Lakshmana pacified | Kishkindha-Kanda-Sarga-36 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தணிவடைந்த லக்ஷ்மணன்; இராமனின் வீரத்தைப் புகழ்ந்த சுக்ரீவன்; தன் கடுஞ்சொற்களுக்காக வருத்தம் தெரிவித்த லக்ஷ்மணன்...
இவ்வாறு தாரை பணிவுடன் தர்மத்திற்குப் பொருத்தமான வாக்கியங்களைச் சொன்னதும், மிருது ஸ்வபாவம் கொண்ட சௌமித்ரி {மெல்லியல்பினனான லக்ஷ்மணன்}, அந்தச் சொற்களை ஏற்றுக் கொண்டான்.(1) அந்த வாக்கியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், ஹரிகணேஷ்வரன் {குரங்குக் கூட்டங்களின் தலைவனான சுக்ரீவன்}, லக்ஷ்மணனிடம் தான் கொண்டிருந்த மஹத்தான அச்சத்தை, நனைந்த வஸ்திரம் {ஈரத்துணியைப்} போல் களைந்தான்.(2) அப்போது, வானரேஷ்வரனான சுக்ரீவன், கண்டத்தில் {கழுத்தில்} அணிந்திருந்ததும், சித்திரமானதும் {அழகானதும்}, ஏராளமான குணங்களைக் கொண்டதுமான மஹத்தான மாலையை அறுத்து மதம் {மயக்கம்} தொலைந்தவனானான்.(3)
சர்வ வானரர்களிலும் சத்தமனான {சிறந்தவனான} அந்த சுக்ரீவன், பீமபலங் {பயங்கர வலிமை} கொண்ட லக்ஷ்மணனை மகிழ்ச்சியடையச் செய்வதற்காக {பின்வரும்} பணிவான வாக்கியங்களைச் சொன்னான்:(4) "சௌமித்ரியே, தொலைந்து போன ஸ்ரீ {செல்வம்}, கீர்த்தி, சாஸ்வதமான கபிராஜ்ஜியம் {குரங்குகளின்ராஜ்ஜியம்} ஆகியனவற்றை ராமரின் அருளால் மீண்டும் நான் அடைந்தேன்.(5) நிருபாத்மஜரே {மன்னரின்மகனே}, தன் கர்மங்களால் புகழ்பெற்ற தேவரானவருக்கு {ராமருக்கு}, அவர் செய்தவகையில் சிறிதேனும் பிரதி {கைம்மாறு} செய்யும் சக்தன் எவன்?(6) தர்மாத்மாவான ராகவர், சகாயனாக மாத்திரமே என்னைக் கொண்டு, சொந்த தேஜஸ்ஸால் ராவணனை வதம் செய்து, சீதையை அடைவார்.(7) ஏழு பெரும் மரங்களையும், சைலத்தையும் {மலையையும்}, வசுதையையும் {பூமியையும்} ஏக பாணத்தால் {ஒரே அம்பால்} பிளந்தவர் எவரோ, அவருக்கு சகாயம் செய்யக்கூடியவன் எவன்?(8) இலக்ஷ்மணரே, தனுசில் {வில்லில்} நாணேற்றும் சப்தத்தால் சைலங்களும் {மலைகளும்}, பூமியும் எவரால் நடுக்கமடையுமோ, அவருக்கு உண்மையில் சகாயம் செய்யக்கூடியவன் எவன்?(9) நரரிஷபரே {மனிதர்களில் சிறந்தவரே}, முன்னிருப்பவர்களையும் சேர்த்து வைரியான {பகைவனான} ராவணனை அழிக்கப்போகும் நரேந்திரரை {மனிதர்களின் தலைவரான ராமரை} நான் பின்தொடர்ந்து செல்லப் போகிறேன்.(10) விசுவாசத்தாலோ, நட்பாலோ கிஞ்சித்தும் அத்துமீறியிருந்தால், பணியாளனான என்னை பொறுத்துக் கொள்ள வேண்டும். அபராதம் {தவறு} செய்யாதவன் எவனுமில்லை" {என்றான் சுக்ரீவன்}.(11)
மஹாத்மாவான அந்த சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், பிரீதியடைந்த {மகிழ்ச்சியடைந்த} லக்ஷ்மணன், பிரேமத்துடன் {அன்புடன்} இதைச் சொன்னான்:(12) "வானரேஷ்வரா, சுக்ரீவா, என்னுடன் பிறந்தவர் நாதனுடையவர் {என் தமையர் ராமர் அநாதையல்ல}; விசேஷமாக பணிவுள்ளவனான உன்னை அடைந்தவர், உண்மையில் எல்லாவகையிலும் நாதனுள்ளவராகிறார் {எவ்வகையிலேனும் அநாதையல்ல}.(13) சுக்ரீவா, இவ்வகையில் உன்னைத் தூய்மையுள்ளவனாக்கும் பிரபாவத்தை {ஆற்றலைக்} கொண்டவனான நீ, கபிராஜ்ஜியத்தின் {குரங்குராஜ்ஜியத்தின்} ஒப்பற்ற செல்வத்தை அனுபவிக்கத் தகுந்தவனே.(14) சுக்ரீவா, உன்னை சகாயனாகக் கொண்டவரும், பிரதாபவானுமான ராமர், சத்ருக்களை ரணத்தில் {போரில்} சீக்கிரமே வதம் செய்யப் போகிறார். இதில் சந்தேகமில்லை.(15) சுக்ரீவா, தர்மஜ்ஞனும், கிருதஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும், நன்றியை அறிந்தவனும்}, போர்க்களங்களில் புறமுதுகிடாதவனுமாக இருக்கிறாய். நீ சொன்னவை சரியானவையாகவும், பொருத்தமானவையாகவும் இருக்கின்றன.(16) வானரசத்தமா {வானரர்களில் சிறந்தவனே}, என் அண்ணனையும், உன்னையும் தவிர, தோஷஜ்ஞனாக {குற்றத்தை அறிந்து கொண்டவனாகத்} தகுந்த வகையில் பேசும் சாமர்த்தியமுள்ளவன் எவன்?(17) ஹரிபுங்கவா {குரங்குகளில் சிறந்தவனே}, தைவதங்களால் நீண்ட காலத்திற்குப் பிறகு தத்தம் செய்யப்பட்ட சஹாயனான நீ, விக்ரமத்தாலும், பலத்தாலும் ராமருக்கு இணையானவனாகத் திகழ்கிறாய்.(18) வீரா, எவ்வாறிருப்பினும் நீ என்னுடன் இங்கிருந்து சீக்கிரமே புறப்படுவாயாக. பாரியை {மனைவி} அபகரிக்கப்பட்ட துக்கத்தில் இருக்கும் வயஸ்யரை {உன் நண்பர் ராமரைத்} தேற்றுவாயாக.(19) சகாவே {தோழா}, சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் ராமர் சொன்னதைக் கேட்டு, நான் உன்னிடம் சொன்ன கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்வாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(20)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 36ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |