Kumbha killed | Yuddha-Kanda-Sarga-076 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கம்பனன், பிரஜங்கன் ஆகியோரை அங்கதனும், சோணிதாக்ஷனை துவிவிதனும், யூபாக்ஷனை மைந்தனும், கும்பனை சுக்ரீவனும் கொன்றது...
வீரஜனங்களுக்கு அழிவைத் தந்த அந்த கோரமான போர் நடந்து கொண்டிருந்த போது, போரில் உற்சாகம் கொண்ட அங்கதன், வீரம் மிக்க கம்பனனைத் தாக்கினான்.(1) அங்கதனை {அறைகூவி} அழைத்த அந்த கம்பனன், கதையைக் கொண்டு கோபத்துடன் வேகமாகத் தாக்கினான். கடுமையாகத் தாக்கப்பட்ட அவன் {அங்கதன்} கலக்கமடைந்தான்.(2) தேஜஸ்வியான அவன் {அங்கதன்}, நனவு மீண்டு, கிரி சிகரம் ஒன்றை வீசினான். அந்த அடியால் பீடிக்கப்பட்ட கம்பனன் புவியில் விழுந்தான்.(3)