Monday 26 February 2024

பழையவற்றை நினைவுகூர்ந்த சீதை | சுந்தர காண்டம் சர்க்கம் - 33 (32)

Seetha recollected the past | Sundara-Kanda-Sarga-31 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையிடம், அவள் ராமனின் மனைவிதானா என்று கேட்டு உறுதி செய்து கொண்ட ஹனுமான்; தன் கதையைச் சொன்ன சீதை...

Seetha speaking to Hanuman

அப்படி அந்த மரத்தில் இருந்து இறங்கி வந்தவனும், பவள நிற முகத்தையும், கிருபைக்குரிய பணிவான வேஷத்தையும் கொண்டவனும், வணங்கியபடியே நெருங்கியவனும்,{1} மஹாதேஜஸ்வியும், மாருதாத்மஜனுமான {வாயு மைந்தனுமான} அந்த ஹனுமான், சிரசுக்கு மேல் கைகளைக் கூப்பிக் கொண்டு சீதையிடம் மதுரமான குரலில் {பின்வருமாறு} பேசினான்:(1,2) “கிழிந்த பட்டுத் துணியை உடுத்தியவளே, பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளே, அநிந்திதையே {நிந்திக்கத்தகாதவளே}, மரத்தின் சாகையை {கிளையைப்} பற்றிக் கொண்டு நின்றிருக்கும் நீ யார்?(3) தாமரை இதழ்கள் இரண்டில் இருந்து சிதறும் நீரைப் போல, உன்னுடைய நேத்திரங்களில் இருந்து, சோகத்தில் பிறந்த கண்ணீர் வழிகிறதே, அஃது ஏன்?(4) சோபனையே, {அழகானவளே}, நீ ஸுரர்களுக்கோ {தேவர்களுக்கோ}, அஸுரர்களுக்கோ, நாக, கந்தர்வ, ராக்ஷசர்களுக்கோ, யக்ஷர்களுக்கோ, கின்னரர்களுக்கோ பிறந்தவளா?(5) அழகிய முகம் கொண்டவளே, ருத்திரர்களிலோ, மருத்துகளிலோ, வசுக்களிலோ[1] நீ யாருக்கு உரியவள்? அழகிய இடையைக் கொண்டவளே, நீ எனக்கு தேவதையைப் போலத் தெரிகிறாய்.(6)

[1] ருத்திரர்கள் 11 பேர். இவர்கள் சிவனின் அம்சங்கள் ஆவர். மருத்கணங்கள், காற்று மற்றும் புயலின் தேவர்களாவர். இவர்கள் மொத்தம் 27 பேர் முதல் 60 வரை புராணங்களின் வெவ்வேறு உரைகளில், வெவ்வேறு எண்ணிக்கையில் சொல்லப்படுகிறார்கள். வசுக்கள் 8 பேர். இவர்கள் தரன், ஆபன், அநலன், அநிலன், பிரத்யுஷன், பிரபாசன்[1.1], சோமன், துருவன் என்று மஹாபாரதம் சொல்கிறது.

 

[1.1] இந்த அஷ்ட (எட்டு) வசுக்களில் பிரபாசன் என்னும் வசு, தனது மனைவி சுனந்தாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, காமதேனு பசுவைக் கவர்ந்து செல்கையில், வசிஷ்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு - கங்கை தம்பதியருக்கு பீஷ்மராகப் பிறந்தான் என்று மகாபாரதத்தின், ஆதிபர்வம் 99ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

             


நீ சர்வசிரேஷ்ட குணங்களுடன் {சிறந்த குணங்கள் அனைத்துடன்} கூடியவளும், சந்திரனால் கைவிடப்பட்டு, விபுதலத்திலிருந்து {சொர்க்கத்திலிருந்து} வீழ்ந்தவளும், ஜ்யோதிகளில் சிரேஷ்டையுமான {நக்ஷத்திரங்களில் சிறந்தவளுமான} ரோகிணியா?(7) அஸிதேக்ஷணே {கருவிழியாளே}, கோபத்தாலோ, மோஹத்தாலோ {அறியாமையாலோ}, தன் பர்த்தா வசிஷ்டரின் கோபத்திற்கு உள்ளான கல்யாணியான அருந்ததி நீ இல்லையா?(8,9அ)

Hanuman spoke to Seetha in Ashoka garden

ஸுமத்யமையே {அழகான இடையைக் கொண்டவளே}, இவ்வுலகத்திலிருந்து அவ்வுலகத்திற்குச் சென்ற எவருக்காகவோ நீ வருந்திக் கொண்டிருக்கிறாயே, அவர் உன்னுடைய புத்திரனா?, பிதாவோ? பர்த்தாவா?(9ஆ,10அ) அழுவதனாலும், அதிகப்படியாக சுவாசிப்பதனாலும் {பெருமூச்சு விடுவதாலும்}, பூமியை ஸ்பரிசிப்பதாலும் {தரையைத் தொட்டுக் கொண்டிருப்பதாலும்}, ராஜ அடையாளங்களைத் தரித்திருப்பதாலும் உன்னை தேவியாக {தேவர்களைச் சேர்ந்தவளாக} நான் நினைக்கவில்லை[2].(10ஆ,11அ) உன் அங்க அடையாளங்களையும், லக்ஷணத்தையும் காணும் நான், உன்னை மஹிஷியாகவோ {பட்டத்து ராணியாகவோ}, பூமிபாலனின் ராஜகன்னிகையாகவோ நினைக்கிறேன்.(11ஆ,12அ) ஜனஸ்தானத்திலிருந்து ராவணனால் பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட சீதையாக நீ இருந்தால், கேட்கும் என்னிடம் சொல்வாயாக. நீ பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக.(12ஆ,13அ) உன்னுடைய தைன்யரூபம் {பரிதாபத்திற்குரியநிலை}, தபத்துடன் கூடிய அதிமானுஷ்ய வேஷம் ஆகியவற்றின்படி {பார்த்தால்}, நீ நிச்சயமாக ராமரின் மஹிஷியாகவே இருக்க வேண்டும்” {என்றான் ஹனுமான்}.(13ஆ,14அ)

[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “தேவர்கள் கண்ணீர் சிந்துவதில்லை; நடக்கும் போது தரையைத் தீண்டுவதுமில்லை” என்றிருக்கிறது.

அவனது வசனத்தைக் கேட்ட அந்த சீதை, ராம கீர்த்தனத்தால் மகிழ்ச்சியடைந்து, மரத்தில் இருந்த ஹனுமந்தனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள்:(14ஆ,15அ) “பிருத்வியிலுள்ள ராஜசிம்ஹங்களில் முக்கியரும், விதிதாத்மரும், சத்ரு சைனியத்தை எரிப்பவருமான தசரதரின் மருமகள் நான்.(15ஆ,16அ) வைதேஹரும், மஹாத்மாவுமான ஜனகரின் மகள் நான். மதிமிக்க ராமரின் பாரியையான {மனைவியான} என் பெயர் சீதை.(16ஆ,17அ) 

நான் அங்கே ராகவரின் நிவேசனத்தில் {ராமரின் மாளிகையில்}, மானுஷர்களுக்குரிய போகங்களை அனுபவித்துக் கொண்டும், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டும் பனிரெண்டு ஆண்டுகள் இருந்தேன்.(17ஆ,18அ) பிறகு, பதிமூன்றாவது வருஷத்தில், ராஜா {தசரதர்}, உபாத்யர்களுடன் சேர்ந்து, இக்ஷ்வாகுநந்தனரை {இக்ஷ்வாகு குலத்திற்கு ஆனந்தத்தை அளிப்பவரான ராமரை} ராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கத் தொடங்கினார்[3].(18ஆ,19அ) இராகவரின் {ராமரின்} அபிஷேகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, கைகேயி என்ற பெயர் கொண்ட தேவி, தன் பர்த்தாவிடம் {கணவர் தசரதரிடம் பின்வரும்} வசனத்தைச் சொன்னாள்:(19ஆ,20அ) “இராமனுக்கு அபிஷேகம் செய்துவைத்தால், நான் தினமும் தண்ணீர் அருந்தவோ, போஜனம் உண்ணவோ மாட்டேன். இதுவே என் ஜீவித அந்தமாகும் {என் வாழ்வின் முடிவுநாளாக இருக்கும்}.(20ஆ,21அ) நிருபதிசத்தமரே {மன்னர்களில் சிறந்தவரே}, எது பிரியத்துடன் உம்மால் சொல்லப்பட்டதோ, {எனக்கு வரம் தருவதாக நீர் சொன்ன} அந்த வாக்கியம் ஆகாத காரியமாகக் கூடாதெனில் {நீர் சொன்ன சொல் தவறாமல் இருக்க வேண்டுமென்றால்} ராகவன் வனத்திற்குச் செல்ல வேண்டும்” {என்றாள் கைகேயி}.(21ஆ,22அ)

[3] 3:17:4,5ல்  இதையே ராவணனிடமும் சீதை சொல்கிறாள். செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில், ஆரண்ய காண்டத்தில் உள்ள இந்த சர்க்கத்தில் “ஓராண்டு அயோத்தியில் வாழ்ந்தேன்” என்று ராவணனிடம் சீதை சொல்வதாக வருகிறது. ஆனால் அதே பிபேக்திப்ராய் பதிப்பின் சுந்தர காண்டத்தில் உள்ள இந்த சர்க்கத்தில், “பனிரெண்டு ஆண்டுகள் அயோத்தியில் வாழ்ந்தேன்” என்று ஹனுமானிடம் சீதை சொல்வதாக வருகிறது.

தன் சொல்லை சத்தியமாக்குபவரான அந்த ராஜா {தசரதர்{, குரூரமானதும், பிரியமற்றதுமான கைகேயியின் வசனத்தைக் கேட்டும், அந்த தேவிக்கான வரதானத்தை[4] நினைவுகூர்ந்தும் மயக்கமடைந்தார்.(22ஆ,23அ) பிறகு, சத்தியத்திலும், தர்மத்திலும் உறுதியாக நிலைத்து நிற்பவரும், முதிர்ந்தவருமான ராஜா {தசரதர்}, புகழ்பெற்றவரான தம் ஜேஷ்ட புத்திரனிடம் {மூத்த மகன் ராமரிடம்}, அழுது கொண்டே ராஜ்ஜியத்தை யாசித்தார்.(23ஆ,24அ) ஸ்ரீமானானவர் {ராமர்}, தன் பிதாவின் வசனம் அபிஷேகத்தைவிடப் பரம பிரியத்திற்குரியது என்று மனத்தால் முதலில் ஏற்றுக் கொண்டு, பிறகு  வாக்கால் {அதை} ஏற்றுக் கொண்டார்.(24ஆ,25அ) 

[4] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “தேவாசுரப் போரில் கைகேயிக்கு தசரதன் கொடுப்பதாகச் சொன்ன வரத்தை இது குறிப்பிடுகிறது” என்றிருக்கிறது.

சத்தியபராக்கிரமரான ராமர் {எப்போதும் பிறருக்கு} தத்தம் செய்வாரேயன்றி {பிறரிடம் இருந்து} பெற்றுக் கொள்ளமாட்டார். ஜீவிதத்திற்கு ஹேதுவாகக் கூட, சிறிதளவேனும் பிரியமற்றவகையில் பேசவும்மாட்டார்.(25ஆ,26அ) பெரும் புகழ்பெற்றவரான அவர் {ராமர்}, பெரும் மதிப்புமிக்க உத்தரீயங்களைக் கைவிட்டு {மரவுரி தரித்துக் கொண்டு}, மனத்தால் ராஜ்ஜியத்தைக் கைவிட்டு, என்னைத் தமது ஜனனியிடம் {அன்னை கௌசல்யையிடம்} ஒப்படைத்தார்.(26ஆ,27அ) ஸ்வர்க்கமேயென்றாலும் அவரில்லாமல் வசிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அத்தகையவளான நான், அவருக்கு முன்பே துரிதமாகப் புறப்பட்டு வனசாரிணியானேன்.(27ஆ,28அ) மஹாபாக்யவானும், மித்ரநந்தனருமான சௌமித்ரி, பூர்வஜரைப் {பெரும் நற்பேற்றைப் பெற்றவரும், நண்பர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவரும், சுமித்திரையின் மகனுமான லக்ஷ்மணர், காட்டுக்குச் செல்லும் அண்ணனைப்} பின்தொடரும் அர்த்தத்திற்காக, எனக்கு முன்பே {மரவுரியால் தம்மை} அலங்கரித்துக் கொண்டார்.(28ஆ,29அ) 

Seetha speaking to Hanuman

தலைவரின் {தசரதரின்} ஆணையை பஹுமானத்துடன் ஏற்ற நாங்கள், பூர்வத்தில் காணாததும், கம்பீர தரிசனந்தருவதுமான வனத்திற்குள் திடவிரதத்துடன் பிரவேசித்தோம்.(29ஆ,30அ) தண்டகாரண்யத்தில் வசித்து வந்தபோது, அந்த அமிதௌஜசரின் பாரியையான {பெரும் வீரம் கொண்ட ராமரின் மனைவியான} நான், துராத்மாவான ராக்ஷசன் ராவணனால் அபகரிக்கப்பட்டேன்.(30ஆ,31அ) அவன், எனக்கு இரண்டு மாசங்கள் ஜீவித்திருக்கும் அனுக்கிரகத்தைச் செய்திருக்கிறான். எனவே, இரண்டு மாசங்களுக்குப் பிறகு, ஜீவிதத்தை இழப்பேன்” {என்றாள் சீதை}.(31ஆ,32) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 33ல் உள்ள சுலோகங்கள்: 32


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை