Friendship | Kishkindha-Kanda-Sarga-05 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனும், லக்ஷ்மணனும் சுக்ரீவனைச் சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொள்வது; வாலியின் அதர்மத்தைச் சொன்ன சுக்ரீவன்; இராமன் உதவி செய்வதாக உறுதி அளித்தது...
ஹனுமான், ரிச்யமூகத்திலிருந்து அந்த மலய கிரிக்குச் சென்று[1], கபி ராஜனிடம் {குரங்கு மன்னன் சுக்ரீவனிடம்} வீரர்களான ராகவர்களைப் பற்றி {பின்வருமாறு} கூறினான்:(1) "மஹாபிராஜ்ஞரே {பெரும் பகுத்தறிவாளரே}, இவர் ராமர். திட விக்கிரமரே {உறுதியும், வீரமும் கொண்டவரே}, உடன்பிறந்த லக்ஷ்மணனுடன், சத்திய விக்கிரமரான இந்த ராமர் வந்திருக்கிறார்.(2) இக்ஷ்வாகுக்களின் குலத்தில் பிறந்தவரும், தசரதாத்மஜருமான இத்தகைய ராமர், பிதாவின் ஆணைகளைப் பின்பற்றி தர்மத்தில் வல்லவராகத் திகழ்கிறார்.(3)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இரிச்யமூகமும், மலயமும் அடுத்தடுத்து இருந்த இரு மலைகள் என்பது இங்கே தெளிவாகிறது. ஹனுமான், ராமனையும், லக்ஷ்மணனையும் ரிச்யமூகத்தில் விட்டுவிட்டு, சுக்ரீவன் இருந்த மலயத்திற்குச் சென்றதாகத் தெரிகிறது. அந்நிகழ்வின் தொடர்ச்சியாக, ஹனுமான் ரிச்யமூகத்திற்குத் திரும்பிவந்து, ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
எவரால் ராஜசூயம், அச்வமேதம், அக்னி வழிபாடு ஆகியவை செய்யப்பட்டனவோ, அதே போல நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பசுக்கள் தக்ஷிணையாக அளிக்கப்பட்டனவோ, எவரின் தபப்பயனிலும், சத்திய வாக்கிலும் இந்த வசுதை {பூமி} பரிபாலிக்கப்பட்டதோ, அவரது {அந்த தசரதரின்} புத்திரனான இந்த ராமர், ஒரு ஸ்திரீயின் {சிற்றன்னையான கைகேயியின்} காரணமாக அரண்யத்திற்கு வந்தார்.(4,5) அரண்யத்தில் இவர் நியதத்துடன் {தற்கட்டுப்பாட்டுடன்} வசித்து வந்தபோது, இந்த மஹாத்மாவின் பாரியை {மனைவியான சீதை} ராவணனால் கடத்தப்பட்டாள்[2]. அத்தகையவர் உம்மைச் சரணடைய வந்திருக்கிறார்.(6) உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும், உம்முடன் ஸக்யத்தை {நட்பை / கூட்டணியை} விரும்புகின்றனர். பூஜிக்கத்தகுந்தவர்களான இவர்கள் இருவரையும் வரவேற்று அர்ச்சிப்பீராக" {என்றான் ஹனுமான்}.(7)
[2] 4:4:14ல் லக்ஷ்மணன், "இவரது பத்தினியைக் கடத்திச் சென்ற அந்த ராக்ஷசன் எவன் என்பதை அறியவில்லை" என்று சொல்கிறான். இருப்பினும் இங்கே ஹனுமான் ராவணனின் பெயரைக் குறிப்பிடுகிறான்.
வானராதிபனான சுக்ரீவன், ஹனுமானின் வாக்கியங்களைக் கேட்டு, தரிசிக்க வசீகரமான தோற்றத்தை அடைந்து[3][4], பிரீதியுடன் ராகவனிடம் {பின்வருமாறு} பேசினான்:(8) "நீர் தர்மவினீதர் {தர்மவழியில் நடக்கும் பயிற்சி பெற்றவர்}; தபத்தில் சிறந்தவர்; சர்வ வத்ஸலர் {அனைத்திடமும் அன்பு கொண்டவர்} என்று உள்ளபடியே உமது குணங்களை என்னிடம் வாயுபுத்திரன் {ஹனுமான்} சொன்னான்.(9) பிரபுவே, அத்தகைய நீர் வானரனான என்னுடன் நட்பு கொள்ளவிரும்புகிறீர். இவ்வாறான இஃது {இவ்வாறு ஏற்படப்போகும் இந்த நட்பு} எனக்கே சத்காரமும் {கௌரவமும் / நன்மையும்}, உத்தம லாபமும் ஆகும்.(10) என் ஸக்யத்தை {நட்பை / கூட்டணியை} நீர் விரும்பினால், இதோ கையை நீட்டுகிறேன். {உமது} உள்ளங்கையால் {என்} உள்ளங்கையைக் பற்றுவீராக. மரியாதையுடன் கூடிய ஓர் உறுதியான பந்தம் {பற்று} உண்டாகட்டும்" {என்றான் சுக்ரீவன்}.(11)
[3] வேறு பதிப்புகளின்படி இங்கே ஒரு சுலோகம் விடுபட்டிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "அனுமானுடைய சொற்களைக் கேட்ட சுக்ரீவன், மனக்கவலை ஒழிந்தவனாக, உள்ளம் பூரித்தவனாக, இராமனிடமிருந்து மிகப் பயங்கரமான எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து அஞ்சி நடுங்கியதையும் விட்டொழித்தான். வானர மன்னனாகிய சுக்ரீவன், மானுட உருவம் தாங்கி, கண்கவர் வசீகரத் தோற்றத்துடன் கூடியவனாக, மனம் குளிர்ந்து இராமனைப் பார்த்துக் கூறினான்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் தேசிராஜு ஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளில் சுக்ரீவன் மானுட வடிவம் ஏற்கும் சுலோகம் இல்லை. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பிலும், செம்பதிப்பான பிபேக்திப்ராயின் பதிப்பிலும், தமிழ்ப் பதிப்புகள் அனைத்திலும் மேலே கோரக்பூர் பதிப்பில் சொன்னவாறே இருக்கிறது.
[4] அன்னஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான்உன்னையே உடைய எற்கு அரியது எப் பொருள் அரோபொன்னையே பொருவுவாய் போது என போதுவான்தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான்.- கம்பராமாயணம் 3801ம் பாடல், நட்புக் கோட் படலம்பொருள்: அவன் {ஹனுமான்} சொன்ன சொற்கள் அனைத்தையும் அறிவினால் அறிந்து உணர்ந்தவன் {சுக்ரீவன்}, "பொன்னுக்கு ஒப்பானவனே, உன்னையே {துணையாக} உடைய எனக்கு, எதுதான் அரியது? வருவாயாக" என்று சொல்லிப் புறப்பட்டு, தனக்கு ஒப்பானவனின் {ராமனின்} பாதங்களை வந்தடைந்தான்.
சுக்ரீவன் சொன்ன சொற்களைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தவன் {ராமன்}, உள்ளங்கையால் {சுக்ரீவனின்} கையை அழுத்தி, நட்பை ஏற்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சியுடன் இறுகத் தழுவிக் கொண்டான்.(12,13அ) அப்போது அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} ஹனுமான், பிக்ஷு ரூபத்தைக் கைவிட்டு, சொந்த ரூபத்தை அடைந்து,[5] இரண்டு காஷ்டைகளால் பாவகத்தை {கட்டைகளால் நெருப்பை} உண்டாக்கினான். பிறகு, ஒளிமயமான நெருப்பைப் புஷ்பங்களால் அலங்கரித்து வழிபட்டு, பிரீதியுடனும், சமஹிதத்துடனும் {அர்ப்பணிப்புடனும்} அவர்கள் இருவரின் {ராமனுக்கும், சுக்ரீவனுக்கும்} மத்தியில் வைத்தான்.(13ஆ-15அ) அப்போது அவர்கள் இருவரும், ஒளிரும் அக்னியை பிரதக்ஷிணம் செய்தனர் {நெருப்பை வலம் வந்தனர்}. சுக்ரீவனும், ராகவனும் இவ்வாறே வயஸ்யத்வத்தை {நட்பு நிலையை} நிறுவினர்.(15ஆ,16அ) பிறகு, ஹரிராகவர்களான {சுக்ரீவனும், ராமனுமான} அவ்விருவரும் பிரீதியடைந்த மனத்துடன், அன்யோன்யம் {ஒருவரையொருவர்} பார்த்துக் கொள்வதில் திருப்தியடையாமல் இருந்தனர்.(16ஆ,17அ)
[5] 4:4:34ல், ஏற்கனவே பிக்ஷு ரூபத்தைக் கைவிட்டு, வானர ரூபத்தை அடைந்து ராமலக்ஷ்மணர்களைச் சுமந்து சென்றான். இப்போது 4:5:8ல் சுக்ரீவன் மனித ரூபத்தை அடைந்த போது, ஹனுமானும் மீண்டும் பிக்ஷு ரூபத்தை அடைந்திருக்க வேண்டும்.
சுக்ரீவன், "நீர் என் ஹிருதய வயஸ்யர் {நண்பர்} ஆகிவிட்டீர். நமது சுகதுக்கங்கள் ஒன்றே ஆகும்" என்ற வாக்கியத்தை மகிழ்ச்சியுடன் ராகவனிடம் {ராமனிடம்} சொன்னான்.(17ஆ,18அ) அப்போது சுக்ரீவன், இலைகள் பலவற்றுடன் கூடியதும், நன்கு புஷ்பித்ததுமான ஒரு சால சாகையை {சாலமரக்கிளையை முறித்துப்} பரப்பி ராகவனுடன் சேர்ந்து அதில் அமர்ந்தான்.(18ஆ,19அ) பிறகு மாருதாத்மஜனான ஹனுமான், நன்கு புஷ்பித்த சந்தன விருக்ஷத்தின் சாகையை {சந்தன மரக்கிளையை} மகிழ்ச்சியுடன் லக்ஷ்மணனிடம் கொடுத்தான்.(19ஆ,20அ)
அப்போது மகிழ்ச்சியடைந்த சுக்ரீவன், மகிழ்ச்சியில் படபடக்கும் கண்களுடன், மெல்லிய மதுரமான சொற்களில் ராமனிடம் இவ்வாறு மறுமொழி கூறினான்:(20ஆ,21அ) "இராமரே, ஏளனப்படுத்தப்பட்டவனும், பாரியை அபகரிக்கப்பட்டவனுமான நான் பயத்தால் பீடிக்கப்பட்டவனாக இங்கே வனங்களில் திரிந்து வருகிறேன். பயங்கரமானதும், கடப்பதற்கரியதுமான இதையே என் புகலிடமாக்கிக் கொண்டேன்.(21ஆ,22அ) இராகவரே, என்னுடன் பிறந்த வாலி, என்னைப் பழித்து வைரியாக்கிக் கொண்டார். அச்சமடைந்த நான், நனவு கலங்கியவனாக வனங்களில் பீதியுடன் வசித்து வருகிறேன்.(22ஆ,23அ) மஹாபாக்கியவானே, வாலியிடம் கொண்ட பயத்தால் அச்சமடைந்திருக்கும் எனக்கு அபயம் {பயமில்லா நிலையை} அளிப்பீராக. காகுத்ஸ்தரே, நான் எவ்வாறு பயமற்றவனாவேனோ அவ்வாறு செயல்படுவதே உமக்குத் தகும்" {என்றான் சுக்ரீவன்}.(23ஆ,24அ)
இவ்வாறு உரைக்கப்பட்டதும், தேஜஸ்வியும், தர்மஜ்ஞனும், தர்மவத்ஸலனுமான காகுத்ஸ்தன் {ராமன்}, புன்னகைத்தவாறே சுக்ரீவனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(24ஆ,25அ) "மஹாகபியே {பெருங்குரங்கானவனே}, உபகாரத்தின் பலனே மித்ரம் {உதவி செய்வதன் பயனாய் விளைவது நட்பு} என்பதை நான் அறிவேன். உன் பாரியையை அபகரித்த அந்த வாலியை நான் கொல்ல விரும்புகிறேன்.(25ஆ,26அ) அமோகமானவையும் {தவறாதவையும்}, சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவையும், கூர்மையானவையும், கங்க இறகுகள் பூட்டப்பட்டவையும், மஹேந்திரனின் அசனிக்கு {இந்திரனின் இடிக்கு / வஜ்ரத்திற்கு} ஒப்பானவையும், கூர்முனை கொண்டவையும், நேரான கணுக்களைக் கொண்டவையும், புஜகங்களை {பாம்புகளைப்} போன்ற சீற்றம் கொண்டவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான என்னுடைய இந்தச் சரங்கள், துர்விருத்தம் கொண்ட அந்த வாலியின் மேல் பாயப்போகின்றன.(26ஆ-28அ) விஷப்பாம்புகளுக்கு ஒப்பான இந்தக் குரூரச் சரங்களால், பூமியில் பிளந்து விழும் பர்வதத்தைப் போல, இப்போதே வாலி அழியப்போவதை நீ பார்ப்பாய்" {என்றான் ராமன்}.(28ஆ,29அ)
ஆத்ம ஹிதத்துடன் கூடிய அந்த சுக்ரீவன், ராகவனின் அந்தச் சொற்களைக் கேட்டுப் பரம பிரீதியடைந்து, {பின்வரும்} மஹத்தான வாக்கியத்தைச் சொன்னான்:(29ஆ,இ) "நரசிம்மரே {மனிதர்களில் சிங்கமே}, வீரரே, உமது அருளால் எனக்குப் பிரியமானவளையும், ராஜ்ஜித்தையும் மீட்பேன். நரதேவரே {மனிதர்களின் தேவரே}, வைரியான என் ஆக்ரஜர் {பகைவரான என் அண்ணன் வாலி} மீண்டும் {என்னை} ஹிம்சிக்காத வகையில் நீர் செயல்படுவீராக" {என்றான் சுக்ரீவன்}.(30)
சுக்ரீவ, ராம பிரணயப் பிரஸங்கத்தின் போது {சுக்ரீவனும், ராமனும் நட்புடன் அன்பாக உரையாடிக் கொண்டிருந்தபோது}, சீதை, கபீந்திரன் {குரங்குகளின் இந்திரனான வாலி}, க்ஷணதாசராணன் {இரவுலாவியான ராவணன்} ஆகியோரின், ராஜீவ {தாமரை}, ஹேம {பொன்}, ஜுவாலைக்கு ஒப்பான இடது நேத்திரங்கள் {கண்கள்} முறையே சமமாக {ஒரே நேரத்தில்} துடித்தன[6].(31)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதையின் கண்களை தாமரைகளுடனும், வாலியின் கண்களை பொன் பிந்துக்களுடனும், ராவணனின் கண்களை அக்னி ஜுவாலைகளுடனும் ஒப்பிடும் அடுத்தடுத்த சமமான சொற்களின் மூலம் ஒரு சமமான உருவக வெளிப்பாட்டைக் கொணரும் "கிரம அலங்கார"த்துடன் கூடிய சுலோகமாக இது திகழ்கிறது. இடது கண் துடிப்பது ஆணுக்கு கெட்ட சகுனமும், பெண்ணுக்கு நல்ல சகுனமும் ஆகும். எனவே, ராமன், சுக்ரீவனுக்கிடையிலான இந்த நட்பானது, வாலி, ராவணன் என்ற தீமைகளைப் பூமியில் இருந்து அழிப்பதற்கான நாற்றாங்காலாக {வித்திடும் புள்ளியாக} இருக்கிறது" என்றிருக்கிறது.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 05ல் உள்ள சுலோகங்கள்: 31
Previous | | Sanskrit | | English | | Next |