Be my queen | Aranya-Kanda-Sarga-47 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன் தன்னைக் குறித்துச் சொல்லி, சீதையைத் தன் மனைவியாகுமாறு கேட்பது; இராவணனை இகழ்ந்த சீதை...
அப்போது, கவர்ந்து செல்ல விரும்பி பரிவ்ராஜக ரூபத்தில் {நாடோடி துறவி வடிவில்} வந்த ராவணன், வைதேஹியிடம் அவளைக் குறித்து அவளையே சொல்லச் சொன்னான்.(1) "பிராமணரும், அதிதியுமான இவரிடம் பேசாதிருந்தால் என்னை சபித்துவிடுவார்" என்று ஒரு முஹூர்த்தம் சிந்தித்த பிறகு, சீதை {பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(2) "மைதிலியான நான் மஹாத்மாவான ஜனகரின் மகளாவேன். என் பெயர் சீதை. நான் ராமரின் பிரிய மஹிஷியாவேன் (பாரியையாவேன்)[1]. நீர் நலமாக இருப்பீராக.(3) பனிரெண்டு வருடங்கள் இக்ஷ்வாகுக்களின் நிவேசனத்தில் {வசிப்பிடத்தில்} வசித்து, மானுஷர்களுக்குரிய போகங்களை அனுபவித்து, சர்வ ஆசைகளும் நிறைவேறியவளானேன்.(4) அங்கே {அயோத்தியின்} பிரபுவும், ராஜாவுமானவர் {தசரதர்}, பதிமூன்றாவது வருஷத்தில் ராஜமந்திரிகளுடன் சேர்ந்து ராமருக்கு {பட்ட} அபிஷேகம் செய்யத் தீர்மானித்தார்[2].(5)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில பதிப்புகளில் "பாரியை {மனைவி}" என்றும், சில பதிப்புகளில் "மஹிஷி {பட்டத்துராணி}" என்றும் இருக்கிறது" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.
[2] இங்கே ராமனும், சீதையும் திருமணம் முடிந்து பனிரெண்டு ஆண்டுகள் {துவாதச சமாங்கள்} அயோத்தியில் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. {த்ரயோதச வர்ஷே} பதிமூன்றாவது வருடத்தில் பட்டங்கட்ட தசரதன் தீர்மானித்தான் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. பிபேக்திப்ராய் பதிப்பைத் தவிர மற்ற பதிப்புகள் அனைத்திலும் இஃது இவ்வாறே இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. பிபேக்திப்ராய் பதிப்பில், "நான் ராகவரின் வசிப்பிடத்தில் ஓராண்டு கழித்தேன். விரும்பும் செல்வங்களையும், மனிதர்கள் ஏங்கும் அனைத்தையும் அனுபவித்தேன். ஒரு வருடம் முடிந்ததும், மன்னர் தம் அமைச்சர்களுடன் சபையில் ஆலோசித்து, என் கணவர் ராமரைக் கௌரவிப்பதற்காக இளவரசராக்கத் தீர்மானித்தார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அதாவது திருமணம் முடிந்து ஒருவருட காலத்தை அவர்கள் அயோத்தியில் கழித்தனர். திருமணத்தின் போது ராமன் பதினாறு வயதைக் கொண்டவன் என்பதால் அவன் நாடுகடத்தப்பட்டபோது, பதினேழு வயதுடையவனாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. பனிரெண்டு வருடங்களை பிபேக்திப்ராய் பதிப்பு ஒரு வருடமாகக் கொள்வதால் பதினேழு வயது என்ற முடிவை எட்டுகிறது. பிற பதிப்புகள் அனைத்தையும் கொண்டு இதே அளவுகோலின்படி பார்த்தால், ராமனுக்கு திருமணம் முடிந்த போது அவனுக்கு பதினாறும், அதன் பிறகு அயோத்தியில் பனிரெண்டும் கூட்டினால், வனவாசம் புறப்படும் போது இருபத்தெட்டு வயது இருக்க வேண்டும். வனவாசம் புறப்பட்ட வயதான இருபத்தெட்டுடன் வனவாசத்தின் பதிமூன்று ஆண்டுகளைக் கூட்டினால், சீதை பேசிக்கொண்டிருக்கும் இதே வேளையில் அவனுக்கு நாற்பத்தோரு வயதாகியிருக்க வேண்டும். இதே சர்க்கம் 10ஆ,11ம் சுலோகத்தில் "வனவாசம் செல்லும்போது ராமனுக்கு இருபத்தைந்து வயது, சீதைக்குப் பதினெட்டு வயது" என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அந்த சுலோகம் பழைய உரைகள் பலவற்றில் இல்லை என்று தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பு சொல்கிறது.
இராகவருக்கு அந்த அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டபோது, கைகேயி என்ற பெயரைக் கொண்ட என் ஆரியை {மதிப்பிற்குரியவள் / மாமியார்}, தன் பர்த்தாவிடம் {கணவரிடம்} வரங்களை யாசித்தாள்.(6) கைகேயி, நற்செயலினால் {பழங்காலத்தில் தன்னால் செய்யப்பட்ட நற்செயலைச் சொல்லி} என் மாமனாரை {தசரதரைத்} தடுத்து, சத்தியசந்தரும், நிருபோத்தமருமான தன் பர்த்தாவிடம் {உத்தம ராஜருமான தன் கணவர் தசரதரிடம்}, என் பர்த்தா பிரவ்ராஜனம் போகவும் {என் கணவர் ராமர் நாடு கடத்தப்படவும்}, பரதனுக்கு அபிஷேகம் செய்யவும் இரண்டை {இரண்டு வரங்களை} யாசித்தாள்.(7,8அ) "இன்று ராமனுக்கு அபிஷேகம் நடந்தால், உண்ண மாட்டேன், உறங்கமாட்டேன். எதையும் பருக மாட்டேன். இதுவே என் ஜீவிதத்தின் அந்தம் ஆகும் {இது என் உயிரின் முடிவாக இருக்கும்}" என்று கைகேயி சொன்னாள்.{8ஆ,9ஆ}
என் மாமனாரான அந்தப் பார்த்திபர் {மன்னர் தசரதர்}, போதுமான செல்வங்களைத் தருவதாக வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு அவள் உடன்பட்டாளில்லை.(8ஆ-10அ) மஹாதேஜஸ்வியான என் பர்த்தாவுக்கு {கணவர் ராமருக்கு} அப்போது இருபத்தைந்து வயது, நான் பிறந்ததில் இருந்து பதினெட்டு வருஷங்கள் என்று கணக்கிடப்படுகிறது[3].(10ஆ,11அ) இராமர், சத்தியவான், சீலவான் {ஒழுக்கமிக்கவர்}, தூய்மையானவர், விசாலாக்ஷர் {அகன்ற கண்களைக் கொண்டவர்}, மஹாபாஹு {பெருந்தோள்களைப் படைத்தவர்}, சர்வ பூத ஹித ரதர் {அனைத்து உயிரினங்களின் நலனை விரும்புகிறவர்} என்றே உலகத்தில் அறியப்படுகிறார்.(11ஆ,12அ) காமார்த்தத்தால் பீடிக்கப்பட்ட மஹாராஜர் தசரதர், தானே கைகேயிக்குப் பிரியமான ஆசையை நிறைவேற்ற விரும்பி ராமருக்கு அபிஷேகம் செய்விக்கவில்லை.(12ஆ,13அ)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பழைய உரைகள் பலவற்றில் இந்த அடிகள் இரண்டும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் காவியத்தில் வரும் இந்த அடிகளைக் கொண்டு, ராமன், சீதையின் வயதைக் கணக்கிடுவதற்கு நீண்ட விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன" என்றிருக்கிறது. இராமன் நாடு கடத்தப்பட்டபோது அவனுக்கு பதினேழு வயதிருந்திருக்கலாம் என்று சொன்ன பிபேக்திப்ராய் பதிப்பில், இந்த இடத்தில், "பெரும் வலிமைமிக்க என் கணவருக்கு அப்போது இருபத்தைந்து வயதாகி இருந்தது" என்று மட்டும் இருக்கிறது. சீதையின் வயது குறிப்பிடப்படவில்லை. அல்லது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமாயணத்தில் வெவ்வேறு பதிப்புகளில், ஏன் வால்மீகி ராமாயணத்தில் பல்வேறு பதிப்புகளிலும் கூட இந்த முரண் தொடர்வதால் ராமனின் வயதில் சமரசம் ஏற்படுவது சாத்தியமில்லை" என்றிருக்கிறது.
அபிஷேகத்திற்காக பிதாவின் சமீபத்தை அடைந்த என் பர்த்தா ராமரிடம், கைகேயி இந்த சொற்களை {தீர்மானமாகச்} சொன்னாள்:(13ஆ,14அ) "இராகவா, உன் பிதா {தசரதர்} என்னிடம் அறிவித்ததை கேட்பாயாக, "அகண்டகமான {முட்களற்ற/ இடையூறுகளற்ற} இந்த ராஜ்ஜியம் பரதனுக்கு தத்தம் செய்யப்படுகிறது" என்றார்.(14ஆ,15அ) காகுத்ஸ்தா {ராமா} நீயோ, "நவபஞ்ச {பதினான்கு} வருஷங்கள் பிரவ்ரஜகமாக {நாடு கடந்து} வனத்தில் வசிக்க வேண்டும்" {என்றும் சொன்னார்}. உன் பிதாவைப் பொய்ம்மையில் இருந்து காப்பாயாக" {என்று கைகேயி ராமரிடம் சொன்னாள்}.(15ஆ,16அ)
எங்கும், எதிலும் பயமற்றவரும், திடவிரதருமான என் பர்த்தா ராமர், "அவ்வாறே ஆகட்டும்" என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவளது சொற்களுக்கு நன்மை செய்தார் {அவளது சொற்களுக்குக் கீழ்ப்படிந்தார்}.(16ஆ,17அ) பிராமணரே, தத்தம் செய்வது, திரும்பப் பெற்றுக் கொள்ளாதிருப்பது, சத்தியம் பேசுவது, அல்லாதது {சத்தியமல்லாத பொய்} பேசாமல் இருப்பது ஆகியவையே இந்த ராமரின் உறுதிமிக்க ஒப்பற்ற விரதங்களாகும்.(17ஆ,18அ) அவரது மற்றொரு மாதாவிடம் {சுமித்ரையிடம்} பிறந்தவரும், லக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்டவருமான வீரியவான், சமரில் பகைவரை அழித்து புருஷவியாகரரான ராமருக்கு சகாயம் செய்பவராவார்.(18ஆ,19அ) தர்மசாரியும் {தர்மவழியில் நடப்பவரும்}, திடவிரதரும் {உறுதியான நோன்புகளை நோற்பவரும்}, லக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த சகோதரர், நாடுகடந்து வந்தபோது, தனுஷ்பாணியாக என்னுடன் {ராமரைப்} பின்தொடர்ந்து வந்தார்.(19ஆ,20அ)
தர்மநித்தியரும் {எப்போதும் தர்ம வழியில் செயல்படுபவரும்}, திடவிரதருமான அவர் {ராமர்}, ஜடை தரித்து, தபஸ்வி ரூபத்தில் என்னுடனும், தன் அனுஜருடனும் {தம்பியுடனும்} தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்தார்.(20ஆ,21அ) துவிஜசிரேஷ்டிரரே {இருபிறப்பாளர்களில் சிறந்தவரே}, இத்தகையோரான நாங்கள் மூவரும், கைகேயிக்காக ராஜ்ஜியத்தில் இருந்து வீழ்ந்து {வெளியேறி}, தைரியத்துடன் இந்த கம்பீரமான வனத்திற்குள் திரிந்து கொண்டிருக்கிறோம்.(21ஆ,22அ) நீர் இங்கே இருக்கும் சாத்தியமிருந்தால் ஒரு முஹூர்த்தம்[4] ஓய்ந்திருப்பீராக. என் பர்த்தா {கணவர் ராமர்}, ருருக்கள் {மான்கள்}, கோசம்பங்கள் {உடும்புகள்}, வராஹங்கள் {பன்றிகள்} ஆகியவற்றைக் கொன்று ஏராளமான இறைச்சியுடனும்[5], ஏராளமான வன விளைச்சலுடன் வருவார்.(22ஆ,23அ) துவிஜரே {இருபிறப்பாளரே}, இத்தகையவரான நீர், உமது பெயரையும், கோத்திரத்தையும், குலத்தையும் உள்ளபடியே குறிப்பிடுவீராக. தனி ஒருவராக தண்டகாரண்யத்தில் என்ன காரணத்தினால் திரிந்து கொண்டிருக்கிறீர்?" {என்று கேட்டாள் சீதை}[6].(23ஆ,24)
[4] இன்றைய கால அளவில் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு நாள் 60 முஹூர்த்தங்களைக் கொண்டதாகும்.
[5] இங்கே ராமன் இறைச்சி கொண்டு வருவான் என்று சீதை சொல்லும் இந்தச் செய்தி, தமிழ்ப்பதிப்புகள் எதனிலும், ஆங்கிலப்பதிப்புகளில் செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பிலும் இல்லை. தர்மாலயப் பதிப்பில், "தங்களால் இவ்விடத்தில் சற்று தாமதிக்க இஷ்டமிருக்கிறதாகில் இளைப்பாறுவீராக. எனது கணவர் சிறந்த பலாதிகளை {காட்டிலுள்ள உணவுகளை மிகுதியாக} எடுத்துக் கொண்டு இதோ வந்துவிடுவார்" என்றிருக்கிறது. இவ்வாறான பொருளிலேயே மேற்கண்ட மூன்று பதிப்புகளிலும் இருக்கின்றன. தேசிராஜுஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத்சாஸ்திரி ஆகிய ஆங்கிலப்பதிப்புகளில் இறைச்சி கொண்டு வரும் இந்தச் செய்தி இருக்கிறது.
[6] வேதமும் வேதியர் அருளும் வெஃகலாசேதன மன் உயிர் தின்னும் தீவினைப்பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்குஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர்- கம்பராமாயணம் 3367ம் பாடல், இராவணன் சூழ்ச்சிப்படலம்பொருள்: "வேதத்தையும், வேதியர் அருளையும் விரும்பாமல், பகுத்தறிவுடன் கூடிய மனிதர்களை உண்ணும் பாதகர்களும், தீவினைகள் புரிபவர்களுமான அரக்கர்களின் இடத்தில் நீர் திரிவதற்கான காரணம் யாது? உடம்பையே மிகை {பாரம்} என்று எண்ணுபவரே" {என்று ராவணனிடம் சீதை கேட்டாள்}
இராம பத்தினியான {ராமனின் மனைவியான} சீதை, இவ்வாறு சொன்னபோது, மஹாபலவானும், ராக்ஷசாதிபனுமான ராவணன், தீவிரமான மறுமொழியை வெடுக்கெனக் கூறினான்:(25) "சீதே, தேவ, அசுர, மானுஷர்களுடன்[7] கூடிய உலகங்கள் எவனால் அச்சமுறுமோ அந்த ரக்ஷோகணேசுவரன் {ராக்ஷசக் கூட்டத்தின் தலைவன்} நான். என் பெயர் ராவணன்.(26) அநிந்திதே {நிந்திக்கத்தகாவளே}, காஞ்சன வர்ணத்தில் ஒளிர்பவளும் {பொன்னிறத்தில் பிரகாசிப்பவளும்}, மஞ்சள் பட்டு உடுத்தியவளுமான உன்னைக் கண்ட பிறகு என் தாரங்களிடம் ஆசையுறுகிறேனில்லை.(27) இங்கேயும், அங்கேயும் இருந்து என்னால் கொண்டுவரப்பட்ட மேன்மையான உத்தம ஸ்திரீகள் அனைவரிலும் நீயே என் முதல் மஹிஷியாகி நலமாக இருப்பாயாக.(28) இலங்கை என்ற பெயரில் சமுத்திரத்தின் மத்தியில் உள்ள என் மஹாபுரி {தலைநகரம்}, சாகரம் சூழ்ந்த கிரியின் உச்சியில் அமைந்திருக்கிறது[8].(29) சீதே, அங்கே சோலைகளில் என்னுடன் நீ சுற்றித்திரிவாயாக. பாமினி {அழகிய பெண்ணே}, இந்த வனவாசத்திற்காக நீ ஏங்க மாட்டாய்.(30) சீதே, நீ என் பாரியையாகிவிட்டால், சர்வ ஆபரண பூஷிதைகளான ஐந்தாயிரம் தாசிகள் பரிசாரிகளாக இருப்பார்கள் {ஆபரணங்கள் அனைத்தினாலும் அலங்கரிக்கப்பட்ட ஐயாயிரம் பணிப்பெண்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்}" {என்றான் ராவணன்}.(31)
[7] சில பதிப்புகளில் "தேவ, அசுர, மானுஷர்களுடன் கூடிய உலகங்கள்" என்றும், வேறு சில பதிப்புகளில் "தேவ, அசுர, பன்னகர்கள் உள்ளிட்ட உலகங்களை" என்றும் இருக்கிறது.
[8] இலங்கை எங்கிருந்தது என்ற ஆய்வுக்கு இந்த சுலோகம் பெரிதும் பயன்படுகிறது. இராமாயணத்தின் லங்கை இன்றைய சிங்களத் தீவில்லை என்று சொல்பவர்கள், "இங்கே சொல்லப்படும் சாகரம் என்பது கடல் அல்ல, அஃது ஒரு பெரிய நீர்த்தேக்கம். இன்றைய இலங்கை மலையின் உச்சியில் இல்லை" என்கிறார்கள். இங்கே கூறப்படுவது இலங்கை எனும் நாடு அல்ல; லங்காபுரி எனும் ராவணனின் தலை நகரம், "சாகரம் என்பது கடலல்ல" என்று சொல்லும்போது, "அந்த லங்காபுரி சமுத்திரத்தின் மத்தியில் இருந்தது" என்று இதே சுலோகத்தில் உள்ள வாக்கியத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சுலோகத்தின் பொருள் ஆங்கிலத்தில் செம்பதிப்பான பிபேக்திப்ராயின் பதிப்பிலும் அப்படியே உண்டு என்றாலும், சாகரம் என்பதும், சமுத்திரம் என்பதும் பெருங்கடல் என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது சரியானதும் கூட.
இராவணன் இவ்வாறு சொன்னதும், குற்றமற்ற அங்கங்களைக் கொண்டவளும், கோபமடைந்தவளுமான ஜனகாத்மஜை, அந்த ராக்ஷசனை அவமதிக்கும் வகையில் {பின்வருமாறு} மறுமொழி கூறினாள்:(32) "மஹாகிரியைப் போன்றவரும், அசைக்கப்பட முடியாதவரும், மஹேந்திரனுக்கு ஒப்பானவரும், பெருங்கடலைப் போலக் கலங்கடிக்கப்பட முடியாதவருமான என் பதி {கணவர்} ராமரையே நான் பின்தொடர்கிறேன்.(33) மண்டலம் சூழ்ந்த ஆலமரத்தைப் போல சர்வலக்ஷணம் பொருந்திய சத்தியசந்தரும், உயர்ந்த மனம் கொண்டவருமான ராமரையே நான் பின்தொடர்கிறேன்.(34) மஹாபாஹுவும் {பெரும் தோள்களைக் கொண்டவரும்}, அகன்ற மார்பைக் கொண்டவரும், சிங்கத்தின் வெற்றி நடையைக் கொண்டவரும், சிங்கத்தைப் போல பிரகாசிக்கும் நிருசிம்ஹருமான {நரசிம்மருமான} ராமரையே நான் பின்தொடர்கிறேன்.(35) பூர்ண சந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்டவரும், வீரரும், ராஜவத்சலரும் {ராஜரின் மகனும்}, ஜிதேந்திரியரும் {புலன்களை வென்றவரும்}, கீர்த்திமிக்கவரும், மஹாபாஹுவுமான ராமரையே நான் பின்தொடர்கிறேன்.(36)
மறுபுறம் ஜம்புகனான {நரியான} நீயோ, அணுகப்பட முடியாத சிம்ஹியான {பெண் சிங்கமான} என்னை இச்சிக்கிறாய். ஆதித்ய பிரபையான என்னை நீ ஸ்பசரிப்பதும் சாத்தியமல்ல.(37) இராக்ஷசனான நீ, ராகவரின் பிரிய பாரியாளை {அன்புக்குரிய மனைவியை} இச்சிக்கிறாய். மந்தபாகா {கெட்ட விதியைக் கொண்ட மூடனே}, நிச்சயம் நீ காஞ்சன {பொன்னாலான} மரங்களைப் பார்ப்பாய் {சாகவே சாவாய்}[9].(38) மிருக சத்ருவும் {மான்களுக்குப் பகையானதும்}, வலிமைமிக்கதுமான பசித்த சிங்கத்தின் வாயிலிருந்து பற்களைப் பிடுங்கவும், விஷமிக்க பாம்பிடமும் அதே போல {பற்களைப் பிடுங்கவும்} நீ இச்சிக்கிறாய்.(39) பர்வதங்களில் சிறந்த மந்தரத்தைக் கைகளால் பிடுங்க இச்சிக்கிறாய். காலகூட விஷத்தை பருகிவிட்டு நலமாகச் செல்ல விரும்புகிறாய்.(40)
[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இறந்து கொண்டிருப்பவனே சொர்க்கத்திற்குப் பயணிப்பதைப் போல பொன் மரங்களைப் பார்ப்பான் இந்த மாயை ஒருவனது மரணத்தைக் கணிக்கும்" என்றிருக்கிறது.
ஊசியால் கண்களைத் துடைப்பதும், கத்தியை நாவால் நக்குவதும் {துடைக்க / நக்க விரும்புவதைப்} போல ராகவரின் பிரிய பாரியாளை {அன்புக்குரிய மனைவியை} அணுக நீ இச்சிக்கிறாய்.(41) கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு சமுத்திரத்தில் நீந்த இச்சிப்பவனையும், சூரிய சந்திரர்கள் இருவரையும் கைகளால் கவர்ந்து செல்ல இச்சிப்பவனையும் போல ராமனின் பிரிய பாரியாளைக் கெடுக்க இச்சிக்கிறாய்.(42,43அ) ஜொலித்தபடியே எரியும் அக்னியைக் கண்டு அதை வஸ்திரத்தால் அபகரிக்க இச்சிப்பவனைப் போல, கல்யாண விருத்தம் {மங்கல வரலாற்றைக்} கொண்ட ராமரின் பாரியாளை {மனைவியைக்} கவர்ந்து செல்ல நீ இச்சிக்கிறாய்.(43ஆ,44அ) இரும்பு முனை கொண்ட சூலங்களை உச்சியில் கொண்டவற்றில் {கூரிய முட்கள் பதிக்கப்பட்ட மதில்களில்} நடக்க இச்சிப்பவனைப் போல ராமருக்குத் தகுந்த பாரியாளை {மனைவியை} அணுக இச்சிக்கிறாய்.(44ஆ,இ)
வனத்தில் சிங்கத்திற்கும், நரிக்கும் என்ன ஏற்றத்தாழ்வோ, சமுத்திரத்திற்கும் மடுவுக்கும் என்ன ஏற்றத்தாழ்வோ, உயர்ந்த ஸுரைக்கும் {அமுதத்திற்கும் / மதுவிற்கும்}, சௌவீரகயத்திற்கும் {காடிக்கும் / கழுநீருக்கும்} என்ன ஏற்றத்தாழ்வோ அந்த ஏற்றத்தாழ்வே தாசரதிக்கும் {தசரதரின் மகனான ராமருக்கும்} உனக்கும் இடையில் இருக்கிறது.(45) காஞ்சனத்திற்கும், ஈயத்திற்கும் என்ன ஏற்றத்தாழ்வோ, சந்தனத்திற்கும் சேற்றுக்கும் என்ன ஏற்றத்தாழ்வோ, வனத்தில் ஹஸ்திக்கும் {யானைக்கும்} பூனைக்கும் என்ன ஏற்றத்தாழ்வோ அந்த ஏற்றத்தாழ்வே தாசரதிக்கும் உனக்கும் இடையில் இருக்கிறது.(46) காக்கைக்கும், கழுகுக்கும் என்ன ஏற்றத்தாழ்வோ, நீர்க்கோழிக்கும் மயிலுக்கும் என்ன ஏற்றத்தாழ்வோ, வனத்தில் ஹம்சத்திற்கும் கழுகிற்கும் என்ன ஏற்றத்தாழ்வோ அந்த ஏற்றத்தாழ்வே உனக்கும் தாசரதிக்கும் இடையில் இருக்கிறது.(47) சஹஸ்ராக்ஷனுக்கு {இந்திரனுக்கு} சமமான பிரபாவத்துடனும், கைகளில் கார்முகத்துடனும் {வில்லுடனும்}, பாணங்களுடனும் அந்த ராமர் நிற்கும்போது, நான் அபகரிக்கப்பட்டால், ஈயால் விழுங்கப்பட்ட வஜ்ரத்தை {வைரத்தைப்} போல என்னை உன்னால் ஜீரணிக்க {செரிக்க} முடியாது[10]" {என்றாள் சீதை}.(48)
[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஈயுடன் விழுங்கப்பட்ட வஜ்ரத்தைப் போல" என்று மொழிபெயர்க்கப்பட்டு, வஜ்ரத்திற்கு நெய்யென்றும், வைரம் என்றும் இரு பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிக்குறிப்பில், "நெய்யுடன் சேர்த்து ஈயையும் விழுங்கிவிட்டால் வயிற்றில் அந்த ஈயால் உண்டாகும் குமட்டலால் அதைக் கக்க வேண்டியிருக்கும். ஆனால் வைரம் குடலைக் கிழித்துவிடும். தற்செயலாக விழுங்கப்பட்டாலும் அது குடலைக் கிழித்து மரணத்தைத் தரும். எனவே இங்கே வஜ்ரம் என்றால் வைரம் என்றே பொருள் கொள்வது சரியானது" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "அந்த இந்திரனை நிகர்த்த ஆற்றலுடைய ஸ்ரீராமர் கோதண்டபாணியாய் இருக்கையில் நான் அபகரிக்கப்பட்டவளாக ஆயினும் ஈயினால் நக்கப்பட்ட நீரோட்டமுள்ள வைரம் போல் உன்னால் கற்பின் குறைவை அடைய மாட்டேன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "என் பர்த்தா கோதண்டத்தைத் திருக்கரத்திலேந்தி இந்திரனுக்கு நிகரான பிரபாவமுடையவராய் எழுந்தருளியிருக்கையில் நீ என்னை வலுவில் திருடிக் கொண்டோடினையாயினும் என் கற்பினை யழிக்க நீ வல்லவனாகாய், அரிசியென்று வச்சிரமணியை எறும்புகள் மொய்த்துக் கொள்ளினும் அஃது அதனைப் புஜித்து ஜரிப்பித்துக் கொள்ளுமா?" என்றிருக்கிறது.
துஷ்ட இயல்பில்லாத நோக்கங்களுடன் கூடியவளும், மெல்லிய உடல் படைத்தவளுமான அவள் {சீதை}, துஷ்டனான அந்த ரஜனீசரனிடம் {இரவுலாவியான ராவணனிடம்} இந்த வாக்கியங்களை இவ்வாறு சொல்லிவிட்டு, காற்றில் ஆடும் கதலியை {வாழை மரத்தைப்} போல உடல் நடுங்கியவளாக உள்ளம் குழம்பி நின்றாள்.(49) மிருத்யுவுக்கு {மரணத்திற்கு / யமனுக்கு} சமமான பிரபாவத்துடன் கூடிய அந்த ராவணன், நடுங்கிக் கொண்டிருந்த அந்த சீதையைக் கவனமாகக் கண்டு, அவளை இன்னும் பயமுறுத்துவதற்காகத் தன் குலம், பலம், நாமம் {பெயர்} ஆகியவற்றையும், கர்மங்களையும் {தான் செய்த சாதனைகளையும்} தெளிவாகப் பட்டியலிட்டான்.(50)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 47ல் உள்ள சுலோகங்கள்: 50
Previous | | Sanskrit | | English | | Next |