Ravana killed | Yuddha-Kanda-Sarga-108 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கொல்ல ராமனைத் தூண்டிய மாதலி; ராவணனின் இதயத்தைத் துளைத்த பிரம்மாஸ்திரம்; தேரில் இருந்து இறந்து விழுந்த ராவணன்...
அப்போது மாதலி ராகவனுக்கு {பின்வருமாறு} நினைவூட்டினான், "வீரா, அறியாதவனைப் போல, நீ ஏன் இவனைப் பின்தொடர்கிறாய்?(1) பிரபோ, இவனை வதம் செய்ய பிதாமகனின் {பிரம்மனின்} அஸ்திரத்தை நீ ஏவுவாயாக. எது ஸுரர்களால் முன்னறிவிக்கப்பட்டதோ, அந்த விநாசகாலம் {அழிவுக்காலம்} இதோ வாய்த்திருக்கிறது" {என்றான் மாதலி}.(2)
இராமன், மாதலியின் அந்த வாக்கியத்தால் நினைவூட்டப்பட்டபோது, பெருமூச்சு விடும் உரகத்தை {பாம்பைப்} போல ஒளிரும் அந்த சரத்தை எடுத்தான்.{3} எது அமோகமானதோ {வீண்போகாததோ}, பிரம்மனால் {இந்திரனுக்கு} தத்தம் செய்யப்பட்டதோ, அது யுத்தத்தில் பிரதமமாக {முதலிலேயே} பகவான் அகஸ்திய ரிஷியால் அந்த வீரியவானுக்கு {ராமனுக்குக்} கொடுக்கப்பட்டிருந்தது.(3,4) அமிதௌஜசனான {அளவிலா வலிமை கொண்டவனான} பிரம்மனால் இந்திரனின் அர்த்தத்திற்காக பூர்வத்தில் நிர்மிதம் செய்யப்பட்ட அது, திரிலோகங்களையும் ஜயங்கொள்ள விரும்பிய ஸுரபதிக்கு பூர்வத்திலேயே தத்தம் செய்யப்பட்டிருந்தது {மூவுலகங்களையும் வெல்ல விரும்பிய தேவர்களின் மன்னனான இந்திரனுக்கு முன்னமே கொடுக்கப்பட்டிருந்தது}.(5)
அதன் இறகுகளில் பவனனும் {வாயுவும்}, நுனியில் பாவகனும், பாஸ்கரனும் {அக்னியும், சூரியனும்} இருந்தனர். கௌரவத்தில் {பளுவில்} மேருவும், மந்தரமும் இருந்தன. அதன் சரீரம் ஆகாசமயமாக இருந்தது.(6) நல்ல புங்கங்களுடன் கூடியதும், ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதுமான அது, சர்வ பூதங்களின் தேஜஸ்ஸினாலும், பாஸ்கரனின் ஒளியினாலும் ஒளிரும் உடலுடன் செய்யப்பட்டது.(7) காலாக்னியைப் போல எரிவதும், தூமத்துடன் {புகையுடன்} கூடியதும், விஷமிக்க பாம்புக்கு ஒப்பானதுமான அது, நர, நாக, அஷ்வக் கூட்டங்களை {மனிதக் கூட்டங்களையும், யானைக் கூட்டங்களையும், குதிரைக் கூட்டங்களையும்} பிளப்பதில் சீக்கிரமாகக் காரியமாற்றக் கூடியது.(8)
துவாரங்களையும் {நுழைவாயில்களையும்}, பரிகங்களையும், கிரிகளையும் {மலைகளையும்} கூடப் பிளக்கக்கூடியதுமான அது, கொழுப்புப் படிந்து, நானாவித உதிரங்களால் பூசப்பெற்று பயங்கரத் தோற்றமளித்தது.(9) வஜ்ரத்தின் சாரத்தைக் கொண்டதும், மஹாநாதத்துடன் கூடியதும், நானாவித சமிதிகளை {கூட்டங்களை / படையைப்} பிளக்கக்கூடியதுமான அது, பெருமூச்சுவிடும் பன்னகத்தை {பாம்பைப்} போல அனைவருக்கும் அச்சமூட்டக் கூடியது.(10) பருந்துகள், கழுகுகள், நாரைகள், நரிக்கூட்டங்கள், ராக்ஷசர்கள் ஆகியோருக்கு நித்யம் உணவளிக்கும் அது, யுத்தத்தில் யமரூபத்தில் பயத்தை விளைவிப்பது.(11) வானரர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவல்லதும், ராக்ஷசர்களை அழிக்கவல்லதுமான அது, கருத்மதனின் {கருடனின்} விதவிதமான அழகிய இறகுகள் பூட்டப்பட்ட கணையைக் கொண்டது.(12)
உலகங்களில் உத்தமமானதும், இக்ஷ்வாகுக்களின் பயத்தை நாசம் செய்யவல்லதும், பகைவரின் கீர்த்தியை அபகரிக்கவல்லதும் {புகழைப் பறிக்கவல்லதும்}, சுயத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பதுமான{13} அந்தப் பெரும் கணையை அப்போது மஹாபலவானான ராமன் எடுத்தான். பலவானான அவன், விதிப்படி அபிமந்திரித்துத் தன் கார்முகத்தில் அதைப் பொருத்தினான்.(13,14) இராகவனால் அந்த உத்தம சரம் பொருத்தப்பட்டபோது, சர்வபூதங்களும் அச்சமடைந்தன; வசுந்தரை அதிர்ந்தது.(15) குரோதமடைந்த அவன் {ராமன்}, குவிந்த கவனத்துடன் கார்முகத்தை {வில்லை} நன்றாக வளைத்து, மர்மங்களைப் பிளக்கக்கூடிய அந்த சரத்தை ராவணன் மீது ஏவினான்.(16) வஜ்ரிபாஹுவால் {இந்திரனால்} ஏவப்பட்ட வஜ்ரத்தைப் போல வெல்வதற்கரியதும், தடுப்பதற்கரிய கிருதாந்தத்தைப் போன்றதுமான {முடிவைக் கொண்டு வர வல்லதுமான} அது ராவணனின் மார்பில் பாய்ந்தது.(17) மஹாவேகத்தில் ஏவப்பட்டதும், சரீரத்தை அழிக்கவல்லதுமான அந்த சரம், துராத்மாவான அந்த ராவணனின் ஹிருதயத்தைப் பிளந்தது[1].(18)
[1] ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால்ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புறவாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. (9897)அக்கணத்தின் அயன் படை ஆண்தகைசக்கரப் படையோடும் தழீஇச் சென்றுபுக்கது அக்கொடியோன் உரம் பூமியும்திக்கு அனைத்தும் விசும்பும் திரிந்தவே. (9898)- கம்பராமாயணம் 9897, 9898ம் பாடல்கள், யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்பொருள்: பெரும் சக்கரவாள மலைக்கு அப்புறத்துக்கு அப்புறம் நீர் நிறைந்த வலிய பெருங்கடலுக்கும் வெளியே பாய்ந்து, ஊழிக் காலத்து சூரியனும் மின்மின் எனும் அளவில் {அந்த பிரம்மாஸ்திரத்தின்} கொடிய ஒளி பேரிருளை அகற்றியது. (9897) அக்கணத்தில் அயன்படை {அந்த பிரம்மாஸ்திரம்} ஆண்களிற் சிறந்தவனின் {ராமனின்} சக்கரப் படையுடனே தழுவிச் சென்று அந்தக் கொடியவனின் {ராவணனின்} மார்பில் நுழைந்தது. பூமியும், திக்குகளும், வானமும் நிலைகலங்கின. (9898)
சரீரத்தை அழிக்கவல்ல அந்த சரம், வேகமாக ராவணனின் பிராணனைப் பறித்து, உதிரத்தால் நனைக்கப்பட்டதாக தரணீதலத்தில் நுழைந்தது.(19) இராவணனைக் கொன்று, உதிரத்தில் நனைந்த அந்த சரம், தன் கர்மத்தை நிறைவேற்றியபின், அவனது தூணிக்குள் மீண்டும் நுழைந்து அமைதியடைந்தது.(20) ஜீவிதத்திலிருந்து பிரிக்கப்பட்டு {உயிர் நீக்கப்பட்டு}, கொல்லப்பட்டவனது {ராவணனின்} கைகளில் இருந்து சாயகத்துடன் கூடிய கார்முகம், பிராணனுடன் {கணையுடன் கூடிய வில், உயிருடன்} சேர்ந்து விரைந்து விழுந்தது.(21) பயங்கர வேகம் கொண்டவனும், பேரொளி படைத்தவனுமான நைர்ருதேந்திரன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணன்}, வஜ்ரத்தால் தாக்கப்பட்ட விருத்திரன் எப்படியோ, அப்படியே உயிரிழந்து சியந்தனத்திலிருந்து {தேரில் இருந்து} பூமியில் விழுந்தான்.(22)
நாதனை இழந்தவர்களும், கொல்லப்படாமல் எஞ்சியவர்களுமான நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, அவன் பூமியில் விழுவதைக் கண்டு, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் ஓடினர்.(23) மரங்களைக் கொண்டு யுத்தம் செய்த வானரர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் தாக்கினர். தசக்ரீவ வதத்தைக் கண்ட வானரர்கள் தங்களை வெற்றியாளர்களாக உணர்ந்தனர்.(24) வானரர்களால் தாக்கப்பட்டவர்கள், {தங்களைக்} கட்டுப்படுத்தியவன் கொல்லப்பட்டதால், பயத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணீர் வழியும் கருணைக்குரிய முகங்களுடன் லங்கைக்குச் சென்றனர்.(25) வெற்றியை உணர்ந்தபோது, பெரும் மகிழ்ச்சியடைந்த வானரர்கள், ராகவஜயத்தையும், ராவணனின் வதத்தையும் {ராமனின் வெற்றியையும், ராவணன் கொல்லப்பட்டதையும்} அறிவித்துக் கூச்சலிட்டனர்.(26)
அப்போது, அந்தரிக்ஷத்தில் சௌமியமான திரிதசதுந்துபிகள் {வானத்தில் தேவர்களின் முரசுகள் மென்மையாக} எதிரொலித்தன. அங்கே திவ்ய கந்தத்தைச் சுமந்தபடி, நல்ல சுகமான மாருதம் வீசியது {தெய்வீக மணத்துடன் கூடிய இனிய தென்றல் அங்கே வீசியது}.(27) அப்போது அந்தரிக்ஷத்திலிருந்து பூமியை நோக்கி ராகவனின் ரதத்தின் மேல் மனோஹரமானதும், அடைதற்கரியதுமான புஷ்பவிருஷ்டி பெய்தது {மனத்தைக் கொள்ளை கொள்ளும் அடைதற்கரிய மலர்மாரி பொழிந்தது}.(28) இராகஸ்தவத்துடன் ககனத்தில் {ராமனைப் போற்றும் துதியுடன் வானத்தில்} மஹாத்மாக்களான தேவர்கள், "நன்று, நல்லது" என்று சொன்ன சிறந்த வாக்கு கேட்கப்பட்டது.(29) சர்வலோக பயங்கரனான ரௌத்திரன் ராவணன் கொல்லப்பட்டபோது, சாரணர்களும், தேவர்களும் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(30)
இராக்ஷசபுங்கனைக் கொன்றபோது, சுக்ரீவன், அங்கதன், விபீஷணன் ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்றியதில் ராகவன் பிரீதியடைந்தான்.(31) அப்போது மருத்கணங்கள் நிம்மதி அடைந்தனர். திசைகள் ஒளிர்ந்து, ஆகாசம் விமலமானது {வானம் தெளிவடைந்தது}. மஹீ {பூமி} நடுங்காதிருந்தது. மாருதம் {காற்று} வீசியது. திவாகரனும், ஸ்திரமான பிரபையைக் கொண்டவனானான் {சூரியன் பிரகாசித்தான்}.(32) அப்போது, மகிழ்ச்சியடைந்த சுக்ரீவ, விபீஷண, அங்கதர்களும், லக்ஷ்மணனும், நண்பர்கள் சூழ, ரணத்தில் விஜயத்துடன் அழகாய் விளங்கும் ராமனை அணுகி, விதிப்படி அவனைப் பூஜித்தனர்.(33) இரகுகுல நிருபனந்தனனும், ரிபுவைக் கொன்றவனும், ஸ்திரப்ரதிஜ்ஞனும், மஹாதேஜஸ்வியுமான அவன் {ரகு குலத்தின் மன்னன் தசரதனை மகிழ்ச்சியடையச் செய்பவனும், பகைவனைக் கொன்றவனும், ஏற்ற உறுதிமொழியில் திடமாக இருப்பவனும், பெருங்காந்தியுடையவனுமான ராமன்} ரணத்தில் சொந்த ஜனங்களாலும், பலத்தாலும் {படையாலும்} சூழப்பட்டவனாக மஹேந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(34)
யுத்த காண்டம் சர்க்கம் – 108ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |