Illusory deer | Aranya-Kanda-Sarga-42 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் குடிலுக்குச் சென்று அற்புதமான மானாக மாறித் திரிந்த மாரீசன்; மானைக் கண்டு வியப்படைந்த சீதை...
இவ்வாறு கடுஞ்சொல் பேசினாலும், அந்த ராத்ரிசரர்களின் பிரபுவிடம் {இரவுலாவிகளின் தலைவனான ராவணனிடம்} கொண்ட பயத்தினால் மனம் நொந்து, "போகலாம்" என்ற மாரீசன், மீண்டும் ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) "சரங்கள், வில், வாள் ஆகியவற்றைத் தரித்து என்னை வதம் செய்யப் போகிறவன் எவனோ அவன் சஸ்திரத்தை உயர்த்தாமல் என்னை மீண்டும் கண்டாலே என் ஜீவிதம் நாசமடையும்.(2) இராமன் முன் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஜீவனுடன் திரும்புகிறவன் எவனும் இல்லை. யமதண்டத்தால் {ஏற்கனவே} கொல்லப்பட்டவனான உனக்கு, அவன் அதன் {ராமன் யமதண்டத்தின்} பிரதிரூபமாகவே வந்திருக்கிறான்.(3) நீ இவ்வாறான துர் ஆத்மாவாக இருக்கும்போது, எனக்கு செய்ய சாத்தியமானது என்ன? {என்னால் என்ன செய்ய முடியும்?} தாதா {குழந்தாய்}, நிசாசரா {இரவுலாவியே}, இதோ நான் போகிறேன். உனக்கு நன்மை நேரட்டும்" {என்றான் மாரீசன்}.(4)
அந்த ராக்ஷசன் {ராவணன்}, இந்த சொற்களால் பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை {மாரீசனை} இறுக அணைத்துக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னான்:(5) "என் விருப்பத்தின் வசப்பட்டு செயல்படுவதே உன் வீரத்திற்குத்[1] தகுந்தது. பூர்வத்தில் நீ வேறு ராக்ஷசனாக இருந்தாய். இப்போதே மாரீசனாகி இருக்கிறாய்.(6) பிசாச வதனங்கொண்ட கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்த ககன ரதத்தில் {ஆகாயத்தில் செல்லவல்ல தேரில்} சீக்கிரம் என்னுடன் ஏறுவாயாக[2].(7) வைதேஹியை லோபங்கொள்ளச் செய்த பிறகு {மயக்கியபிறகு} உன் இஷ்டப்படி நீ செல்வாயாக. அந்த சூனியத்தில் {வெற்றிடத்தில்} இருந்து மைதிலியான அந்த சீதையை நான் பலவந்தமாகக் கொண்டு வருவேன்" {என்றான் ராவணன்}.(8)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில பதிப்புகள், "ஷௌ²ண்டீ³ர்ய" என்பதற்கு பதில், "சௌத்திர்ய" என்ற சொல்லைக் கொண்டிருக்கின்றன. ஷௌண்டீர்யம் என்பது வீரம் என்ற பொருளைக் கொண்டது. சௌந்திர்யம் என்பதற்கு பிடிவாதம் என்று பொருள். இந்தப் பிடிவாதம் என்ற அர்த்தத்தைக் கொண்டால், இந்த சுலோகத்திற்கு, "உன் சொற்கள் என் அதிகாரத்திடம் கொண்ட அச்சத்தை வெளிப்படுத்தினாலும், பிடிவாதமான என் சொற்களால், ராமனைப் பகைவனாகத் தீர்மானித்து, மீண்டும் ராக்ஷசத் தன்மையை அடைந்து இவ்வாறு நீ பேசுகிறாய் என்று தெரிகிறது" என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ள வேண்டும். இதன் மூலம் மாரீசன் கொல்லப்பட்டால் தான் ஏற்க வேண்டிய பொறுப்பை ராவணன் தட்டிக்கழிக்கிறான்" என்றிருக்கிறது.
[2] ஆரண்ய காண்டம் 40ம் சர்க்கம் 24ம் சுலோகத்தில், "இந்தக் காரியத்தை நிறைவேற்ற இடையூறற்ற நல்ல வழியில் நீ செல். நான் ரதத்தில் பின்தொடர்ந்து வருகிறேன்" என்று சொன்ன ராவணன், இப்போது தன்னுடன் தேரில் ஏறிக் கொள்ளுமாறு மாரீசனைக் கேட்கிறான். மாயாவியான மாரீசனை தனியாக விட்டால் தப்பிவிடுவான் என்ற அச்சத்த்தைக் தவிர்க்க உடன் அழைத்துச் செல்வது ஓர் உத்தியாக இருக்கலாம்.
இராவணன் இவ்வாறு சொன்னதும், அந்தத் தாடகை மகன் {மாரீசன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னான். பிறகு ராவணனும், மாரீசனும் விமானம் போன்ற அந்த ரதத்தில் ஆரோஹித்து {ஏறி}, அந்த {மாரீசனின்} ஆசிரம மண்டலத்திலிருந்து சீக்கிரமாக வெளியேறினர்.(9,10அ) அங்கிருந்து சென்ற வழியில் பட்டினங்கள், வனங்கள்[3], கிரிகள், சர்வ சரிதங்கள் {அனைத்து ஆறுகள்}, ராஷ்டிரங்கள், நகரங்கள்[4] ஆகியவற்றை அவர்கள் பார்த்தனர்.(10ஆ,11அ) மாரீசனுடன் கூடிய ராக்ஷசாதிபன் ராவணன், தண்டகாரண்யத்தை அடைந்ததும், அந்த ராகவனின் {ராமனின்} ஆசிரமத்தைக் கண்டான்.(11ஆ,12அ)
[3] சம்ஸ்கிருத மூலத்தில், "பத்தநாநி வநாநி" என்றிருக்கிறது. தமிழில் உள்ள பட்டணம், பட்டினம் என்ற சொற்களுக்கு நெருக்கமாக இந்த பத்தநம் இருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இங்கே பத்தநாநி என்ற பதத்திற்கு, "துறைமுகநகரங்கள்" என்று பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி மற்றும் கோரக்பூர் பதிப்புகளில், "நகரங்கள்" என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பதிப்புகளான தர்மாலயப் பதிப்பில், "பட்டணங்கள்" என்றும், தாதாசாரியர் பதிப்பில், "நகரங்கள்" என்றும் இருக்கிறது. தமிழ் மொழியில் பட்டணம் என்றால் "பெருநகரம்" என்றும், பட்டினம் என்றால் கடற்கரை நகரம் என்றும் வேறுபட்ட பொருள்களில் கொள்ளப்பட்டாலும், பட்டணம் என்பதும் பட்டினத்தின் மரூஉ தான் என்றும், பட்டினம் என்பதன் கொச்சைச் வடிவமே பட்டணம் என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் நகரங்களுக்கு இந்த 11ம் சுலோகத்திலேயே [4]ம் அடிக்குறிப்பிற்குரிய சொல்லாக வரும் நகரங்கள் என்ற நேரடியான சொல்லும், புரி, புரம் என்ற சொற்களும் இருக்கின்றன. தென்னாட்டில் பட்டினம் என்ற பெயரில் முடியும் துறைமுகநகரங்கள் பல இருக்கின்றன என்பதாலும், பட்டணம் என்றும் பெரும்பாலும் தென்னாட்டு நகரங்களே அழைக்கப்படுகின்றன; அந்தப் பட்டணமும் பட்டினம் என்பதன் மரூஉ ஆக இருக்கலாம் என்பதாலும் மேலே பட்டினம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாரீசன் இருந்தது தென்னகம் என்பதற்கான ஆய்வுகளில் இதையும் {பத்தநம் என்ற சொல்லையும்} ஒரு சான்றாக முன்வைக்கலாம்.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், இந்த சர்க்கத்தின் முடிவில் ஓர் அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு, "பண்டைய இந்தியாவில், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவற்றின் வகைப்பாடு பின்வருமாறு.க்³ராம꞉ ச நக³ரம் சைவ பத்தநம் க²ர்வடம் புரம் .கே²டகம் குஸுமம் சைவ ஷி²பி³ரம் ராஜ வாஸிகம் .ஸேநா முகம் இதி ஏவ த³ஷ²தா⁴ கீர்திதம் பு³தை⁴꞉ ..{இதன் பொருள்: கிராமம், நகரம், பட்டணம் {சிறு நகரம்}, கர்வடம் {புறநகரம்}, புரம், கேடகம், குஸுமம், சிபிரம் {முகாம்}, ராஜவாசிகம் {அரசக் குடியிருப்பு}, சேனாமுகம் {படைகள் தங்குமிடம்} ஆகியவை இவை அனைத்தும் ஞானிகளால் சொல்லப்பட்டுள்ள பத்து வகை நகர்ப்புறங்களாகும்}.வாஸ்து சாஸ்திரம், அல்லது பண்டைய இந்தியாவின் கட்டடக்கலையானது, நகரங்கள், பெருநகரங்கள் முதலியவற்றிற்குச் சில அளவுகோல்களை வகுத்துள்ளது.நகரங்களைக் குறித்துச் சொல்வதற்குஅநேக நாரீ ஸம்ப³த்³த⁴ம் நநா ஷி²ல்பி ஜநை꞉ வ்ருʼதம் . க்ரய விக்ரயை꞉ கீர்ணம் ஸர்வ தே³வை꞉ ஸமந்விதம் நக³ரம் து இதி விக்²யாதம்இதன் பொருள்: பல நாரீகளாலும் {பெண்களாலும்}, சிற்பி ஜனங்களாலும், அல்லது கட்டடக்கலைஞர்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், பல தெய்வங்களுடன் போற்றப்படுவதும். கிரயமும் {கொள்முதலும்}, விக்கிரயமும் {விற்பனையும்} நடைபெறுவதுமான ஓரிடம் நகரம் என்று அழைக்கப்படும்.மேலும் கடற்கரை நகரங்களைச் சொல்வதற்குபத்தநம் ஷ்²ருʼணு ஸாம்ப்ரதம் . த்³வீபாந்தர க³த த்³ரவ்ய க்ரய விக்ரயிகை꞉ யுதம் . பத்தநம் து அப்³தி⁴ தீரே ஸ்யாத் .மேற்கண்ட நகரத்திற்குரிய அனைத்தையும் கொண்டதும், {அதாவது, பல நாரீகளாலும், சிற்பிகளால், அல்லது கட்டடக்கலைஞர்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், பல தெய்வங்களுடன் போற்றப்படுவதும். கொள்முதலும், விற்பனையும் நடைபெறுவதும்} கடற்கரையில் இருப்பதுமான இடமே பட்டணமாகும். நகரத்திற்கும், புரத்திற்கும் இடைப்பட்டதே கர்வடமாகும்.இனி புரம் என்பதைப் பார்ப்போம்க்ரய விக்ரயை꞉ யுதம் நாநா ஜாதி ஸமந்விதம் . தந்துவாய ஸமாயுக்தம் தத் புரம் து விகத்²யதேமேற்கண்ட அனைத்தையும் கொண்டதும், {அதாவது கிரயமும் [வாங்குவதும்], விக்கிரயமும் [விற்பதும்] நடைபெறுவதும், பல்வேறு இனங்களும் கூடியிருப்பதும்}, நெசவாளர்களும், கலைஞர்களும் இருப்பதும் புரீ, அல்லது புரம் என்று அழைக்கப்படும். இதைத்தவிர, அரசமாளிகைகள் இருப்பதும், படைகள் இருப்பதுமென அனைத்தையும் சேர்த்து பத்து வகையான நகர்ப்புறங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் கிராமங்களே முதன்மையானவை" என்றிருக்கிறது.
இராவணன், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட அந்த ரதத்தில் இருந்து இறங்கியதும், மாரீசனின் கைகளைப் பிடித்துக் கொண்டு {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(12ஆ,13அ) "சகாவே {தோழா}, ராம ஆசிரமபதம் கதலியால் {வாழை மரங்களால்} சூழப்பட்டதாக இதோ தெரிகிறது. நாம் வந்த காரியத்தை சீக்கிரமாகச் செய்வாயாக" {என்றான் ராவணன்}.(13ஆ,14அ)
அப்போது மாரீசன் என்ற அந்த ராக்ஷசன், ராவணனின் சொற்களைக் கேட்டு, மிருக பூதமாகி {மான் என்ற உயிரினமாகி} ராமனின் ஆசிரம வாயிலில் சுற்றித் திரிந்தான்.(14ஆ,15அ) அற்புதத் தோற்றத்தில் இருந்த அவன் {மாரீசன்}, மணிகள் {ரத்தினங்கள்} பதிக்கப்பட்ட சிருங்க நுனிகளுடனும், வெள்ளை, கருப்பு புள்ளிகளைக் கொண்ட முகத்துடனும் கூடிய மஹத்தான ரூபத்தை ஏற்றிருந்தான்.(15ஆ,16அ) சிவந்த பத்மங்களைப் போன்ற மோவாயுடனும், இந்திர நீலோத்பலம் போன்ற காதுகளுடனும், சற்றே உயர்ந்த கிரீவத்துடனும் {கழுத்துடனும்}, இந்திர நீலோத்பலம் போன்ற உதடுகளுடனும்,(16ஆ,17அ) மதூகத்தை {இலுப்பை மலரைப்} போன்றும், தாமரை இதழ்களுக்கு ஒப்பாகவும் ஒளிரும் விலாப்பகுதிகளுடனும், வைடூரியப் பிரகாசத்துடன் கூடிய குளம்புகளுடனும், மெல்லிய பின் கால்களுடனும், அழகிய அங்கங்களுடனும்,(17ஆ,18அ) இந்திர ஆயுத {வானவில்லின்} வர்ணத்தில் மேல்நோக்கி நிற்கும் வாலுடனும், நானாவித ரத்னங்கள் பதிக்கப்பட்டு மனோஹரமாக {மனத்தைக் கவரும் வகையில்} அவன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(18ஆ,19அ)
ராக்ஷசன் {மாரீசன்} அந்த ராம ஆசிரம பதத்தில், பரம சோபனத்துடன் அந்த வனத்தில் ஜுவலிக்கும் ரம்மியமான மிருகமாக {மானாக} க்ஷணப் பொழுதில் தோன்றினான்.(19ஆ,20அ) அந்த ராக்ஷசன் {மாரீசன்}, நானாவித தாதுக்களின் வண்ணத்தில் விசித்திரமான, காண்பதற்கினிய மனோஹரமான ரூபத்தை ஏற்று, வைதேஹியை மயங்கச் செய்வதற்காக, {மானின் இயல்பில்} தளிர்களை மேய்ந்தபடியே புல்வெளியெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(20ஆ,21) நூற்றுக்கணக்கான வெள்ளிப்புள்ளிகளுடன் சித்திரமயமாகி, காண்பதற்கினிய தோற்றத்துடன், மரங்களின் புதிய தளிர்களை மேய்ந்து கொண்டிருந்தான்.(22)
அடர்த்தியான கதலிகளால் {வாழை மரங்களால்} சூழப்பட்டதும், கர்ணீகாரங்களை {கோங்கு மரங்களைக்} கொண்டதுமான கிருஹத்தை {அந்த ஆசிரமத்தை} அடைந்து, சீதை பார்வையைப் பெறுவதற்காக ஆங்காங்கே மந்த கதியில் சுற்றி வந்தான் {மெதுவாக உலவிக் கொண்டிருந்தான்}.(23) அந்த மஹாமிருகமானவன் {பெரும் மானானவன்}, ராஜீவத்தைப் போன்ற சித்திரமான பிருஷ்டத்துடனும் {தாமரையைப் போன்ற அழகிய பின்புறத்துடனும்}, மினுமினுப்புடனும் ராம ஆசிரம பதத்தின் சுற்றுவட்டாரத்தில் சுகமாகத் திரிந்து கொண்டிருந்தான்.(24)
அந்த மிருகோத்தமன் {மாரீசன்}, ஓடிச்சென்றும், மீண்டும் திரும்பியும் திரிந்து கொண்டிருந்தும், சிறிது நேரம் எங்கேயும் சென்றுவிட்டும், பிறகு துரிதமாகத் திரும்பியும் வந்தான்.(25) துள்ளிக் கொண்டும், மீண்டும் பூமியில் படுத்துக் கொண்டும், ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து, அங்கிருந்த மான் கூட்டங்களில் சேர்ந்து கொண்டான்.(26) மிருகமான அந்த ராக்ஷசன், சீதையின் பார்வையில் அகப்படுவதற்காக, மான் கூட்டங்களைப் பின்தொடர்ந்து சென்று மீண்டும் திரும்பி, துள்ளிக் குதித்து, சித்திர மண்டல கதியில் {வேடிக்கை காட்டும் வகையில் வட்டகதியில்} சுழன்று கொண்டிருந்தான்.(27,28அ) வனத்தில் திரியும் மற்ற மிருகங்கள் அனைத்தும், இவன் கழுத்து உயர்ந்திருப்பதைக் கண்டு அருகில் வந்து, முகர்ந்து பார்த்ததும் பத்துத் திக்குகளிலும் தெறித்து ஓடின[5].(28ஆ,29அ) மிருக வதம் செய்பவனான அந்த ராக்ஷசனும், அந்த வனத்தின் மிருகங்களைத் தன் சுபாவத்தால் தீண்டினாலும் {அவற்றை உண்ணும் தன் இயல்பான விருப்பத்துடன் அவற்றை நக்கினாலும்}, தன்னை மறைத்துக் கொள்வதற்காக அவற்றை பக்ஷிக்காதிருந்தான் {உண்ணாதிருந்தான்}.(29ஆ,30அ)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ராக்ஷசர்களை அடையாளங்காண்பதில் மனிதர்களைவிட மிருகங்கள் சிறந்தவையாகக் காட்டப்படுகின்றன. அவை தெய்வத்தை அறியாதவையாகவோ, அறிய விரும்பாதவையாகவோ இருந்தாலும் ராக்ஷசர்கள் அவற்றை அச்சுறுத்துகின்றனர். தெய்வமாகவோ, ராக்ஷசனாகவோ இல்லாத மனிதர்களால் அவர்கள் இருவரையும் உணர முடிவதில்லை" என்றிருக்கிறது.
சரியாக அதே காலத்தில், சுபலோசனையான {அழகிய விழிகளைக் கொண்டவளான} வைதேஹி, மலர்கள் கொய்யும் எண்ணத்துடன் செடிகளின் பக்கம் திரும்பினாள்[5].(30ஆ,31அ) மதிரேக்ஷணையும் {மயக்கும் விழிகளைக் கொண்டவளும்}, மகிழ்ச்சிகரமான முகத்தையும் கொண்ட அவள், மலர்களைக் கொய்தபடியே கர்ணீகாரம், அசோகம், மா உள்ளிட்ட மரங்களைச் சுற்றி நடந்தாள்.(31ஆ,32அ) ஆரண்யவாசத்திற்குத் தகாதவளான அந்தப் பரமாங்கனை {உயர்ந்த பெண்மணி}, ரத்னமயமானதும், முத்து, மணிகளாலான விசித்திர அங்கங்களைக் கொண்டதுமான அந்த மிருகத்தை {மானைக்} கண்டாள்.(32ஆ,33அ) அழகிய பற்களையும், உதடுகளையும் கொண்டதும், தாமிரத் தாதில் பிறந்த மயிர்களைக் கொண்டதுமான அதை {அந்த மானை} ஆச்சரியத்தில் அகன்ற விழிகளை உயர்த்தி, சினேகத்துடன் பார்த்தாள்.(33ஆ,34அ) மாயாமயமான அந்த மிருகமும், ராமனின் மனைவியான அவளைப் பார்த்து, அந்த வனத்தையே ஒளிரச் செய்வதைப் போல அப்போது அங்கே திரிந்து கொண்டிருந்தது.(34ஆ,35அ) ஜனகாத்மஜையான சீதை, எண்ணற்ற ரத்தினங்களுடன் கூடிய அந்த மிருகத்தை {மானைக்} கண்டு பரம ஆச்சரியம் அடைந்தாள்.(35ஆ,இ)
[6] பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால்நையா இடை நோவ நடந்தனளால்வைதேவி தன் வால் வளை மென் கை எனும்கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள்.- கம்பராமாயணம் 3281ம் பாடல், மாரீசன் வதைப்படலம்பொருள்: இவளுக்கு இடை இருப்பது பொய்யே என்று சொல்பவர்கள் சொல்லுக்கேற்ப வருத்தம் கொண்டு விளங்கும் இடை நோகும்படி நடந்த வைதேகி, ஒளி பொருந்திய தன் வளையல் அணிந்த மெல்லிய கரங்கள் எனும் கொய்யப்படாத மலர்களால் மலர் கொய்ய முற்பட்டாள்.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |