Set to depart | Yuddha-Kanda-Sarga-122 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் ஆணையின் பேரில் வானரர்கள் அனைவருக்கும் வெகுமதியளித்த விபீஷணன்; அனைவருடன் சேர்ந்து ராமனும், லக்ஷ்மணனும், சீதையும் அயோத்திக்குப் புறப்படுதல்...
விபீஷணன், "அந்தப் புஷ்பக விமானம், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கிறது" என்று அருகில் நின்று கொண்டிருந்த ராமனிடம் சொன்னான்.(1) கைகள் கூப்பிய வினீதனான {பணிவுடன் கூடிய} அந்த ராக்ஷசேஷ்வரன் {விபீஷணன்}, "{இன்னும்} நான் செய்ய வேண்டியதென்ன?" என்று ராகவனிடம் அவசரமாகக் கூறினான்.(2)
மஹாதேஜஸ்வியான ராமன், சிந்திந்துவிட்டு, அருகில் லக்ஷ்மணன் கேட்டுக் கொண்டிருக்கையில், சினேஹத்தை முன்னிட்டுக் கொண்டு இதைச் சொன்னான்:(3) "விபீஷணா, பெரும் யத்னங்களுடன் கூடிய கர்மங்களைச் செய்த இந்த வனேசரர்களை {காடுலாவிகளான குரங்குகளையும், கரடிகளையும்}, ரத்னங்களாலும், விதவிதமான அர்த்தங்களாலும் {பொருள்களாலும்} பூஜிப்பாயாக.(4) இராக்ஷசேஷ்வரா, புறமுதுகிடாமல், பிராண பயத்தைக் கைவிட்டு, மகிழ்ச்சியாகப் போரிட்ட இவர்களுடன் சேர்ந்தே {இவர்களின் துணையுடனேயே} உன்னால் லங்கை வெல்லப்பட்டது.(5) சர்வ வனௌகசர்களும் தங்கள் கர்மங்களை நிறைவேற்றி இருக்கின்றனர். இவர்களுக்கு தனத்தாலும், ரத்னங்களாலும் வெகுமதியளிப்பாயாக.(6) கிருதஜ்ஞதனான {செய்நன்றி மறக்காதவனான} உன்னால் எப்படிப்பட்ட ஆனந்த மனத்துடன் இவ்வாறு சம்மானிக்கப்படுவார்களோ {வெகுமதி அளிக்கப்படுகிறார்களோ}, அப்படிப்பட்ட நிறைவையே ஹரியூதபர்களும் அடைவார்கள்.(7) தியாகி, ஆதரிப்பவன், இரக்கமுள்ளவன், ஜிதேந்திரியன் {புலன்களை வென்றவன்} என்று {நினைத்து} உன்னிடம் அனைவரும் வருவார்கள். எனவே உனக்கு இதைச் சொல்கிறேன்.(8) நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா}, விரும்பத்தக்க குணங்கள் யாவும் இல்லாதவனும், போரில் அழிவை ஏற்படுத்தியவனுமான அந்த நிருபதியை {மன்னனை}, சேனை பெருங்கலக்கத்தில் விட்டுச் செல்லும்" {என்றான் ராமன்}.(9)
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த சர்வ வானரர்களுக்கும் ரத்தினங்கள், அர்த்தங்கள் {செல்வங்கள்} ஆகியவற்றை விநியோகித்து அவர்களைப் பூஜித்தான்.(10) அப்போது, அந்த ஹரியூதபர்கள் ரத்தினங்கள், அர்த்தங்கள் ஆகியவற்றால் பூஜிக்கப்படுவதை ராமன் கண்டான். பிறகு அந்த உத்தம விமானத்தில் ஏறினான்.(11) தனுஷ்மானும், விக்ராந்தனுமான பிராதா லக்ஷ்மணனுடன் {வில்லேந்தியவனும், வல்லமையுள்ளவனும்,, உடன்பிறந்தவனுமான லக்ஷ்மணனுடன் விமானத்தில் ஏறி}, புகழ்பெற்றவளும், லஜ்ஜையுடன் {நாணத்துடன்} கூடியவளுமான வைதேஹியை அங்கத்தில் {தன் மடியில்} ஏற்றிக் கொண்டான்.(12)
சர்வ வானரர்களையும், விபீஷணனையும், மஹாவீரியனான சுக்ரீவனையும் பூஜித்த அந்தக் காகுத்ஸ்தன், விமானத்தில் இருந்தபடியே {பின்வருமாறு} கூறினான்:(13) "வானரரிஷபர்களே {வானரர்களில் காளைகளே}, இந்த மித்ரகாரியம் {நண்பனின் காரியம்} உங்களால் நிறைவேறியது. என்னால் அனுமதிக்கப்படும் நீங்கள் அனைவரும் யதேஷ்டமாக {தாங்கள் விரும்பிய இடங்களுக்குச்} செல்வீராக.(14) சுக்ரீவா, சினேகத்துடன் கூடிய நண்பனால் ஹிதமான எந்தக் காரியங்கள் செய்யப்பட வேண்டுமோ, அந்த சர்வமும் அதர்மத்தில் அச்சம் கொண்ட உன்னால் செய்யப்பட்டன.{15} நீ உன் சைனியம் சூழ உடனே கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் செல்வாயாக.(15,16அ) விபீஷணா, என்னால் தத்தம் செய்யப்பட்ட உன் ராஜ்ஜியமான லங்கையில் வசித்திருப்பாயாக. இந்திரன் உள்ளிட்ட திவௌகசர்களும் {தேவலோகவாசிகளாலும்} கூட உன்னைத் தாக்க வல்லவரல்லர்.(16ஆ,17அ) என் பிதாவின் ராஜதானியான {தலைநகரான} அயோத்யைக்கு நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் விடைகொடுத்து, {நான் செல்ல} என்னை அனுமதிக்க விரும்புகிறேன்" {என்றான் ராமன்}.(17ஆ,18அ)
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஹரீந்திரர்களும் {குரங்குத் தலைவர்களும்}, அதேபோல ஹரயர்களும் {குரங்குகளும்}, ராக்ஷசன் விபீஷணனும் என அனைவரும் தங்கள் கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} சொன்னார்கள்:(18ஆ,19அ) "அயோத்யைக்குச் செல்ல நாங்கள் விரும்புகிறோம். எங்கள் அனைவரையும் உம்முடன் அழைத்துச் செல்வீராக. வனங்களிலும், உபவனங்களிலும் நாங்கள் மகிழ்ச்சியுடன் திரிவோம்.(19ஆ,20அ) நிருபசத்தமரே {மன்னர்களில் சிறந்தவரே}, உம்மை அபிஷேக அர்த்தராக {பட்டாபிஷேகம் செய்யப்பட்டவராகக்} கண்டு, கௌசல்யையை வணங்கிவிட்டு, விரைவில் எங்கள் கிருஹங்களுக்கு நாங்கள் திரும்புவோம்" {என்றனர்}.(20ஆ,21அ)
வானரர்களும், விபீஷணனும் இவ்வாறு சொன்னதும், தர்மாத்மாவான அந்த ராமன், வானரர்களிடமும், சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும் {பின்வருமாறு} கூறினான்:(21ஆ,22அ) "நட்புஜனங்களுடனும், உங்கள் அனைவருடனும் நான் {அயோத்தியா} புரீயை அடைந்தால், பிரீதியடைவேன். பிரியத்திலும் பிரியத்திற்குரியது {என்னால்} அடையப்படும்.(22ஆ,23அ) சுக்ரீவா, வானரர்கள் சஹிதனாக சீக்கிரம் விமானத்தில் ஏறுவாயாக. இராக்ஷசேந்திரா, விபீஷணா, அமைச்சர்களுடன் நீயும் ஏறுவாயாக" {என்றான் ராமன்}[1].(23ஆ,24அ)
[1] அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன்தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மைவனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்குஇனிதின் ஏறுமின் விமானம் என்று இராகவன் இசைத்தான்- கம்பராமாயணம் 10107ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: அப்படிப்பட்ட சேனையோடு {குரங்குப் படையோடு} அரசனை {சுக்ரீவனை}, அனிலன் தனையன் {வாயு மைந்தன் ஹனுமான்} முதலிய பெரும் படைத்தலைவர்களை, கட்டப்பட்ட நீண்ட வாரைக் கொண்ட கழல் அணிந்த இலங்கையர் மன்னனை {விபீஷணனை}, "இங்கு வந்து இனிமையாக விமானத்தில் ஏறி அமருங்கள்} என்று ராகவன் {ராமன்} சொன்னான்.
அப்போது, வானரர்கள் சகிதனான அந்த சுக்ரீவனும், அமைச்சர்களுடன் கூடிய விபீஷணனும் திவ்யமான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} பெரும் மகிழ்ச்சியுடன் ஏறினார்கள்.(24ஆ,25அ) அவர்கள் அனைவரும் ஏறியபோது, கௌபேரனின் பரமாசனம் {குபேரனின் உயர்ந்த இருக்கையான அந்தப் புஷ்பக விமானம்}, ராகவனின் அனுமதியுடன் ஆகாயத்தில் எழுந்தது.(25ஆ,26அ) ஹம்சத்துடன் {அன்னப்பறவையுடன்} கூடியதும், ககனத்தில் {வானத்தில்} பிரகாசிப்பதுமான அந்த விமானத்தில், நிறைவான மகிழ்ச்சியுடன் கூடிய ராமன், குபேரனைப் போல ஒளிர்ந்தான்.(26ஆ,27அ) மஹாபலவான்களான வானரர்கள், ரிக்ஷர்கள், ராக்ஷசர்கள் அனைவரும் அந்த திவ்யமான இடத்தில் வசதியாகவும், சுகமாகவும் அமர்ந்தனர்.(27ஆ,28)
யுத்த காண்டம் சர்க்கம் – 122ல் உள்ள சுலோகங்கள்: 28
| Previous | | Sanskrit | | English | | Next |

