Friday, 3 October 2025

நூறு சிரங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 107 (67)

Hundred heads | Yuddha-Kanda-Sarga-107 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் தொடர்ந்த போர்; இராவணனின் கொடிமரத்தை வெட்டிய ராமன்; வெட்டப்பட்டதும் மீண்டும் முளைத்த ராவணனின் தலை...

Ravana's head sprounting as when it was cut

பிறகு, இராம ராவணர்கள் இருவருக்குமிடையில் சர்வ லோகங்களுக்கும் பயத்தை உண்டாக்கும் குரூரமான மஹத்தான துவைரத யுத்தம் {இரண்டு தேர்களுடன் கூடிய போர்} அங்கே நடந்தது.(1) அப்போது ராக்ஷச சைனியமும், ஹரீக்களின் மஹத்தான பலமும் {குரங்குகளின் பெரும்படையும்}, தங்கள் ஆயுதங்களைப் பற்றிக் கொண்டு அசைவற்று நின்றன.(2) பிறகு, போரில் ஈடுபடும் பலம்வாய்ந்த நரராக்ஷசர்களான அவ்விருவரையும் கண்ட யாவரும் ஹிருதயம் கலங்கி பரம ஆச்சரியத்தை அடைந்தனர்.(3) கைகளில் நானாவித ஆயுதங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் அதைக் கண்டு ஆச்சரியமடைந்த புத்தியுடன் பரஸ்பரம் மோதாதிருந்தனர்.(4) இராவணனை ராக்ஷசர்களும், ராமனை வானரங்களும் என ஆச்சரியமடைந்த பார்வையுடன் கண்ட அந்த சைனியங்கள் சித்திரம் போல் தெரிந்தன.(5) 

இராகவராவணர்களான அவ்விருவரும், நிலையான கோபத்துடன் புத்தியை அமைத்துக் கொண்டு, அங்கே நிமித்தங்களைக் கண்டு அச்சமில்லாமல் யுத்தம் புரிந்தனர்.(6) ஜேதவ்யம் என்று காகுத்ஸ்தனும் {வெல்வோம் என்று நினைத்த ராமனும்}, மர்தவ்யம்  என்று  {மரணிப்போம் என்று நினைத்த} ராவணனும், அப்போது யுத்தத்தில் தங்கள் முழு வீரியத்தையும் வெளிப்படுத்தினர்.(7) பிறகு, வீரியவானான தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, கோபத்துடன் சரங்களைப் பொருத்தி, ராகவனின் ரதத்தில் நிலைக்கும் துவஜத்தை நோக்கி ஏவினான்.(8) அந்த சரங்கள், அந்தப் புரந்தரனுடைய ரதத்தின் துவஜத்தை அடையாமல் ரதசக்தியை தொட்டு தரணீதலத்தில் விழுந்தன.(9) 

அப்போது, வீரியவானான ராமனும் பெருங்குரோதத்துடன் தன் சாபத்தை {வில்லை} வளைத்து, செய்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் மனத்துடன் சென்றான்.(10) நெருப்பைப் போல் தன்னொளியால் ஒளிர்வதும், சகித்துக் கொள்ள முடியாததும், மஹா சர்ப்பத்தைப் போன்றதுமான கூரிய சரமொன்றை ராவணனின் துவஜத்தை நோக்கி ஏவினான்.(11) தேஜஸ்வியான ராமன், கேதுவை {கொடியை} நோக்கி சாயகத்தை ஏவினான். அந்த சரம், தசக்ரீவனின் துவஜத்தை அறுத்துவிட்டு மஹீயை {பூமியை} அடைந்தது[1].(12) அந்த ராவணனின் சியந்தனத்வஜம் வெட்டப்பட்டு பூமியில் விழுந்தது. வெட்டப்பட்ட துவஜத்தைக் கண்ட அந்த மஹாபலவான் ராவணன், பொறுத்துக் கொள்ள முடியாமல் சிரிப்பவனைப் போலக் குரோதத்தில் எரிந்து, ரோஷ வசம் அடைந்தவனாக சர வர்ஷத்தை வர்ஷித்தான் {கணை மழையைப் பொழிந்தான்}.(13,14)

[1] திசை உறு துகிலது செறி மழை சிதறும்
விசை உறு முகிழது விரி தரு சிரனோடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத்
தசை உறு கணைகொடு தரை உற விடலும்

