Thursday, 30 March 2023

நின்னை ஒறுப்பேன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 40 (27)

I will kill you | Aranya-Kanda-Sarga-40 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாரீசன் கீழ்ப்படியாவிட்டால் கொன்றுவிடப் போவதாக மிரட்டிய ராவணன்; பொன் மானாகும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தீர்மானமடைந்தது...

Ravana threatens to kill Mareecha

மாரீசன், தகுந்தவையும், பொருத்தமானவையுமான வாக்கியங்களை ராவணனிடம் பேசியபோது, மரிக்க விரும்புகிறவன் ஔஷதத்தை {சாகப் போகிறவன் விரும்பாத மூலிகை மருந்தைப்} போல அவன் அவற்றை ஏற்றுக் கொண்டானில்லை.(1) காலனால் தூண்டப்பட்ட ராக்ஷசாதிபன் {ராவணன்}, பத்தியமானவற்றையும் {தகுந்தவற்றையும்}, ஹிதமானவற்றையும் {நல்லவற்றையும்} பேசிக் கொண்டிருந்த அந்த மாரீசனிடம், தகாத, நயமற்ற வாக்கியங்களை {பின்வருமாறு} சொன்னான்:(2) "என்னிடம் நீ சொன்ன வாக்கியங்கள் தரிசு நிலத்தில் {தூவப்படும்} விதையைப் போலவே அதி அர்த்தமுள்ள பழங்கள் {பலன்கள்} எதையும் விளைவிக்காது.(3) பாப சீலனும் {ஒழுக்கத்தில் பாபியும்}, மூர்க்கனும், விசேஷமாக {அதிலுங்குறிப்பாக} மானுஷனுமான ராமனுடனான போர் குறித்த உன் வாக்கியங்கள் என்னை அச்சுறுத்தும்[1] சக்திகொண்டவையல்ல.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே "பே⁴த்தும்" என்ற சொல் இருந்தால் "அழிக்கும்" என்றும், "பே⁴தும்" என்றிருந்தால் "அச்சுறுத்தும்" என்றும் பொருள் கொள்ள வேண்டும். கிழக்கத்திய பதிப்புகளில் உள்ளது போல, "பே⁴த்தும்" என்ற சொல்லை இங்கே எடுத்துக் கொண்டால், "மனிதனால் போரில் என்னை அழிக்க முடியாது" என்ற பொருள் வரும். வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "பாபியும், மூர்க்கனும், விசேஷமாக சாதாரண மானுஷனுமான ராமனுடன் நான் போரிடுவதை உன் வாக்கியங்களால் தடுத்துவிட முடியாது" என்றிருக்கிறது.

எவன் ஸ்திரீயின் சாதாரண வாக்கியத்தைக் கேட்டு நல்லிதயம் கொண்டவர்களையும் {நண்பர்களையும்}, ராஜ்ஜியத்தையும், மாதாக்களையும், பிதாவையும் கைவிட்டு ஒரே நிலையில் நின்று {பிடிவாதமாக / விரைவாக} வனம் வந்தானோ அத்தகையவனைக் கொண்டு என்னை அச்சுறுத்த நீ சக்தனல்ல.(5) போரில் கரனைக் கொன்றவனான அவனுடைய பிராணனை விடப் பிரியமிக்கவளான சீதையை உன் முன்னிலையிலேயே {உன் உதவியுடன்} அவசியம் நான் கடத்திச் செல்வேன்.(6) மாரீசா, என் புத்தியும், ஹிருதயமும் இவ்வாறே நிச்சயமடைந்திருக்கின்றன. இந்திரனுடன் கூடிய ஸுராஸுரர்களும் {தேவர்களும், அசுரர்களும்} கூட இதை மாற்றுவதற்கு சக்தர்களல்லர்.(7) அந்தக் காரியத்தை நிச்சயிப்பதில் உள்ள தோஷங்களையும், குணங்களையும், அபாயங்களையும், உபாயங்களையும் உன்னிடம் கேட்டால் நீ இவ்வாறு பேசுவது தகும்.(8)

எவன் தன் நலத்தை விரும்புகிறானோ, அந்த விவேகமுள்ள ஆலோசகன் தன்னைக் கேட்கும்போது {மட்டுமே, அதுவும்} தன் கைகளை உயர்த்திக் கூப்பிக் கொண்டு ராஜனிடம் சொல்லத் தகுந்தவனாவான்.(9) வசுதாதிபனிடம் {பூமியின் தலைவனிடம்}, பிரதிகூலமற்ற {அனுகூலமான / சாதகமான}, மிருதுப்பூர்வமான, ஹிதமான, சுபமான, உபசாரத்துடன் கூடிய தகுந்த வாக்கியங்களில் பேச வேண்டும்.(10) மாரீசா, அல்லது மதிப்பற்ற எந்த ஹிதமான {நல்ல} வாக்கியத்தையும், கண்டனத்துடன் சொல்வது மதிப்புக்குரிய ராஜாவுக்கு மகிழ்ச்சியைத் தராது.(11) 

அளவில்லா ஆற்றல் படைத்த ராஜர்கள், அக்னி, இந்திரன், சோமன், யமன், வருணன் என்ற ஐந்து ரூபங்களின் தன்மைகளைக்[2] கொண்டவர்களாவர்.(12) க்ஷணதாசரா {இரவுலாவியே}, மஹாத்மாக்களான ராஜர்கள், {அக்னியின்} உஷ்ணத்தையும், {இந்திரனின்} விக்கிரமத்தையும், {சோமனின் மென்மையையும்} சௌம்யத்தையும், {யமனின்} தண்டத்தையும், {வருணனின் அருளையும்} பிரசன்னத்தையும் தரித்தவர்கள். எனவே, அந்தப் பார்த்திபர்கள் அனைத்துச் சூழ்நிலைகளிலும் மதித்துப் பூஜிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(13,14அ) ஆனால் தர்மத்தை அறியாத நீயோ, கேவலம் மோஹத்தை {அறியாமையை மட்டுமே} நாடி என் அருகே வந்து தீய விருப்பத்துடன் இவ்வாறு கடுமையாக வாதம் செய்து கொண்டிருக்கிறாய்.(14ஆ,15அ) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில் "நெருப்பு, காற்று, நிலம், வெளி, நீர் என்ற ஐம்பூதங்களே இந்தத் தன்மைகள்" என்றிருக்கிறது.

இராக்ஷசா, என் குணதோஷங்களையோ, எனக்குத் தகுந்தவற்றையோ நான் கேட்கவில்லை. அளவில்லா விக்கிரமம் கொண்டவனே,  உன்னிடம் இச்சமயத்தில் நான் சொல்வது இவ்வளவுதான்.(15ஆ,16அ) இந்தக் காரியத்தில் சகாயம் செய்வதே உனக்குத் தகும். நான் சொல்லும் சொற்களின்படி நீ செய்ய வேண்டிய சகாய காரியத்தைச் சொல்கிறேன், அந்த கர்மத்தை {செயலைக்} குறித்துக் கேட்பாயாக.(16ஆ,17அ) நீ ரஜத பிந்துக்களுடன் கூடிய சித்திர சுவர்ண மிருகமாகி {வெள்ளிப் புள்ளிகளால் அழகுற்று விளங்கும் பொன்மயமான மானாகி} அந்த ராமனின் ஆசிரமத்தில் சீதையின் முகத்திற்கு நேரே திரிய வேண்டும். வைதேஹியை லோபங்கொள்ள {மயக்கி ஆசையுறச்} செய்த பிறகு இஷ்டப்படி செல்வதே உனக்குத் தகும்.(17ஆ,18)

மைதிலி, காஞ்சன மாயாமயனான உன்னை {பொன்மான் போன்ற மாயா தோற்றத்தில் உள்ள உன்னைக்} கண்டு ஆவலுற்று "இதை சீக்கிரம் கொண்டு வருவீராக" என்று ராமனிடம் நிச்சயம் சொல்வாள்.(19) காகுத்ஸ்தன் {இந்த ராமன்} வெளியே புறப்பட்டு தூரத்தில் சென்றதும் ராமனின் வாக்கியங்களை ஒத்த வகையில், "ஹா சீதா, லக்ஷ்மணா" என்று உரக்கக் கதறுவாயாக.(20) அதைக் கேட்டும், சீதையால் தூண்டப்பட்டும் நல்ல ஹிருதயத்துடன் {நட்புடன்} கூடிய சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்} ஐயுற்று அஞ்சி {குழப்பத்துடன்} ராமனின் பாதையில் பின்தொடர்ந்து செல்வான்.(21) காகுத்ஸ்தனும், லக்ஷ்மணனும் சென்ற பிறகு, சஹஸ்ராக்ஷன் சசியை {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன் இந்திராணியைக் கடத்தியதைப்} போல[3] வைதேஹியை சுகமாகக் கவர்ந்து செல்வேன்.(22) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சசி {இந்திராணி} புலோமன் என்ற அசுரனின் மகளாவாள். இந்திரன் புலோமனைக் கொன்று, சசியை அபகரித்துச் சென்றான்" என்றிருக்கிறது.

இராக்ஷசா, இந்த காரியத்தைச் செய்த பிறகு, நீ இஷ்டம்போல் எப்படியும் செல்வாயாக. நல்விரதம் நோற்கும் மாரீசா, உனக்கு ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுப்பேன்.(23) சௌம்யா, இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக சிவமார்க்கத்தில் {இடையூறற்ற நல்ல வழியில்} செல்வாயாக. நான் தண்டகவனத்திற்கு ரதத்தில் பின்தொடர்ந்து வருவேன்.(24) இராகவனை வஞ்சித்துவிட்டு, யுத்தமின்றி சீதையை அடைந்து, காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு உன்னுடன் சேர்ந்து லங்கையை அடைவேன்.(25)

மாரீசா, இதைச் செய்யவில்லையென்றால் உன்னை நான் இப்போதே வதம் செய்வேன்[4]. பலத்தைப் பயன்படுத்தியாவது என்னுடைய இந்த காரியத்தை அவசியம் உன்னைச் செய்ய வைப்பேன். இராஜனுக்கு பிரதிகூலமாக {விருப்பத்திற்கு எதிராக} இருப்பவன் ஒருபோதும் சுகத்தை அடையமாட்டான்.(26) அவனை {ராமனை} அடைந்தால், உன் ஜீவிதம் நிச்சயமற்றதாகும். என்னுடன் முரண்பட்டால் உண்மையில் இப்போதே உனக்கு மிருத்யு {மரணம்} நிச்சயம். உள்ளபடியே இதைப் புத்தியில் கொண்டு, தகுந்த பத்தியமான {விரும்பத்தக்க} தீர்மானத்தை அடைந்து, அதன்படியே நீ செயல்படுவாயாக" {என்றான் ராவணன்}.(27)

[4] மறுத்தனை எனப் பெறினும் நின்னை வடி வாளால்
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன்
வெறுப்பன கிளத்தலுறும் இத் தொழிலை விட்டு என்
குறிப்பின் வழி நிற்றி உயிர் கொண்டு உழலின் என்றான்

- கம்பராமாயணம் 3266ம் பாடல்,  மாரீசன் வதைப்படலம்

பொருள்: "நான் சொல்வதை நீ மறுத்தால் உன்னை என் கூர்வாளால் வெட்டி, என் மனம் கருதியதைச் செய்து முடிப்பேன். காரியத்தில் இருந்து விலகமாட்டேன். நான் வெறுக்கும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இந்தச் செயலை விட்டால் நீ உயிர் பிழைக்கலாம். என் குறிப்பின் வழியில் நின்று செயல்புரிவாயாக என்றான் {ராவணன்}.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 40ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்