Saturday 24 August 2024

நள சேது | யுத்த காண்டம் சர்க்கம் - 022 (87)

The bridge constructed by Nala | Yuddha-Kanda-Sarga-022 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் முன் வெளிப்பட்ட சமுத்திரன்; நளனால் கட்டப்பட்ட பாலத்தைத் தாங்கியது; இலக்ஷ்மணனுடனும், படையுடனும் கூடியவனாக ராமன் சமுத்திரத்தைக் கடந்தது...

Rama and Vanara army crossing the ocean

பிறகு ரகுசிரேஷ்டன் {ரகு குலத்தில் சிறந்தவனான ராமன்}, சாகரத்திடம் {பின்வரும்} கடுஞ்சொற்களைக் கூறினான், "மஹார்ணவா {பெருங்கடலே}, இன்று நான் உன்னை பாதாள லோகத்திற்குள் செல்லும்படி வற்றச் செய்யப்போகிறேன்.(1) சாகரா, என் சரங்களால் உன் நீர் வற்றிப் போகும் போது, என்னால் அழிவடையும் உயிரினங்களால் பெரும் மணற்பரப்பு உண்டாகப் போகிறது.(2) சாகரா, என் கார்முகத்திலிருந்து {வில்லில் இருந்து} ஏவப்படும் சர மழையால் பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்} பாத நடையாகவே மறுகரையை அடையப் போகிறார்கள்.(3) தானவாலயா {தானவர்களின் வசிப்பிடமாகத் திகழ்பவனே}, என் பௌருஷத்தையோ {ஆண்மையையோ}, விக்ரமத்தையோ {ஆற்றலையோ} நீ அறிந்தாயில்லை. எவ்வளவு சிந்தித்தாலும் என்னால் விளையப் போகும் சந்தாபத்தை {வேதனையை} நீ அறியப்போகிறதுமில்லை" {என்றான் ராமன்}.(4)

அந்த மஹாபலவான், பிரம்ம தண்டத்திற்கு ஒப்பான சரத்தை பிரம்மாஸ்திரத்தால் ஈர்த்து, சிறந்த தனுசில் தொடுத்து இழுத்தான்.(5) இராகவன், தனுசில் நாணேற்றி இழுத்தபோது, வானமும், பூமியும், பர்வதங்களும் பிளந்துவிட்டத்தைப் போல அதிர்ந்தன.(6) உலகமெங்கும் இருள் மூடியது. திசைகள் ஏதும் புலப்படாதிருந்தன. பொய்கைகளும், ஆறுகளும் அப்போது கலக்கமடைந்தன.(7) சந்திர பாஸ்கரர்கள் {சந்திரசூரியர்கள்}, நக்ஷத்திரங்களுடன் சேர்ந்து வக்கிரமாகத் திரிந்தனர். பாஸ்கரனின் {சூரியனின்} கதிர்களால் ஒளிராமல், இருளால் மூடப்பட்டிருந்த{8} ஆகாசமும் உல்கங்களால் {எரிகொள்ளிகளால்} பிரகாசிப்பதைப் போலிருந்தது. அந்தரீக்ஷத்திலிருந்து {வானத்திலிருந்து} இடிகளும் ஒப்பற்ற ஒலிகளுடன் முழங்கிக் கொண்டிருந்தன.(8,9) 

திவ்ய மாருத {தெய்வீகக் காற்றின்} வரிசைகள், பெரும் வடிவிலான மேகங்களை வீசிவிட்டு, மீண்டும் மீண்டும் விருக்ஷங்களை முறித்துக் கொண்டிருந்தன.(10) சைல உச்சிகளைச் சிதறடித்து, சிகரங்களையும் பங்கம் செய்தன. {காற்றின் வரிசைகள்} மஹாவேகத்துடன் வானத்தில் மோதிக் கொண்டு,{11} மின்னலின் பெரும் ஸ்வனத்துடன் கூடிய அக்னியை வெளிப்படுத்தின.(11,12அ) எந்த பூதங்கள் {உயிரினங்கள்} புலப்பட்டனவோ, அவை அசனிக்கு சமமாக {இடிக்கு ஒப்பாக} முழங்கின. {12ஆ} புலப்படாத பூதங்களும் பயங்கர ஸ்வனத்தை வெளியிட்டன. குளிர்ந்திருந்தாலும், சில பூதங்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிப்பட்டன.{13} அவை ஒன்றுகூடியவையாக இருந்தாலும், பெரும் துன்பத்துடன் பயத்தால் நகராதிருந்தன.(12ஆ-14அ) பிறகு, நீரலைகளுடனும், பூதங்களுடனும், நாகங்களுடனும், ரக்ஷசர்களுடனும் கூடிய{14ஆ} மஹோததி {பெருங்கடல்}, திடீரென பயங்கர வேகத்தைப் பெற்றது. அதுவரை இல்லாத வேகத்துடன் பொங்கி ஒரு யோஜனை அளவுக்கு மறு எல்லையைக் கடந்தது.(14ஆ,15)

Sagara pleads Rama

இராகவனும், பகைவரை அழிப்பவனுமான ராமன், வெள்ளப்பெருக்குடன் எல்லையைக் கடக்கும் அந்த நதநதீபதியிடம் {பெருங்கடல் மேல் தாக்குதல் தொடுக்காமல்} வரம்பைக் கடக்காதிருந்தான்.(16) அப்போது, மஹாமேருவின் மேல் உதிக்கும் சூரியனைப் போல சமுத்திரத்தின் மத்தியில் சாகரன் தானே உதித்தெழுந்தான்.(17) வைடூரியத்தைப் போன்ற பிரகாசத்துடன், ஜம்பூநவிபூஷணனாக {தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவனாக}, ஒளிரும் முகங்களைக் கொண்ட பன்னகங்களுடன் {பாம்புகளுடன்} சமுத்திரன் தோன்றினான்.(18) சிவப்பு நிறத்தாலான ஆடைகள் உடுத்தியவனும், பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், புஷ்பமயமான சிரசுடன் கூடியவனும், மின்னும் திவ்ய மாலைகளைத் தரித்தவனும்,{19} ஜாதரூபமயமாக {தங்கமயமாக} ஒளிரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன்னுள் கொண்ட ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனும்,{20} தாதுக்களால் நிறைந்த ஹிமய சைலத்தைப் {இமய மலையைப்} போன்றவனும், மார்பின் மத்தியில் வெண்மையான ஒளியைப் பரப்பும் முத்தாரம் தரித்தவனும்,{21} அதன் அருகில் {விஷ்ணுவின் மரகத மணியான} கௌஸ்துபத்திற்கு ஒப்பானதும், அகலமானதுமான ஆரத்தைத் தரித்தவனும், அருகிலேயே பொங்கி, மேக வரிசைகளைத் தொடும் அலைகளுடன் கூடியவனும்,{22} சொந்தரூபத்துடன் கூடிய தேவதைகளால் சூழப்பட்டவனும், கங்கை, சிந்து ஆகியவற்றைப் பிரதானமாகக் கொண்ட நானாவித நதிகளின்  ஈஷ்வரனும்,{23} வீரியவானும், கூப்பிய கைகளுடன் கூடியவனுமான சாகரன் {பெருங்கடலானவன்}, சரபாணியான ராகவனை {கையில் அம்புகளுடன் கூடிய ராமனை} நெருங்கி, முதலில் {ராமா என்று} அழைத்தவாறே, {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(19-24)

{சாகரன்}, "சௌம்யா, ராகவனே, பிருத்வி {நிலம்}, வாயு {காற்று}, ஆகாசம், நீர், நெருப்பு ஆகியவை {ஆகிய பஞ்சபூதங்களும்} தங்கள் சாஸ்வதமான மார்க்கத்தில் ஸ்வபாவத்தை ஆசரித்து நிலைத்திருப்பவையாகும் {தங்கள் நிலையான வழியில் தங்கள் இயல்பிலேயே நிலைத்திருப்பவையாகும்}.(25) நான் அடியற்றவனும் {ஆழம் நிறைந்தவனும்}, தாண்டிச்செல்லப்பட முடியாதவனுமாவேன். அத்தகையவனான நான், ஆழமற்றவனானால், எனது ஸ்வபாவம் விகாரமாகும் {இயல்பு மீறப்பட்டதாகும்}. இதை நான் உனக்குச் சொல்கிறேன்.(26) பார்த்திவாத்மஜா {ராஜகுமாரா}, விஷமிக்க உயிரினங்கள் நிறைந்த நீரை, காமத்தாலோ, லோபத்தாலோ {ஆசையாலோ, பேராசையாலோ}, பயத்தாலோ, ராகத்தாலோ {பற்றினாலோ} எவ்வகையாலும் என்னால் ஸ்தம்பிக்கச் செய்ய {திடப்பொருளாக்க} முடியாது.(27) ஹரிக்கள் {குரங்குகள்} கடக்கும் வகையிலும், அதைத் தாங்கிக் கொள்ளும் வகையிலுமான ஸ்தலத்தை நான் ஏற்பாடு செய்வேன். சேனை கடக்கும் வரை விஷங்கொண்ட உயிரினங்கள் பீடிக்காது. இராமா, எவ்வகையில் நீ செல்ல முடியுமோ, அப்படியே நான் செயல்படுவேன்" {என்றான் சாகரன்}.(28,29அ)

அப்போது ராமன், அவனிடம் {பின்வருமாறு} கூறினான், "வருணாலயா {வருணனின் வசிப்பிடமாகத் திகழ்பவனே}, நான் சொல்வதைக் கேட்பாயாக. அமோகமான {வீண்போகாததான} இந்த மஹாபாணம் எந்த தேசத்தில் விடப்பட {எந்த இடத்தில் ஏவப்பட} வேண்டும்" {என்று கேட்டான் ராமன்}(29ஆ,30அ)

Map showing Marwar Bikaner Region of Rajastan

மஹாதேஜஸ்ஸுடன் கூடிய மஹோததி {பெருங்கடலானவன்}, ராமனின் வசனத்தைக் கேட்டும், அவனது மஹா சரத்தைக் கண்டும், ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்.(30ஆ,31அ) "எனக்கு வடக்கில் கொஞ்சம் அவகாசம் {ஓரிடம்} இருக்கிறது. துருமகுல்யம் என்ற அந்த புண்ணியத்தலம் உலகத்தில் உன்னைப் போலவே புகழ்பெற்றதாகும்.(31ஆ,32அ) உக்கிர தரிசனம் கொண்டவர்களும், உக்கிர கர்மம் செய்பவர்களும், பாபிகளுமான ஆபீரர் முதலிய தஸ்யவர்கள் பலர் {கொள்ளையர் / தேவர்களின் பகைவர் / என் பகைவர் பலர்} அங்கே என் நீரைப் பருகி வருகிறார்கள்[1].(32ஆ,33அ) இராமா, பாபகர்மங்களைச் செய்பவர்களான அந்தப் பாபிகளின் அந்த ஸ்பரிசனத்தை {தீண்டலை} என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உத்தம சரம் அந்த தேசத்தில் அமோகமானதாகட்டும் {அவ்விடத்தில் வீண்போகாததாகச் செய்யப்படட்டும்}" {என்றான் சாகரன்}.(33ஆ,34அ)

[1] தர்மாலயப் பதிப்பில், "அவ்விடத்தில் பலர் கொடிய தோற்றத்தையும், தொழில்களையுமுடையவர்களான பாபிகள் ஆபீரர் என்பவர்களைத் தலைமையாய்க் கொண்டவர்களாய் எதற்குமஞ்சாது யாவர்க்கும் தீங்கு புரிபவர்களாய் எனது ஜலத்தைக் குடிக்கிறார்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்குச் செம்படவர் முதலிய பாபிஷ்டர்களான என் சத்ருக்கள் பலர் பார்க்கப் பயங்கரமான உருவமுடையவரும், பயங்கரமான காரியங்களைச் செய்பவருமாகி என் ஜலங்களைப் பானஞ்செய்து கொண்டிருக்கிறார்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "ஆபீரம் முதலிய கீழான கலப்பு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கே ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் மகாபாவிகள்; தோற்றத்திலும் செயலிலும் கொடூரமானவர்கள்; என் எதிரிகள்; என் தண்ணீரைக் குடிக்கிறார்கள்" என்றிருக்கிறது.

அந்த மஹாத்மா {ராமன்}, சாகரனின் அந்த வசனத்தைக் கேட்டும், சாகர தரிசனம் பெற்றும் {சாகரனைக் கண்டும்} ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த பரம சரத்தை ஏவினான்.(34ஆ,35அ) வஜ்ர அசனியைப் போல் பிரகாசித்த {இடி மின்னலைப் போல் ஒளிர்ந்த} அந்தச் சரம் எங்கே விழுந்ததோ, அது {அந்த இடம்} பிருத்வியில் மருகாந்தாரம் என்ற பெயரில் புகழடைந்தது[2].(35ஆ,36அ) அப்போது, அங்கே சல்லியத்தால் {அந்தக் கணையால்} பீடிக்கப்பட்ட வசுதை {பூமி} அலறியது. இரசாதலத்தின் நீரானது, பாணமுகத்தில் {கணை முனையால் உண்டான பிளவில்} பொங்கியது.(36ஆ,37அ) பிறகு அது விரண கூபம் {விரணக் கிணறு} என்ற பெயரில் அறியப்பட்டது. அதில் சதா பொங்கிய நீர், சமுத்திரத்தைப் போலக் காட்சியளித்தது.(37ஆ,38அ) அங்கே பாணத்தால் உண்டான பிளவுகளில் பயங்கர சப்தம் உண்டானது. அவற்றில் இருந்த நீர் வற்றியது.(38ஆ,39அ) அது மருகாந்தாரம் என்று மூவுலகிலும் புகழ்பெற்றது.{39ஆ} தசரதாத்மஜனும், வித்வானும், அமரவிக்ரமனுமான ராமன் {தசரதனின் மகனும், கல்வியில் தேர்ந்தவனும், தேவர்களைப் போன்ற பராக்கிரமம் கொண்டவனுமான ராமன்}, அந்தப் பிளவுகளை வற்றச் செய்தான். அதனால் அதற்கு {அவ்விடத்திற்கு} வரத்தையும் தத்தம் செய்தான்.(39ஆ,40) பசுக்களுக்கான நன்மை விளைவிப்பது; அற்ப ரோகம் {குறைந்த பிணி / நோய்} கொண்டது; பழம், கிழங்கு, ரசம் {தேன்} ஆகியவை நிறைந்தது; ஏராளமான பாலும், நெய்யும் கொண்டது; சுகந்தமான, விதவிதமான ஔஷதிகளுக்கு {மூலிகைகளுக்குத்} தகுந்தது{41} என்ற இந்த குணங்கள் அனைத்துடன் கூடிய மங்கலத்தையும், புனிதத்தையும் ராமனின் வரதானத்தால் மரு அடைந்தது.(41,42)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மரு - (இந்தியாவில்) ராஜஸ்தானில் உள்ள மால்வார்" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், அடைப்புக்குறிக்குள், "இது ராஜஸ்தானில் உள்ள மார்வார், பிகானேர் பகுதி" என்றிருக்கிறது. 

அந்தப் பிளவுகள் தகித்துக் கொண்டிருந்தபோது, சரிதாம்பதியான {நதிகளின் தலைவனான} சமுத்திரன், சர்வசாஸ்திரஜ்ஞனான {சாத்திரங்கள் அனைத்தையும் அறிந்தவனான} ராகவனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(43) "சௌம்யா, நளன் என்ற பெயரைக் கொண்ட இந்த ஸ்ரீமான், விஷ்வகர்மனின் தனயனாவான் {மகனாவான்}. பிதா தந்த வரத்தால் அந்த விஷ்வகர்மனுக்கே ஒப்பானவனாக இருக்கிறான்.(44) மஹா உற்சாகம் கொண்டவனான இந்த வானரன், என்னில் சேதுவை உண்டாக்கட்டும் {பாலத்தைக் கட்டட்டும்}[3]. நான் அதைத் தாங்குவேன். இவ்வகையில் இவன் தனது பிதாவைப் போன்றவனாவான்[4]" {என்றான் சமுத்திரன்}.(45)

[3] வால்மீகியில் நளன் சேதுவைக் கட்டட்டும் என்று சாகரன் சொல்வதாக வருகிறது. கம்பராமாயணத்தில் சுக்ரீவன் நளனைக் கேட்டுக் கொள்வதாக வருகிறது.

[4] நரசிம்மாசாரியர் பதிப்பில், "நல்லியற்கையுடையவனே, இந்த நலனென்பவன் விஷ்வகர்மாவின் புதல்வன்; இவனுடைய தந்தை, 'என்னைப் போன்ற குமாரன் உனக்குப் பிறப்பான்' என்று இவனது தாய்க்கு வரங்கொடுத்தமையால் பிறந்தவன். ஸ்ரீமானாகிய இவன் சில்ப வித்யைகளில் விஷ்வகர்மாவுக்கு நிகரானவன். இவ்வானரன் மிகுந்த உத்ஸாஹத்துடன் என்மீது ஸேதுவை நிர்மிப்பானாக. அந்த ஸேது முழுகாதிருக்கும்படி நான் தாங்கிக் கொள்கிறேன். இவன் தந்தையைப் போல் விசித்ர ஸாமர்த்யமுடையவன்" என்றனன்" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லிவிட்டு, உததி {கடலானவன்} மறைந்து போனான். அப்போது, வானரசிரேஷ்டனான நளன், எழுந்து, மஹாபலவானான ராமனிடம் இந்த வாக்கியத்தைக் கூறினான்:(46) "என் பிதாவின் சாமர்த்தியத்தை ஆசரித்து, விஸ்தீரணமான வருணாலயத்தில் ஸேதுவைச் செய்வேன் {என் தந்தையான விஷ்வகர்மனின் வல்லமையைப் பின்பற்றி, பெருங்கடலில் பாலத்தைக் கட்டுவேன்}. மஹோததி {பெருங்கடலானவன்} உள்ளதை உள்ளபடியே சொன்னான்.(47)  பயங்கர மஹோததியான {பெருங்கடலான} இந்த சாகரன், தண்ட {தண்டனைக்கு உட்படுவோமே என்ற} பயத்தாலும், சேது கர்மத்தைக் காண விரும்பியும் ராகவருக்கு வழி கொடுத்திருக்கிறான்.(48) மந்தரத்தில் {மந்தர மலையில்} விஷ்வகர்மர், "தேவி, எனக்கு நிகரான புத்திரன் உன்னில் உண்டாவான்" என்று சொல்லி என் மாதாவுக்கு {ஒரு} வரத்தை தத்தம் செய்தார்.(49) அவரது ஔரஸ புத்திரனான {விஷ்வ கர்மரின் அம்சமான} நான், அந்த விஷ்வகர்மருக்கு சமமானவன் ஆவேன். இந்த மஹோததி உள்ளதை உள்ளபடியே சொன்னதால், நான் நினைவூட்டப்பட்டவன் ஆனேன்.{50} கேட்கப்படாத வரை, என் குணங்களை நான் சொல்வதில்லை.(50,51அ) நான் வருணாலயத்தில் சேதுவைச் செய்யும் சமர்த்தனே {நான் பெருங்கடலில் பாலத்தைக் கட்ட வல்லவனே}. எனவே, வானரபுங்கவர்கள் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வந்து சேது பந்தனம் செய்ய வைக்கட்டும்" {என்றான் நளன்}.(51ஆ,52அ)

பிறகு, ராமனால் அனுப்பப்பட்ட ஹரியூதபர்கள், எங்கும் இருந்து, நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் மஹா அரண்யத்தை {பெருங்காட்டை} நோக்கி மகிழ்ச்சியுடன் தாவிச் சென்றனர்.(52ஆ,53அ) மலைக்கு ஒப்பானவர்களான அந்த சாகை மிருக கணரிஷபர்கள் {கிளையில் வாழும் விலங்குக் கூட்டத்தின் தலைவர்கள்} அங்கிருந்த மலைகளையும் {பாறைகளையும்} மரங்களையும் பெயர்த்துத் திரட்டி சாகரத்தை நோக்கி இழுத்துச் சென்றனர்.(53ஆ,54அ) அந்த வானரர்கள், சாலங்கள் {ஆச்சா மரங்கள் / மராமரங்கள்}, அஷ்வகர்ணங்கள், தவங்கள், வம்ஷங்கள் {மூங்கில்கள்},{54ஆ} குடஜங்கள் {வெட்பாலைகள்}, அர்ஜுனங்கள் {மருதங்கள்}, தாலங்கள் {பனைகள்}, திலகங்கள் {மஞ்சாடிகள்}, திமிசங்கள், பில்வங்கள் {வில்வங்கள்}, ஸப்தபர்ணங்கள் {ஏழிலைப் பாலைகள்}, புஷ்பித்த கர்ணிகாரங்கள் {மலர்கள் நிறைந்த கோங்குகள்},{55} சூதங்கள் {மா மரங்கள்}, அசோகங்கள் உள்ளிட்ட விருக்ஷங்களைக் கொண்டு சாகரத்தை நிறைத்தனர்.(54ஆ-56அ) ஹரிசத்தமர்களான {குரங்குகளில் மேன்மையான} வானரர்கள், இந்திரகேதுவுக்கு {இந்திரனின் கொடிக்கம்பத்திற்கு} ஒப்பான மரங்களை, வேர்களுடனும், வேர்கள் இல்லாமலும் பிடுங்கி வந்து {கடலுக்குள்} வீசி எறிந்தனர்.(56ஆ,57அ) தாலங்கள் {பனை மரங்கள்}, தாடிம குல்மங்கள் {மாதுளைப் புதர்கள்}, நாரிகேள {தென்னை} மரங்கள், கரீரங்கள் {தான்றிகள்}, பகுலங்கள் {மகிழங்கள்}, நிம்பங்கள் {வேப்ப மரங்கள்} ஆகிய அனைத்தையும் அங்கேயும் இங்கேயும் இருந்து கொண்டு வந்து போட்டனர்.(57ஆ,58அ) பேருடல் படைத்தவர்களும், ஹஸ்தியை {யானையைப்} போன்ற மஹாபலவான்களும், பாறைகளையும், பர்வதங்களையும் பெயர்த்தெடுத்து யந்திரங்கள் மூலம் கொண்டு வந்தனர்.(58ஆ,59அ) அசலங்களை {மலைகளைக்} கொண்டு வந்து போட்ட உடனேயே பொங்கிய ஜலம், ஆகாசத்தைத் தொட்டு விழுந்து சிதறியது.(59ஆ,60அ) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விழும் பாறைகளால் சமுத்திரம் கலக்கமடைந்தது. {பாலம் சமமாக இருப்பதற்காக} சிலர் நூறு யோஜனை நீளம் கொண்ட சூத்திரங்களைக் கட்டி இழுத்தனர்.(60ஆ,61அ) 

நளன், நதநதீபதியின் மத்தியில் மஹாசேதுவை செய்யத் தொடங்கினான்[5]. அப்போது, கோர கர்மங்களைச் செய்யக்கூடியவர்களான வானரர்களும் சேர்ந்து ஸேதுவைக் கட்டினார்கள்.(61ஆ,62அ) சிலர் தண்டங்களைப் பிடித்துக் கொண்டிருந்தனர். அதே போல, சிலர் பொருள்களைத் திரட்டி அடுக்கினர். ராமனின் ஆணைகளைப் பின்பற்றிய நூற்றுக்கணக்கான வானரர்கள், மேகங்களைப் போன்ற பர்வத உச்சிகளையும் {மலைச் சிகரங்களையும்}, நாணல்களையும், கட்டைகளையும் கொண்டு வந்தனர்.(62ஆ,63) வானரர்கள், புஷ்பித்த நுனிகளுடன் கூடிய கொடிகளைக் கொண்டு சேது பந்தனம் செய்தனர் {பாலத்திற்கு தேவையான பொருள்களை வைத்து இறுகக் கட்டினர்}. தானவர்களைப் போலத் தெரிந்த சிலர், கிரிகளுக்கு ஒப்பான பாறைகளையும், கிரிகளின் சிகரங்களையும் எடுத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயும் ஓடுபவர்களாகக் காணப்பட்டனர்.(64,65அ) அந்த மஹோததியில் {பெருங்கடலில்} பாறைகளை எறிந்தபோதும், அதேபோல சைலங்களை வீசியபோதும், கொந்தளிப்பான சப்தம் எழுந்தது.(65ஆ,66அ)

[5] மஞ்சினில் திகழ்தரும் மலையை மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணையில்
தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.

- கம்பராமாயணம் 6682ம் பாடல், யுத்த காண்டம், சேதுபந்தனப் படலம்

பொருள்: மேக மண்டலம் வரை உயர்ந்திருக்கும் மலைகளைப் பெரிய குரங்குகள் விரைந்து எடுத்து வந்து எறிய, வெண்ணையில் வாழ்ந்த சடையன் {திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல்} தன்னிடம் அடைக்கலம் நாடி வந்தவர்களைத் தாங்குவதைப் போல, நளன் தன் வித்தையால் தான் ஒருவனாகவே அவற்றை {அந்த மலைகளைத்} தாங்கினான்.

Rama and Vanara army crosses the ocean through the bridge constructed by Nala

மகிழ்ச்சியுடன் கூடியவர்களும், கஜங்களுக்கு ஒப்பானவர்களுமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்}, பிரதம {முதல்} நாளில் விரைவாக பதினான்கு யோஜனைகள் செய்தனர் {பாலத்தைக் கட்டினர்}.(66ஆ,67அ) அதே போலவே, பயங்கர உடல் கொண்டவர்களும், மஹாபலவான்களுமான பிலவகர்கள், இரண்டாம் நாளில் விரைவாக இருபது யோஜனைகள் செய்தனர் {பாலத்தைக் கட்டினர்}.(67ஆ,68அ) அப்படியே, பேருடல் படைத்தவர்கள், மூன்றாம் நாளில் விரைவாக இருபத்தோரு யோஜனைகள் செய்தனர்.(68ஆ,69அ) மேலும், அப்படியே, மஹாவேகத்துடன் கூடியவர்கள், நான்காம் நாளில் துரிதமாக இருபத்திரண்டு யோஜனைகள் செய்தனர்.(69ஆ,70அ) அதேபோலவே, காரியங்களை சீக்கிரமாகச் செய்யும் பிலவகர்கள், ஐந்தாமல் நாளில் இருபத்து மூன்று யோஜனைகள் செய்து சுவேலத்திற்கு {கடலின் அடுத்த எல்லை வரை / சுவேல மலை வரை} கடந்து சென்றனர்.(70ஆ,71அ) 

வானரர்களில் சிறந்தவனும், ஸ்ரீமானும், பலவானுமான அந்த விஷ்வகர்மாத்மஜன் {விஷ்வகர்மனின் மகனான நளன்}, தனது பிதா எப்படியோ {எப்படி செய்வானோ}, அப்படியே  சாகரத்தில் சேது பந்தனம் செய்தான்.(71ஆ,72அ) மகராலயமான சாகரத்தில் நளனால் செய்யப்பட்ட அந்த சேது {பாலம்}, அம்பரத்தின் ஸ்வாதீபதம் {வானத்தின் நட்சத்திர வீதியைப்}[6] போலவே சுபமானதாகவும், மகிமைமிக்கதாகவும் தெரிந்தது.(72ஆ,73அ) அப்போது கந்தர்வர்களும், தேவர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் அந்த அற்புதத்தைக் காண விரும்பி, ககனத்தில் {வானத்தில்} வந்து நின்றனர்.(73ஆ,74அ) தேவர்களும், கந்தர்வர்களும், பத்து யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் நீளமும் கொண்டதும், செய்வதற்கரியதுமான நளசேதுவைக் கண்டனர்.(74ஆ,75அ)

[6] தர்மாலயப் பதிப்பில், "நளனால் சுறாமீன்கள் வசிக்குமிடமாகிய சமுத்திரத்தில் கட்டப்பட்ட அந்த சேதுவானது ஆகாசத்தில் ஸ்வாதிநக்ஷத்திரம் செல்லும் வழி போலவே மகிமை பொருந்தியதாகவும், அழகுவாய்ந்ததாகவும் விளங்கிற்று" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு 'ஷு²ஷு²பே⁴ ஸுப⁴க³꞉ ஶ்ரீமான் ஸ்வாதீ பத² இவ அம்ப³ரே' என்பது மூலம். ஸ்வாதீபத மென்றால் சாயாபதம், அல்லது ஸூர்யாதிகள் ஆகாயத்தில் ஸஞ்சரிக்கும் மூன்று மார்க்கங்களில் மத்ய மார்க்கத்திலுள்ள ஸ்வாதி வீதி. 'தக்ஷிணம், உத்தரம், மத்யமம் என்று ஸூர்யாதிகள் ஸஞ்சரிக்கிற மூன்று மார்க்கங்கள்' என்றும், 'ஆர்ஷபி, மத்யை ஆஜகவி என்ற மூன்று வீதிகளும் மத்ய மார்க்கம்' என்றும், 'அவற்றில் ஸ்வாதீ நக்ஷத்ரம் மத்ய வீதி' என்றும் வாயுபுராணத்தில் கூறப்பட்டிருக்கின்றது" என்றிருக்கிறது.

பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்}, நீண்ட தாவல் தாவியும், சிறு தாவல் தாவியும் கர்ஜித்தனர். சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்}, சிந்தனைக்கு அப்பாற்பட்டதும் {நினைத்துப் பார்க்க முடியாததும்}, சாத்தியமற்றதும், அற்புதமானதும், ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்துவதுமான அந்த சேது பந்தனத்தை சாகரத்தில் கண்டன.(75ஆ,76) மஹௌஜசர்களும் {பெரும் வலிமைமிக்கவர்களும்}, ஆயிரக்கணக்கானவர்களும், கோடிக்கணக்கானவர்களுமான அந்த வானரர்கள், சாகரத்தில் சேது பந்தனம் செய்து மஹோததியின் {பெருங்கடலின்} மறுகரையை அடைந்தனர்.(77) விசாலமாகச் செய்யப்பட்டதும், மகிமைமிக்கதும், நல்ல அடித்தளம் கொண்டதும், {மேடு, பள்ளமில்லாமல்} சமாஹிதத்துடன் கூடியதுமான மஹாசேது, {கேசத்தில் உள்ள} வகிடு போல சாகரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(78)

அப்போது, கதாபாணியான {கையில் கதாயுதத்துடன் கூடிய} விபீஷணன், பகைவரைக் கொல்வதற்காக அமைச்சர்களுடன் சேர்ந்து சமுத்திரத்தின் அக்கரையில் நின்றான்.(79) பிறகு, சுக்ரீவன், சத்யபராக்கிரமனான ராமனிடம், "ஹனுமந்தன் மீது நீரும், அப்படியே, அங்கதன் மீது லக்ஷ்மணரும் ஏறிக் கொள்வீர்களாக.{80} வீரரே, மகராலயமான இந்த சாகரம் மிகப் பெரியது. இந்த வானரர்கள், வானத்தில் உங்கள் இருவரையும் தாங்கிச் செல்வார்கள் {நீங்கள் கடப்பதற்கு உதவி செய்வார்கள்}" {என்றான் சுக்ரீவன்}.(80,81)

இலக்ஷ்மணனுடனும், சுக்ரீவனுடனும் கூடியவனும், தர்மாத்மாவுமான ஸ்ரீமான் ராமன், கையில் தனுவுடன் {வில்லுடன்} அந்த சைனியத்திற்கு முன் சென்று கொண்டிருந்தான்[7].(82) பிலவங்கமர்கள் சிலர் {பாலத்தின்} மத்தியில் சென்றனர், வேறு சிலர் {பாலத்தின்} பக்கங்களில் சென்றனர். மேலும் சிலர் நீரில் குதித்தனர். இன்னும் சிலர் மார்க்கத்தில் சென்றனர்.{83} கொஞ்சம் பேர் வானத்தை அடைந்து ஸுபர்ணங்களை போல {பறவைகளைப் போலப் பறந்து} சென்றனர்.(83,84அ) கடந்து செல்லும் பயங்கர ஹரிவாஹினியின் {குரங்குப் படையின்} மஹத்தான கோஷத்தில், பயங்கரமாக எழும் சாகரத்தின் கோஷம் மறைந்து போனது.(84ஆ,85அ) நள சேது மூலம் {கடலைக்} கடந்த அந்த வானரர்களின் வாஹினியை, ஏராளமான பழங்களுடனும், கிழங்குகளுடனும், நீருடனும் கூடிய தீரத்தில் ராஜன் {கரையில் மன்னன் சுக்ரீவன்} முகாமிடச் செய்தான்.(85ஆ,86அ)

[7] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆகாய வழியாயப் போகும் ராமலக்ஷ்மணர்களோடு ஸுக்ரீவனும் போனானென்கையால், ஸுக்ரீவனும் ஆகாய வழியாய்ப் போனானென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

அற்புதமானதும், செய்வதற்கரியதுமான ராகவனின் கர்மத்தை {செயலைக்} கண்ட தேவர்களும், சித்தர்களும், சாரணர்களும், மஹாரிஷிகளும், உடனே ராமனை அணுகி, சுபஜலத்தால் தனித்தனியாக அபிஷேகம் செய்தனர்.(86ஆ,இ) "நரதேவா, சத்ருகளை வென்று, சாகரத்துடன் கூடிய மேதினியை சாஸ்வதமாக பாலிப்பாயாக {எப்போதும் ஆட்சி செய்வாயாக}" என்று நரதேவர்களால் மதிக்கப்படும் ராமனை அவர்கள் பூஜித்தனர்.(87)

யுத்த காண்டம் சர்க்கம் – 022ல் உள்ள சுலோகங்கள்: 87

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை