Lakshmana's doubt | Aranya-Kanda-Sarga-43 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மானைக் கொண்டு வரும்படி ராமனையும், லக்ஷ்மணனையும் கேட்டுக் கொண்ட சீதை; இது மாரீசனின் மாயம் என்ற லக்ஷ்மணன்; சீதையைப் பார்த்துக் கொள்ளும்படி லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு மானைப் பிடிக்கச் சென்ற ராமன்...
தூய்மையான பொன்னின் வர்ணத்தையும், மெல்லிடையையும், குற்றமற்ற அங்கங்களையும் கொண்டவளும், மலர்களைக் கொய்து கொண்டிருந்தவளுமான அவள் {சீதை, அந்த மானின்} விலாப்பகுதியில் உள்ள பொன், வெள்ளி வர்ணங்களால் அழகாகக் பிரகாசிக்கும் இரு பக்கங்களையும் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்து, தன் பர்த்தாவையும் {கணவன் ராமனையும்}, ஆயுதத்துடன் கூடிய லக்ஷ்மணனையும் உரக்க அழைத்தாள்.(1,2) மீண்டும், மீண்டும் அந்த மிருகத்தை {மானை} ஆசையுடன் பார்த்தவள், "ஆரிய புத்திரரே, இங்கே வாரும். உமது தம்பியுடன் இங்கே சீக்கிரமாக வாரும்" என்று அழைத்தாள்[1].(3)
[1] இந்த ஒரு சுலோகம், தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பைத் தவிர வேறு எந்தப் பதிப்பிலும் இல்லை.
அந்த வைதேஹியால் அழைக்கப்பட்ட நரவியாகரர்களான {மனிதர்களில் புலிகளான} ராமலக்ஷ்மணர்கள், {அங்கே வந்து} அந்த இடத்தை சுற்றும் முற்றும் நோக்கி, அந்த மிருகத்தை {மானைக்} கண்டனர்.(4) அதைக் கண்டதும் சந்தேகமடைந்த லக்ஷ்மணன், ராமனிடம் சொன்னான், "இந்த மிருகம் அந்த ராக்ஷசன் மாரீசன் என்றே நான் நினைக்கிறேன்.(5) இராமரே, வனத்தில் மகிழ்ச்சியாக வேட்டையாடித் திரியும் ராஜர்கள், காமரூபியான {விரும்பிய வடிவம் ஏற்க வல்ல மாயக்காரனான} இந்தப் பாபியால் வஞ்சித்துக் கொல்லப்படுகின்றனர்[2].(6) புருஷவியாகரரே, அந்த மாயாவியே {மாயைகளில் திறன்மிக்கவன் அந்த மாரீசனே} கந்தர்வபுரத்திற்கு {ஆகாயத்தில் மேகவடிவில் தோன்றும் மாய நகரத்திற்கு} ஒப்பாக ஒளிரும் இந்த மாய மிருக ரூபத்தை ஏற்றிருக்கிறான்.(7) ஜகத்தின் நாதரே, ராகவரே, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட இந்த வித விசித்திர மிருகம் {மான்} ஜகத்தில் கிடையாது. உண்மையில் இது மாயையே. சந்தேஹமில்லை" {என்றான் லக்ஷ்மணன்}[3].(8)
[2] ஆரண்ய காண்டம் சர்க்கம் 39, 4-6 சுலோகங்களில், மாரீசன், தான் மான் வேடத்தில் தபஸ்விகளைக் கொன்று வந்ததாக சொல்கிறான். இங்கே, லக்ஷ்மணன், மாரீசன் அரசர்களை கொன்றதாக சொல்கிறான். ஆக மாரீசன் முனிவர்களை மட்டுமல்ல, அரசர்களையும் கொன்று வந்திருக்கிறான். எனவே, இவன் நிச்சயம் கொல்லப்பட வேண்டியவன் என்பதையே லக்ஷ்மணன் இங்கே சொல்ல வந்திருக்கலாம். இதைச் சொல்லி லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தான் என்று சொல்வதற்கில்லை என்றாகிறது.
[3] இலக்ஷ்மணன் தெளிவாக மாரீசனின் பெயரையும் குறிப்பிடுகிறான். மாரீசன் மன்னர்கள் பலரைக் கொன்று இவ்வகை மாயைகளுக்குப் பிரபலமாக இருந்திருக்கிறான். இருந்தும் ராவணன் மாரீசனை இப்பணிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
சுஸ்மிதையும் {தூய புன்னகையுடன் கூடியவளும்}, கவரப்பட்டு புலனுணர்வை இழந்தவளும், மகிழ்ச்சியுடன் கூடியவளுமான சீதை, இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த காகுத்ஸ்தனை {லக்ஷ்மணனைத்} தடுத்து {ராமனிடம் பின்வருமாறு} பேசினாள்:(9) "ஆரியபுத்திரரே, இந்த அழகான மான் என் மனத்தைக் கொள்ளையிடுகிறது. மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவரே}, நாம் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கும் அதைக் கொண்டு வருவீராக.(10) இங்கே நமது ஆசிரமபதத்தில் புண்ணியத் தோற்றங் கொண்ட பல மிருகங்களும் {மான்களும்}, சிருமரங்களும் {வெள்ளைக் கவரி மான்களும்}, சமரங்களும் {கருப்புக் கவரிமான்களும்} கூட்டங்கூட்டமாகத் திரிகின்றன.(11) மஹாபாஹுவே, சிறந்த ரூபங்கொண்ட வானரங்களும், அதேபோல கின்னரங்களும் {குதிரை முகம் கொண்ட வேறு விலங்குகளும்}, புள்ளிமான் கூட்டங்களும், மஹாபலம் கொண்ட ரிக்ஷங்களும் {கரடிகளும்} திரிந்து கொண்டிருக்கின்றன.(12)
இராஜரே, இந்தச் சிறந்த மிருகத்தை {மானைப்} போன்ற தேஜஸ், பொறுமை, ஒளி ஆகியவற்றில் இணையான தோற்றத்தைக் கொண்ட மற்றொரு மிருகத்தை பூர்வத்தில் {இதற்குமுன்} நான் கண்டதில்லை.(13) நானாவித வர்ணங்களாலான விசித்திரமான {அழகுற்ற} அங்கங்களுடன், ரத்தின பிந்துக்கள் {புள்ளிகள்} பதிக்கப்பட்டு, ரத்தினபூதமானது {ரத்தினமயமான இந்த மானானது}, காடு முழுமைக்கும் ஒளியூட்டியபடி சசியை {சந்திரனைப்} போல என் முன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.(14) அஹோ, என்ன ரூபம்? அஹோ, என்ன லக்ஷ்மீகரம் {அழகு}? என்ன அழகான சுவரம்? அற்புத, விசித்ர அங்கங்களைக் கொண்ட இந்த மிருகம் {மான்} என் ஹிருதயத்தைக் கொள்ளையிடுவதைப் போலிருக்கிறது.(15) இந்த மிருகத்தை ஜீவனுடன் நீர் கைப்பற்றினால் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதிசயமாக இருக்கும்.(16)
வனவாசம் முடிந்து, மீண்டும் ராஜ்ஜிய ஸ்தானத்தில் இருக்கும்போது இந்த மிருகம் {மான்} நம் அந்தப்புரத்தை அலங்கரிக்கத்தகுந்ததாக இருக்கும்.(17) பிரபுவே, இந்த மிருகத்தின் ரூபம் ஆரியபுத்திரரான உமக்கும், பரதருக்கும், என் மாமியார்களுக்கும், எனக்கும் திவ்யமான ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.(18) நரசார்தூலரே {மனிதர்களில் புலியே}, இந்தச் சிறந்த மிருகத்தை {மானை} ஜீவனுடன் கைப்பற்றிக் கொண்டு வர முடியவில்லை என்றாலும் இதன் அழகிய தோலையாவது கொண்டு வர வேண்டும்.(19) இந்த உயிரினத்தைக் கொன்று, ஜாம்பூநதம் {தங்கம்} போன்ற தோலை உரித்து, மென்மையான {தர்ப்பையாலான} விரத ஆசனத்தில் விரித்து {உமது} அருகில் அமர நான் விரும்புகிறேன்.(20) காம விருத்தம் கொண்ட இந்த ரௌத்திரம் ஸ்திரீகளுக்குத் தகாது என்பதே மதம் {விரும்பியபடி நடந்து கொள்வதும், இவ்வாறு சினங்கொள்வதும் பெண்களுக்குத் தகாது என்பதே மரபு} என்றாலும், இந்த உயிரினத்தின் அழகிய உடல் என்னில் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது" {என்றாள் சீதை}[4][5].(21)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சீதை இவ்வளவு மட்டுமே சொல்லிவிட்டு, தன் நோக்கம் நிறைவேறுவதை விவேகியான ராமனிடம் விட்டு விடுகிறாள். அவளது பேச்சில் மானைக் கொண்டு வருவதற்கான தேவையோ அவசியமோ ஏதும் இல்லை. ஆனால் சீதை அந்த மானை அடைய ராமனைத் துன்புறுத்தினாள், நச்சரித்தாள் என்று நாம் கேள்விப்படுவது போன்ற எதுவும் வால்மீகி அவளுக்குக் கொடுத்திருக்கும் வசனங்களில் வெளிப்படவில்லை" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது. இந்த அடிக்குறிப்பில் சொல்லப்படுவது போலவே கம்பராமாயணத்தில், சீதை மானைப் பிடிக்கச் சொல்வதும், லக்ஷ்மணன் மீண்டும் மறுப்பதும், இராமன் லக்ஷ்மணனுக்குப் பதிலுரைப்பதும், சீதை நச்சரிப்பதும், இராமன் புறப்படுவதும், லக்ஷ்மணன், "நீர் செல்ல வேண்டாம் நான் போகிறேன்" என்பதும், பின் மீண்டும் சீதை ராமனே செல்ல வேண்டும் என்பதும் நடக்கிறது. அங்கே வரும் ஒரே ஒரு பாடலை மட்டும் அடுத்த அடிக்குறிப்பில் காண்போம்.
[5] ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்தனைய செய்யவாயிடை மழலை இன்சொல் கிளியினின் குழறி மாழ்கிநாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னாசேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள்- கம்பராமாயணம் 3303ம் பாடல், மாரீசன் வதைப்படலம்பொருள்: இப்பேச்சுகளின் இடைப்புகுந்த பெண் அன்னம் போன்ற சீதை வருத்தமுற்றவளாக, அமுது சிந்தினாற்போல, சிவந்த வாயில் இனிய மழலை மொழி பேசி, கிளி மொழிவது போல கொஞ்சிக் குழறி, "நாயகா, நீயே இம்மானைப் பிடித்துத் தர மாட்டாயா?" என்று, சிவந்த வரிகளைக் கொண்ட குவளை மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் போலச் சிந்த சீற்றத்துடன் சென்றாள்.இதுபோன்ற ஊடல் வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
காஞ்சன ரூபத்துடனும், ரோமத்துடனும் {பொன்னாலான உடலுடனும், பொன்னாலான உடல் மயிருடனும்}, மணி போன்ற சிறந்த சிருங்கங்களுடனும் {நீலமணிக்கல்லைப் போன்ற சிறந்த கொம்புகளுடனும்}, தருண ஆதித்ய வர்ணத்துடனும் {இளஞ்சூரிய நிறத்துடனும்}, நக்ஷத்திரப் பாதையின் பிரகாசத்துடனும் அஃது {அந்த மான்} இருப்பதைக் கண்ட ராகவனின் மனம் ஆச்சரியத்தால் நிறைந்திருந்தது.(22,23அ) இவ்வாறான சீதையின் சொற்களைக் கேட்ட ராகவன், அந்த அற்புதமான மிருகத்தைக் தானும் கண்டு, அதன் ரூபத்தால் லோபமடைந்தும் {ஆசை கொண்டும்}, சீதையால் தூண்டப்பட்டும், மகிழ்ச்சியாகத் தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனிடம் {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(23ஆ,24) "இலக்ஷ்மணா, மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கூடிய இந்த வைதேஹியைப் பார். தற்போது, ரூபத்தில் சிறந்த இத்தகைய மிருகம் உண்மையில் வனத்தில் கிடையாது. {இந்திரனின்} நந்தனப் பகுதியிலும் இருக்காது; அதையொட்டிய {குபேரனின்} சைத்ரரதத்திலும் இருக்காது. இதற்கு ஒப்பான எந்த மிருகமும் பிருத்வியில் இருக்காது.(25,26) மேல்நோக்கிய ரோமத்துடனும், கீழ்நோக்கிய ரோமத்துடனும், அழகிய கனக பிந்துக்களுடனும் {தங்கப் புள்ளிகளுடனும்}, அழகிய ரோமக்கோடுகளுடனும் இந்த மிருகம் சோபித்துக் கொண்டிருக்கிறது.(27)
கொட்டாவி விடும் போது, ஒளிரும் அக்னி சிகைக்கு {நெருப்பின் தழலுக்கும்} ஒப்பாகவும், மேகத்திலிருந்து நூறு வகையில் மின்னும் மின்னலைப் போலவும் அதன் வாயில் இருந்து வெளிப்படும் நாவைப் பார்.(28) இந்திரநீலக்கல்லாலான குவளையைப் போன்ற முகத்துடனும், சங்கில் விளைந்த முத்தைப் போல் ஒளிரும் வயிற்றுடனும், விவரிக்க இயலாத ரூபத்துடனும் {வடிவழகுடனும்} கூடிய இந்த மிருகம், எவனுடைய மனத்தைத்தான் லோபமடைய {ஆசை கொள்ளச்} செய்யாது?(29) ஜாம்பூநதமயமான பிரபையுடன் {பொன்னொளியுடன்} கூடிய ரத்தினமயமான இந்த திவ்ய ரூபத்தைக் கண்டு எவன் மனம்தான் ஆச்சரியத்தை அடையாது.(30)
இலக்ஷ்மணா, மஹாவனத்தில் வேட்டையாடும் ராஜர்கள், மாமிசத்திற்காகவும், வில் விளையாட்டில் {விற்பயிற்சியில்} பொழுதைப் போக்குவதற்காகவும் மிருகங்களை {மான்களைக்} கொல்கிறார்கள்.(31) மஹாவனத்தில், மணிகளும், ரத்தினங்களும், சுவர்ணமும் கலந்த விதவிதமான தாதுக்களும், தனங்களும் பெரும் முயற்சியால் திரட்டப்படுகின்றன.(32) இலக்ஷ்மணா, மனத்தில் சிந்தனைகளைக் குவிக்கும் சுக்கிரனைப் போலவே, மனிதர்களும் அகிலத்தின் சாரமான தனங்கள் அனைத்தையும் {காட்டின் செல்வங்கள் அனைத்தையும்} கருவூலத்தில் நிரப்புகிறார்கள்[6].(33) இலக்ஷ்மணா, அர்த்தீ ஒருவன், எந்த அர்த்தத்தின் காரணமாக சிந்திக்காமல் ஓடுவானோ அதையே அர்த்த சாஸ்திரம் அறிந்த அர்த்தியர்கள் அர்த்தம் என்று அழைக்கிறார்கள். {பொருள் விரும்புகிற ஒருவன், எந்தப் பொருளைச் சேர்ப்பதற்காக அதைத் தவிர வேறு எதையும் சிந்திக்காமல் ஓடுகிறானோ அதையே பொருளியல் நூல்களை அறிந்த பொருளியல் அறிஞர்கள் செல்வம் என்று அழைக்கிறார்கள்}.(34)
[6] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "மனத்தில் சிந்திக்கப்படும் அனைத்தும் சுக்கிரனின் கருவூலத்தை நிறைப்பதைப் போலவே அகிலத்தின் சாரமான இந்த தனங்கள் அனைத்தும் மன்னர்களை {மனிதர்களை} வளப்படுத்தும்" என்றும் இதற்குப் பொருள் என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "மனிதர்களுக்கு சுக்கிராசாரியின் கொள்கை (அதாவது நினைத்தபடி பொருள்களைச் சேர்த்து பொக்கிஷத்தை நிறைத்தல்) எப்படியோ அப்படியே அந்த முற்றிலும் ஏற்றதாகியதும் மனதால் விரும்பப்பட்டதுமான அபூர்வப் பொருள் எல்லாமும் பொக்கிஷத்திற்கு பெருமை செய்வதாகும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நாட்டிலுள்ளவைகளைவிடக் காட்டிலுள்ளவை அரியன வாதலின், சிறந்த பொருளாகின்றன வல்லவோ? கோரப்பட்ட பொருள்களைச் சுக்கிரன் போலப் பெறுவதென்பதும் சிறப்புற்றதன்றோ?" என்றிருக்கிறது.
அழகிய இடை கொண்ட வைதேஹி, இந்த மிருகரத்தினத்தின் மதிப்புமிக்க காஞ்சனத் தோலின் மீது என்னுடன் சேர்ந்து அமர்வாள்.(35) காதளீ, பிரியகீ, பிரவேணீ {போன்ற மான்வகைகளோ}, அவிகீ {போன்ற ஆட்டு வகையோ} தோல் ஸ்பரிசத்தால் இதற்கு ஒப்பில்லை என்றே நான் நினைக்கிறேன்[7].(36) கம்பீரமான இந்த மிருகமும் {மானும்} திவ்யமானது, வானத்தில் திரியவல்லதும் திவ்யமானது. {மிருகசீரிஷ நக்ஷத்திரம் என்ற} தாரகைக்குரிய அந்த மிருகமும் {மானும்}, மஹீக்குரிய இந்த மிருகமுமான இவ்விரண்டும் திவ்யமானவையே.(37) இலக்ஷ்மணா, "இது ராக்ஷச மாயை" என்று என்னிடம் நீ சொன்னாய். இஃது அவ்வாறே இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதை வதம் செய்வது {அழிப்பது} என்னாலாக வேண்டிய காரியமே.(38) வனத்தில் திரியும் கொடியவனும், தீய ஆத்மாவுமான இந்த மாரீசனால் பூர்வத்தில் முனிபுங்கவர்கள் ஹிம்சிக்கப்பட்டிருக்கின்றனர்.(39) பரம வில்லாளிகளான பல ஜனாதிபர்கள் {மன்னர்கள்} வேட்டையாடும்போது முன் எழுந்து அவர்களை இவன் கொன்றிருக்கிறான். அதற்காகவாவது இந்த மிருகத்தை வதம் செய்ய வேண்டும்.(40)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "காதளீ, பிரியகீ, பிரவேணி ஆகியன நல்ல தோல்களைத் தரும் மான்வகைகளைச் சார்ந்தனவாகும். அமரகோசத்தில், "காதளீ என்பது கழுத்தில் வெள்ளைக் கோடுகளுடன் பெரும் வளைகளில் வாழும் மான் வகையைக் குறிப்பதாகும். பிரியகீ என்பது அடர்த்தியான பழுப்பு, கருப்பு ரோமங்களுடன், அமர்வதற்கு ஏற்ற தோலைத் தரும் மான் வகையாகும். அவிகீ என்பது ஆட்டுத்தோலாகும்" என்றிருக்கிறது. சில அகராதிகளில் பிரவேணீ என்பதற்கு மான் என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
பூர்வத்தில் இங்கே வாதாபி, தபஸ்விகளை வஞ்சித்து, வயிற்றில் புகுந்து, தன் கர்ப்பத்தால் {அழியும்} அச்வதரியை {தேளைப்} போல அந்த துவிஜர்களை {இருபிறப்பாளர்களைக்} கொன்று கொண்டிருந்தான்[8].(41) லோபத்துடன் {பேராசையுடன்} கூடிய அவன், சிறிது காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில், தேஜஸ்ஸுடன் கூடியவரும், மஹாமுனியுமான அகஸ்தியரை அடைந்து, உண்மையில் அவரால் பக்ஷிக்கப்பட்டான் {உண்ணப்பட்டான்}.(42) தன் ரூபம் அடைந்து, எழுந்து வர அவன் ஆசைப்பட்ட போது, பகவான் {அகஸ்தியர்} அதைக் கவனித்து புன்னகைத்து அந்த வாதாபியைப் பார்த்து இதைச் சொன்னார்:(43) "வாதாபியே, ஜீவலோகத்தில் துவிஜசிரேஷ்டர்கள் {உலகில் இருபிறப்பாளர்களில் சிறந்தவர்கள்} உன்னால் அவமதிக்கப்பட்டு, உன் தேஜஸ்ஸால் கொல்லப்பட்டனர். எனவே உன்னை நான் ஜீரணித்து விட்டேன்" {என்றார்}.(44)
[8] ஆரண்ய காண்டம் 11ம் சர்க்கம் 55 முதல் 67ம் சுலோகம் வரை இல்வலன்-வாதாபி-அகஸ்தியரின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த வாதாபியின் கதை ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கோவேறு கழுதை பிரசவிக்கும்போது, குட்டியானது அந்த கோவேறு கழுதையின் கருவறையைக் கிழித்து வெளியேறி அதைக் கொன்றுவிடும்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இவ்விடத்தில் இதற்கு முந்தி வாதாபியெனுமரக்கன் தபஸ்விகளாகிய அந்தணர்களை ஏமாற்றி வயிற்றில் புகுந்தவனாகி அச்வதரியை (அதாவது கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த பிராணியை) தனது கருவு எப்படியோ அப்படியே கொன்று கொண்டிருந்தான்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இவ்விடத்திலேதானே முன்பு வாதாபியானவன் ஆட்டுக்கறியாகி பிறரால் புஜிக்கப்பட்டு, அவர்களுடைய குக்ஷியையடைந்து, தேளின் கருவு தான் பிறக்கும்போது தாயைக் கொல்வது போலப் பற்பல வேதியர்களைக் கொலை செய்தனன்" என்றிருக்கிறது.
இலக்ஷ்மணா, அந்த வாதாபியைப் போலவே இந்த ராக்ஷசனும் {மாரீசனும்} இருக்கமாட்டான். தர்மநித்யனும், ஜிதேந்திரியனுமான {எப்போதும் தர்மத்தைப் பின்பற்றுபவனும், புலன்களை வென்றவனுமான} என்னைப் போன்ற ஒருவன், அலட்சியமாக மதித்து அவனை அடைந்தால், அகஸ்தியரால் {கொல்லப்பட்ட} வாதாபியைப் போல அவன் கொல்லப்படுவான்.(45,46அ) இரகுநந்தனா {ரகு குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே}, நீ மைதிலியைக் கவனமாக ரக்ஷித்துக் கொண்டு இங்கேயே தயாராக இருப்பாயாக. நமக்கு ஆக வேண்டிய காரியம் எதுவாக இருந்தாலும் அஃது இவளைச் சார்ந்தே இருக்கிறது.(46ஆ,47அ) சௌமித்ரியே, நான் இந்த மிருகத்தைக் கைப்பற்ற விரும்புகிறேன், முடியவில்லை என்றால் கொல்ல விரும்புகிறேன். ஓடிய மிருகத்தைக் கைப்பற்றச் செல்ல விரும்புகிறேன்.(47ஆ,48அ)
இலக்ஷ்மணா, மிருகத்தின் தோலில் விருப்பம் நிலைத்த வைதேஹியைப் பார். பிரதானமாக அந்தத் தோலாலேயே அந்த மிருகம் இன்று இருக்காது.(48ஆ,49அ) இலக்ஷ்மணா, ஆசிரமத்தில் இருந்து விழிப்புடன் சீதையை நீ பார்த்துக் கொள்வாயாக. புள்ளிமானை ஏகசாயகத்தால் {ஒரே கணையால்} நான் கொல்வேன். அதைக் கொன்று, தோலை எடுத்துக் கொண்டு, சீக்கிரமே திரும்பி வருவேன்.(49ஆ,50) இலக்ஷ்மணா, பிரதிக்ஷணமும் {ஒவ்வொரு கணமும்} மைதிலியை நன்றாகக் கவனித்தும், எதிலும் ஐயத்துடன் இருந்து கொண்டும், புத்தியும், சாமர்த்தியமும், அதிபலமும் கொண்ட பக்ஷியான ஜடாயுவுடன் சேர்ந்து தளர்வில்லா ஊக்கத்துடன் இருப்பாயாக" {என்றான் ராமன்}.(51)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 43ல் உள்ள சுலோகங்கள்: 51
Previous | | Sanskrit | | English | | Next |