Tuesday, 23 May 2023

பிக்ஷு ரூபம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 03 (39)

A mendicant form | Kishkindha-Kanda-Sarga-03 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனைக் காண மாறுவேடத்தில் சென்ற ஹனுமான்; ஹனுமானின் அறிவை வியந்த ராமன்; சந்திப்பின் நோக்கத்தை வெளிப்படுத்திய ஹனுமான்...

Hanuman appoached Rama and Lakshmana in a bikshu form

மஹாத்மாவான சுக்ரீவனின் சொற்களைப் புரிந்து கொண்ட ஹனுமான், ரிச்யமூக பர்வதத்தில் இருந்து, ராகவர்கள் இருந்த இடத்திற்குத் தாவிச் சென்றான்.(1) மாருதாத்மஜனான {வாயு தேவனின் புதல்வனான} ஹனுமான், கபியின் {குரங்கின்} ரூபத்தைக் கைவிட்டு, கபியின் ஷட புத்தியுடன் {குரங்கின் சஞ்சல புத்தியுடன்} அப்போது பிக்ஷுவின் {துறவியின்} ரூபத்தை அடைந்தான்[1].(2) பிறகு அந்த ஹனுமான், ராகவர்களைப் பணிவுடன் அணுகி, மதிப்புடன் வணங்கி, மனத்திற்கு இனிமையான, மென்மையான குரலில், முறையாக அந்த வீரர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்தினான்.(3,4அ) 

[1] அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு
வெஞ் சமத் தொழிலர் தவ மெய்யர் கைச் சிலையர் என
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினைவும்

- கம்பராமாயணம் 3754ம் பாடல், அனுமப் படலம்

பொருள்: அஞ்சனையின் மகன் {அனுமான்}, மாணவனின் வடிவம் தாங்கி, நீல மலையைப் போன்ற மைந்தனை {ராமனை} நெருங்கி, அருகில் மறைவாக நின்று, "கொடும்போர்த் தொழில் சாந்தவர்கள், தவ வேட உடம்பைத் தாங்கி, கையில் வில்லேந்தியுள்ளனர்" என நெஞ்சில் ஐயங்கொண்டு கல்வியின் அறிவால் அவர்களைக் குறித்துச் சிந்தித்தான்.

வானரோத்தமனான ஹனுமான், சத்திய பராக்கிரமர்களும், வீரர்களுமான அவ்விருவரையும் விதிப்படி பூஜித்து, {சுக்ரீவன்} விரும்பிய மிருதுவான வாக்கியங்களில் {பின்வருமாறு} பேசினான்:(4ஆ,5அ) "இராஜரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் ஒப்பானவர்களும், சிறந்த விரதங்களுடனும், சிறந்த நிறத்துடனும் கூடிய தபஸ்விகளுமான நீங்கள் இருவரும், மிருக கணங்களையும் {மான் கூட்டங்களையும்}, வனசாரிகள் பிறரையும் {வனத்தில் திரியும் பிறவற்றையும்} அச்சுறுத்தியபடி இந்த தேசத்தை {இடத்தை} எப்படி அடைந்தீர்கள்?(5ஆ,6) 

பம்பை தீரத்தில் முளைத்திருக்கும் விருக்ஷங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்து, சுபஜலம் கொண்ட இந்த நதியை ஒளிரச் செய்பவர்களும், வலிமைமிக்கவர்களும், தைரியவான்களும், சுவர்ண நிறம் கொண்ட மரவுரிகளை உடுத்தியவர்களும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிடுபவர்களும், சிறந்த புஜங்களைக் கொண்டவர்களும், இந்தப் பிரஜைகளை {காட்டில் வசிக்கும் உயிரினங்களைப்} பீதியடையச் செய்பவர்களுமான நீங்கள் யாவர்?(7,8)

சிம்ஹம் போன்ற {கூரிய} பார்வையைக் கொண்டவர்களும், வீரர்களும், மஹாபலவான்களும், பராக்கிரமர்களும், சக்ரனின் வில்லுக்கு {இந்திரனின் வில்லுக்கு / வானவில்லுக்கு} ஒப்பான விற்களைப் பிடித்திருக்கும் சத்ரு நாசனர்களும் {பகைவரை அழிப்பவர்களும்}, ஸ்ரீமான்களும், ரூப சம்பன்னர்களும் {தோற்றத்தில் பொலிவானவர்களும்}, சிறந்த ரிஷபத்தைப் போன்ற விக்கிரமத்தை {சிறந்த காளையைப் போன்ற வெற்றிநடையைக்} கொண்டவர்களும், ஹஸ்தி ஹஸ்தத்திற்கு ஒப்பான புஜங்களை {யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான கைகளைக்} கொண்டவர்களும், ஒளிபடைத்த நரரிஷபர்களுமாக {மனிதர்களில் காளைகளாக} இருக்கிறீர்கள்.(9,10) இந்தப் பர்வதேந்திரனை {மலைகளின் இந்திரனான ரிச்யமூகத்தை} உங்கள் பிரபையால் பிரகாசிக்கச் செய்பவர்களும், இராஜ்ஜியத்திற்குத் தகுந்தவர்களும், அமரர்களுக்கு ஒப்பானவர்களுமான நீங்கள் எப்படி இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} வந்தீர்கள்?(11)

பத்ம பத்ரங்களை {தாமரை இதழ்களைப்} போன்ற கண்களைக் கொண்டவர்களும், வீரர்களும், ஜடாமண்டலம் தரித்தவர்களும், அன்யோன்யம் ஒத்தவர்களும் {ஒருவரையொருவர் ஒத்தவர்களும் / ஒரே வடிவத்தைக் கொண்டவர்களும்}, தேவலோகத்தில் இருந்து இங்கே வந்த வீரர்களும், எதேச்சையாக வசுந்தரையை {பூமியை} அடைந்தவர்களும், சந்திரனையும், சூரியனையும் போன்றவர்களும், விசால மார்பைக் கொண்ட வீரர்களும், மானுஷ ரூபம் கொண்ட தேவர்களும், சிம்ஹ ஸ்கந்தர்களுமான {சிங்கத்தைப் போன்ற தோள்பட்டைகளைக் கொண்டவர்களுமான} நீங்கள், மதங்கொண்ட கோரிஷபங்களை {வெறி கொண்ட பசுக்களையும், காளைகளையும்} போல மஹா உற்சாகம் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள்.(12-14அ) நீளமானவையும், பருத்தவையும், பரிகங்களுக்கு ஒப்பானவையும், சர்வ பூஷணங்களாலும் {அனைத்து ஆபரணங்களாலும்} அலங்கரிக்கத் தகுந்தவையுமான உங்கள் கைகள், அலங்கரிக்கப்படாமல் இருப்பதற்கான அர்த்தம் {காரணம்} என்ன?(14ஆ,15அ) 

சாகரங்கள் {கடல்கள்}, வனங்கள், விந்தியம், மேரு {போன்ற மலைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பிருத்வியையும் ரக்ஷிப்பதற்கு {முழு பூமியையும் காப்பதற்குத்} தகுதியானவர்கள் என்று உங்கள் இருவரையும் நான் கருதுகிறேன்.(15ஆ,16அ) சித்திரமானவையும், வழுவழுப்பானவையும், அற்புதமாகப் பளபளப்பவையுமான இந்த தனுசுகள் {விற்கள்}, ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தைப் போலப் பிரகாசிக்கின்றன.(16ஆ,17அ) ஜீவிதத்திற்கு முடிவை ஏற்படுத்தவல்லவையும், கோரமானவையும், பன்னகங்களை {பாம்புகளைப்} போல் ஜுவலிப்பவையுமான கூரிய பாணங்கள் சம்பூர்ணமாக இருக்கும் தூணிகளும் இதோ சுப தரிசனம் தருகின்றன.(17ஆ,18அ) நன்கு அகன்று, நீண்டவையும், புடம்போட்ட ஹாடகத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டவையுமான இந்த கட்கங்கள் {வாள்கள்} இரண்டும், {சட்டை} உரித்த புஜகங்களை {பாம்புகளைப்} போல ஒளிர்கின்றன.(18ஆ,19அ) இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் என்னிடம், ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?[2]{19ஆ}

[2] இப்படி ஹனுமான், புகழுரைகளுடன் கூடிய நான்கு கேள்விகளை நிறுத்தி, நிறுத்தி கேட்ட பின்பும் அவர்கள் பேசாதிருக்கின்றனர். அதன்பிறகும், புகழ்ந்த பிறகே, "ஏன் பேசாதிருக்கிறீர்கள்" என்ற இந்தக் கேள்வியை ஹனுமான் கேட்கிறான். தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஹனுமான் அவர்களின் அமைதியால் நொந்து போகிறான். இவ்வளவு நேரமும் சாத்திரங்கள் பலவற்றில் கற்ற புகழுரைகளைச் சொல்லியிருக்கிறான். அவர்களின் ஆடைகளும், ஜடாமுடியும் துறவிகளைப் போல் இருந்தாலும், ஆயுதங்கள் தரித்து ராஜ களையுடன் இருக்கின்றனர். ஹனுமான் சொன்னவை அனைத்தும், லக்ஷண சாஸ்திரத்தில் பெரும் மன்னர்களின் பண்புகள் என்று குறிப்பிடப்படுபவையே. இப்படிப் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ராமலக்ஷ்மணர்கள் இருவரும் கூட இதே வகையில் ஹனுமானை ஆய்வு செய்கின்றனர். ஜனங்களற்ற அடர்ந்த வனத்தில் ஒரு துறவி வந்து நீளமாகப் பேசுகிறானே என்று அந்தச் சகோதரர்கள் இருவரும் ஐயுறுகின்றனர். "இவன், ஈகை பெற கிராமங்களில் அலையாமல், ஆழ்ந்த கானகத்தில் திரிவதேன்?". பொதுவாகத் துறவிகள் கேட்கப்பட்டால் பேசுவார்களேயன்றி, நீளமாகப் பேசமாட்டார்கள். எனவே அந்தச் சகோதரர்கள் ஹனுமானை ராக்ஷசனாகவோ, வேறு எவனாலும் அனுப்பட்டவனாகவோ ஐயுறுகிறார்கள்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.

சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்ட ஒரு தர்மாத்மா இருக்கிறார். வானரபுங்கவரான அந்த வீரர், உடன்பிறந்தவரால் {தன் அண்ணன் வாலியால்} விரட்டப்பட்டு, ஜகத்தில் துக்கத்துடன் அலைந்து திரிகிறார்.(19ஆ,20) மஹாத்மாவும், வானரர்களில் முக்கியரும், ராஜருமான அந்த சுக்ரீவரால் அனுப்பப்பட்டு இங்கே வந்திருக்கும் நான் ஹனுமான் என்ற பெயரைக் கொண்ட வானரனாவேன்.(21) தர்மாத்மாவான அந்த சுக்ரீவர், உங்கள் இருவரிடமும் ஸக்யத்தை {நட்பை / கூட்டணியை} விரும்புகிறார். சுக்ரீவரின் பிரிய காரணத்திற்காக, பிக்ஷு ரூப வேடந்தரித்து வந்த அவரது சகா {அமைச்சர்} என்றும், ரிச்யமூகத்தில் இருந்து விருப்பத்துடன் இங்கே வந்து, விரும்பிய வடிவம் ஏற்றிருக்கும் பவனாத்மஜனான {வாயு தேவனின் மகனான} வானரன் என்றும் என்னை அறிவீராக" {என்றான் ஹனுமான்}.(22,23)

வாக்கியஜ்ஞனும், வாக்கிய குசலனுமான {பேசுவதை நன்கறிந்த நல்ல பேச்சாளனான} ஹனுமான், வீரர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரிடமும் இவ்வாறு சொன்ன பிறகு வேறேதும் பேசாதிருந்தான்.(24) நல்ல மகிழ்ச்சியான வதனத்துடன் கூடிய ஸ்ரீமான் ராமன், அவனது சொற்கள் அனைத்தையும் கேட்டு, தன்னருகே நின்று கொண்டிருந்தவனும், உடன்பிறந்தவனுமான லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்[3]:(25) "கபேந்திரனும் {குரங்குகளின் தலைவனும்}, மஹாத்மாவுமான சுக்ரீவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்னிடம் அவனது சகா {மந்திரியான ஹனுமான்} வந்திருக்கிறான்.(26) சௌமித்ரியே, அரிந்தமா {பகைவரை அழிப்பவனே}, வாக்கியஜ்ஞனும், சினேகத்திற்குத் தகுந்தவனும், சுக்ரீவனின் சகாவுமான {மந்திரியுமான} இந்தக் கபியிடம் {குரங்கிடம்}, மதுரமான வாக்கியங்களில் நீ பேசுவாயாக.(27) 

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமன் இங்கே தன் ராஜதர்மத்தைப் பின்பற்றுகிறான். ஒரு பேரரசன், தன் தூதர்கள், அல்லது பிரதிநிதிகளின் மூலம் பேசுவானேயன்றி நேரடியான உரையாடலில் ஈடுபடமாட்டான். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இலக்ஷ்மணனும், சாத்திரங்களின் அறிவில் ஹனுமானுக்கு இணையான சொல்விற்பன்னன் ஆவான். அதனாலேயே ராமன் பின்னர் இப்பணியை அவனுக்கு ஒதுக்குகிறான்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

ரிக் வேதத்தில் நல்ல பயிற்சி இல்லாதவனும், யஜுர்வேதத்தை நினைவுகூராதவனும், சாம வேதத்தில் அறிஞனல்லாதவனுமான எவனும் உண்மையில் இப்படி பேசுவது சாத்தியமில்லை[4].(28) நிச்சயம் இவன், விரிவான வியாகரணத்தை {முழுமையான இலக்கணத்தை} பலமுறை கேட்டிருக்கிறான். இவன் அதிகம் பேசினாலும், எதுவும் ஒழுங்குமீறியதாக சப்திக்கவில்லை {ஒலிக்கவில்லை}.(29) முகத்தின் நேத்திரங்களிலோ {கண்களிலோ}, நெற்றியிலோ, புருவங்களிலோ, வேறு பாகங்களிலோ எங்கும், எதிலும் தோஷம் {குற்றம்} தென்படவில்லை[5].(30) விஸ்தாரமற்ற, சந்தேகமற்ற, தாமதமற்ற, முரணற்ற வாக்கியம், மார்புக்கும், கண்டகத்துக்கும் {தொண்டைக்கும்} இடையில் இருந்து மத்திமமான சுவரத்தில் எழுகிறது[6].(31) தெளிவாகவும், முறையாகவும், அற்புதமாகவும், தாமதிக்காமலும், மங்கலச் சொற்களில், ஹிருதயம் மகிழும் வண்ணம் பேசுகிறான்[7].(32)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "4-3-15ல் ஹனுமான், "நீங்கள் பூமியை ஆளத் தகுந்தவர்கள்" என்று சொல்கிறான். இது ரிக்வேத ஐதிரேயத்தில் உள்ளது. 4-3-13ல், "நீங்கள் மனித வடிவில் உள்ள தேவர்கள்" என்கிறான். இது யஜுர் வேதத்தில் உள்ளது. 4-3-11ல், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்கள்" என்று சொல்கிறான். இது சாமவேத சந்தோக்யத்தில் உள்ளது. எனவே ஹனுமானின் இந்தப் பேச்சுகள் நேரடியாக வேதங்களுடன் தொடர்புடையதாகக் கொள்ளப்படுகின்றன" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "1.இழுத்துப் பேசுபவர்கள், 2.வேகமாகப் பேசுபவர்கள், 3.தலையை ஆட்டிப் பேசுபவர்கள், 4.எழுதி வைத்துப் பேசுபவர்கள், 5.பொருளைப் புரிந்து கொள்ளாமல் பேசுபவர்கள், 6.பலவீனமான குரலில் பேசுபவர்கள் ஆகியோர் அறுவரும் பாதக ஆத்மாக்கள் என்று வேதங்கள் சொல்கின்றன" என்றிருக்கிறது

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "1.சந்தேகத்துடன் படிப்பது, 2.அச்சத்துடன் படிப்பது, 3.உரக்கப் படிப்பது, 4. தெளிவின்றி படிப்பது, 5.மூக்கில் படிப்பது, 6.கதறி படிப்பது, 7.உச்ச தொனியில் படிப்பது, 8.பொருத்தமின்றி படிப்பது, 9.சுவரமில்லாமல் படிப்பது, 10.முரட்டுத் தனமாகப் படிப்பது, 11.எழுத்துகளைச் சிதைத்துப் படிப்பது, 12.எதிர்மறை எண்ணத்துடன் படிப்பது, 13.குழப்பத்துடன் படிப்பது, 14.இதழ், அடிநா, பின்னண்ணம் பொருந்தாமல் படிப்பது ஆகியன படிப்பதிலுள்ள பதினான்கு தோஷங்கள் ஆகும்" என்றிருக்கிறது.

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "1.மதுரமான குரலில் பேசுவது, 2.அக்ஷரங்களைத் தெளிவாக உச்சரிப்பது, 3. சொற்களைச் சரியாகச் சொல்வது, 4.துரிதமாகப் பேசுவது, 5. தைரியமாகப் பேசுவது, 6. லயத்துடன் பேசுவது ஆகியன பேசுபவர்களின் சிறந்த ஆறு குணங்களாகும்" என்றிருக்கிறது.

திரிஸ்தானங்களில் {இதயம், தொண்டை, தலை ஆகியவற்றில்} உண்டாகும் கவர்ச்சியான பேச்சுடன் கூடிய இவனை, உயர்த்தப்பட்ட வாளுடன் கூடிய பகைவனே ஆனாலும் எவன்தான் சித்தத்தால் ஆராதிக்கமாட்டான்.(33) அநகா {குற்றமற்றவனே}, எந்தப் பார்த்திபனிடம் இந்தவித தூதன் இல்லையோ, அவனது வழிமுறைகளும், காரியங்களும் எப்படி சித்திக்கும் {நிறைவேறும்}?(34) எவனிடம் இந்த குண கணங்களைக் கொண்ட காரிய சாதகர்கள் இருப்பார்களோ, அவனுடைய சர்வ நோக்கங்களும், {இது போன்ற} தூது வாக்கியங்களின் தூண்டலால் சித்திக்கும் {நிறைவேறும்}" {என்றான் ராமன்}.(35)

இவ்வாறு சொல்லப்பட்டதும், வாக்கியஜ்ஞனான சௌமித்ரி {பேச்சில் வல்லவனும், சுமித்ரையின் மகனுமான லக்ஷ்மணன்}, வாக்கியஜ்ஞனும், பவனாத்மஜனும் {வாயு தேவனின் புதல்வனும்}, சுக்ரீவனின் சகாவுமான அந்த கபியிடம் {மந்திரியுமான அந்தக் குரங்கிடம், பின்வருமாறு} பேசினான்:(36) "வித்வானே, மஹாத்மாவான சுக்ரீவனின் குணங்களை நாங்கள் இருவரும் அறிவோம். நாங்கள் அந்த பிலவகேஷ்வரனான {தாவிச் செல்பவர்களின் தலைவனான} சுக்ரீவனையே தேடிக் கொண்டிருக்கிறோம்.(37) சத்தமனே {நல்லவனே}, ஹனுமானே, இப்போது சுக்ரீவனின் சொற்களில் நீ பேசினாய். நீ சொன்ன அந்த சொற்களையே நாங்களும் விரும்புகிறோம்" {என்றான் லக்ஷ்மணன்}.(38)

பவனாத்மஜனான அந்தக் கபி {வாயு தேவனின் மைந்தனும், குரங்குமான ஹனுமான்}, நிபுணத்துவம்வாய்ந்த அவனது {லக்ஷ்மணனின்} வாக்கியங்களைக் கேட்டு, மகிழ்ச்சி ரூபமடைந்து, ஜயம் விளையுமென மனத்தில் நிறைவடைந்தபோது, அவர்களுடன் ஸக்யத்தை {நட்பை / கூட்டணியை} ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான்.(39)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 03ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்