Seven Maruts | Bala-Kanda-Sarga-47 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: விசாலையின் மன்னர்கள்; ஏழு துண்டுகளான திதியின் கருவை, அவளது வேண்டுகோளுக்கு இணங்க சப்தமருத்கணங்களாகும்படி அருள் செய்த இந்திரன்...
{விஷ்வாமித்ரர் தொடர்ந்தார்}, "கர்ப்பம் ஏழு துண்டுகளானதும் திதி பரமதுக்கமடைந்தாள். அவள் வெல்லப்பட முடியாத சஹஸ்ராக்ஷனிடம் இந்த சமாதான வாக்கியத்தைப் பேசினாள்:(1) "பலசூதனா {பலாசுரனைக் கொன்றவனே இந்திரா}, தேவேசா, என்னுடைய அபராதத்தால் {தவறால்} இந்த கர்ப்பம் ஏழு துண்டுகளாகின. இதில் உன் அபராதமேதுமில்லை.(2) உன்னால் என் கர்ப்பம் {ஏழு துண்டுகளாக} மாறினாலும், ஏழு துண்டுகளான இவ்வேழு மருதர்களும், உன்னுடைய ஸ்தானபாலர்களாக வேண்டும் என்பது என் விருப்பம்[1].(3) புத்திரா, என்னுடைய இந்த ஏழு மகன்களும் திவ்யரூபத்தை அடைந்து வாதஸ்கந்தர்களாகி {வாயுலோக அதிபதிகளாகி} மாருதர்களாகப் புகழடைந்து திவ்ய லோகத்தில் திரிய வேண்டும்.(4) ஒருவன் பிரம்மலோகத்தில் திரியட்டும், மற்றொருவன் இந்திரலோகத்தில் திரியட்டும். பெரிதும் கொண்டாடப்படும் மூன்றாமவன் வாயு என்ற புகழ் பெற்று {விஷ்ணு லோகத்தில்} திவ்ய வாயுவாகட்டும்.(5) ஸுரசிரேஷ்டா {தேவர்களில் சிறந்தவனே}, என்னுடைய மற்ற நான்கு புத்திரர்களும் உன் சாசனத்தின் {ஆணையின்} பேரில் உன்னால் கொடுக்கப்படும் மாருதரெனும்[2] பெயரில் புகழ்பெற்று, கால திசைகளை ஆளட்டும். நீ மங்கலமாக இருப்பாயாக." {என்றாள் திதி}.(6,7அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தொன்மங்களின் படி அண்டத்தில் விண்மீன் மண்டலங்களையும், கிரகங்களையும் சார்ந்துள்ள நுட்பமான ஏழு இடங்கள் இருக்கின்றன. விஷ்ணு புராணத்தின்படி இவை, மேகங்கள், இடி, மழை ஆகியவற்றில் திரியும் வாயுவான ஆவஹம், சூரிய வட்டிலில் திரியும் வாயுவான பிரவஹம், சந்திர வட்டிலில் திரியும் வாயுவான ஸம்வஹம், விண்மீன் மண்டலங்களில் திரியும் உத்வஹம், கோள்களின் கோளங்களில் திரியும் விவஹம், சப்தரிஷி மண்டலத்தில் திரியும் பரிவஹம், வடதுருவப் பகுதிகளில் திரியும் பராவஹம் ஆகியனவாகும். இவை ககனன், ஸ்பர்ஷனன், வாயு, அநிலன், பிராணன், பிராணேஷ்வரன், ஜீவன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. மருத தேவன் ஒவ்வொருவனும் ஏழு மருத்துக்களின் அணியைச் சேர்ந்தவனாவான். இவ்வாறு மொத்தமாக நாற்பத்தொன்பது தனியொருங்களாக அவர்கள் இருக்கின்றனர்" என்றிருக்கிறது.
[2] "மா" "ருத" என்பது அழாதே என்ற பொருளைக் கொண்டதாகும்.
சஹஸ்ராக்ஷனும் {ஆயிரங்கண்களைக் கொண்டவனும்}, புரந்தரனுமான {பகை நகரங்களை அழிப்பவனுமான} பலனிசூதனன் {பலாசுரனை அழித்த இந்திரன்}, அவளது வாக்கியத்தைக் கேட்டுக் கைக்கூப்பி, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(7ஆ,8அ) "எவற்றைச் சொன்னாயோ அவை அனைத்தும் நடக்கும் என்பதில் ஐயமில்லை. உன் ஆத்மஜர்கள் {உன் மகன்கள்} தேவ ரூபத்தில் திரிவார்கள். நீ மங்கலமாக இருப்பாயாக" {என்றான் இந்திரன்}.
இராமா, மாதாவும், புத்திரனுமான அவ்விருவரும், அந்தத் தபோவனத்தில் இவ்வாறு நிச்சயித்துக் கொண்டு, தங்கள் நோக்கங்கள் நிறைவேறியவர்களாக திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(8ஆ-10அ) காகுத்ஸ்தா, இந்தத் தேசத்தைப் பூர்வத்தில் மஹேந்திரன் ஆண்டான். இங்கேதான் அவன் தவசித்தியடைந்த திதிக்கு இவ்வாறான பரிசாரங்களை {தொண்டுகளைச்} செய்தான்.(10ஆ,11அ) நரவியாகரா {மனிதர்களில் புலியே ராமா}, இக்ஷ்வாகுவுக்கு[3] அலம்புசையின் மூலம், பரமதார்மிகனும், விசாலன் என்று புகழ்பெற்றவனுமான புத்திரன் பிறந்தான். அவன் இந்த ஸ்தானத்தில் அமைத்த விசாலை என்று அறியப்படும் நகரம் இதோ இருக்கிறது.(11ஆ,12)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விசாலையின் இந்த இக்ஷ்வாகுக்கள், சூரிய குலத்தையும், அயோத்தியையும் சேர்ந்த இக்ஷ்வாகுக்கள் அல்லர். விசாலையின் இக்ஷ்வாகு வம்சம் குறித்து பாகவத புராணத்தின் ஏழாம் காண்டம் தனியாகப் பட்டியலிடுகிறது" என்றிருக்கிறது.
இராமா, மஹாபலவானான ஹேமச்சந்திரன், அந்த விசாலனின் மகனாவான். அந்த ஹேமச்சந்திரனுக்கு சுசந்திரன் என்ற புகழ்பெற்ற மகன் ஒருவன் இருந்தான்.(13) இராமா, சுசந்திரனின் மகன் தூம்ராஷ்வன் என்ற மகனும், அவனுக்கு {தூம்ராஷ்வனுக்கு} சிருஞ்சயன் என்ற மகனும் பிறந்தனர்.(14) ஸ்ரீமானும், பிரதாபவானுமான ஸஹதேவன், அந்த சிருஞ்சயனின் மகனாவான். பரமதார்மிகனான குஷாஷ்வன், ஸஹதேவனின் மகனாவான்.(15)
மஹாதேஜஸ்வியும், பிரதாபவானுமான சோமதத்தன், குசாஷ்வனுடைய மகனாவான். சோமதத்தனின் மகன், காகுத்ஸ்தன் என்ற பெயரில் பெரும் புகழ்பெற்றவனாவான்.(16) இப்போது இந்த நகரத்தில் அவனது {காகுத்ஸ்தனின்} புத்திரனும், மஹாதேஜஸ்வியும், பெரும் புகழ்படைத்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான சுமதி என்ற பெயர் படைத்தவன் வசித்து வருகிறான்[4].(17) அந்த இக்ஷ்வாகுவின் அருளால் வைசாலிகர்கள் {விசாலை தேசத்து மன்னர்கள்} அனைவரும் தீர்க்காயுளைக் கொண்ட மஹாத்மாக்களாகவும், வீரியவான்களாகவும், சுதார்மிகர்களாகவும் இருக்கின்றனர்.(18) நரசிரேஷ்டா, இன்றைய ஓரிரவு நாம் சுகமாக உறங்குவோம். நாளை விடியலில் ஜனகனைக் காண நாம் செல்லப் போகிறோம்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(19)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் இக்ஷ்வாகுவும், காகுத்ஸ்தனும் விசாலை வம்சத்தவர்களாவர். இவர்களை ராமனின் முப்பாட்டன்களுடன் குழப்பிக் கொள்வது தகாது" என்றிருக்கிறது.
மஹாதேஜஸ்வியும், பெரும்புகழ்பெற்றவனும், நரவரசிரேஷ்டனுமான {சிறந்த மனிதர்களில் உயர்ந்தவனுமான விசாலையின் மன்னன்} சுமதி, விஷ்வாமித்ரர் அருகில் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு வரவேற்க வந்தான்.(20) உபாத்யாயர்கள் {ஆசிரியர்கள்}, பந்துக்கள் {உறவினர்கள்} ஆகியோருடன் வந்து, கைகளைக் கூப்பி பரம பூஜை செய்து, குசலம் விசாரித்தபடியே விஷ்வாமித்ரரிடம்,(21) "முனிவரே, நீர் வந்து தரிசனங்கொடுத்த இடம் என்னுடையதாகும். உமது அனுக்கிரகத்தையும் பெற்று நான் தன்யனானேன் {நற்பேறு பெற்றவனானேன்}. என்னைவிட தன்யசாலிகள் வேறு எவரும் இல்லை" {என்றான் சுமதி}.(22)
பாலகாண்டம் சர்க்கம் – 47ல் உள்ள சுலோகங்கள் : 22
Previous | | Sanskrit | | English | | Next |