- கம்பராமாயணம் 9789ம் பாடல், யுத்த காண்டம், ராவணன் வதைப் படலம்

பொருள்:  திசைகளில் பொருந்திய ஆடையைக் கொண்டதும், அடை மழை பொழிவதும், வேகம் மிக்க அரும்பு போன்ற உறுப்பினைக் கொண்டதும், விரிந்த தலையுடன் கூடியதும், இசைக் கருவியான வீணையினை அழகுறக் கொண்டிருப்பதுமான {ராவணனின்} கொடியை தசை {இறைச்சி} பொருந்திய தன் அம்பினால் {ராமன்} தரையில் அறுத்து வீழ்த்தினான்.

இராவணன் ஒளிரும் சரங்களால் ராமனின் துரகங்களைத் தாக்கினான். அந்த திவ்ய துரகங்கள் {தெய்வீகக் குதிரைகள்} தடுமாறவோ, கலவரமடையவோ இல்லை.{15} பத்மநாளங்களால் {தாமரைத் தண்டுகளால்} தாக்கப்பட்டதைப் போல அவை ஸ்வஸ்தமான ஹிருதயத்துடன் {ஆரோக்கியமான இதயத்துடன்} இருந்தன.(15,16அ) இராவணன், தடுமாற்றமடையாத அந்த வாஜிகளைக் கண்டபோது, பெரிதும் குரோதமடைந்து, சர வர்ஷத்தை {கணை மழையை} ஏவினான்.(16ஆ,17அ) கதைகளையும், பரிகங்களையும் {உழல்தடிகளையும்}, சக்கரங்கள், முசலங்கள் {உலக்கைகள்}, கிரிசிருங்கங்கள் {மலைச்சிகரங்கள்}, விருக்ஷங்கள் {மரங்கள்}, மேலும் சூலங்கள், பரசுகள்,(17ஆ,18அ) ஆகிய இவற்றை மாயையால் உண்டாக்கி சஸ்திர வர்ஷத்தை {ஆயுத மழையைப்} பொழிந்தான். பிறகு, முயற்சி செய்வதில் ஹிருதயம் களைக்காதவனான அவன், ஆயிரக்கணக்கான பாணங்களையும் ஏவினான்.(18ஆ,19அ) யுத்தத்தில், கொந்தளிப்பதும், அச்சத்தை உண்டாக்குவதும், பயங்கரமானதும், பயங்கர பிரதிஸ்வனத்துடன் கூடியதுமான அந்த மஹத்தான அநேக அஸ்திரமயமான மழை பொழிந்தது.(19ஆ,20அ)

இராகவனின் ரதத்தை விட்டுவிட்டு, அந்தரிக்ஷத்தை முற்றிலும் மறைக்கும் வண்ணம் அனைத்துப் பக்கங்களிலும் சாயகங்களால் வானர பலத்தை {கணைகளால் குரங்குப் படையைத்} தாக்கினான்.(20ஆ,21அ) தசக்ரீவன், கவனம் சிதறிய அந்தராத்மாவுடன் {கலக்கமடைந்த உள்ளத்துடன் அந்தக் கணைகளை} ஏவினான்.{21ஆ} இரணத்தில் விருப்பத்துடன் பெரும் முயற்சி செய்த அந்த ராவணனைக் கண்ட காகுத்ஸ்தன் {ராமன்}, சிரிப்பவனைப் போலக் கூரிய சரங்களைப் பொருத்தினான்.{22} பிறகு அவன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாணங்களை ஏவினான்.(21ஆ-23அ) அவற்றைக் கண்ட ராவணன், தன் சரங்களால் வானத்தை நிரந்தரமாக {முற்றிலும்} மறைத்தான்.{23ஆ} அப்போது அவ்விருவரும் பயன்படுத்திய சரவர்ஷத்தின் {கணை மழையின்} ஒளியால் ஒளிர்ந்த அம்பரம் {வானம்}, சரங்களால் கட்டப்பட்ட இரண்டாவது வானத்தைப் போலத் தெரிந்தது.(23ஆ,24அ,ஆ) எந்த பாணமும் {இலக்கை} அடையாமலோ, {இலக்கைத்} துளைக்காமலோ, பலனின்றியோ போகாமல் அன்யோன்யம் மோதிக் கொண்டு தரணீதலத்தில் விழுந்தன. போரில் இவ்வாறே ராமராவணர்கள் பாணங்களை ஏவினர்.(25,26அ) அவர்கள், தங்கள் கோரமான சரங்களை வலமாகவும், இடமாகவும் இடைவிடாமல் ஏவி மூச்சுவிடுவதற்கும் இடமில்லாததாக அம்பரத்தை {வானத்தைச்} செய்தபடியே யுத்தம் செய்தனர்.(26ஆ,27அ) இராமன், ராவணனின் ஹயங்களையும், ராவணன் ராமனின் ஹயங்களையும் தாக்கினர். பிறகு அவ்விருவரும் செயலுக்கு மறுசெயல் எனக் காரியமாற்றி அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(27ஆ,28அ) குரோதமடைந்த அவ்விருவரும் இவ்வாறே உத்தம யுத்தத்தைச் செய்தனர். ஒரு முஹூர்த்தம் ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் வகையில் யுத்தம் கொந்தளிப்பாக இருந்தது.(28ஆ,29அ) மஹாபலவான்களான ராவணனும், லக்ஷ்மணாக்ரஜனும் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமனும்} சமரில் கூரிய சரங்களைக் கொண்டு போரிட்டனர். இரகோத்தமனால் {ரகுக்களில் உத்தமனான ராமனால்}, தன் துவஜம் வீழ்த்தப்பட்டபோது, அந்த ராக்ஷசாதிபன் பெருங்குரோதம் அடைந்தான்[2].(29ஆ,இ)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் - கேஎம்கே மூர்த்தி பதிப்பில், இதற்குப் பிறகு 67ம் சுலோகம் வரை இந்த சர்க்கம் நீள்கிறது. ஏற்கனவே 88ம் சர்க்கத்தின் 2ம் அடிக்குறிப்பிலும், 102ம் சர்க்கத்தின் 3ம் அடிக்குறிப்பிலும் கண்டது போல, இந்தப் பதிப்பு, யுத்தகாண்டத்தில் மொத்தம் 128 சர்க்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இந்த 29ம் சுலோகத்துடன் இந்த சர்க்கம் நிறைவடைகிறது. அதேபோல, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகிய பதிப்புகளிலும், தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும், இது வரையுள்ள பகுதி 109ம் சர்க்கமாகவும், இதற்குப் பிறகு வரும் 30 முதல் 67 வரையுள்ள சுலோகங்கள் 110ம் சர்க்கமாகவும் வருகின்றன. இந்தப் பதிப்புகளில் யுத்தகாண்டம் மொத்தம் 131 சர்க்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. மற்றபடி உள்ளடக்கத்தில் இவற்றுக்குள் வேறுபாடுகள் பெரிதும் இல்லை. சர்க்கங்களின் எண்ணிக்கை மட்டுமே கூடுகிறது. யுத்தகாண்டத்தில் மொத்தம் 116 சர்க்கங்களையே கொண்ட செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பிலும் இந்த சர்க்கம் 95, 96 என இரண்டு சர்க்கங்களாகவே இருக்கிறது. இருப்பினும், இந்த 67 சுலோகங்களும் இராமன், இராவணனுக்கிடையிலான போரையே மையமாகக் கொண்டிருப்பதால் தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பே இங்கே பின்பற்றப்பட்டிருக்கிறது. வேறு பதிப்புகளை ஒப்பிட்டால், அங்கே இதற்கு மேல் வரப்போகிற சர்க்கங்களின் எண்ணிக்கையில் 3 சர்க்கங்கள் கூடுதலாக வரும்.

அப்போது சமரில் இவ்வாறு யுத்தம் செய்த ராமராவணர்களை சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} ஆச்சரியமடைந்த அந்தராத்மாவுடன் {உள்ளத்துடன்} கண்டன.(30) பரஸ்பரம் சீற்றத்துடன் தாக்கிக் கொண்ட அந்த சியந்தனோத்தமர்கள் {தேர்வீரர்களான ராமராவணர்கள்} இருவரும், பரஸ்பரம் எதிர்த்தனர்.(31) கோர ரூபத்தை ஏற்று, பரஸ்பரம் வதம் செய்யும் நோக்கத்துடன் மண்டலமாகவும், நேராகவும், குறுக்காகவும் சென்று, சூத சாமர்த்தியத்தில் {தேரோட்டும் திறனில்} பிறந்த பலவிதமான கதிகளை வெளிப்படுத்தினர்.(32,33அ) இராமன் ராவணனையும், ராவணன் ராகவனையும் தாக்கி, முன் பின் செல்லும் வேக கதியை எடுத்துக் காட்டினர்.(33ஆ,34அ) சரஜாலங்களை ஏவும் சியந்தனோத்தமங்கள், மழை பொழியும் மேகங்கள் இரண்டைப் போல சம்யுகமஹீயில் {போர்க்களத்தில்} திரிந்து கொண்டிருந்தன.(34ஆ,35அ) பிறகு, பரஸ்பரம் எதிர்த்து நின்ற அவை இரண்டும் மீண்டும் ரணத்தில் பலவிதமான கதிகளை வெளிப்படுத்தின.(35ஆ,36அ) அப்போது நின்று கொண்டிருந்த அந்த இரண்டு ரதங்களின் நுகங்கள், நுகத்தோடும், வாஜிகளின் முகம் முகத்தோடும், பதாகைகள், பதாகைகளோடும் மோதிக்கொண்டன.(36ஆ,37அ)

அப்போது ராமன், நான்கு கூரிய சரங்களைத் தன் தனுவில் இருந்து ஏவி, ஒளிரும் ராவணனின் நான்கு ஹயங்களையும் {குதிரைகளையும்} திருப்பி விரட்டினான்.(37ஆ,38அ) அந்த தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, ஹயங்கள் திரும்பியதால் குரோதவசம் அடைந்தவனாக, ராகவன் மீது கூறிய சரங்களை ஏவினான்.(38ஆ,39அ) பலவானான தசக்ரீவனால் கடுமையாகத் தாக்கப்பட்ட ராகவன், கலவரத்தையும் அடைந்தானில்லை; வருத்தத்தையும் அடைந்தானில்லை.(39ஆ,40அ) தசானனன் {ராவணன்}, வஜ்ரஹஸ்தனின் {வஜ்ரத்தைக் கையில் கொண்டவனான இந்திரனின்} சாரதியை நோக்கி வஜ்ரத்திற்கு சமமான ஸ்வனத்துடன் கூடிய பாணங்களை மீண்டும் ஏவினான்.(40ஆ,41அ) மஹாவேகத்துடன் கூடிய சரங்கள் மாதலியின் சரீரத்தில் பாய்ந்தாலும் மோஹத்தையோ, வேதனையையோ சூக்ஷ்ம அளவிலும் {சிறிதும்} உண்டாக்கவில்லை.(41ஆ,42அ) இராகவன், தன் மீது இதே போல நடந்த {தாக்குதலின்} போதல்லாமல், மாதலியின் மீது செருக்குடன் நடந்த அந்த தாக்குதலால் குரோதம் அடைந்து, தன் சரஜாலங்களால் ரிபுவை {கணைவலையால் பகைவனைத்} திரும்பச் செய்தான்.(42ஆ,43அ) வீரனான ராகவன், இருபது, முப்பது, அறுபது, நூறு, ஆயிரம் என சாயகங்களை ரிபுவினுடய சியந்தனத்தின் {கணைகளை பகைவனுடைய தேரின்} மீது ஏவினான்.(43ஆ,44அ) அப்போது ரதத்தில் குரோதத்துடன் இருந்த ராக்ஷசேஷ்வரன் ராவணனும், ரணத்தில் கதைகள், முசலங்களின் மழையால் ராமனைத் துன்புறுத்தினான்.(44ஆ,45அ) அவர்களால் மீண்டும் தொடங்கப்பட்ட யுத்தம், ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் வகையில் கொந்தளிப்பானது.{45ஆ} கதைகள், முசலங்கள், பரிகங்கள், புங்கங்களுடன் கூடிய சரங்கள் ஆகியவற்றால் சப்தசாகரங்களும் {ஏழு கடல்களும்} கலக்கமடைந்தன.(45ஆ,46அ,ஆ) 

சாகரங்கள் கலக்கமடைந்த போது, பாதாளவாசிகளான ஆயிரக்கணக்கான சர்வ தானவ, பன்னகர்களும் துயரடைந்தனர்.(47) சைல, வன, கானகங்களுடன் கூடிய மொத்த மேதினியும் நடுக்கமுற்றாள். பாஸ்கரனும் {சூரியனும்} பிரபையற்றவனானான். மாருதனும் {காற்றை} வீசாதிருந்தான்.(48) அப்போது, கந்தர்வர்கள், சித்தர்கள், பரமரிஷிகள் ஆகியோருடன் கூடிய தேவர்களும், சர்வ கின்னர, மஹா உரகர்களும் சிந்தனையில் ஆழ்ந்தனர் {கவலையடைந்தனர்}.(49) "கோக்களும் {பசுக்களும்}, பிராமணர்களும் நலமாக இருக்கட்டும். உலகங்கள் சாஸ்வதமாக {என்றென்றும்} நிலைத்திருக்கட்டும். இராகவன் {ராமன்} ராக்ஷசேஷ்வரனான ராவணனைப் போரில் ஜயங்கொள்ளட்டும் {வெல்லட்டும்}".{50} இவ்வாறு ரிஷிகணங்களுடன் கூடிய தேவர்கள் ஜபித்துவிட்டு, ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் வகையில் ராமராவணர்களுக்கு இடையில் நடந்த கோரமான யுத்தத்தைக் கண்டனர்.(50,51) கந்தர்வ, அப்சரஸ்களின் சங்கம் {கூட்டம்} ஒப்பற்ற யுத்தத்தைக் கண்டு, "ககனத்திற்கு ககனமே ஒப்பானது. சாகரத்திற்கு சாகரமே ஒப்பானது.{52} இராமராவணர்களுக்கிடையிலான யுத்தம் ராமராவணர்களேயே போன்றது" என்று சொல்லிவிட்டு, ராமராவணர்களுக்கு இடையிலான அந்த யுத்தத்தைக் கண்டனர்.(52,53)

War between Rama and Ravana

பிறகு, மஹாபாஹுவும், ரகுக்களின் கீர்த்திவர்தனனுமான {புகழை அதிகரிப்பவனுமான} ராமன், குரோதத்துடன் தனுசை வளைத்து, விஷமிக்க பாம்புக்கு ஒப்பான சரம் ஒன்றை ஏவி,{54} ஜொலிக்கும் குண்டலங்களுடன் ஒளிரும் ராவணனின் சிரத்தைத் துண்டித்தான். அப்போது மூவுலகங்களும் அந்த சிரம் பூமியில் விழுவதைக் கண்டன.(54,55) இராவணனிடம், அதனையே போலத் தெரியும் மற்றொரு சிரம் உதித்தது. க்ஷிப்ரஹஸ்தனும் {விரைவான கைகளைக் கொண்டவனும்}, காரியங்களை சீக்கிரம் செய்யக்கூடியவனுமான ராமனால் அதுவும் வெட்டப்பட்டது.(56) இரண்டாம் இராவண சிரம், போரில் சாயகங்களால் வெட்டப்பட்டது. அந்த சிரம் வெட்டப்பட்ட மாத்திரத்திலேயே மீண்டும் மற்றொன்று தோன்றியது.(57) அதுவும் அசனிக்கு ஒப்பான ராமனின் சாயகங்களால் வெட்டப்பட்டது. அதேபோலவே, துல்லியமான ஒளியுடன் கூடிய நூறு சிரங்கள் வெட்டப்பட்டன[3].(58) 

[3] ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற
போய் அகன்று புரள பொரு கணை
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்தியே

- கம்பராமாயாணம் 9863ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்

பொருள்: ஒரு தலை நூறு தலைகளாக முளைக்கவும், வெகு தொலைவுக்குச் சென்று {அவை} புரளுமாறு, ஆயிரம்  போர் அம்புகள் ஓய்வில்லாமல் தொடுத்தான், ஞானத்தின் ஒப்பற்ற தலைவன் {ராமன்}, கையில் வேகத்தைச் செலுத்தியே. 

இராவணனின் ஜீவிதக்ஷயத்திற்கான அந்தம் {ராவணனின் உயிர் அழிவதற்கான முடிவு} எதனையும் காணமுடியவில்லை. அப்போது கௌசல்யானந்தவர்தனனும், வீரனும், சர்வ அஸ்திரவித்தும், பல்வேறு மார்கங்களை அறிந்தவனுமான ராகவன் {பின்வருமாறு} சிந்தனையில் ஆழ்ந்தான்:(59,60அ) "எவை மாரீசனையும், தூஷணனையும், கரனையும், கிரௌஞ்ச வனத்தில் விராதனையும், தண்டக வனத்தில் கபந்தனையும் வதம் செய்தனவோ, எவை சாலங்களையும் {சால மரங்களையும்}, கிரியையும் {மலையையும்} பங்கம் செய்தனவோ, வாலியையும், கடலையும் கலங்கச் செய்தனவோ,(60ஆ,இ) யுத்தத்தில் எனக்கு உதவினவோ அத்தகைய சர்வ சாயகங்களும் ராவணனிடம் மந்த தேஜஸ் அடைவதற்கான {வலிமை குறைவதற்கான} அந்தக் காரணம் என்ன?" {என்று சிந்தித்தான் ராமன்}.(61)

இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாலும் ராமன் போரில் விழிப்புடனும் இருந்தான். அவன் ராவணனின் மார்பில் சரவர்ஷத்தை வர்ஷித்தான் {கணை மழையைப்} பொழிந்தான்.(62) அப்போது குரோதமடைந்தவனும், ரதஸ்தனுமான ராக்ஷசேஷ்வரன் ராவணனும், ரணத்தில் கதைகளையும், முசலங்களையும் பொழிந்து ராமனைத் துன்புறுத்தினான்.(63) கொந்தளிப்புடன் கூடியதும், ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்துவதுமான அந்த மஹத்தான யுத்தம் அந்தரிக்ஷத்திலும் {வானத்திலும்}, பூமியிலும், மேலும் கிரிமூர்த்தங்களிலும் {மலையுச்சிகளிலும்} நடந்தது.(64) தேவ, தானவ, யக்ஷர்கள், பிசாசர்கள், உரகர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் சப்தராத்ரம் {இடையறாமல் ஏழு இரவு, பகல்கள்} நீடித்த அந்த மஹாயுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்[4].(65)

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு "ஸர்வராத்ரமவர்த்தத" என்பது மூலம். "ஸப்தராத்ரமவர்த்தத" என்றும் பாடம் உண்டேயாயினும் அது அழகன்று. அல்லது இதுவே அழகியதாகக் கூடும். எப்படி யென்னில் - பால்குனமாதஞ் சதுர்த்தசியினன்று {பங்குனி மாத சதுர்த்தசி திதியில்} ஹனுமான் லங்கையைக் கொளுத்தல். பூர்ணிமையினன்று ராமன் ஸமுத்ர தீரஞ் சேருதல். ப்ரதமை த்விதீயை த்ருதீயைகளில் தர்ப்பசயனம். அஷ்டமியினன்று ஸுவேலாரோஹோனம். நவமியினன்று யுத்தாரம்பம். அமாவாஸ்யையினன்று ராவண வதம். ஆகையால் "ஸப்தராத்ரம்" (ஏழு ராத்ரிகள்) என்பது சேரும்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் கொள்வது போல், "ஸர்வராத்ரமவர்த்தத" என்பதற்குப் பொருள் கொண்டால், "இரவு முழுவதும் நீடித்த போர்" என்ற பொருளை அடையலாம்.

இராத்திரியிலும் இல்லை; பகலிலும் இல்லை; ஒரு முஹூர்த்தமும் இல்லை; ஒரு க்ஷணமும் இல்லை; இராமராவணர்களுக்கு இடையிலான யுத்தம் சிறிதும் ஓய்வை அடையவில்லை {நிறுத்தப்படவில்லை}.(66) தசரதசுதனுக்கும் {தசரதனின் மகனான ராமனுக்கும்}, ராக்ஷசேந்திரனுக்கும் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனுக்கும்} இடையிலான ரணத்தில் {போரில்}, ராகவனின் ஜயத்தைக் காண விரும்பியவனும், மஹாத்மாவுமான அந்த ஸுரவரசாரதி {தேவர்களில் சிறந்த தேரோட்டியான அந்த மாதலி}, ரணத்தில் ஈடுபட்டு வரும் ராமனிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்.(67)

யுத்த காண்டம் சர்க்கம் – 107ல் உள்ள சுலோகங்கள்: 67

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை