Halt at Kishkindha | Yuddha-Kanda-Sarga-123 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தாங்கள் தங்கியிருந்த இடங்களையும், போர்க்களத்தையும், நளசேதுவையுமென அயோத்தி வரை அனைத்து இடங்களையும் புஷ்பக விமானத்தில் இருந்து சீதைக்குச் சுட்டிக் காட்டிய ராமன்...
இராமனின் அனுமதியுடன், ஹம்சங்களுடன் கூடிய அந்த உத்தம விமானம், காற்றால் ஏவப்படும் மஹாமேகத்தைப் போல ஆகாசத்தில் எழுந்தது.(1) அப்போது, ரகுனந்தனனான ராமன், அனைத்துப் பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தியபடியே, சசியைப் போன்ற முகத்தைக் கொண்ட மைதிலியான சீதையிடம் {பின்வருமாறு} கூறினான்:(2) "வைதேஹி, கைலாச சிகரத்தின் வடிவிலான திரிகூட சிகரத்தில் விஷ்வகர்மனால் நிர்மிதம் செய்யப்பட்டு நிலைத்திருக்கும் லங்கையைப் பார்ப்பாயாக.(3) சீதே, மாமிசம், சோணிதத்தால் சேறாகியிருப்பதும், ஹரீக்கள், ராக்ஷசர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியதுமான இந்த மஹத்தான போர்க்களத்தைப் பார்.(4) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, வர தத்தம் பெற்றவனும், பிரமாதியும் {மக்களைத் துன்புறுத்தியவனும்}, உனக்காக என்னால் கொல்லப்பட்டவனுமான ராக்ஷசேஷ்வரன் ராவணன் {சாம்பலாகி} இங்கே கிடக்கிறான்[1].(5)
[1] அடைப்புக்குறிக்குள் இருக்கும் சாம்பலாகி என்ற சொல்லை எடுத்துவிட்டால், கொல்லப்பட்ட ராவணனின் சடலம் இன்னும் அந்தப் போர்க்களத்தில் கிடப்பதாகப் பொருள் ஏற்படும். அவ்வாறெனில் ராவணனுக்கு செய்யப்பட்ட இறுதிச் சடங்குகளையும், அவனது சிதைக்கு நெருப்பிட்ட சம்பவங்களை விவரிக்கும் யுத்த காண்டம் 111ம் சர்க்கம் இடைச்செருகல் என்றாகிவிடும். அல்லது ராமன் சீதைக்கு காட்சிகளை விவரிக்கும் இந்த சர்க்கம் இடைச்செருகல் என்றாகிவிடும்.
இங்கே கும்பகர்ணனும், நிசாசரனான பிரஹஸ்தனும் கொல்லப்பட்டனர். இங்கே வானரன் ஹனூமதனால் தூம்ராக்ஷன் கொல்லப்பட்டான்.(6) இங்கே மஹாத்மாவான சுஷேணனால் வித்யுன்மாலி கொல்லப்பட்டான். இங்கே லக்ஷ்மணனால் ராவணியான இந்திரஜித் ரணத்தில் கொல்லப்பட்டான்.(7) இங்கே விகடன் என்ற நாமத்தைக் கொண்ட ராக்ஷசன் அங்கதனால் கொல்லப்பட்டான்[2]. காணக் கொடியவனான விரூபாக்ஷன், மஹாபார்ஷ்வன், மஹோதரன்,{8} அகம்பனன் ஆகியோரும், இன்னும் பலவான்களான வேறு ராக்ஷசர்களும், திரிசிரஸ், அதிகாயன் ஆகியோரும், தேவாந்தக நராந்தகர்களும் கொல்லப்பட்டனர்.(8,9) இராக்ஷசர்களில் முதன்மையான யுத்தோன்மத்தன், மத்தன் ஆகிய இருவரும், பலமிக்க கும்பகர்ணாத்மஜர்களான {கும்பகர்ணனின் மகன்களான} நிகும்பனும், கும்பனும்,{10} வஜ்ரதம்ஷ்டிரனும், தம்ஷ்டிரனும், பல ராக்ஷசர்களும் கொல்லப்பட்டனர். வெல்வதற்கரியவனான மகராக்ஷன், யுத்தத்தில் என்னால் வீழ்த்தப்பட்டான்.(10,11) பெரும்போரில் அகம்பனன் கொல்லப்பட்டான். வீரியவானான சோணிதாக்ஷனும், யூபாக்ஷனும், பிரஜங்கனும் கொல்லப்பட்டனர்.(12) காணப் பயங்கரனான ராக்ஷசன் வித்யுஜ்ஜிஹ்வன் இங்கே கொல்லப்பட்டான். யஜ்ஞசத்ரு கொல்லப்பட்டான். மஹாபலவானான சுப்தக்னன் கொல்லப்பட்டான்.{13} சூரியசத்ருவும், அதேபோன்ற மற்றொருவனான பிரஹ்மசத்ருவும் கொல்லப்பட்டனர்.(13,14அ)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சுஷேணன் வித்யுன்மாலியை வதித்தலும், அங்கதன் விகடனைக் கொன்றதும் முன்பு சொல்லவில்லையாயினும் இப்பொழுது அனுவதித்து முன்பு நடந்ததாகச் சொல்லுகையால் நடந்ததென்று தெரிகிறது" என்றிருக்கிறது.
இங்கே ஆயிரத்திற்கும் மேலான சகபத்னிகளுடன் மந்தோதரி என்ற நாமத்தைக் கொண்ட பாரியை {பெயரைக் கொண்ட ராவணனின் மனைவி} அவனைக் குறித்துப் புலம்பி அழுதாள்.(14ஆ,15அ) அழகிய முகம் கொண்டவளே, இதோ சமுத்திரத்தின் தீர்த்தம் {கடற்கரை} காணப்படுகிறது. சாகரத்தை கடந்து வந்து அந்த ராத்திரியை நாங்கள் இங்கேதான் கழித்தோம்.(15ஆ,16அ) விசாலாக்ஷி, உனக்காக லவணார்வத்தில் {உப்பு நீர்க்கடலில்} என்னால் கட்டுவிக்கப்பட்டதும், கடப்பதற்கரியதுமான நளசேது இதோ இருக்கிறது.(16ஆ,17அ) வைதேஹி, கலங்கடிப்பட முடியாத வருணாலயமும், அளவற்றதைப் போல கர்ஜிப்பதும், சங்கு, சுக்திகளால் {முத்துச்சிப்பிகளால்} நிறைந்ததுமான சாகரத்தைப் பார்.(17ஆ,18அ) மைதிலி, ஹனுமதன் ஓய்ந்து செல்லும் அர்த்தத்திற்காக சாகரத்தைப் பிளந்து கொண்டு உதித்த சைலேந்திரமான காஞ்சன ஹிரண்ய நாபத்தை {மைநாக மலையைப்} பார்.(18ஆ,19அ) சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் இது {இந்தத் தீவு / நிலக்குடைவு}, துருப்புகள் தங்கிச் சென்ற இடமாகும்[3]. பூர்வத்தில் {சேது கட்டப்படுவதற்கு முன்னர்} பிரபு மஹாதேவனின்[4] அருள் இங்கே எனக்குக் கிடைக்கப்பெற்றது.(19ஆ,20அ)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸமுத்ரத்தினிடையில், ஸேதுவின்மேல் இந்த இடத்தில் வானர ஸேனையெல்லாம் இறங்கியிருந்தது. பெருந்தன்மையுடைய ஸமுத்ரத்தின் துறை இதோ புலப்படுகின்றது காண்பாய்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இதற்கு முன்பு ஸேதுவின் தக்ஷிண கோடியைச் சொல்லி இங்கு உத்தரகோடியைச் சொல்லுகிறது" என்றிருக்கிறது.
[4] இங்கே சொல்லப்படும் மஹாதேவன் சிவனல்ல, அது சமுத்திரன் என்று நரசிம்மாசாரியர் பதிப்பில் ஓர் அடிக்குறிப்பு காணப்படுகிறது. யுத்த காண்டம் 22ம் சர்க்கம் 45ம் சுலோகத்தில் ராமனிடம் சமுத்திரன், "நளன், என்னில் சேதுவை உண்டாக்கட்டும் {பாலத்தைக் கட்டட்டும்}. நான் அதைத் தாங்குவேன்" என்று உறுதியளிக்கிறான். கடலைக் கடப்பதற்காகவோ, சேதுவைக் கட்டுவதற்காகவோ ராமன் சிவ வழிபாடு செய்ததற்கான குறிப்பு ஏதும் இல்லை. அதற்காகவே அப்பதிப்பில் அப்படி விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீளம் கருதி அந்த அடிக்குறிப்பை இங்கே சேர்க்கவில்லை.
இதோ இங்கே காணப்படுவது மஹாத்மாவான சாகரனின் தீர்த்தமாகும் {கடற்கரையாகும்}.{20ஆ} மூவுலகங்களாலும் பூஜிக்கப்படும் இது, சேது பந்தம் என்று புகழ்பெற்றது. பரம பவித்ரமான இது {இவ்விடம்} மஹாபாதகங்களை நாசம் செய்வதாகும்.{21} இராக்ஷசராஜனான விபீஷணன் இங்கேதான் {முதலில்} வந்தான்.(20ஆ-22அ) சீதே, எங்கு என்னால் வாலி கொல்லப்பட்டானோ, அந்தக் கிஷ்கிந்தை, கானகங்களுடன் கூடிய சுக்ரீவனின் அந்த ரம்மிய புரீ இதோ காணப்படுகிறது.[5]" {என்றான் ராமன்}.(22ஆ,23அ)
[5] கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 41ல் 12 முதல் 25ம் சுலோகம் வரை, குடகுப் பகுதியில் இருந்து லங்கை வரை உள்ள பகுதிகளை வர்ணிக்கிறான். அந்த வர்ணனையில் உள்ள ஒரு பகுதியும் இங்கே குறிப்பிடப்படவில்லை.
அப்போது, வாலியால் பாலிதம் செய்யப்பட்ட கிஷ்கிந்தாபுரீயைக் கண்ட சீதை, அன்பினால் உண்டான கூச்சத்துடன் ராமனிடம் அடக்கமாக {பின்வருமாறு} கூறினாள்:(23ஆ,24அ) "நிருபரே {மன்னரே}, தாரை முதலான சுக்ரீவனின் பிரிய பாரியைகளாலும்,{24ஆ} வேறு வானரேந்திரர்களின் ஸ்திரீகளாலும் சூழப்பட்ட நான், உம்முடன் சேர்ந்து ராஜதானியான அயோத்யைக்குச் செல்ல விரும்புகிறேன்" {என்றாள் சீதை}.(24ஆ,25அ,ஆ)
வைதேஹியால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, ராகவன், "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி சொன்னான். கிஷ்கிந்தையை அடைந்து நின்ற ராகவன்,{26} விமானத்திலிருந்த சுக்ரீவனைக் கண்டு இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(26,27அ) "வானரசார்தூலா, சர்வ வானரபுங்கவர்களிடமும் சொல்வாயாக. சர்வ ஸ்திரீகளும் சீதையைச் சூழ்ந்து அயோத்யைக்கு வர வேண்டும்.(27ஆ,28அ) மஹாபலவானே, அதேபோல, நீயும் சர்வ ஸ்திரீகள் சகிதம் துரிதமாக வருவாயாக. பிலவகாதிபா, சுக்ரீவா, நாம் புறப்படுவோம்" {என்றான் ராமன்}.(28ஆ,29அ)
அமிததேஜஸ்வியும் {அளவில்லா ஆற்றல் கொண்டவனான} ராமன், சுக்ரீவனிடம் இவ்வாறு சொன்னான்.{29ஆ} வானராதிபனான அந்த ஸ்ரீமான், அவர்கள் {வானரர்கள்} அனைவராலும் சூழப்பட்டவனாக சீக்கிரம் அந்தப்புரத்திற்குள் பிரவேசித்து, தாரையைப் பார்த்து {இவ்வாறு} கூறினான்:(29ஆ,30அ,ஆ) "பிரியே {அன்பே}, மைதிலிக்குப் பிரியமானதை நிறைவேற்ற விரும்பி, மஹாத்மாக்களான வானரர்களுடனும், அவர்களின் நாரீகளுடனும் சேர்ந்து நீ {அயோத்திக்கு வர} ராகவரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறாய்.(31) நீ துரிதப்படுவாயாக. வானர யோசிதைகளை அழைத்துக் கொண்டு அயோத்யைக்குச் செல்வோம். சர்வ தசரதஸ்திரீகளையும் தரிசிப்போம்" {என்றான் சுக்ரீவன்}.(32)
சர்வாங்கசோபனையான {அங்கங்கள் அனைத்தும் அழகாகக் கொண்ட} தாரை, சுக்ரீவனின் சொற்களைக் கேட்டு, வானரர்களின் சர்வ ஸ்திரீகளையும் அழைத்து {பின்வருமாறு} கூறினாள்:(33) "சுக்ரீவராலும், சர்வ வானரர்களாலும் அனுமதிக்கபட்டவர்களாகச் செல்வோம். அயோத்யா தரிசனம் எனக்கும் பிரிய காரியமே.(34) பௌர ஜானபதர்கள் சகிதராக {அயோத்தி நகரவாசிகள், கிராமவாசிகள் ஆகியோருடன் சேர்ந்து} ராமரின் பிரவேசம், தசரதரின் ஸ்திரீகளுடைய விபூதி {மகிமை} ஆகிய அனைத்தையும் காண்போம்" {என்றாள் தாரை}.(35)
தாரையால் அனுமதிக்கப்பட்ட சர்வ வானரயோசிதைகளும் விதிப்பூர்வமான சடங்குகளுடன் அலங்கரித்து, பிரதக்ஷிணம் செய்து,{36} சீதையை தரிசிக்கும் ஆவலுடன் அந்த விமானத்தில் ஏறினர்[6].(36,37அ) அவர்களுடன் சீக்கிரமாக விமானம் எழுவதைக் கண்ட ராகவன், ரிச்யமூகத்தின் சமீபத்தில் வைதேஹியிடம் மீண்டும் {பின்வருமாறு} கூறினான்:(37ஆ,38அ) "சீதே, மின்னலுடன் கூடிய மேகத்தைப் போல காஞ்சனத் தாதுக்களுடன் கூடிய சிறந்த கிரியான ரிச்யமூகம் இதோ காணப்படுகிறது.(38ஆ,39அ) சீதே, இங்கே வானரேந்திரனான சுக்ரீவனை நான் சந்தித்தேன், வாலி வத அர்த்தத்திற்கான {வாலியைக் கொல்வதற்கான} உறுதியும் என்னால் அளிக்கப்பட்டது.(39ஆ,40அ) உன்னைப் பிரிந்த துக்கத்தில் நான் எங்கே புலம்பிக் கொண்டிருந்தேனோ, அந்த சித்திரக்கானகங்களுடன் கூடிய பம்பா நளினி {தாமரைகள் நிறைந்த பம்பை ஆறு} இதோ காணப்படுகிறது.(40ஆ,41அ) இதன் தீரத்தில்தான் {கரையில்தான்} என்னால் தர்மசாரிணியான சபரி காணப்பட்டாள். ஒரு யோஜனை நீளும் கைகளுடன் கூடிய கபந்தன் இங்கே என்னால் கொல்லப்பட்டான்.(41ஆ,42அ)
[6] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வானரபார்யைகளை அழைப்பதற்கும் அலங்காரஞ் செய்து கொண்டு வந்து விமானமேறுவதற்கும் கிஷ்கிந்தையில் ஒரு நாள் பிடித்தெனக் கூறுவர். மற்றும் வானஸ்த்ரீகள் "க்ருத்வாசாபி ப்ரதக்ஷிணம்" என்று ப்ரதக்ஷிணஞ் செய்ததாகச் சொல்லியிருப்பினும் அது மிகுதியும் அகன்றதாகையால் அங்ஙனம் சீக்கிரத்தில் அதை பிரதக்ஷிணம் பண்ணமுடியாதாகையால் ப்ரதக்ஷிணமாகச் சென்று அதில் ஏறிக் கொண்டார்கள் என்று கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
சீதே, ஜனஸ்தானத்தின் ஸ்ரீமான் வனஸ்பதி {ஆலமரம்} இதோ காணப்படுகிறது.{42ஆ} விலாசினி {விளையாட்டுப் பெண்ணே}, இங்கே உனக்காக மஹாதேஜஸ்வியும், பலவானும், பக்ஷிகளில் சிறந்தவருமான ஜடாயு ராவணனால் கொல்லப்பட்டார்.(42ஆ,43அ,ஆ) நேராகச் செல்லும் பாணங்களால் எங்கே என்னால் கரன் கொல்லப்பட்டானோ, தூஷணனும், மஹாவீரியனான திரிசிரஸும் வீழ்த்தப்பட்டனரோ,{44} அங்கே, வரவர்ணினி {சிறந்த நிறம் கொண்டவளே, ஐந்து ஆலமரங்களைக் கொண்டதால் பஞ்சவடி என்று அழைக்கப்படும்} நம்முடைய அந்த ஆசிரமபதம் இருக்கிறது. சுபதரிசனம் கொண்டவளே, சித்திரமாகக் காணப்படும் அந்த பர்ணசாலையே {ஓலைக்குடிலே},{45} ராக்ஷசேந்திரன் ராவணனால் நீ பலவந்தமாக அபகரிக்கப்பட்ட இடமாகும்.(44-46அ) சுபமானதும் {மங்கலமானதும்}, ரம்மியமானதும், தெளிந்த நீரைக் கொண்டதுமான கோதாவரியும், கதலி தோப்புகளுடன் கூடிய {அகத்தியரின்} ஆசிரமமும் இதோ காணப்படுகின்றன.(46ஆ,47அ) மஹாத்மா சதீக்ஷ்ணரின் ஒளிரும் ஆசிரமம் இதோ. எங்கே சஹஸ்ராக்ஷனான புரந்தரன் {ஆயிரம் கண்களைக் கொண்டவனும், பகை நகரங்களை அழிப்பவனுமான இந்திரன்} வந்தானோ அந்த மஹான் சரபரங்கரின் ஆசிரமம் இதோ காணப்படுகிறது.(47ஆ,48அ,ஆ) தேவி, மெல்லிடையாளே, எங்கே சூரியனுக்கும், வைஷ்வானரனுக்கு {அக்னிக்கும்} ஒப்பான குலபதி அத்ரி இருந்தாரோ, அங்கே இதோ இந்த தாபசர்கள் {தபஸ்விகள்} காணப்படுகிறார்கள்.(49) இந்த தேசத்தில் மஹாகாயனான {பேருடல் படைத்த} விராதன் என்னால் கொல்லப்பட்டான். சீதே, இங்கே தர்மசாரிணியான தாபசியை {அனுசூயையை} நீ கண்டாய்.(50)
அழகிய உடல் படைதவளே, இதோ சைலேந்திரமான சித்திரகூடம் பிரகாசிக்கிறது. கைகேயி புத்ரன் {பரதன்} என்னை சமாதானப்படுத்த இங்கேதான் வந்தான்.(51) மைதிலி, இதோ சித்திரக் கானகங்களுடன் கூடிய ரம்மியமான யமுனை தூரத்தில் காணப்படுகிறது. இதோ ஸ்ரீமான் பரத்வாஜாஸ்ரமமும் காணப்படுகிறது.(52) நானாவித துவிஜ கணங்களாலும் {பறவைக் கூட்டங்களாலும்}, முற்றும் மலர்ந்த மரங்களாலும் நிறைந்ததும், திரிபத கதியில் {மூவழிகளில்} செல்வதுமான புண்ணிய கங்காநதி இதோ காணப்படுகிறது.(53) எங்கே என் சகா குகன் இருக்கிறானோ, அந்த சிருங்கபேரபுரம் இதோ காணப்படுகிறது. சீதே, யூபஸ்தம்பங்களை மாலையாக {யூபஸ்தம்பங்களின் வரிசைகளைக்} கொண்டு இதோ காணப்படும் ஸரயு,{54} நானாவித மரக்கூட்டங்களால் நிறைந்ததும், நன்கு புஷ்பித்த சோலைகள் சூழப்பெற்றதுமாக இருக்கிறது.(54,55அ) சீதே, என் பிதாவின் ராஜதானி {தலைநகரான அயோத்தி} இதோ காணப்படுகிறது. வைதேஹி, திரும்பி வந்தவளான நீ அயோத்யைக்கு வணக்கத்தைச் செலுத்துவாயாக" {என்றான் ராமன்}.(55ஆ,56அ)
அப்போது அந்த வானரர்கள் அனைவரும், விபீஷணனுடன் கூடிய ராக்ஷசர்களும் மகிழ்ச்சியடைந்தனர். பிறகு, அவர்கள் குதித்தெழுந்து அந்தப் புரீயைக் கண்டனர்.(56ஆ,57அ) அப்போது ராக்ஷசர்களும், பிலவங்கமர்களும், விசாலமான சாளரங்களுடன் கூடிய வெண்மாளிகைகளின் வரிசைகளாலும், கஜவாஜிகளாலும் {யானைகளாலும், குதிரைகளாலும்} நிறைந்த மஹேந்திரனின் புரீயான அமராவதியைப் போன்ற அந்த {அயோத்யா} புரீயை கண்டனர்.(57ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 123ல் உள்ள சுலோகங்கள்: 57
| Previous | | Sanskrit | | English | | Next |

