் புரிய வந்திருக்கிறான்[4].(18ஆ-22அ)

[4] தோரணத்த மணி வாயில்மிசை சூல்
நீரணைத்த முகில் ஆமென நின்றான்
ஆரணத்தை அரியை மறை தேடும்
காரணத்தை நிமிர் கண் கொடு கண்டான்(6876)
மடித்த வாயினன் வழங்கு எரி வந்து
பொடித்து இழிந்த விழியன் அதுபோழ்தின்
இடித்த வன்திசை எரிந்தது நெஞ்சம்
துடித்த கண்ணினொடு இடத்திரள் தோள்கள்(6877)

- கம்பராமாயணம் 6876,6877ம் பாடல்கள், யுத்த காண்டம், இராவணன் வானரத் தானை காண் படலம்

பொருள்: மணிகள் பதிக்கப்பட்ட தோரணவாயிலின் மீது, நீரைக் கருவாக உட்கொண்ட கருமேகம் போல நின்ற ராவணன், நான்வேதங்களின் வடிவான திருமாலை, முழுவதும் அறிய அம்மறைகள் இன்னும் தேடிக் கொண்டிருக்கும் காரணப் பொருளை, நிமிர்ந்த கண்களால் கண்டு, உதட்டைக் கடித்தான். ஒளிர்கின்ற சினத்தீ தோன்றி, சிறுசிறு பொறிகளாக விழுகின்ற கண்களுடையவன் ஆனான். அப்போது வலிய திசைகளில் இடி போன்ற ஒலி உண்டாயிற்று. அவனது நெஞ்சம் எரிந்தது. அவனது கண்களும், திரண்ட தோள்களும் இடப்பக்கத்தில் துடித்தன.

எவன், இவனது {ராமனின்} தக்ஷிண {வலப்} பக்கத்தில் இருக்கிறானோ, சுத்தமான ஜாம்பூநதத்தின் பிரபையையும்,{22ஆ} விசாலமான மார்பையும், சிவந்த கண்களையும், கறுத்துச் சுருண்ட தலைமயிரையும் கொண்டவன் எவனோ,{22ஆ,23அ} லக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்ட இவன், இவனுடன் {ராமனுடன்} பிறந்தவனாகவும், பிராணனுக்கு நிகரான பிரியத்திற்குரியவனாகவும் இருக்கிறான். நயத்திலும் {திறனிலும்}, யுத்தத்திலும் குசலனும் {நல்ல தேர்ச்சியுள்ளவனும்}, சர்வ சஸ்திரங்களையும் சிறப்பாக அறிந்தவர்களில் முதன்மையானவனும்,(22ஆ-24அ) பகைவரைப் பொறுத்துக் கொள்ளாதவனும், வெல்லப்பட முடியாதவனும், தேஜஸ்வியும், புத்திமானும், பலவானுமான இவன், நித்தியம் ராமனின் தக்ஷிண பாஹுவாகவும் {வலது கையாகவும்}, வெளியில் திரியும் பிராணனாகவும் {உயிராகவும்} இருக்கிறான்.(24ஆ,25அ) இவன் ராகவ அர்த்தத்திற்காக {ராமனுக்காக} ஜீவிதத்தையும் பொருட்படுத்த மாட்டான். இவனும் யுத்தத்தில்  சர்வ ராக்ஷசர்களையும் கொல்லும் நோக்கத்துடன் இருக்கிறான்.(25ஆ,26அ)

எவர் ராமனின் அருகில் ஸவ்ய {இடது} பக்கத்தை அடைந்து நிற்கிறாரோ, இவர் ராக்ஷச கணங்களால் கைவிடப்பட்ட ராஜா விபீஷணரே ஆவார்.(26ஆ,27அ) ஸ்ரீமான் ராஜராஜனால் {ராமனால்} லங்கையில் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும் இவரும் {விபீஷணரும்}, பெருஞ்சினத்துடன் உம்மிடம் யுத்தம்புரிய வந்திருக்கிறார்.(27ஆ,28அ)

மத்தியில் கிரியைப் போல் அசலமாக {அசையாமல்} நிற்கிறவனும், சர்வ சாகை மிருகேந்திரர்களுக்கும் தலைவனும், அமிதௌஜஸனுமான {எல்லையில்லா சக்தி படைத்தவனுமான} எவனைப் பார்க்கிறீரோ,{28ஆ,29அ} எவன் தேஜஸ், புகழ், புத்தி, பலம், உன்னதப் பிறப்பு ஆகியவற்றால் பர்வதங்களில் இமயத்தைப் போல கபிக்களின் மத்தியில் விளங்குகிறானோ,{29ஆ,30அ} எவன் யூதபர்கள் {குரங்குக்குழு தலைவர்கள்} சஹிதனாக, அடர்ந்த மரங்களுடையதும், மலையரண்களுடன் கூடியதும், அணுகுதற்கரியதுமான கிஷ்கிந்தை என்ற குகையில் வசித்துக் கொண்டிருக்கிறானோ,{30ஆ,31அ} எதில் லக்ஷ்மி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாளோ, எதில் தேவர்களும், மனுஷ்யர்களும் ஆசைகொள்வார்களோ, நூறு புஷ்கரங்களுடன் {தாமரைகளுடன்} கூடிய இந்தக் காஞ்சன மாலை {பொன் மாலை} எவனிடம் சோபிக்கிறதோ {அழகுடன் மிளிர்கிறதோ},{31ஆ,32அ} இந்த சுக்ரீவனுக்கு, இந்த மாலையையும், {வாலியின் மனைவியான} தாரையையும், சாஷ்வதமான கபிராஜ்ஜியத்தையும், வாலியைக் கொன்ற பிறகு ராமன் கொடுத்திருக்கிறான்.(28ஆ-33அ)

அறிஞர்கள், நூறு நூறாயிரங்களைக் கோடி என்று சொல்கிறார்கள். நூறாயிரம் கோடிகள் சங்கு {சங்கம்} என்று அழைக்கப்படுகிறது[5].(33ஆ,34அ) நூறாயிரம் சங்குகள் மஹா சங்கு என்று சொல்லப்படுகிறது. நூறாயிரம் மஹா சங்குகள் விருந்தம் என்று அழைக்கப்படுகிறது.{34ஆ,35அ} நூறாயிரம் விருந்தங்கள் மஹாவிருந்தம் என்று சொல்லப்படுகிறது. நூறாயிரம் மஹா விருந்தங்கள் பத்மம் என்று அழைக்கப்படுகிறது.{35ஆ,36அ} நூறாயிரம் பத்மங்கள் மஹாபத்மம் என்று சொல்லப்படுகிறது. நூறாயிரம் மஹாபத்மங்கள் கர்வம் என்று அழைக்கப்படுகிறது.{36ஆ,37அ} நூறாயிரம் கர்வங்கள் மஹா கர்வம் என்று சொல்லப்படுகிறது. நூறாயிரம் மஹா கர்வங்கள் சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது.{37ஆ,38அ} நூறாயிரம் சமுத்திரங்கள் ஓகம் என்று சொல்லப்படுகிறது. நூறாயிரம் ஓகங்கள் மஹா ஓகம் என்று அறியப்படுகிறது.(34ஆ-39அ)

[5] செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பில், "நூறாயிரம் கோடிகள் சங்கு என்று அழைக்கப்படுகிறது" என்பது மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இங்கே 34ஆ முதல் 42ம் சுலோகம் வரை சொல்லப்பட்டிருக்கும் கணக்குகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இப்படியே ஆயிரங்கோடிகளாகவும், நூறு சங்குகளாகவும்,{39ஆ} ஆயிரம் மஹா சங்குகளாகவும், அப்படியே நூறு விருந்தங்களாகவும், ஆயிரம் மஹாவிருந்தங்களாகவும், அப்படியே நூறு பத்மங்களாகவும்,{40} ஆயிரம் மஹாபத்மங்களாகவும், அப்படியே நூறு கர்வங்களாகவும், நூறு சமுத்திரங்களாகவும், அப்படியே மஹாக ஓகமாகவும்,{41} இப்படியே கோடி மஹா ஓகமாகவும், சமுத்திரத்தை ஒப்பாகவும், மந்திரிகளால் சூழப்பட்டவராக இருக்கும் விபீஷணரோடும் சேர்ந்து,{42} நித்தியம் பெரும்படையால் சூழப்பட்டவனும், மஹாபலவானும், பராக்கிரமம் கொண்டவனுமான வானரேந்திரன் சுக்ரீவன், உம்மிடம் யுத்தம் புரிய வந்திருக்கிறான்.(39ஆ-43) 

மஹாராஜரே, கொடுங்கிரஹங்களுக்கு ஒப்பாக வந்திருக்கும் இந்த வாஹினியை {படையைப்} பார்த்து, அதன்பிறகு எப்படி ஜயம் வாய்க்குமோ, பகைவர்களால் தோல்வி உண்டாகாதோ அப்படிப்பட்ட பரம பிரயத்னத்தை {பெரும் முயற்சியைச்} செய்வதே தகும்" {என்றான் சுகன்}.(44)

யுத்த காண்டம் சர்க்கம் – 028ல் உள்ள சுலோகங்கள்: 44

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை