Indra sends a chariot | Yuddha-Kanda-Sarga-102 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுக்குத் தேரை அனுப்பிய இந்திரன்; இராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; கடுமையாகத் தாக்கப்பட்ட ராவணன்...
பகைவீரர்களை அழிப்பவனான ராகவன் {ராமன்}, லக்ஷ்மணனால் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு[1], தன் தனுவை எடுத்து {கணையைப்} பொருத்தினான்.(1) சம்மு முகத்தில் {போர்முனையில்} ராவணனை நோக்கி கோரமான சரங்களை ஏவினான். பிறகு, மற்றொரு ரதத்தில் ஏறிய ராக்ஷசாதிபன் ராவணன்,{2} பாஸ்கரனிடம் ஸ்வர்பானுவைப் போல {சூரியனை நோக்கிச் செல்லும் ராகுவைப் போல}, காகுத்ஸ்தனிடம் விரைந்து சென்றான்.(2,3அ) இரதத்தில் இருந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மஹாசைலத்தில் தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல, வஜ்ரத்திற்கு ஒப்பான சரங்களால் ராமனைத் தாக்கினான்.(3ஆ,4அ) சமாஹிதத்துடன் {ஒருமுகப்படுத்திய மனத்துடன்} கூடிய ராமன், ஒளிரும் பாவகனை {அக்னியைப்} போலத் தெரிந்தவையும், காஞ்சன பூஷணங்களுடன் கூடியவையுமான {பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையுமான} சரங்களை ரணத்தில் {போரில்} தசக்ரீவன் மீது பொழிந்தான்.(4ஆ,5அ)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் இடையில் இந்த உரையாடல் வளர்பிறை பிரதமையில் நடந்தது என்று உரையாசிரியர் சொல்கிறார்" என்றிருக்கிறது.
தேவ, கந்தர்வ, கின்னரர்கள், "பூமியில் நிற்கும் ராமனுக்கும், ரதத்தில் இருக்கும் ராக்ஷசனுக்கும் இடையிலான இந்த யுத்தம் சமமானதல்ல" என்றனர்.(5ஆ,6அ)
தேவர்களில் சிறந்தவனான ஸ்ரீமான் சக்ரன் {இந்திரன்}, அவர்களின் அம்ருதமொழியைக் கேட்டபோது, மாதலியை அழைத்து இந்தச் சொற்களைச் சொன்னான்:(6ஆ,7அ) "பூமியில் நிற்கும் ரகோத்தமனிடம் {ரகுக்களில் உத்தமனான ராமனிடம்} சீக்கிரம் செல்வாயாக. பூதலத்தை அடைந்ததும், {ராமனை} அழைத்து, மஹத்தான தேவஹிதத்தை {தேவர்களுக்கான பெரும் நன்மையைச்} செய்வாயாக" {என்றான்}[2].(7ஆ,8அ)
[2] கம்பராமாயணத்தில், சிவன் சொல்லி, இந்திரன் ராமனிடம் தேருடன் மாதலியை அனுப்பி வைத்தான் என்று வருகிறது.மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றிஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர்பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர்ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைந்தான்.(9681)தேவர் அது கேட்டு இது செய்யற்கு உரியது என்றார்ஏவல் புரி இந்திரனும் அத் தொழில் இசைந்தான்மூவுலகும் முந்தும் ஓர் கணத்தின்மிசை முற்றிக்கோவில் புரிகேன் பொரு இல் தேர் கொணர்தி என்றான். (9862)- கம்ப ராமாயணம் 9861, 9862 பாடல்கள், யுத்த காண்டம், இராமன் தேர் ஏறு படலம்பொருள்: "அமரர்களே, மூண்டுள்ள இந்த போர், இன்றோடு முடிந்துவிடும். இனி வெற்றி ஆண்தகைக்குரியது {ராமனுக்குரியது}. இதுவே உண்மை. இனி நீங்கள் அச்சம் நீங்கப் பெற்றீர். மணிகளைப் பூண்டதும், வலிமைமிக்க குதிரைகள் பூட்டப்பெற்றதும், சக்கரங்களைக் கொண்டதுமான உயர்ந்த பொன் தேரினை விரைவில் {ராமனுக்கு} அனுப்புவீராக" என்று சிவன் கூறினான்.(9861) தேவர்கள் அதைக் கேட்டு, "இது செய்வதற்கு உரியது" என்றனர். {சிவன்} ஏவியதைச் செய்யும் இந்திரனும் அதைச் செய்வதற்கு இசைந்தான். "மூன்று உலகிலும் சிறப்பானதும், ஒரு கணத்தில் {மூன்று உலகங்கள்} முழுவதையும் சுற்றி வருவதுமான அதை {அந்தத் தேரை ராமனுக்கு} கோவிலாகச் செய்வேன். ஒப்பற்ற தேரைக் கொண்டு வருவாயாக" என்றான் {இந்திரன் தன் சாரதியான மாதலியிடம்}.(9862)
தேவசாரதியான மாதலி, தேவராஜன் இவ்வாறு சொன்னதும், சிரம் தாழ்த்தி {இந்திர} தேவனை வணங்கிவிட்டு, {பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(8ஆ,9அ) "தேவேந்திரரே, சீக்கிரமே சென்று, ஹரித ஹயங்களுடன் கூடிய உத்தம சியந்தனத்தை வழங்கிவிட்டு, சாரத்யத்தையும் செய்கிறேன் {பச்சைக் குதிரைகளுடன் கூடிய உயர்ந்த தேரை ராமனிடம் கொடுத்துவிட்டு, சாரதியின் கடமைகளையும் செய்கிறேன்" என்றான் மாதலி}.(9ஆ,10அ)
பிறகு, காஞ்சனச் சித்திராங்கங்களுடன் கூடியதும் {பொன்னாலான அழகிய அங்கங்களைக் கொண்டதும்}, நூறு கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும்,{10ஆ} தருணாதித்யனின் {இளஞ்சூரியனின்} ஒளியுடன் கூடிய வைடூரியமயமான கூபரத்தை {ஏர்க்காலைக்} கொண்டதும், காஞ்சனா பீடங்களுடன் {பொன்னாலான சேணங்களுடன்} கூடிய மிகச் சிறந்த பச்சை அஷ்வங்கள் {குதிரைகள்} பூட்டப்பெற்றதும்,{11} வெண்சாமரங்களுடன் கூடியதும், ஹேமஜாலங்களால் {பொன் வலைகளால்} அலங்கரிக்கப்பட்டதும், சூரியனைப் போல் ஒளிர்வதும், ருக்மவேணு துவஜத்துடன் {மூங்கில் போல் பொன்னாலான கொடிமரத்துடன்} கூடியதுமாக ஸ்ரீமான் தேவராஜனின் சிறந்த ரதம் இருந்தது.{12} தேவராஜனின் ஆணையின் பேரில், ரதத்தில் ஏறிய மாதலி, திரிவிஷ்டபாதையில் {தேவலோகப் பாதையில்} இருந்து கீழே இறங்கி, காகுத்ஸ்தனை அணுகினான்.(10ஆ-13)
அப்போது, ஸஹஸ்ராக்ஷனின் சாரதியான {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனின் தேரோட்டியான} மாதலி, சவுக்குடன் ரதத்தில் இருந்து கொண்டு, கைகளைக் கூப்பி வணங்கி, ராமனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(14) "மஹாசத்வா {பெரும் வலிமைமிக்கவனே}, காகுத்ஸ்தனே, சத்ருக்களை அழிப்பவனே, உன் விஜயத்திற்காக, இந்த ரதத்தை சஹஸ்ராக்ஷர் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரர்} உனக்கு தத்தம் செய்திருக்கிறார்.(15) ஐந்திரமான இந்த மஹாசாபமும் {இந்திரருக்குரிய இந்த பெரும் வில்லும்}, அக்னியைப் போல் ஒளிரும் கவசமும், ஆதித்யனைப் போல ஒளிரும் சரங்களும், விமலமான சிவ சக்தியும் {களங்கமற்ற மங்கல வேலும்} இருக்கின்றன.(16) வீரனே, ராஜனே, என்னை சாரதியாகக் கொண்ட இந்த ரதத்தில் ஏறி, தானவர்களை {கொன்ற} மஹேந்திரன் போல, ராக்ஷசன் ராவணனைக் கொல்வாயாக" {என்றான் மாதலி}.(17)
{மாதலியால்} இவ்வாறு சொல்லப்பட்டபோது, ராஜ்ஜியங்களுடன் கூடிய உலகத்தை லக்ஷ்மியால் {மகிமையால்} ஒளிரச் செய்பவனான ராமன், அந்த ரதத்தை வலம் வந்து வணங்கிவிட்டு, அதில் ஏறினான்.(18) மஹாபாஹுவான ராமனுக்கும், ராக்ஷசன் ராவணனுக்கும் இடையில், ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தும் வகையிலான கொந்தளிப்பான மஹாயுத்தம் நடந்தது.(19) பரமாஸ்திரவித்தான {பரம அஸ்திரங்களில் நிபுணனான} அந்த ராகவன், தைவ, காந்தர்வங்களால் {தேவாஸ்திரங்களாலும், கந்தர்வ அஸ்திரங்களாலும்} ராக்ஷச ராஜனின் தைவ, காந்தர்வங்களைத் தாக்கினான்.(20)
இராக்ஷசாதிபனான நிசாசரன், பரம குரோதமடைந்து, மீண்டும் பரம கோரமான ராக்ஷச அஸ்திரத்தை ஏவினான்.(21) இராவணனால் ஏவப்பட்டவையும், காஞ்சன பூஷணங்களுடன் கூடியவையுமான அந்த சரங்கள், மஹாவிஷங்கொண்ட சர்ப்பங்களாக மாறி, காகுத்ஸ்தனை எதிர்த்துச் சென்றன.(22) ஒளிரும் வதனங்களுடன் கூடியவையும், வாய் விரிந்தவையும், முகத்தில் இருந்து ஒளிரும் நெருப்பைக் கக்குபவையும், பயங்கரமானவையுமான அவை {அந்தச் சரங்கள்} ராமனையே நோக்கி விரைந்து சென்றன.(23) {பாம்புகளின் மன்னனான} வாசுகிக்கு சமமான ஸ்பரிசத்தையும், ஒளிரும் படங்களையும், மஹாவிஷத்தையும் கொண்ட அவை சர்வ திசைகளையும் மறைத்திருந்தன. துணைத் திசைகளும் அவற்றால் மறைக்கப்பட்டன.(24)
போரில் தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் அந்த பன்னகங்களைக் கண்ட ராமன், கோரமானதும், பயத்தை உண்டாக்குவதுமான காருத்மத அஸ்திரத்தை {கருடாஸ்திரத்தை} ஏவினான்.(25) இராகவ தனுவில் இருந்து ஏவப்பட்டவையும், ருக்மபுங்கங்களுடன் கூடியவையும், தழல்களைப் போல ஒளிர்பவையுமான அவை, சர்ப்ப சத்ருக்களான காஞ்சன சுபர்ணங்களாக {பொன்னாலான கழுகுகளாக} மாறிச் சென்றன.(26) காமரூபிகளான ராமனின் அந்தக் கணைகள், சுவர்ண ரூபங்களடைந்து {கருட வடிவம் கொண்டு}, சர்ப்ப ரூபத்தில், மஹாவேகத்துடன் பாய்ந்த அந்த சர்வ சரங்களையும் அழித்தன.(27)
இராக்ஷசாதிபன் ராவணன், தன் அஸ்திரம் கலங்கடிக்கப்பட்டதால் குரோதமடைந்தபோது, ராமன் மீது கோரமான சரவிருஷ்டியை {கணைமழையைப்} பொழிந்தான்.(28) களைப்பின்றி காரியங்களைச் செய்பவனான ராமனை ஆயிரம் சரங்களால் துன்புறுத்தியபிறகு, சர ஓகங்களை {கணை வெள்ளத்தை} மாதலியின் மேல் ஏவினான்.(29) இராவணன், ஒற்றை சரத்தால் குறிபார்த்து, கேதுவை {கொடியைத்} துண்டித்தான். இரதத்தின் மத்தியில், ரதத்தின் இருக்கையின் அருகில் இருந்த காஞ்சனக் கேதுவையும் {பொற்கொடியையும்} வெட்டி வீசிவிட்டு,{30} இந்திரனின் குதிரைகளையும் சரஜாலங்களால் ராவணன் தாக்கினான்.(30,31அ)
மனச் சோர்வடைந்த தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், சாரணர்கள் ஆகியோரும்,{31ஆ} சித்தர்களும், பரமரிஷிகளும் ராமன் தாக்கப்படுவதைக் கண்டனர். விபீஷணனுடன் சேர்ந்த வானரேந்திரர்களும் துயரமடைந்தனர்.{32} அவர்கள் ராவணராஹுவால் விழுங்கப்படும் ராமச்சந்திரனைக் கண்டனர் {ராஹுவால் விழுங்கப்படும் சந்திரனைப் போல ராவணனால் தாக்கப்படும் ராமனைக் கண்டனர்}.(31ஆ-33அ) புதன், சசியின் {சந்திரனின்} பிரியையும், பிரஜாபத்யம் கொண்டவளுமான {படைப்பின் தலைவனான பிரம்மனுக்குரியவளுமான} ரோஹிணி நக்ஷத்திரத்தைத் தீண்டி, பிரஜைகளுக்கு அசுபங்களை {தீமைகளை} விளைவிப்பவனாக நின்றான்.(33ஆ,34அ) அப்போது சாகரம், எரிவதைப் போலவும், புகையுடன் புரண்டு கொந்தளிக்கும் அலைகளுடன், குரோதத்தில் திவாகரனைத் தொட்டுவிடுவதைப் போலவும் உயர எழுந்தது.(34ஆ,35அ) திவாகரன், சஸ்திர வர்ணத்தையும், மந்தக் கதிர்களையும், கபந்தத்தை அங்கமாகவும் {தலையில்லாத முண்டத்தை அடையாளமாகவும்} கொண்டும், தூமகேதுவுடன் இணைந்தும் கடுமையாகக் காணப்பட்டான்.(35ஆ,36அ) அங்காரகன் {செவ்வாய்}, அம்பரத்தில் {வானத்தில்}, ஐந்திர, அக்னி தைவதங்களுக்கும் {இந்திர, அக்னி தேவர்களுக்கும்}, கோசலர்களுக்கும் {ராமன் பிறந்த இக்ஷ்வாகு குலத்தின் கோசல மன்னர்களுக்கும்} உரியதுமான விசாக நக்ஷத்திரத்தில் தெளிவாக நின்றான்.(36ஆ,37அ)
பத்து முகங்களுடனும், சராசனத்தை {வில்லை} இறுகப்பற்றியிருந்த இருபது புஜங்களுடனும் கூடிய தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மைநாக பர்வதத்தைப் போலத் தெரிந்தான்.(37ஆ,38அ) இராக்ஷசன் ராவணனால் தாக்கப்பட்ட ராமனால், ரணமூர்த்தத்தில் தன் சாயகங்களை {கணைகளை வில்லில்} பொருத்த முடியவில்லை.(38ஆ,39அ) குரோதத்துடன் கூடிய அவன் {ராமன்}, சற்றே கண்கள் சிவந்தவனாக, புருவங்களைச் சுருக்கி, {பார்வையாலேயே} ராக்ஷசர்களை எரித்து விடுவதைப் போன்ற மஹாகுரோதத்தை அடைந்தான்[3].(39ஆ,40அ)
[3] தேசிராஜுஹனுமந்தராவ் - கேஎம்கே மூர்த்தி பதிப்பில், இதற்குப் பிறகு 71ம் சுலோகம் வரை இந்த சர்க்கம் நீள்கிறது. ஏற்கனவே 88ம் சர்க்கத்தின் 2ம் அடிக்குறிப்பில் கண்டது போல இந்தப் பதிப்பு, யுத்தகாண்டத்தில் மொத்தம் 128 சர்க்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில் இந்த 39ம் சுலோகத்துடன் இந்த சர்க்கம் நிறைவடைகிறது. அதேபோல, மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகிய பதிப்புகளிலும், தமிழ்ப்பதிப்புகள் அனைத்திலும், இது வரையுள்ள பகுதி 103ம் சர்க்கமாகவும், இதற்குப் பிறகு வரும் 40 முதல் 71 வரையுள்ள சுலோகங்கள் 104ம் சர்க்கமாகவும் வருகின்றன. இந்தப் பதிப்புகளில் யுத்தகாண்டம் மொத்தம் 131 சர்க்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. மற்றபடி உள்ளடக்கத்தில் இவற்றுக்குள் வேறுபாடுகள் பெரிதும் இல்லை. சர்க்கங்களின் எண்ணிக்கை மட்டுமே கூடுகிறது. யுத்தகாண்டத்தில் மொத்தம் 116 சர்க்கங்களையே கொண்ட செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பிலும் இந்த சர்க்கம் 90, 91 என இரண்டு சர்க்கங்களாகவே இருக்கிறது. இருப்பினும், இந்த 71 சுலோகங்களும் இராமன், இராவணனுக்கிடையிலான போரையே மையமாகக் கொண்டிருப்பதால் தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பே இங்கே பின்பற்றப்பட்டிருக்கிறது. வேறு பதிப்புகளை ஒப்பிட்டால், அங்கே இதற்கு மேல் வரப்போகிற சர்க்கங்களின் எண்ணிக்கையில் 2 சர்க்கங்கள் கூடுதலாக வரும்.
குரோதத்துடன் கூடிய அந்த மதிமிக்க ராமனின் வதனத்தைக் கண்டு, சர்வ பூதங்களும் அச்சமடைந்தன; மேதினியும் நடுங்கினாள்.(40ஆ,41அ) சிம்ம, சார்தூலங்களுடனும், அசையும் மரங்களுடனும் கூடிய சைலங்கள் நடுங்கின. சரிதாம்பதியான {நதிகளின் கணவனான} சமுத்திரனும் கலக்கமடைந்தான்.(41ஆ,இ) கடும் ஒலியுடன் கூடிய பறவைகளும், அடர்ந்த மேங்கங்களும் கடும் உத்பாதங்களை தெரிவிக்கும் வகையில் முழங்கியவாறே ககனமெங்கும் {வானமெங்கும்} திரிந்தன.(42) இராமன் கடுங்குரோதத்துடன் இருப்பதையும், பயங்கர உத்பாதங்களையும் கண்ட சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} அஞ்சின. இராவணனும் பயத்தை அடைந்தான்.(43)
விமானத்தில் அமர்ந்திருந்த தேவர்களும், கந்தர்வர்களும், மஹா உரகர்களும், ரிஷி, தானவ, தைத்தியர்களும், கேசரர்களான கருத்மந்தர்களும் {வான் வீரர்களான கருடர்களும்},{44} அப்போது, உலகத்தின் முடிவில் நடப்பதைப் போல, நானாவித பயங்கர ஆயுதங்களுடன் உறுதியாகப் போரிடுபவர்களும், சூரர்களுமான அவ்விருவருக்கிடையிலான யுத்தத்தைக் கண்டனர்.(44,45) மோதலைக் காண வந்த சர்வ ஸுராஸுரர்களும், மஹத்தான யுத்தத்தைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்து, அப்போது பக்தியுடன், {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார்கள்.(46) அங்கே வந்த அஸுரர்கள், "ஜயமடைவாயாக" என்று தசக்ரீவனிடம் கூறினர். தேவர்கள், "நீ ஜயமடைவாயாக" என்று மீண்டும் மீண்டும் ராமனிடம் கூறினர்.(47)
இதற்கிடையில் குரோதத்துடன் கூடிய அந்த ராவணன், ராகவனைத் தாக்கும் விருப்பத்தில் மஹத்தான ஆயுதம் ஒன்றைத் தீண்டினான்.{48} வஜ்ரத்தின் சாரத்தைக் கொண்டதும், மஹாநாதத்தை எழுப்பக்கூடியதும், சர்வ சத்ருக்களையும் அழிக்கவல்லதும், சைல சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} ஒப்பானதும், கூர்முனைகளுடன் கூடியதும், கற்பனை செய்தாலும், கண்டாலும் பயத்தை உண்டாக்குவதும்,{49} தூமம் போன்றதும் {புகையைப் போன்ற நிறத்தைக் கொண்டதும்}, கூர்மையானதும், யுகாந்த அக்னிக்கு {யுக முடிவில் தோன்றும் நெருப்புக்கு} ஒப்பானதும், அதி ரௌத்திரமானதும், அணுகுதற்கரியதும், காலனாலும் வெல்வதற்கரியதும்,{50} சர்வ பூதங்களையும் {உயிரினங்கள் அனைத்தையும்} அச்சுறுத்துவதும், எதையும் பயங்கரமாகப் பிளக்கவல்லதுமான சூலத்தை, ரோஷத்தில் எரிபவனைப் போல ராவணன் எடுத்தான்.(48-51)
சமரில் ராக்ஷசசூரர்களுடன் கூடிய அனீகங்களால் {துருப்புகளால்} சூழப்பட்ட வீரியவான் {ராவணன்}, பரமக் குரோதத்துடன் அந்த சூலத்தை மத்தியில் பிடித்து எடுத்தான்.(52) அந்த மஹாகாயன் {பேருடல் படைத்த ராவணன்}, ரோஷத்தால் கண்கள் சிவந்து, துள்ளியெழுந்து, தன் சைனியத்தை யுத்தத்தில் உற்சாகப்படுத்தி பைரவநாதம் செய்தான் {பயங்கரமாக கர்ஜித்தான்}.(53) இராக்ஷசேந்திரனின் பயங்கர சப்தத்தைக் கேட்ட போது, பிருத்வியும், அந்தரிக்ஷமும் {பூமியும், வானமும்}, திசைகளும், அதே போல துணைத்திசைகளும் நடுங்கின.(54) அதிகாயனான {பேருடல் படைத்தவனான} அந்த துராத்மாவின் அந்த நாதத்தால் சர்வ பூதங்களும் அச்சமடைந்தன. சாகரமும் கலக்கமடைந்தது.(55)
மஹாவீரியனான அந்த ராவணன், அந்த மஹத்தான சூலத்தை எடுத்துக் கொண்டு, மஹாநாதம் செய்தபடியே, {பின்வருமாறு} ராமனிடம் கடுமையாகப் பேசினான்:(56) "இராமா, என்னால் ரோஷத்துடன் உயர்த்தப்பட்டதும், வஜ்ரத்தின் சாரத்தைக் கொண்டதுமான இந்த சூலம், பிராதாவைத் துணைவனாகக் கொண்ட உன் பிராணன்களைப் பறிக்கப் போகிறது.(57) இரணசிலாகியான {போரைப் போற்றுகிறவனான} நான், இதோ சம்மு முகத்தில் {போர்முனையில்} உன்னை வேகமாகக் கொன்று, கொல்லப்பட்ட ராக்ஷச சூரர்களுக்கு சமமாக்கப் போகிறேன்.(58) இராகவா, நிற்பாயாக. இத்தகைய நான் இதோ இந்த சூலத்தால் உன்னைக் கொன்று விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, அந்த ராக்ஷசாதிபன், அந்த சூலத்தை ஏவினான்.(59)
மின்னல் மாலையால் மறைக்கப்பட்டதும், அஷ்டகண்டங்களுடன் {எட்டு மணிகளுடன்} மஹாநாதம் எழுப்புவதுமான அது {அந்த சூலம்} ராவணனின் கரத்தில் இருந்து ஏவப்பட்டு, வானத்தை அடைந்து ஒளிர்ந்தது.(60)
வீரியவானான ராகவராமன், கோர தரிசனத்துடன் எரியும் அந்த சூலத்தைக் கண்டு, தன் சாபத்தை {வில்லை} வளைத்து, கணைகளை ஏவினான்.(61) யுகாந்தத்தில் எழும் அக்னியை வாசவனின் ஜல ஓகம் போல, ராமன், தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் அதை {அந்த சூலத்தைத்} தன் சர ஓகத்தால் {கணை வெள்ளத்தால்} தடுத்தான்.(62) இராமனின் கார்முகத்திலிருந்து வந்த அந்த பாணங்களை, ராவணனின் அந்த மஹத்தான சூலம், பதங்கங்களை பாவகன் போல {விட்டிற்பூச்சிகளை எரிக்கும் நெருப்பைப் போல} எரித்தது.(63) சூலத்தின் ஸ்பரிசம் பட்டதும் அந்தரிக்ஷத்திலேயே சூர்ணமாகி பஸ்மமான அந்த சாயகங்களைக் கண்டு {வானத்திலேயே பொடியாகி சாம்பலான அந்த கணைகளைக் கண்டு} ராகவன் குரோதமடைந்தான்.(64)
இரகுநந்தனனான {ரகு குலத்தவரின் மகிழ்ச்சிக்குரியவனான} அந்த ராகவன், வாசவனின் சம்மதத்துடன் மாதலியால் கொண்டுவரப்பட்ட அந்த சக்தியை {வேலாயுதத்தைப்} பரமக் குரோதத்துடன் எடுத்தான்.(65) கண்டங்களால் {மணிகளால்} ஒலிக்கப்பெற்ற அந்த சக்தி பலவானால் {ராமனால்} உயர்த்தப்பட்டதும், யுகாந்தத்தில் தோன்றும் உல்கத்தை {எரிகொள்ளியைப்} போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது.(66) அஃது ஏவப்பட்டதும், அந்த ராக்ஷசேந்திர சூலத்தின் மீது பாய்ந்தது. மஹாசூலம், சக்தியால் பிளக்கப்பட்டு, ஒளியிழந்து கீழே விழுந்தது.(67)
அப்போது ராமன், கூர்மையானவையும், வேகத்துடன் கூடியவையும், நேராகச் செல்பவையுமான பாணங்களை தூணியில் இருந்து எடுத்து, மஹாவேகமிக்க அவனது ஹயங்களைத் துளைத்தான்.(68) பிறகு, பரம ஆயத்தத்துடன் கூடிய ராகவன், ராவணனின் மார்பில் கூர்மையான சரங்களாலும், நெற்றியில் மூன்று கணைகளாலும் துளைத்தான்.(69) சம்முவின் மத்தியில் சர்வ அங்கங்களும் சரங்களால் துளைக்கப்பட்டு, காத்திரங்களில் சோணிதம் வழிந்த அந்த ராக்ஷசேந்திரன், முற்றும் மலர்ந்த அசோகத்தைப் போல ஒளிர்ந்தான்.(70) அப்போது சமாஜத்தின் {கூட்டத்தின்} மத்தியில் அந்த நிசாசரேந்திரன், ராமனின் பாணங்களால் காத்திரங்களில் கடுங்காயம் அடைந்தான். குருதி வழியும் காத்திரங்களுடன் துக்கத்தில் மூழ்கியவன் கடுங்குரோதமடைந்தான்.(71)
யுத்த காண்டம் சர்க்கம் – 102ல் உள்ள சுலோகங்கள்: 71
Previous | | Sanskrit | | English | | Next |