Doubt of Seetha | Sundara-Kanda-Sarga-34 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தான் ராம தூதன் என்ற ஹனுமான்; இவன் ராவணனாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்த சீதை; தன்னை நம்புமாறு சீதையை வேண்டிய ஹனுமான்...
ஹரிபுங்கவனான ஹனுமான், துக்கத்திற்கு மேல் துக்கத்தில் மூழ்கியிருப்பவளது வசனத்தை {சீதையின் சொற்களைக்} கேட்டு, சாந்தமடையும் வகையில் {பின்வரும்} மறுமொழியைச் சொன்னான்:(1) “தேவி வைதேஹி, நான் ராமரின் சந்தேசத்துடன் {செய்தியுடன்} உன்னிடம் வந்திருக்கும் தூதனாவேன். குசலீயான {நலமுடன் கூடிய} ராமர், உனக்கும் குசலத்தை {நலத்தை} அறிவிக்கச் சொன்னார்.(2) தேவி, எவர் வேதவித்துகளில் சிறந்தவரோ, வேதத்தையும், பிரம்மாஸ்திரத்தையும் அறிந்தவரோ, அத்தகைய தாசரதியான {தசரதரின் மகனான} ராமர், உன்னுடைய குசலத்தை {நலத்தை} விசாரித்தார்.(3) உன் பர்த்தாவை {கணவரான ராமரை} அனுசரிக்கும் பிரியரும், மஹாதேஜஸ்வியும், சோகசந்தாபத்துடன் கூடியவருமான லக்ஷ்மணரும், சிரம்பணிந்து உனக்கு வணக்கந்தெரிவித்தார்” {என்றான் ஹனுமான்}.(4)
அந்த நரசிம்ஹர்களின் குசலத்தை {மனிதர்களில் சிங்கங்களான ராமலக்ஷ்மணர்களின் நலத்தைக்} கேட்ட அந்த தேவி, சர்வ அங்கங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்க, ஹனுமந்தனிடம் {பின்வருமாறு} பேசினாள்:(5) “நரன் ஜீவித்திருந்தால் {மனிதன் பிழைத்திருந்தால்}, நூறு வருஷங்கள் கழிந்தாயினும் ஆனந்தம் பெறுவான்” என்ற இந்த உலகப் பழமொழி எனக்கு மங்கலமானதாக {உண்மையானதாகத்} தெரிகிறது” {என்றாள் சீதை}.(6)
அணுகி வந்தவனிடம் {ஹனுமானிடம்} அற்புதமான பிரீதியை அவள் {அன்பை சீதை} வெளிப்படுத்தினாள். அவர்கள் இருவரும், பரஸ்பரம் விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} பேசிக்கொண்டனர்.(7) ஹரியூதபனான {குரங்குக்குழுத் தலைவனான} ஹனுமான், சோகத்தால் பீடிக்கப்பட்ட அத்தகைய சீதையின் அந்த வசனத்தைக் கேட்டு, சமீபத்தில் {அவளை நெருங்கிச்} சென்றான்.(8) எவ்வளவுக்கு எவ்வளவு அந்த ஹனுமான் சமீபத்தில் சென்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சீதை, அவனை ராவணனென சந்தேகித்தாள்.(9) “அஹோ, சீ, இவனிடம் இதைச் சொல்லி நான் தவறு செய்துவிட்டேன். இவன் ரூபாந்தரமடைந்த {வேறு வடிவத்தை அடைந்த} அந்த ராவணனேதான்” {என்று நினைத்தாள்}.(10)
களங்கமற்ற அங்கங்களுடன் கூடியவளும், சோகத்தில் மெலிந்தவளுமான அவள், அந்த அசோக சாகையை {அசோக மரக்கிளையை} விட்டுவிட்டு, அந்த தரணியிலேயே {வெறுந்தரையிலேயே} அமர்ந்தாள்.(11) மஹாபாஹுவான ஹனுமானோ, துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், பயத்தால் கலங்கியவளுமான அந்த ஜனகாத்மஜையை {சீதையை} வணங்கினான். அவளோ, பயத்தால் நடுங்கியவளாக மீண்டும் அவனைப் பாராதிருந்தாள்.(12,13அ) சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகத்தைக் கொண்ட சீதை, வணங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டு, பெருமூச்சுவிட்டபடியே, வானரனிடம் மதுர ஸ்வரத்தில் {பின்வருமாறு} பேசினாள்:(13ஆ,14அ) “மாயத்தைப் பயன்படுத்தும் மாயாவியான ராவணனாக நீ இருந்தால், மேலும் எனக்கு சந்தாபத்தையே {வருத்தத்தையே} உண்டாக்குபவனாவாய். இது சோபிக்காது {நன்மையை விளைவிக்காது}.(14ஆ,15அ) சொந்த ரூபத்தைக் கைவிட்டவனும், பரிவ்ராஜக ரூபத்தில் {துறவியின் வடிவில்} இருந்தவனுமாக என்னால் ஜனஸ்தானத்தில் காணப்பட்டவன் எவனோ, அதே ராவணன்தானே நீ?.(15ஆ,16அ) காமரூப நிசாசரா {விரும்பிய வடிவை ஏற்கவல்ல இரவுலாவியே}, உபவாசத்தால் மெலிந்து, தீனமாக {பரிதாப நிலையில்} இருப்பவளான எனக்கு மீண்டும் மீண்டும் இப்படி சந்தாபத்தை {வருத்தத்தை} உண்டாக்குவது சோபிக்காது {உனக்கு நல்லதைச் செய்யாது}.(16ஆ,17அ)
அல்லது, என்னால் எது சந்தேகிக்கப்படுகிறதோ, அஃது அப்படி இல்லாமலும் இருக்கக்கூடும். எனவேதான், என் மனத்தில் உன் தரிசனத்தால் பிரீதி எழுகிறது[1].(17ஆ,18அ) நீ ராமரின் தூதனாக வந்திருந்தால், பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக. ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, ராமகதை என் பிரியத்திற்குரியது. {எனவேதான், அதை} உன்னிடம் கேட்க விரும்புகிறேன்.(18ஆ,19அ) வானரா, {எனக்குப்} பிரியரான ராமரின் குணங்களை உரைப்பாயாக. சௌம்யா {மென்யானவனே}, வெள்ளம் நதிக்கரையை {கரைப்பதைப்} போல நீ என் சித்தத்தைக் கரைக்கிறாய்.(19ஆ,20அ) நீண்ட காலத்திற்கு முன் அபகரிகப்பபட்ட நான், இவ்வாறு ராகவரால் அனுப்பப்பட்ட வனௌகஸனை {வனத்தில் வாழும் இப்படிப்பட்டக் குரங்கைப்} பார்க்கிறேன். அஹோ, இந்த ஸ்வப்னம் {கனவு} சுகமானது.(20ஆ,21அ) வீரரான ராகவரை, லக்ஷ்மண சகிதராக பார்த்திருந்தால் நான் {இவ்வாறு} அவதிப்பட மாட்டேன். எனக்கு {இந்த} ஸ்வப்னமும் கொடுமையானதே.(21ஆ,22அ)
[1] அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றக்குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆகுகஇரக்கமே ஆக வந்து, இங்கு எம்பிரான் நாமம் சொல்லிஉரிக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ- கம்பராமாயணம் 5254ம் பாடல், உருக்காட்டுப்படலம்பொருள்: {இவன்} அரக்கனாகவே இருக்கட்டும்; வேறு ஓர் அமரனாகவும் {தேவனாகவும்} இருக்கட்டும்; அல்லாமல் குரங்கு இனத்தைச் சார்ந்த ஒருவனாகவே இருக்கட்டும்; {அவன் கொண்டது} கொடுமை ஆகவே இருக்கட்டும்; இரக்கமாகவே ஆகட்டும்; இங்கு வந்து எம்பிரான் {என் கணவர் ராமரின்} பெயரைச் சொல்லி உணர்வை உருக்கினான்; உயிரைத் தந்தான். இதைவிடச் சிறந்த உதவி உண்டோ?
ஸ்வப்னத்தில் வானரத்தைக் கண்டால், செழிப்படைவது {நல்ல செய்திக்கு} சாத்தியமில்லை. நானோ செழிப்பை {நலம் குறித்த செய்தியை} பெற்றிருக்கிறேன்[2]. {எனவே}, இதை ஸ்வப்னமாக நான் நினைக்கவில்லை.(22ஆ,23அ) இது சித்தமோஹந்தானோ {மதிமயக்கந்தானோ}? இஃது உன்மத்தத்தால் {பைத்தியக்காரத்தனத்தால்} விளையும் வாதகதியோ {மனச்சமநிலையின்மையோ}[3]? விகாரமோ {மனம்பிறழ்தலோ}? இது மாயமாகத் தெரியும் கானல் நீரோ?(23ஆ ,24அ) அல்லது, இஃது உன்மத்தமாகவோ {பைத்தியமாகவோ}, உன்மத்தத்தின் லக்ஷணமான மோஹமாகவோ {மயக்கமாகவோ} இல்லாதிருக்கக்கூடும். நான் என்னையும், இந்த வனௌகஸனையும் {குரங்கையும்} அறிந்திருக்கிறேன்” {என்றாள் சீதை}.(24ஆ,25அ)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே செழிப்பு என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும். இராமனின் தூதனான ஹனுமானைக் கண்டதில் சீதை பெரும் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறாள்” என்றிருக்கிறது.
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் ஆகியவை ஒன்றையொன்று எதிர்த்துப் போராடும் உடலில் உள்ள மூன்று தோஷங்களாகும். இங்கே குறிப்பிடப்படுவது வாதத்தால் {வாயுவால்} உண்டாவதாகும்” என்றிருக்கிறது.
இவ்வாறும், பலவாறும் பலாபலங்களை {பலங்களையும், பலவீனங்களையும்} கருத்தில் கொண்ட சீதை, காமரூபியான ராக்ஷசாதிபன் {ராவணன்} என்றே அவனை நினைத்தாள்.(25ஆ,26அ) தனுமத்யமையும், ஜனகாத்மஜையுமான {மெல்லிடையாளும், ஜனகனின் மகளுமான} அந்த சீதை, இவ்வாறு புத்தியை அமைத்துக் கொண்ட பிறகு, அந்த வானரனிடம் {ஹனுமானிடம்} எந்த மறுமொழியும் கூறாதிருந்தாள்.(26ஆ,27அ)
சீதையின் சிந்தையைப் புரிந்து கொண்டவனும், மாருதாத்மஜனுமான {வாயுமைந்தனுமான} ஹனுமான், அப்போது, காதுகளுக்கு இனிமையானவையும், அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான சொற்களை {பின்வருமாறு} சொன்னான்:(27ஆ,28அ) “ஆதித்யனை {சூரியனைப்} போன்ற தேஜஸ்வியும், சசியை {சந்திரனைப்} போன்ற லோககாந்தரும் {உலகத்தவரை ஈர்ப்பவரும்}, வைஷ்ரவண தேவனை {குபேரனைப்} போன்ற சர்வலோக ராஜாவும், விஷ்ணுவைப் போன்ற புகழையும், விக்கிரமத்தையும் கொண்டவரும்,(28ஆ,29) தேவன் வாசஸ்பதியை {பிருஹஸ்பதியைப்} போன்ற சத்தியவாதியும், மதுரவாக்குள்ளவரும், ரூபவானும், நற்பாக்கியம் கொண்டவரும், ஸ்ரீமானும், கந்தர்பனை போன்ற மூர்த்திமானும் {உடல் கொண்டு வந்த மன்மதனைப் போன்றவரும்},(30) உரிய காலத்தில் குரோதம் கொள்பவரும், தகுந்த சிரேஷ்டரும் {தகுதி வாய்ந்தவரும், சிறந்தவரும்}, மஹாரதரும், உலகத்தைத் தோள்களின் நிழலில் தாங்கும் மஹாத்மாவுமான(31) ராகவர் {ராமர்}, மிருகரூபத்தை {மான் வடிவைக்} கொண்டு எவனால் அப்புறப்படுத்தப்பட்டு, சூனியமான ஆசிரமபதத்தில் உன்னை அபகரித்தானோ, அத்தகையவன் {ராவணன்} அதற்கான பலனை அடைவதை நீ காண்பாய்.(32)
பாவகனை {அக்னியைப்} போல ஜொலிப்பவையும், கோபத்தில் ஏவப்படப்போகிறவையுமான கணைகளால் போரில் ராவணனை சீக்கிரமே கொல்லப்போகும் வீரியவான் எவரோ,{33} அவரால் {ராமரால்} அனுப்பப்பட்ட தூதனாக இங்கே உன் முன்னே நான் வந்திருக்கிறேன். உன் பிரிவெனும் துக்கத்தால் பீடிக்கப்பட்டவர் {ராமர்}, உனக்கு குசலத்தை {நலத்தைச்} சொல்லி அனுப்பினார்.(33,34) மஹாதேஜஸ்வியும், சுமித்ரானந்தவர்தனரும் {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவரும்}, மஹாபாஹுவுமான அந்த லக்ஷ்மணரும் வணக்கத்துடன் உனக்கு குசலத்தை {நலத்தைச்} சொல்லியனுப்பினார்.(35) தேவி, ராமரின் சகாவும், முக்கிய வானரர்களின் ராஜாவும், சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த வானரரும் உனக்கு குசலத்தை {நலத்தைச்} சொல்லி அனுப்பினார்.(36) சுக்ரீவருடனும், லக்ஷ்மணருடனும் கூடிய ராமர், நித்தியம் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார். வைதேஹி, ராக்ஷசிகளின் வசத்தை அடைந்தும், அதிஷ்டத்தால் ஜீவித்திருக்கிறாய் {நற்பேற்றால் நீ பிழைத்திருக்கிறாய்}.(37)
சீக்கிரமே, ராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும், அமிதௌஜஸரான {அளவில்லா ஆற்றலுடைய} சுக்ரீவரையும் கோடிக்கணக்கான வானரர்களின் மத்தியில் நீ காணப்போகிறாய்.(38) பெருங்கடலைக் கடந்து லங்காநகரில் பிரவேசித்தவனும், ஹனுமான் என்ற பெயர் கொண்ட வானரனுமான நான், சுக்ரீவரின் அமைச்சனாவேன்.(39) பராக்கிரமத்தை உறுதி செய்து, துராத்மாவான ராவணனின் மூர்த்தத்தில் {தலையில்} பாதத்தை வைத்து, உன்னை தரிசிக்க வந்தவன் நான்.(40) தேவி, நான் எத்தகையவனென நீ புரிந்து கொண்டாயோ, அத்தகையவனல்லன். உன்னுடைய இந்த சந்தேகத்தைக் கைவிடுவாயாக. நான் சொல்வதை நம்புவாயாக” {என்றான் ஹனுமான்}.(41)
சுந்தர காண்டம் சர்க்கம் – 34ல் உள்ள சுலோகங்கள்: 41
Previous | | Sanskrit | | English | | Next |