What is the reason? | Kishkindha-Kanda-Sarga-04 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இரிச்யமூகத்திற்குத் தாங்கள் வந்த நோக்கத்தை ஹனுமானிடம் சொன்ன லக்ஷ்மணன்; இராமனையும், லக்ஷ்மணனையும் சுக்ரீவன் இருக்கும் இடத்திற்குச் சுமந்து சென்ற ஹனுமான்...
கடமையைச் செய்பவனான ஹனுமான், {லக்ஷ்மணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட சொற்களைக் கேட்டு, {அந்தப் பேச்சின்} மதுர பாவத்தால் மகிழ்ச்சியடைந்து, மனத்தால் சுக்ரீவனை அடைந்தான் {சுக்ரீவனை நினைத்துப் பார்த்தான்}:(1) "கடமையைச் செய்பவரான இவர் {ராமர்} வந்திருப்பதாலும், இந்தக் காரியம் வேண்டி வந்திருப்பதாலும், மஹாத்மாவான அந்த சுக்ரீவர் ராஜ்ஜியத்தை அடையக்கூடும்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(2)
அப்போது, பிலவகோத்தமனான {தாவிச் செல்லும் குரங்குகளில் சிறந்தவனான}[1] ஹனுமான், பரம மகிழ்ச்சியடைந்து, வாக்கியவிசாரதனான ராமனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(3) "பம்பையைச் சூழ்ந்திருக்கும் கானகங்கள் அடைதற்கரியவையாகும். பலவகையான வியாலங்களும் {பாம்புகளும்}, மிருகங்களும் நிறைந்த இந்த கோர வனத்திற்கு அனுஜருடன் {தம்பியுடன்} நீர் வந்திருப்பதற்கான அர்த்தம் {காரணம்} என்ன?" {என்று கேட்டான் ஹனுமான்}.(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளின் அடிப்படையிலேயே ராமாயணம் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பிலவகோத்தமன் என்ற சொல்லில் உள்ள "க" என்ற எழுத்து, காயத்ரி மந்திரத்தின் 10வது எழுத்தாகும். 24,000 சுலோகங்களைக் கொண்ட மொத்த காவியத்தில் இதுவரை 9,000 சுலோகங்கள் நிறைவடைந்தன" என்றிருக்கிறது.
அவனுடைய அந்தச் சொற்களைக் கேட்டவனும், ராமனால் உற்சாகப்படுத்தப்பட்டவனுமான லக்ஷ்மணன், மஹாத்மாவும், தசரதாத்மஜனுமான ராமனைக் குறித்து {பின்வருமாறு} சொன்னான்:(5) "ஒளிபொருந்தியவரும், தர்மவத்சலரும் {தர்மத்தை விரும்புகிறவரும்}, தசரதன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு ராஜா, நித்தியம் ஸ்வதர்மத்துடன் சாதுர் வர்ணங்களையும் ஆட்சி செய்து வந்தார் {எப்போதும் கடமையுணர்வுடன் நான்கு வர்ணத்தாரையும் ஆண்டு வந்தார்}.(6) அவரை துவேஷிப்பவர் {வெறுப்பவர்} எவருமில்லை, அவரும் எவரையும் துவேஷித்ததில்லை. அவர் சர்வ பூதங்களுக்கும் பிதாமஹரை {பாட்டனைப்} போல அபரத்தில் {பூமியில்} இருந்தார்.(7) அக்னிஷ்டோமம் முதலிய யஜ்ஞங்களைச் செய்து, தக்ஷிணைகள் கொடுத்தவரான அவருக்கு {தசரதருக்கு} மூத்த புத்திரனான இவரை, இராமன் என்ற பெயரில் ஜனங்கள் கேட்டிருக்கிறார்கள் {அறிந்திருக்கிறார்கள்}.(8)
சர்வபூத சரண்யரும் {அனைத்து உயிரினங்களுக்கும் அடைக்கலம் அளிப்பவரும்}, பிதாவின் ஆணைகளைப் பின்பற்றத் தவறாதவரும், தசரதரின் புத்திரர்களில் மூத்தவரும், உயர்ந்த குணங்களைக் கொண்டவரும், ராஜலக்ஷணங்கள் பொருந்தியவரும், ராஜ்ஜிய சம்பத்தை கொண்டவருமான இவர், ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்டு, வனத்தில் வாழ்வதற்காக என்னுடன் இங்கே வந்தார்.(9,10) மஹாபாக்கியவானே, புலனடக்கம் கொண்டவரும், மஹாதேஜஸ்வியுமான இவர், தினத்துடன் இறங்கும் திவாகரனின் {நாளின் முடிவில் மறையும் சூரியனின்} பிரபையைப் போலத் தன் பாரியையான சீதையால் பின்தொடரப்பட்டவராக வந்தார்.(11) கிருதஜ்ஞரும் {செயல்களை அறிந்தவரும்}, பெரும் ஞானியுமான இவரது குணங்களால் தாச நிலையை {இவரது அடியவன் என்ற நிலையை} அடைந்திருக்கும் நான், லக்ஷ்மணன் என்ற பெயரைக் கொண்ட இவரது தம்பி ஆவேன்.(12)
சுகங்களுக்குத் தகுந்தவரும், மதிப்புக்குத் தகுந்தவரும், சர்வ பூதங்களின் ஹிதாத்மரும் {அனைத்து உயிரினங்களின் நலனை விரும்புகிறவரும்}, ஐசுவரியத்தை இழந்தவரும், வனத்தில் வசிக்க அனுப்பப்பட்டவருமான இவரது மனைவி, யாருமற்ற இடத்தில் காமரூபியான {விரும்பிய வடிவம் ஏற்கவல்ல} ராக்ஷசனால் அபகரிக்கப்பட்டாள். {அப்போது} இவரது பத்தினியைக் கடத்திச் சென்ற அந்த ராக்ஷசன் எவன் என்பதை அறியவில்லை[2].(13,14) சாபத்தால் ராக்ஷசத்வத்தை {தலையற்ற கபந்தன் என்ற ராக்ஷச நிலையை} அடைந்தவனும், தனு என்ற பெயரைக் கொண்டவனுமான திதி புத்திரன் ஒருவன், "வானராதிபன் {சுக்ரீவன்} சமர்த்தன். அந்த மஹாவீரியவான், உன் பாரியையை அபகரித்தவனை அறிந்திருக்கலாம்" {என்று சொன்னான்}. இவ்வாறு சொன்ன தனு, தன்னொளியுடன் ஸ்வர்க்கத்திற்கு வானில் சென்றான்.(15,16)
[2] 3:67:15-20ல் சீதை ராவணனால் கடத்தப்பட்டதை ஜடாயு சொல்கிறான். அதை இங்கே லக்ஷ்மணன் ஹனுமானிடம் சொல்லவில்லை. 3:72:26ல் கபந்தனும், சுக்ரீவன் ராவணன் இருக்கும் இடத்தைத் தேடுவதில் உதவுவான் என்று சொல்கிறான். இங்கே 4:4:13ல் லக்ஷ்மணன் ராவணனைக் குறித்து ஏதும் சொல்லவில்லையென்றாலும், அடுத்த சர்க்கத்தில் 4:5:6ல் ஹனுமான், சுக்ரீவனிடம் ராமலக்ஷ்மணர்களை அறிமுகம் செய்யும்போது, சீதை ராவணனால் கடத்தப்பட்டதைச் சொல்கிறான்.
கேட்கப்பட்ட நான், உனக்கு உள்ளபடியே அனைத்தையும் சொல்லிவிட்டேன். நானும், ராமரும் சுக்ரீவனைச் சரணடைகிறோம்.(17) வளங்களை தத்தம் செய்து, பூர்வத்தில் லோகநாதராக, உத்தமப் புகழை அடைந்தவர் {ராமர்}, சுக்ரீவனை நாதனாக விரும்புகிறார்.(18) எவருடைய பிதா தர்மவத்சலராகவும், சரண்யம் அளிப்பவராகவும், சீதையை மருமகளாகக் கொண்டவராகவும் இருந்தாரோ, அந்த சரண்யரின் புத்திரன், சுக்ரீவனைச் சரணடைகிறார்.(19) தர்மாத்மாவும், சரண்யரும், பூர்வத்தில் சர்வலோகத்திற்கும் சரணமளித்தவரும், என் குருவுமான இந்த ராகவர், அந்த சுக்ரீவனைச் சரணடைகிறார்.(20)
எவருடைய அருளால் இந்தப் பிரஜைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்களோ, அந்த ராமர், வானரேந்திரனின் {சுக்ரீவனின்} அருளை நாடுகிறார்.(21) இராஜாவான எந்த தசரதரால், பிருத்வியில் சர்வ குணபேதங்களுடன் கூடிய சர்வ பார்திபர்களும் சதா எந்நேரமும் மதிப்பை அடைந்தார்களோ, அத்தகையவரின் பூர்வஜ புத்திரரும் {மூத்த மகனும்}, திரி லோகப் புகழ்பெற்றவருமான இந்த ராமர், வானரேந்திரனான சுக்ரீவனைச் சரணடைகிறார்.(22,23) சுக்ரீவன், சோகத்தில் மூழ்கியவரும், சோகத்தால் துன்புற்று சரணடைந்தவருமான ராமருக்கு, சஹயூதபர்களுடன் {தன்னுடன் இருக்கும் குழுத்தலைவர்களுடன்} சேர்ந்து அருள்புரிவதே தகும்" {என்றான் லக்ஷ்மணன்}.(24)
பரிதாபமாக கண்ணீர் சிந்தியபடியே, இவ்வாறு பேசிய சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்}, வாக்கியவிசாரதனான ஹனுமான் இந்த வாக்கியங்களை மறுமொழியாகச் சொன்னான்:(25) "புத்தி சம்பன்னர்களும், குரோதத்தை வென்றவர்களும், இந்திரியங்களை வென்றவர்களும், அதிர்ஷ்டவசமாகப் பார்க்க வந்தவர்களுமான இத்தகையோரை வானரேந்திரர் {சுக்ரீவர்} பார்க்க வேண்டும்.(26) உடன் பிறந்தவரான வாலியால் வைரம் {பகைமை} பாராட்டப்பட்டும், தாரம் {மனைவி} அபகரிக்கப்பட்டும், கடுமையாக அவமதிக்கப்பட்டும், ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்டும் உண்மையில் அச்சத்துடனேயே அவர் {சுக்ரீவர்} வனங்களில் இருக்கிறார் {திரிகிறார்}.(27) பாஸ்கராத்மஜனான {சூரியனின் மகனான} சுக்ரீவர், எங்களுடன் சேர்ந்து, சீதையைத் தேடுவதில் உங்கள் இருவருக்கும் வேண்டிய சஹாயத்தைச் செய்வார்" {என்றான் ஹனுமான்}.(28)
ஹனுமான், மதுரமான சொற்களை மென்மையுடன் இவ்வாறு பேசிவிட்டு, "சாது {நல்லது / சரி}, நாம் சுக்ரீவரிடம் செல்வோம்" என்று ராகவனிடம் {ராமனிடம்} சொன்னான்.(29) தர்மாத்மாவான அந்த லக்ஷ்மணன், இவ்வாறு சொன்ன ஹனுமானுக்கு நியாயப்பட்டி பிரதிபூஜை செய்து, ராகவனிடம் இதைச் சொன்னான்:(30) "இராகவரே, மாருதாத்மஜனான இந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மகிழ்ச்சியுடன் பேசி, காரியம் வேண்டியவனாக நெருங்குவதால், உமது காரியம் நிறைவேறும்.(31) தெளிவாகவும், அருள் வர்ண முகத்துடனும் மகிழ்ச்சியாகப் பேசுகிறான். மாருதாத்மஜனும், வீரனுமான ஹனுமான், பொய் சொல்லமாட்டான்" {என்றான் லக்ஷ்மணன்}.(32)
அப்போது மஹாபிராஜ்ஞனும் {அனைத்தையும் அறிந்தவனும்}, மாருதாத்மஜனுமான அவன் {ஹனுமான்}, வீரர்களான அவ்விருவரையும் எடுத்துக் கொண்டு ஹரிராஜனிடம் செல்லப் புறப்பட்டான்.(33) அந்த கபி குஞ்சரன் {குரங்குகளில் யானை போன்ற ஹனுமான்}, பிக்ஷு ரூபத்தைக் கைவிட்டு, வானர ரூபத்தை ஏற்று, அந்த வீரர்கள் இருவரையும் தன் பிருஷ்டத்தில் {பின்னே} ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்[3].(34) பரந்த புகழ் கொண்டவனும், கபிக்களில் {குரங்குகளில்} பெரும் வீரனும், பவனனின் {வாயு தேவனின்} மகனுமான அவன் {ஹனுமான்}, காரியம் நிறைவேறியதைப் போன்ற மகிழ்ச்சியை அடைந்தான். சுப மதியையும், பெரும் விக்கிரமத்தையும் கொண்டவன் {ஹனுமான்}, ராம லக்ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு அந்த கிரிவரத்திற்கு {சிறந்த மலைக்குச்} சென்றான்.(35)
[3] மின்உருக் கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல்பின் உருக்கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழபொன் உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத்தன் உருக்கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான்- கம்பராமாயணம் 3781ம் பாடல், அனுமப் படலம்பொருள்: தர்மத்தின் தனிமையைத் தீர்ப்பவன் {ஹனுமான்}, மின்னலின் உருவம் கொண்ட வில்லேந்தியவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} வியப்புற, வேதங்களும், நன்நூல்களும் பின்னர் {பெரும்} உருவம் எடுத்து வந்தன என்னும் பெருமையும், பொருளும் தாழும்படியும், பொன் உருவம் கொண்ட மேருமலை அவனது புஜங்களுக்கும் உவமை ஆகாது எனும்படியும் தன் {பெரும்} உருவத்தை எடுத்து நின்றான்.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 04ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |