The boon given by Bharadwaja | Yuddha-Kanda-Sarga-124 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கி, தன் தாய்மார், பரதன் ஆகியோரின் நலனை அவரிடம் இருந்து அறிந்து கொண்ட ராமன்...
நியதனான லக்ஷ்மணாக்ரஜன் {பணிவுள்ளவனும், லக்ஷ்மணனின் அண்ணனுமான ராமன்}, பதிநான்கு வருஷங்கள் பூரணமான பஞ்சமியில் {மாதத்தின்} ஐந்தாம் நாளில்[1] பரத்வாஜாஷ்ரமத்தை அடைந்து முனிவரை {பரத்வாஜரை} வணங்கினான்.(1) தபோதனரான அந்த பரத்வாஜரை வணங்கிய அவன் {ராமன், பின்வருமாறு} விசாரித்தான், "பகவானே, புரம் அன்னமயமான சுபிக்ஷத்துடன் {அயோத்தி நகரம் அபரிமிதமான உணவுடனும், பிணியில் இருந்து விடுபட்டதாகவும்} இருப்பது குறித்துக் கேள்விப்பட்டீரா?{2} அந்த பரதன் யுக்தமாக இருக்கிறான் {ஏற்ற பொறுப்புக்குப் பொருத்தமாக நடந்து கொள்கிறான்} என்றும், என் மாதாக்கள் ஜீவித்திருக்கின்றனர் என்றும் நம்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சித்திரை மாதம் சுக்லபக்ஷம் பஞ்சமியினன்று ராமன் அரண்ய வாஸத்திற்காக அயோத்யையை விட்டு வந்தானாகையால் மீளவும் சித்திரை மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியோடு பதினான்கு ஸம்வத்ஸரங்கள் நிரம்புகளையில் சித்திரை மாதம் சுக்லபக்ஷ பஞ்சமியினன்று பரத்வாஜாஷ்ரமஞ் சேர்ந்தானென்று தெரிகிறது" என்றும், இன்னும் ராமன் பதினான்காண்டுகள் எவ்வளவு நாள்கள் எங்கெங்கே கழித்தான் என்றும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹாமுனிவரான பரத்வாஜர், மகிழ்ச்சியுடனும், முன்னதாகப் புன்னகைத்தபடியும் ரகுசிரேஷ்டனிடம் {ரகு குலத்தவரில் சிறந்த ராமனிடம் பின்வரும்} பதிலைச் சொன்னார்:(3ஆ,4அ) "பரதன், புழுதிபடிந்தவனாகவும், ஜடை தரித்தவனாகவும், உன் பாதுகையை முன்வைத்து, உனக்காகக் காத்திருக்கிறான். கிருஹத்தில் அனைவரும் குசலமாக இருக்கிறார்கள்.(4ஆ,5அ) பூர்வத்தில் நீ மரவுரி உடுத்தியவனாக மஹாவனத்திற்குள் பிரவேசித்தாய்.{5ஆ} ஸ்திரீயை {உன் மனைவியான சீதையை} மூன்றாவதாகக் கொண்டு {மூவராக}, ராஜ்ஜியத்திற்கு யுக்தமில்லாமல் {தகாதவனாக}, கேவலம் தர்மத்தையே விரும்பி {அறத்தை மட்டுமே விரும்பி}, பதாதியாக {பாத நடையாகச் செல்பவனாக}, அனைத்தையும் கைவிட்டு, பித்ருவசனத்தின்படி {தந்தை சொற்படி} காரியம் ஆற்றுபவனாக,{6} சமிதிஞ்சயா {பகைவரை வெல்பவனே}, ஸ்வர்க்கத்தை விட்டு நழுவிய அமரனைப் போல, சர்வ போகங்களையும் கைவிட்ட உன்னைக் கண்ட எனக்குப் பூர்வத்தில் கருணை எழுந்தது.{7} கைகேயி வசனத்திற்கு யுக்தமாக {தகுந்தவனாக}, வனத்தின் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து,(5ஆ,8அ) பகைவரை வென்று, அர்த்தம் நிறைவேறி, மித்ரகணங்களுடனும், பந்துக்களுடனும் {நண்பர்களுடனும், உறவினருடனும்} கூடிய உன்னை இப்போது காணும்போதோ எனக்கு உத்தம பிரீதி உண்டாகிறது.(8ஆ,9அ) இராகவா, ஜனஸ்தான வாசத்தில் நீ எதை அதிகமாக அடைந்தாயோ, அத்தகைய உனது சுக துக்கங்கள் யாவும் என்னால் அறியப்பட்டது.(9ஆ,இ) பிராஹ்மண அர்த்தத்தை வேண்டிய சர்வ தாபஸர்களையும் {தபஸ்விகளையும்} நீ ரக்ஷித்துக் கொண்டிருக்கையில், அநிந்திதையான இவள் ராவணனால் அபகரித்துச் செல்லப்பட்டாள்.(10)
மாரீச தரிசனம், அதேபோல சீதையைக் குறித்த உனக்கு உண்டான துக்கம், கபந்த தரிசனம், அதே போல பம்பை சென்றது,{11} சுக்ரீவனுடனான உனது ஸக்யம் {நட்பு}, அதேபோல, வாலி உன்னால் எப்படிக் கொல்லப்பட்டான் என்பது, அதேபோல, வைதேஹி தேடப்பட்டது, வாதாத்மஜனின் கர்மம் {வாயு மைந்தன் ஹனுமானின் செயல்},{12} சீதை இருக்குமிடம் கண்டறியப்பட்டது, நளசேது எப்படிக் கட்டப்பட்டது என்பது, மகிழ்ச்சியடைந்த ஹரியூதபர்களால் லங்கை எப்படி எரிக்கப்பட்டது என்பது,{13} புத்திரர்கள், பந்துக்கள், அமைச்சர்களுடனும், பலத்துடன் {படையுடனும்}, வாஹனங்களுடனும் கொல்லப்பட்ட ராவணன், தன் பலத்தில் எப்படி செருக்குற்றிருந்தான் என்பது,{14} தேவகண்டகனான ராவணன் உன்னால் எப்படிக் கொல்லப்பட்டான் என்பது, திரிதசர்கள் {சொர்க்கவாசிகள்} வந்தது, அதே போல உனக்கு வரம் தத்தம் செய்யப்பட்டது,{15} என இவை யாவற்றையும், தர்மவத்ஸலா {தர்மத்தை விரும்புகிறவனே, ராமா}, தபத்தால் நான் அறிந்து கொண்டேன். செய்திகளைச் சொல்லும் என் சிஷ்யர்களும் இங்கிருந்து {அயோத்யா} புரீக்குச் சென்று வருகின்றனர்.(11-16) {மித்ரர்கள், தனம், தானியங்கள் ஆகியவை பிரஜைகளால் மதிக்கப்படுகின்றன. ஜனனீயும், ஜன்மபூமியும் ஸ்வர்க்கத்தைவிட மேன்மையானவை[2].} சஸ்திரங்களைத் தரிப்பவர்களில் சிறந்தவனே, இப்போது நானும் உனக்கு வரதத்தம் செய்யப் போகிறேன். இந்த அர்க்கியத்தை ஏற்றுக் கொண்ட பிறகு நீ அயோத்யைக்குச் செல்வாயாக" {என்றார் பரத்வாஜர்}.(17)
[2] இங்கே தேசிராஜு ஹனுமந்தராவம்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த வாக்கியத்தின் பொருளைக் கொண்ட சுலோகமும் அதற்கான மொழிபெயர்ப்பும் இருக்கின்றன. மற்ற அனைத்துப் பதிப்புகளிலும் அடைப்புக்குறிக்கு பிறகுள்ள வாக்கியத்திற்குரிய சுலோகமும், மொழிபெயர்ப்பும் இருக்கின்றன.
ஸ்ரீமான் நிருபாத்மஜன் {ராஜகுமாரன் ராமன்}, அவரது அந்த வாக்கியத்தால் மகிழ்ச்சியடைந்து, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தலைவணங்கி ஏற்றுக் கொண்டு, {பின்வரும்} வரத்தைக் கேட்டான்:(18) "அனைத்து விருக்ஷங்களும் அகாலத்திலும் பழங்களைக் கொடுப்பவையாகவும், மதுவை {தேனைப்} பெருக்குபவையாகவும், அமுத கந்தத்துடன் கூடியவையாகவும், விதவிதமான ஏராளமான பழங்களுடன்,{19} பகவானே, நாங்கள் அயோத்திக்குச் செல்லும் மார்க்கமெங்கும் இருக்கட்டும்" {என்று கேட்டான்}[3].(19,20அ)
[3] அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்சொரி தரு பருவம் போன்று கிழகொடு கனி காய் துன்றிவரிபுனல் செழுந்தேன் மிக்க விளங்கு என இயம்புக என்றான்விரியும் மாதவனும் அஃதே ஆகுக எனப் புகன்றிட்டானால்- கம்பராமாயணம் 10148ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப்படலம்பொருள்: "குரங்குகள் செல்லும் காடுகள் எங்கும் எப்பருவத்திலும் கார்காலம் போல, கிழங்கும், கனியும், காயும் நெருங்கி, மிகுந்த நீரும், தேனும் நிரம்பி விளங்கட்டும் என்ற வரத்தைத் தருவதாகச் சொல்வீராக" என்றான் {ராமன்}. அகன்று பரந்த பெருந்தவத்தைக் கொண்டவரும் {பரத்வாஜரும்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி முடித்தார்.
"அவ்வாறே ஆகட்டும்" என்ற பிரதிஜ்ஞை சொல்லப்பட்டதும் {உறுதிமொழி கொடுக்கப்பட்டதும்}, அங்கே சுற்றிலுமிருந்த மரங்கள் யாவும் ஸ்வர்கத்திலுள்ள மரங்களைப் போல மாறின.(20ஆ,21அ) பழங்களற்ற மரங்களும் பழங்களைக் கொடுத்தன; புஷ்பமற்றவை புஷ்பங்களால் நிறைந்தன;{21ஆ} காய்ந்தவை இலைகள் நிறைந்து மதுவை {தேனைப்} பெருக்கின. அப்போது, சுற்றிலும் மூன்று யோஜனைகள் செல்பவர்களுக்கு {இவை யாவும்} இப்படியே இருந்தன.(21ஆ,22அ,ஆ) பிறகு அந்தப் பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்பவர்களில் சிறந்தவர்கள்}, மகிழ்ச்சியில் மயிர்க்கூச்சத்தை அடைந்தனர். ஸ்வர்க்கத்தையே வென்றுவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியுடன் கூடிய அவர்கள், ஏராளமான, திவ்யமான பழங்களை விருப்பத்துடன் ஆயிரக்கணக்கில் உண்டனர்.(23)
யுத்த காண்டம் சர்க்கம் – 124ல் உள்ள சுலோகங்கள்: 23
| Previous | | Sanskrit | | English | | Next |
