Friday 31 March 2023

காகதாலீய நியாயம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 41 (20)

Crow and Palm Tree syndrome | Aranya-Kanda-Sarga-41 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு மாரீசனின் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும்...

Crow palm tree syndrome - kaaka taaleeya Nyayam

இராவணன் இவ்வாறு ராஜாவாகப் பிரதிகூலமாக {சாதகமில்லாமல்} ஆணையிட்டதும், {மாரீசன்} ராக்ஷசாதிபனிடம் {பின்வரும்} கடும் வாக்கியங்களைத் தயக்கமின்றி பேசினான்:(1) "நிசாசரா {இரவுலாவியே}, புத்திரர்களுடனும், ராஜ்ஜியத்துடனும், அமைச்சர்களுடனும் நாசத்தை அடைவதற்குரிய இந்தப் பாப கர்மத்தை உனக்குக் கற்பித்தவன் எவன்?(2) இராஜாவே, உன் சுகத்தில் ஆனந்திக்காத பாபி எவன்? இந்த மிருத்யு துவாரமே {மரண வாயிலே} உனக்கு உபாயமெனக் கற்பித்தவன் எவன்?(3)  நிசாசரா, வீரியமற்ற உன் சத்ருக்களில் எவரோ, நீ பலமிக்க ஒருவனுடன் மோதி நாசமடைய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.(4) நிசாரசா, எவன் உன் செயலாலேயே நீ நாசமடைய வேண்டுமென விரும்புகிறானோ அவன் ஹித புத்தி {நற்புத்தி} இல்லாத க்ஷுத்ரனாவான் {இழிந்தவனாவான்}. எவன் இதை உனக்கு உபதேசித்தான்?(5) 

இராவணா, தவறான பாதையில் செல்லும் உன்னை எவ்வகையிலேனும் தடுக்காதவர்களான அமைச்சர்கள் யாவரோ அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களாக இருப்பினும் கொல்லப்படாதிருக்கின்றனர்.(6) விரும்பியவாறு நடந்து கொண்டு, தவறான பாதையில் செல்லும் ராஜாவை நல்ல அமைச்சர்கள் எப்போதும் தடுப்பார்கள். ஆனால் தடுக்கப்பட வேண்டியவனான நீ தடுக்கப்படாமல் இருக்கிறாய்.(7) ஜயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, நிசாசரா {இரவுலாவியே}, தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றையும், புகழையும் தங்கள் சுவாமியின் {தலைவனின்} அருளாலேயே அமைச்சர்கள் அடைகின்றனர்.(8) இராவணா, மாறாக நடக்கும் சுவாமியின் {தலைவனின்} குணமற்ற தன்மையால் அவை அனைத்தும் வீணாகின்றன. இதர ஜனங்களும் துன்பத்தையே அடைவார்கள்.(9) ஜயதாம்வரா, தர்மத்திற்கும், ஜயத்திற்கும்  ராஜாவே மூலமல்லவா? எனவே, அவஸ்தைகள் அனைத்தில் இருந்தும் நராதிபர்கள் ரக்ஷிக்கப்பட வேண்டும்.(10)

இராக்ஷசா, நிசாசரா, ராஜ்ஜியத்தை பாலிப்பது {ஆள்வது} கடுமையானவனால் சாத்தியமல்ல; பிரதிகூலனாலும் {பாதகமாக நடப்பவனாலும்} அது முடியாது; நீதிநயமற்றவனாலும் முடியாது.(11) கொடும் எண்ணங்களைக் கொண்ட அமைச்சர்கள், சமமற்ற தளத்தில், மந்தமான சாரதியால் செலுத்தப்பட்டு, சீக்கிரமாகச் செல்லும்  துரகங்களைப் போலவே அழிவடைவார்கள் {மந்தமாகச் செலுத்திய சாரதியுடனும், கலகலத்த ரதத்துடனும் மேடுபள்ளமான சாலையில் விரைவாகச் சென்று அழியும் குதிரைகளைப் போலவே ராஜனுடனும், ராஜ்ஜியத்துடனும் அந்த அமைச்சர்கள் வீழ்ந்தழிவார்கள்}.(12) உலகத்தில் தர்மத்தைப் பின்பற்றும் நேர்மையான சாதுக்கள் பலரும், பிறர் செய்யும் அபராதங்களால் {தவறுகளால்} தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து நாசமடைகிறார்கள்.(13)  

இராவணா, பிரதிகூலமாக {பாதகமாக} நடக்கும் கொடுமையான சுவாமியால் ரக்ஷிக்கப்படும் பிரஜைகள், நரியால் {பாதுகாக்கப்படும்} மேஷங்களை {ஆடுகளைப்} போல வளர்ச்சியடையமாட்டார்கள்.(14) இராவணா, கடுமையும், துர்புத்தியும் கொண்டவனும், அஜிதேந்திரியனும் {புலன்களை வெல்லாதவனுமான} உன்னைப் போன்ற ராஜா, சர்வ ராக்ஷசர்களையும் அவசியம் நாசமடையச் செய்வான்.(15) காகதாலீயம் போல {காகம் அமர விழுந்த பனம்பழத்தைப் போல}[1] கோரமாகத் திரண்டிருக்கும் அவற்றையும் இவற்றையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.  {உன் தவறுகளால்} பரிதாபத்திற்குரிய நிலையை அடைந்து உன் சைனியத்துடன் நீ அழிவடையப் போகிறாய்.(16)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தற்செயலாக நடைபெறும் நிகழ்வுகள் சம்ஸ்கிருதத்தில் "காகதாலீய நியாயம்" என்றழைக்கப்படுகிறது. காலுடைந்த ஒரு நரி, சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து தப்பிக்க, நிழல்தரும் மரங்களைத் தேடியும் கிட்டாததால், ஒரு பனை மரத்தினடியில் உறைவிடம் நாடி வந்தது. அதே நேரத்தில், ஒரு காகமும் அந்த மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்தது. அப்போது, கனமுள்ள பெரிய பனம்பழம் ஒன்று அந்த நரியின் தலையில் வந்து விழுந்தது. {காலுடைந்த வலியையும், வெயிலையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு, நிழல் நாடி, மரமேதும் கிட்டாமல், அந்தப் பனை மரத்தினடியில் வந்து ஓய்ந்தால், மேலும் அதிக துன்பமாக பனம்பழத்தால் அடியும் விழுகிறது}. இங்கே அந்த நரியின் துன்பம் விளக்க முடியாதது. நரி வந்ததும், காகம் அமர்ந்ததும், பழம் விழுந்ததும் என அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் எவரும் பிறரைப் பழிகூற இயலாது. இதுபோன்ற தற்செயலான நிகழ்வுகள் காகதாலீய நியாயம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றன" என்றிருக்கிறது. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை" என்ற இந்தப் பழமொழி தமிழிலும் வெகு பிரபலமானதுதான். முத்துக்கள், சந்தன, வாழை, தென்னை மரங்கள், மிளகு போலப் பனைமரமும் தென்னகம் சார்ந்த மரம்தான். மாரீசன் இருந்தது தென்னகம் என்பதற்கான ஆய்வுகளில் இதையும் ஒரு சான்றாக முன்வைக்கலாம்.

அந்த இராமன், என்னைக் கொன்றதும், சீக்கிரமாகவே உன்னையும் கொல்லப் போகிறான். பகைவனால் கொல்லப்பட்டு நான் மரிப்பதன் மூலம் நோக்கம் நிறைவேறியவன் ஆவேன்.(17) இராமனைக் கண்ட உடனேயே நான் கொல்லப்பட்டேன் என்று அறியும் நீயும் சீதையை அபகரித்ததும் பந்துக்களுடன் கொல்லப்படுவாய் என்பதைப் புரிந்து கொள்வாயாக.(18) என்னுடன் சேர்ந்து ஆசிரமத்திலிருந்து சீதையைக் கொண்டு வந்தால், நீயும் பிழைக்க மாட்டாய், நானும் இருக்க {பிழைக்க} மாட்டேன், லங்கையும் இருக்காது, ராக்ஷசர்களும் இருக்க மாட்டார்கள்.(19) நிசாசரா {இரவுலாவியே}, ஹிதத்தை {உன் நலனை} விரும்புகிறவனான நான் {தடுக்கும் வகையில்} எச்சரிக்கையாகச் சொல்லும் இந்த வாக்கியங்களை ஆயுள் குறைந்தவர்கள் இனிமையாக உணர மாட்டார்கள் {புரிந்து கொள்ள மாட்டார்கள்}. கிட்டத்தட்ட பிரேதமாகிவிட்ட நரர்கள், நல்ல ஹிருதயம் கொண்டோர் {நண்பர்கள்} சொல்லும் ஹிதமானவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்." {என்றான் மாரீசன்}.(20)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 41ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் துந்துபி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு பிலக்ஷன் மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் வினதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹிமவான் ஹேமை