Protents | Yuddha-Kanda-Sarga-106 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தீய சகுனங்களைக் கண்ட ராவணன்; இராமனின் வெற்றியை முன்னறிவிக்கும் வகையில் தோன்றிய நற்சகுனங்கள்...
பகைவரின் சைனியத்தை அழிக்கக்கூடியதும், கந்தர்வ நகரத்தைப் போன்ற வடிவம் கொண்டதும், சிறந்த பதாகைகளை {கொடிகளை} வரிசையாகக் கொண்டதுமான அந்த ரதம் சாரதிக்கு மகிழ்ச்சியை அளித்தது.{1} ஹேம மாலைகளுடன் கூடிய மிகச் சிறந்த வாஜிகள் {பொன்மாலைகளுடன் கூடிய மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதும், யுத்த உபகரணங்களால் பூரணமடைந்ததும், பதாகைகள் {கொடிகள்}, துவஜங்களால் {கொடிமரங்களால்} அலங்கரிக்கப்பட்டதும்,{2} ஆகாசத்தை விழுங்கிவிடுவதைப் போல் செல்வதும், வசுந்தரையை நாதம் செய்ய வைத்ததும் {பூமியை முழங்க வைத்ததும்}, பகைவரின் சைனியங்களை அழிக்ககூடியதும், சொந்த சைனியத்திற்கு மகிழ்ச்சி அழிப்பதுமான{3} ராவணனின் ரதத்தை சாரதி சீக்கிரமாகச் செலுத்தினான். (1-4அ)
மஹாதுவஜத்துடனும், {மணிகள் எழுப்பும்} ஸ்வனத்துடனும் விரைந்து வந்த{4ஆ} அந்த ராக்ஷச ராஜனின் {ராவணனின்} ரதத்தை நரராஜன் {மனிதர்களின் மன்னனான ராமன்} கண்டான். கருப்பு வாஜிகள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், ரௌத்திரமான ஒளியுடன் ஒளிர்வதும்,{5} சூரிய ஒளி கொண்ட விமானம் போல ஆகாசத்தில் ஒளிர்வதும், மின்னல் போன்ற பதாகைகளுடன் {கொடிகளுடன்} கூடியதும், அழகிய இந்திராயுதப் பிரபையுடன் {வானவில்லின் பிரகாசத்துடன்} கூடியதுமாக அஃது இருந்தது.(4ஆ-6) மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல, சரமாரிகளைப் பொழியும் மேகமாக வரும் சத்ருவின் ரதத்தைக் கண்டு,{7} வஜ்ரத்தால் தாக்கப்பட்டு வெடிக்கும் கிரிக்கு {மலைக்கு} ஒப்பான ஸ்வனத்தை வெளியிடும் தன் தனுவை பாலசந்திரனின் வடிவில் {பிறைவடிவில்} வேகமாக வளைத்து,{8} சஹஸ்ராக்ஷனின் {இந்திரனின்} சாரதியான மாதலியிடம் ராமன் {பின்வருமாறு} சொன்னான்:(7-9அ) "மாதலியே, சீற்றத்துடன் வரும் ரிபுவின் ரதத்தை {பகைவனின் தேரைப்} பார்ப்பீராக.{9ஆ} அவன் மீண்டும் மஹத்தான வேகத்துடன், சமரில் தன்னை அழித்துக் கொள்ளும் முடிவுடன் அப்பிரதக்ஷிணமாக {வலமிருந்து இடமாக} வருகிறான்.(9ஆ,10) எனவே, கவனமாக ரிபுவின் ரதத்தை {பகைவனின் தேரை} எதிர்த்துச் செல்வீராக. மேகத்தை விரட்டி வீசும் வாயுவைப் போல நான் இவனை அழிக்க விரும்புகிறேன்.(11) களைப்பின்றியும், கலவரமின்றியும், கலங்காத ஹிருதயத்துடனும், சிதறாத பார்வையுடனும், லகான் கயிறுகளை இழுத்து விடுவதில் முழுமையான கட்டுப்பாட்டுடனும் துரிதமாக ரதத்தைச் செலுத்துவீராக.(12) புரந்தரனின் {இந்திரனின்} ரதத்தைச் செலுத்திப் பழகிய உமக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஒரு முகமாகக் குவிந்த கவனத்துடன் யுத்தத்தில் ஈடுபடப்போகும் நான், உமக்கு நினைவூட்டுகிறேனேயன்றி அவற்றை சிக்ஷிக்கவில்லை {உமக்குக் கற்பிக்கவில்லை" என்றான் ராமன்}.(13)
உத்தம ஸுர சாரதியான {தேவர்களில் சிறந்த தேரோட்டியான} அந்த மாதலி, ராமனின் அந்த வாக்கியத்தால் நிறைவடைந்தவனாக ரதத்தைச் செலுத்தினான்.(14) பிறகு, வலது புறமாக ராவணனின் மஹாரதத்தைக் கடந்து, சக்கரத்தால் எழுந்த புழுதியில் ராவணனை மறைத்தான்.(15) அப்போது குரோதமடைந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, தாமிரம் போல் சிவந்த கண்களை அகலவிரித்து, தன் ரதத்தை எதிர்த்து வந்த ராமனை சாயகங்களால் {கணைகளால்} தாக்கினான்.(16) தாக்குதலால் தூண்டப்பட்ட ரோஷத்துடன், தைரியத்தையும் அடைந்த ராமன், யுத்தத்தில் மஹாவேகம் கொண்ட ஐந்திர சராசனத்தை {இந்திரனின் வில்லை} எடுத்தான்.(17) மஹாவேகம் கொண்டவையும், சூரியனின் கதிர்களுக்கு சமமான பிரபையைக் கொண்டவையுமான சரங்களையும் எடுத்தான். அன்யோன்யம் வதம் செய்ய விரும்புகிறவர்களான அவ்விருவருக்குமிடையில் அந்த மஹத்தான யுத்தம் தொடங்கியது.{18} அவர்கள் செருக்குடன் கூடிய சிங்கங்களைப் போலப் பரஸ்பரம் {ஒருவரையொருவர்} எதிர்த்தனர்.(18,19அ)
அப்போது, கந்தர்வர்கள், சித்தர்கள், பரமரிஷிகளுடன் கூடிய தேவர்கள், ராவணனின் அழிவை விரும்பி, அவ்விரு ரதிகர்களையும் {தேர்வீரர்களான ராமராவணர்கள் இருவரையும்} காண வந்தனர்.(19ஆ,20அ) பிறகு, ராவணனின் நாசத்தையும், ராகவனின் எழுச்சியையும் குறிக்கும் பயங்கர உத்பாதங்கள் ரோமஹர்ஷணத்தை உண்டாக்கும் வகையில் தோன்றின.(20ஆ,21அ)
இராவணனின் ரதத்தின் மீது தேவர்கள் உதிரத்தைப் பொழிந்தனர். வாதம் {காற்று} அபஸவ்யமாக {வலமிருந்து இடமாக} தீவிரமாக வீசியது.(21ஆ,22அ) நபஸ்தலத்தில் {வானத்தில்} திரியும் மஹத்தான கிருத்ரகுலம் {கழுகுக்கூட்டம்}, அவனது ரதம் எந்தெந்த பாதையில் சென்றதோ, ஆங்காங்கே பின்தொடர்ந்தது.(22ஆ,23அ) ஜபாபுஷ்பங்களால் {செம்பரத்தை மலர்களால்} நிறைந்ததைப் போல, லங்கை, சந்தியையால் {மாலை வேளையின் செவ்வொளியால்} சூழப்பட்டிருந்தது. பகலிலும் வசுந்தரை எரிவதைப் போலத் தெரிந்தது.(23ஆ,24அ) இடியுடன் கூடிய மஹா உல்கங்கள் மஹாஸ்வனத்துடன் {பெரும் எரிகொள்ளிகள் பேரொலியுடன்} விழுந்தன. இராவணனுக்கு அஹிதத்தை {தீமையை} அறிவித்த அவற்றால் ராக்ஷசர்கள் கவலையடைந்தனர்.(24ஆ,25அ) எங்கே ராவணன் இருந்தானோ, அங்கே வசுந்தரை நடுங்கினாள். போரிடும் ராக்ஷசர்களின் கைகள் கட்டப்பட்டவையாகத் தோன்றின.(25ஆ,26அ)
இராவணனின் முன்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, கருப்பு நிறத்தில் விழுந்த சூரியக் கதிர்கள், பர்வதத்தின் தாதுக்களைப் போலத் தெரிந்தன.(26ஆ,27அ) கழுகுகளால் பின்தொடரப்பட்ட நரிகள், தங்கள் முகங்களில் தீப்பிழம்புகளைக் கக்கியபடியே அவனது முகத்தைப் பார்த்து, மங்கலமற்ற வகையில் சீற்றத்துடன் ஊளையிட்டன.(27ஆ,28அ) புழுதியைக் கிளப்பிய வாயு, ரணத்தில் அந்த ராக்ஷசராஜனின் {ராவணனின்} பார்வையை மறைத்துப் பிரதிகூலமாக {அவனுக்கு எதிராக} வீசியது.(28ஆ,29அ) மேகங்கள் இல்லாமலேயே, கோரமான இந்திராசனிகள் {இடிகள்} பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்வனத்துடன், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனது சைனியத்தின் மீது விழுந்தன.(29ஆ,30அ) சர்வ திசைகளும், உபதிசைகளும் இருளால் மறைக்கப்பட்டன. மஹத்தான புழுதிமழையால் நபமும் {வானமும்} காண்பதற்கரிதானது.(30ஆ,31அ)
நூற்றுக்கணக்கான சாரிகைகள் {சாரிகப் பறவைகள் / மைனாக்கள்}, தங்களுக்குள் கோரமான கலகம் செய்து {சண்டையிட்டுக் கொண்டு}, ரதத்தை நோக்கி கூச்சலிட்டபடியே பயங்கரமான ஒலிகளுடன் அங்கே விழுந்தன.(31ஆ,32அ) அவனது துரகங்கள் {குதிரைகள்}, தங்கள் பின்பக்கங்களில் தீப்பிழம்புகளையும், நேத்திரங்களில் {கண்களில்} கண்ணீரையும், அக்னிக்குத் துல்லியமான நீரையும் தொடர்ந்து வெளியிட்டன.(32ஆ,33அ) இராவணனுக்கு நாசத்தையும், பயத்தையும் விளைவிக்கும் வகையிலான ஏராளமான உத்பாதங்கள் அங்கே பயங்கரமாக எழுந்தன.(33ஆ,34அ)
இராமனின் ஜயத்தை {வெற்றியை} அறிவிக்கும் சௌமியமான, மங்கலமான நிமித்தங்கள் {சகுனங்கள்} பூதங்களுக்கு {உயிரினங்களுக்கு} வெளிப்படும் வகையில் அனைத்துப் பக்கங்களிலும் தோன்றின.(34ஆ,35அ) தன் ஜயத்திற்கான சௌமியமான நிமித்தங்களைக் கண்ட ராகவன், "ராவணன் என்னால் ஹதம் செய்யப்பட்டான்" என்று நினைத்துப் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(35ஆ,36அ) பிறகு, நிமித்தகோவிதனான {சகுனங்களை நன்கறிந்தவனான} ராகவன், ரணத்தில் தன் அனுபவத்தில் நிமித்தங்களைக் கண்டு, மகிழ்ச்சியடைந்து, பெரும் உற்சாகத்துடன் அதிக விக்ரமத்தை வெளிப்படுத்தி யுத்தம் செய்தான்.(36ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 106ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |