Maharishitva | Bala-Kanda-Sarga-63 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விஷ்வாமித்ரர் மஹாரிஷி நிலையை அடைந்தது; அவரது தவத்திற்கு உண்டான இடையூறுகள்; பிரம்மரிஷி நிலையை அடைவதற்காகக் கடுந்தவமிருந்த விஷ்வாமித்ரர்...
{சதாநந்தர் ராமனிடம் தொடர்ந்தார்}, "ஆயிரம் வருடங்கள் பூர்ணமானதும், அந்த மஹாமுனி {விஷ்வாமித்ரர்} செய்த தவத்திற்குப் பலன் கொடுக்க விரும்பி {பிரம்மனுடன் கூடிய} ஸுரர்கள் அனைவரும் விரதஸ்நானம் செய்து {விரதம் முடித்து நீராடி} வந்த அவரிடம் சென்றனர்.(1) பெரும் பிரகாசம் கொண்ட பிரம்மன், "நீ செய்திருக்கும் சுபகர்மங்களால் ரிஷியாகிவிட்டாய். நீ மங்கலமாக இருப்பாயாக" என்ற இன்சொற்களைச் சொன்னான்[1].(2)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "'இதுவரை நீ மன்னனாக இருந்தாய். உன் நற்செயல்களால் இப்போது ராஜரிஷி ஆகியிருக்கிறாய். பேராசை, கோபம், காமம், பொறாமை முதலிய எதிர்மறையான பண்புகளுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மேலான பிரம்மரிஷி நிலையை நீ இன்னும் அடையவில்லை' என்பது இங்கே பொருள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "உனக்குச் சுபம் உண்டாக வேண்டும். இதுவரையில் நீ ராஜரிஷியாயிருந்தனை. நீ நடத்திய நற்றவங்களால் இப்பொழுது ரிஷியாகவே ஆய்விட்டனை" என்றிருக்கிறது.
அந்த தேவேசன் {பிரம்மன்}, அவரிடம் இவ்வாறு சொல்லிவிட்டு வந்தவாறே மீண்டும் திரிதிவத்திற்கு {தேவலோகத்திற்குத்} திரும்பிச் சென்றான். மஹாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர், மீண்டும் கடுந்தவம் செய்தார்.(3) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்த ராமா}, நெடுங்காலத்திற்குப் பிறகு, பரம அப்சரஸான மேனகை புஷ்கரத்திற்கு வந்து அங்கே நீராடத் தொடங்கினாள்.(4) மஹாதேஜஸ்வியான குசிகாத்மஜர் {விஷ்வாமித்ரர்}, கருமேகத்துடன் கூடிய மின்னற்கீற்றைப் போல ஒப்பற்ற ரூபம் கொண்ட அந்த மேனகையைக் கண்டார்.(5) அவளைக் கண்டு கந்தர்பனின் {காமனின்} வசப்பட்ட முனிவர் {விஷ்வாமித்ரர்} அவளிடம், "அப்சரஸே, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு}, நீ இந்த ஆசிரமத்திலேயே வசிப்பாயாக. மதனனால் {பீடிக்கப்பட்டு} மோகமடைந்திருக்கும் எனக்கு இணங்குவாயாக. நீ மங்கலமாக இருப்பாயாக" என்றார்.(6,7அ)
இராகவா, இவ்வாறு சொல்லப்பட்ட அந்த அழகிய காரிகை {மேனகை} அங்கேயே வாசம் செய்தாள். சௌமியனே {ராமா}, விஷ்வாமித்ரரின் ஆசிரமத்தில் அவள் வசித்திருந்தபோது பஞ்ச பஞ்ச {பத்து} வருடங்கள் சுகமாகக் கழிந்தன. இவ்வாறு விஷ்வாமித்ரரின் தவத்திற்குப் பெரும் இடையூறும் விளைந்தது.(7ஆ,8,9அ) அந்தக் காலம் கடந்ததும் மஹாமுனிவரான விஷ்வாமித்ரர் வெட்கமடைந்தவராகச் சோகத்துடன் சிந்தனையில் மூழ்கினார். இரகுநந்தனா, சினங்கொண்ட அவருடைய புத்தியில் ஓர் எண்ணம் எழுந்தது:(9ஆ,10) "இவை யாவும் என் தவத்தைக் கெடுக்க ஸுரர்கள் செய்யும் செயல்களாகும். காம, மோக வசப்பட்டதால் பத்து ஆண்டுகள் ஒரு ராத்திரி பகலெனக் கடந்து விட்டது. {என் தவத்திற்கு} இந்த இடையூறும் வந்து சேர்ந்தது" {என்று நினைத்தார்}.(11,12அ)
இராமா, முனிவரரான {சிறந்த முனிவரான} குசிகாத்மஜர் {குசிகனின் மகனான விஷ்வாமித்ரர்} துக்கத்தால் பெருமூச்சுவிட்டார். விஷ்வாமித்ரர், கைகள் கூப்பியபடியும், அச்சத்தால் நடுங்கியபடியும் காத்திருந்த அப்சரஸ் மேனகையைக் கண்டு மதுர வாக்கியங்களைச் சொல்லி விடைகொடுத்தனுப்பி உத்தரப் பர்வதத்திற்கு {வடக்கில் இருக்கும் மலைக்குச்} சென்றார்.[2] (12ஆ,13,14அ) பெரிதும் கொண்டாடப்படுபவரான அவர், நைஷ்டிக புத்தியை {தன்னிறைவுடன் கூடிய அமைதியை} அடைந்து, காமத்தை {ஆசையை} வென்று கௌசிகீ தீரத்துக்கு[3] {கௌசிகி நதிக்கரைக்குச்} சென்று, எவராலும் விஞ்சமுடியாத கடுந்தவத்தைச் செய்தார்.(14ஆ,15அ) இராமா, அந்த உத்தரபர்வதத்தில் {வடக்கு மலையில், அவர் மேலும்} ஆயிரம் வருடங்கள் கோர தவம் செய்கையில் தேவர்கள் பயங்கொண்டனர்.(15ஆ,16அ) ரிஷிகணங்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும் {பிரம்மனிடம் சென்று}, "இந்தக் குசிகாத்மஜருக்கு {விஷ்வாமித்ரருக்கு} மஹாரிஷி பட்டம் கொடுக்கப்படட்டும்" என்றனர்.(16ஆ,17அ)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "(இது எனது அபராதமேயன்றி உன் தப்பிதம் அன்று. நீ வருந்த வேண்டாம். நானாகவே உன்னை விரும்பினேன். நீ இதற்கு என் செய்வாய் என்று இது முதலிய) இனிய மொழிகளைச் சொல்லி அச்சந்தீர்த்து விடைகொடுத்து அனுப்பிவிட்டு உடனே வடக்குத் திசையில் விளங்குகின்ற ஹிமாலயத்திற்குச் சென்றனர்" என்றிருக்கிறது.
[3] இதற்கு முந்தைய சுனசேபன் கதையில் ரிசீகரும், சத்தியவதியும் உயிருள்ள மானிடர்களாகவே வருகிறார்கள். பாலகாண்டம் 34:8ல் ரிசீகரின் மனைவியும், விஷ்வாமித்ரரின் தமக்கையுமான சத்தியவதியே இங்கே குறிப்பிடப்படும் கௌசிகீ நதியாகப் பாய்கிறாள் என்ற குறிப்பு இருக்கிறது. சுனசேபனைக் காத்த பிறகு விஷ்வாமித்ரருக்கு ஆயிரம் வருடங்கள் தவத்தில் கடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சத்தியவதி தன் கணவனைப் பின்தொடர்ந்து சொர்க்கத்திற்குச் செல்கிறாள். கௌசிகி நதியாகவும் ஆகிறாள்.
சர்வலோகபிதாமஹன் {பிரம்மன்}, தேவர்களின் சொற்களைக் கேட்டு தபோதனரான விஷ்வாமித்ரரிடம் இந்த மதுரமான வாக்கியத்தைச் சொன்னான்:(17ஆ,18அ) "மஹாரிஷியே, வத்ஸா {குழந்தாய்}, ஸ்வாகதம் {நல்வரவு}. உன்னுடைய உக்கிர தவம் மகிழ்ச்சியளிக்கிறது. கௌசிகா, மகத்துவம் வாய்ந்த ரிஷிமுக்கியத்துவத்தை {ரிஷிகளின் தலைமை நிலையை} உனக்குக் கொடுக்கிறேன்" {என்றான் பிரம்மன்}.(18ஆ,19அ)
தபோதனரான விஷ்வாமித்ரர், பிரம்மனின் சொற்களைக் கேட்டுக் கைக்கூப்பி வணங்கி அந்தப் பிதாமஹனிடம் இந்த மறுமொழியைச் சொன்னார்:(19ஆ,20அ) "என் நற்செயல்களுக்காக {மஹாரிஷி பட்டமல்லாமல்} பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்தால், உண்மையில் நான் சுயத்தை வென்றவனாவேன்" {என்றார் விசுவாமித்ரர்}.(20ஆ,21அ)
அப்போது பிரம்மன், "நீ உன் இந்திரியங்களை வெல்லவில்லை {நீ ஜிதேந்திரியனல்ல}. முனிசார்தூலா {முனிவர்களில் புலியே}, நீ இன்னும் யத்னம் செய்ய {முயற்சிக்க} வேண்டும்" என்று சொல்லிவிட்டுத் திரிதிவத்தை {தேவலோகத்தை} நோக்கிச் சென்றான்.(21ஆ,22அ)
தேவர்கள் திரும்பிச் சென்றதும், மஹாமுனிவரான விஷ்வாமித்ரர், கைகளை உயர்த்தி {எந்தப் பிடிப்பும் இன்றி} நிராதரவாக நின்ற நிலையில் காற்றை மட்டுமே உண்பவராகத் தவம் செய்யத் தொடங்கினார்.(22ஆ,23அ) அந்த தபோதனர், கோடை காலத்தில் பஞ்சதப நெருப்பாகவும் {ஐந்து நெருப்புகளுக்கு மத்தியிலும்},[4] மழைக்காலத்தில் ஆகாயத்தையே கூரையாகக் கொண்டும், குளிர்காலத்தில் ராத்திரி பகலாக நீரில் நின்றும் தொடர்ந்து ஓராயிரம் வருடங்கள் கோர தவம் செய்தார்.(23ஆ,24)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "நான்கு திசைகளில் நான்கு நெருப்புகளும், தலைக்கு மேலே சுட்டெரிக்கும் சூரியனும் சேர்ந்து ஐந்து நெருப்புகள் ஆகின்றன. இந்தப் பஞ்சாக்னிக்கு மத்தியில் இருக்கும் தவசியும் ஒரு தவநெருப்பாகவே மாறுகிறான். முதலடியில் முதல் சொல்லாக அமைந்திருக்கும் தர்மம் என்ற சொல்லை 'வெய்யிற்காலம்' என்றும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
மஹாமுனிவரான விஷ்வாமித்ரர் இவ்வாறு செய்த தவம், ஸுரர்களையும், இந்திரனையும் சுட்டெரித்தது.(25) மருத்கணங்கள் அனைவருடன் கூடிய சக்ரன் {இந்திரன்} தனக்கு நன்மையையும், கௌசிகருக்கு {விஷ்வாமித்ரருக்குத்} தீங்கையும் செய்வதற்காக அப்சரஸ் ரம்பையிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்" {என்றார் சதாநந்தனர்}.(26)
பாலகாண்டம் சர்க்கம் – 63ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |