Saturday, 6 September 2025

மஹோதர வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 097 (38)

Mahodara killed | Yuddha-Kanda-Sarga-097 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனுக்கும், மஹோதரனுக்கும் இடையிலான போர்; மஹோதரனைக் கொன்ற சுக்ரீவன்...

Fight between Sugreeva and Mahodara

பெரும்போரில் அன்யோன்யம் கொன்று வந்த பலங்கள் {படைகள்}, பெருங்கோடையில் சரஸ்களை {பொய்கைகளைப்} போலப் பெரிதும் {அளவில்} குறைந்தன.(1) இராக்ஷசாதிபன் ராவணன், தன் பலம் {படை} அழிந்ததாலும், விரூபாக்ஷனின் வதத்தாலும் இரட்டிப்புக் கோபம் கொண்டான்.(2) யுத்தத்தில் வலீமுகர்களால் {குரங்குகளால்} வதைக்கப்பட்டுக் குறைந்து போன தன் பலத்தை {படையின் அளவைக்} கண்டும், தைவவிபர்யயத்தை {தெய்வம் எதிராகச் செயல்படுவதை / விதி தலைகீழாக மாறுவதைக்} கண்டும் அவன் வேதனை அடைந்தான்.(3)

சமீபத்தில் நின்றிருந்த அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} மஹோதரனிடம், “மஹாபாஹோ, இந்தக் காலத்தில், என் ஜய ஆசை {வெற்றிக்கான என் விருப்பம்} உன்னிலேயே இருக்கிறது.(4) வீரா, சத்ரு சம்முவை {பகைவரின் படையை} அழித்து, உன் பராக்கிரமத்தை இப்போது காட்டுவாயாக. தலைவனின் பிண்டத்திற்கு {தலைவன் இட்ட உணவுக்குக்} கைம்மாறு செய்ய இதுவே காலமாகும். நன்றாக யுத்தம் செய்வாயாக” {என்றான் ராவணன்}.(5)

இவ்வாறு சொல்லப்பட்ட மஹோதரன், ராக்ஷசேந்திரனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு, பாவகத்திற்குள் பதங்கத்தை {நெருப்புக்குள் விட்டிற்பூச்சியைப்} போல அந்த அரிசேனைக்குள் {பகைவரின் படைக்குள்} பிரவேசித்தான்.(6) தேஜஸ்வியான அந்த மஹாபலவான், தலைவனின் வாக்கியத்தால் தூண்டப்பட்டு, தன் வீரியத்தால் வானரர்களை கதனம் செய்ய {அழிக்கத்} தொடங்கினான்.(7) மஹாசத்வர்களான {பெரும் வலிமைமிக்கவர்களான} அந்த வானரர்களும், பெரும்பாறைகளை எடுத்துக் கொண்டு பயங்கரமான அரிபலத்திற்குள் {பகைவரின் படைக்குள்} பிரவேசித்து, சர்வ ராக்ஷசர்களையும் கொன்றனர்.(8)

பெரும்போரில், பெருங்குரோதமடைந்த மஹோதரன், காஞ்சன பூஷணங்களுடன் {பொன்னலங்காரத்துடன்} கூடிய சரங்களால் வானரர்களின் கைகளையும், கால்களையும் துண்டித்தான்.(9) அப்போது ராக்ஷசர்களால் கடுமையாகத் துன்புற்ற அந்த சர்வ வானரர்களிலும், சிலர் பத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றனர்; சிலர் சுக்ரீவனை ஆசரித்தனர் {சுக்ரீவனை அண்டி அவனைப் பின்தொடர்ந்தனர்}.(10) சுக்ரீவன், சமரில் பங்கமடையும் {முறியடிக்கப்படும்} வானரர்களின் மஹாபலத்தை {பெரும்படையைக்} கண்ட பின்னர், மஹோதரனை நோக்கி விரைந்து சென்றான்.(11) 

மஹாதேஜஸ்வியான ஹரீஷ்வரன் {பேராற்றல் வாய்ந்தவனும், குரங்குகளின் தலைவனுமான சுக்ரீவன்}, கோரமானதும், மஹீதரத்திற்கு {மலைக்கு} சமமானதுமான பெரும்பாறையை எடுத்துக் கொண்டு, அவனை வதைப்பதற்காக {மஹோதரனைக் கொல்வதற்காக அதை} வீசியெறிந்தான்.(12) மஹோதரன், விரைந்து பாயும் அந்தப் பாறையைக் கண்டபோது, கலக்கமடையாமல், அணுகுதற்கரிய அதைத் தன் பாணங்களால் பிளந்தான்.(13) அந்த ராக்ஷசனின் பாண ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} நூறு துண்டுகளாக்கப்பட்ட அது, சிதறுண்ட கழுகுக்கூட்டத்தைப் போல பூமியில் விழுந்தது.(14) 

அந்தப் பாறை பிளக்கப்பட்டதைக் கண்டு குரோதத்தில் மூர்ச்சித்த சுக்ரீவன், சாலத்தை {அங்கே இருந்த ஆச்சா மரம் ஒன்றைப்} பிடுங்கி, ரணமூர்த்தத்தில் அந்த ராக்ஷசன் மீது வீசினான்.(15) பரபலார்தனனான அந்த சூரன் {பகைவரின் படையை அழிப்பவனும், சூரனுமான மஹோதரன்}, சரங்களால் அதைத் துளைத்தபோது குரோதமடைந்தவன் {சுக்ரீவன்}, புவியில் கிடக்கும் பரிகம் ஒன்றைக் கண்டான்.(16) ஒளிரும் அந்தப் பரிகத்தை அவனுக்குச் சுழற்றிக் காட்டியவன் {சுக்ரீவன்}, உக்கிர வேகத்துடன் அந்தப் பரிகத்தைக் கொண்டு அவனது உத்தம ஹயங்களை {மஹோதரனின் சிறந்த குதிரைகளைக்} கொன்றான்.(17) 

வீர ராக்ஷசனான அந்த மஹோதரன், ஹயங்கள் கொல்லப்பட்ட அந்த மஹாரதத்தில் இருந்து கீழே குதித்து, குரோதத்துடன் கதையை {கதாயுதத்தைக்} எடுத்துக் கொண்டான்.(18) மின்னலுடன் கூடிய மேகங்களைப் போல கதை, பரிகம் ஆகியவற்றைக் கைகளில் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், காளைமாடுகள் இரண்டைப் போல முழங்கியவாறே யுத்தம் செய்தனர்.(19) அப்போது ரஜனீசரனான {இரவுலாவியான} மஹோதரன், சுக்ரீவனிடம் குரோதமடைந்து, பாஸ்கரனின் {சூரியனின்} ஒளியுடன் கூடிய  ஜுவலிக்கும் கதையை அவன் மீது வீசினான்.(20) மஹாபலவானான சுக்ரீவன், கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும்போரில் தன் மேல் விழப்போகும் அந்த மஹாகோரமான கதையைத் தாக்கினான்.{21} ஹரீஷ்வரன் தன் பரிகத்தால் அந்த கதையைத் தாக்கவும், அவனது பரிகம் கதையால் நொறுக்கப்பட்டு பூதலத்தில் விழுந்தது.(21,22)

பிறகு, தேஜஸ்வியான சுக்ரீவன், எங்கும் ஹேமத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதும், கோரமானதும், இரும்பாலானதுமான முசலம் {உலக்கை} ஒன்றை வசுதாதலத்தில் {தரையில்} இருந்து எடுத்துக் கொண்டான்.(23) அவன் அதைத் தூக்கி எறிந்தான். அவனும் {மஹோதரனும் மற்றொரு} கதையை அவன் மீது வீசினான். அன்யோன்யம் மோதிக்கொண்ட அவையிரண்டும் {முசலமும், கதையும்} நொறுங்கி மஹீதலத்தில் {தரையில்} விழுந்தன.(24) 

ஆயுதங்கள் முறிந்ததும் தேஜோ பலம் நிறைந்தவர்களும், ஒளிரும் இரண்டு ஹுதாசனங்களை {நெருப்புகளைப்} போன்றவர்களுமான அவ்விருவரும் தங்கள் முஷ்டிகளைக் கொண்டு மோதிக் கொண்டனர்.(25) மீண்டும் மீண்டும் நாதம் செய்த அவ்விருவரும், அன்யோன்யம் மோதிக் கொண்ட பிறகு, உள்ளங்கைகளால் அன்யோன்யம் அறைந்து கொண்டு மஹீதலத்தில் விழுந்தனர்.(26) விரைவாக குதித்தெழுந்த பிறகு, தங்கள் புஜங்களால் அன்யோன்யம் தள்ளிக் கொண்டே பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர்.(27) 

பரந்தபர்களான {பகைவரை அழிப்பவர்களான} அவ்விரு வீரர்களும் பாஹுயுத்தத்தில் {மல்யுத்தத்தில்} சோர்வடைந்தனர். அப்போது மஹாவேகமுடைய ராக்ஷசன் மஹோதரன், அருகில் கிடந்த கேடயத்தையும் கட்கத்தையும் {வாளையும்} எடுத்துக் கொண்டான்.(28,29அ) அதேபோல வானரசிரேஷ்டனான சுக்ரீவன், கேடயத்தோடு விழுந்து கிடந்த மஹாகட்கத்தை {பெரும் வாளை} எடுத்துக் கொண்டான்.(29ஆ,30அ) பிறகு, ரணத்தில் சஸ்திர விசாரதர்களான அவர்கள் {போரில் ஆயுதங்களில் நிபுணர்களான மஹோதரனும், சுக்ரீவனும்}[1], கோபத்தால் அங்கங்கள் நிறைந்தவர்களாக, கத்திகளை உயர்த்திக் கொண்டு மகிழ்ச்சி நாதம் செய்தபடியே எதிர்த்துச் சென்றனர்.(30ஆ,31அ) ஜயத்தில் குவிந்த எண்ணங்களுடன் கூடிய அவ்விருவரும், அன்யோன்யம் பெருங்குரோதமடைந்து, விரைவாக வலமாகச் சுற்றி வந்தனர்.(31ஆ,32அ) 

[1] இந்தப் போரில் சில சமயங்களில் வானரர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். யுத்த காண்டம் 70ம் சர்க்கத்தில் ஹனுமான் திரிசிரசின் தலையை வாளால் வீழ்த்தி அவனைக் கொல்வது அதிலொன்று. அதே சர்க்கத்தில் ரிஷபன் மஹாபார்ஷ்வனை கதாயுதத்தைக் கொண்டு கொல்வது மற்றொன்று. யுத்த காண்டம் 76ம் சர்க்கத்தில் அங்கதன் சோணிதாக்ஷனை வாளால் கொல்கிறான். இந்த இரண்டு சர்க்கங்களில் மட்டுமே வானரர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தியது சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் ராக்ஷசர்களின் ஆயுதங்களையே வானரர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கோ சுக்ரீவனையும் சஸ்திர விசாரதன் {ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணன்} என்று சொல்வது இந்த சர்க்கத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. வானரர்களில் எவரும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள் என்று ராமாயணத்தின் ஆறு சர்க்கங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சூரனும், துர்மதியைக் கொண்டவனும், தன் வீரியத்தை சிலாகித்துக் கொள்பவனும், மஹாவேகம் கொண்டவனுமான அந்த மஹோதரன், அந்தக் கட்கத்தைப் பெருங்கேடயத்தில் வீசினான்.(32ஆ,33அ) அவன் {மஹோதரன் கேடயத்தில்} பாய்ந்திருந்த கட்கத்தை பிடித்திழுக்கும்போது, சிரஸ்திராணம் {தலைப்பாகை}, குண்டலங்களுடன் கூடிய மஹோதரனின் சிரத்தைத் தன் கட்கத்தால் அவன் {சுக்ரீவன்} வெட்டினான்[2].(33ஆ,34அ) சிரம் வெட்டப்பட்டவன் மஹீதலத்தில் விழுந்ததைக் கண்ட பின்னர் ராக்ஷசேந்திரனின் பலம் {ராவணனின் படை} அங்கே நிலைத்திருக்கவில்லை.(34ஆ,35அ) 

[2] மேற்கண்ட 1ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டது போல, ஆயுதத்தைப் பயன்படுத்தி போரிட்டு வானரர்கள் ராக்ஷசர்களை வென்ற சந்தர்ப்பங்கள்: ஹனுமான் திரிசிரஸை வாளால் வெட்டியது ஒன்று, ரிஷபன் மஹாபார்ஷ்வனை கதையால் அடித்துக் கொன்றது இரண்டு, அங்கதன் சோணிதாக்ஷனை வாளால் கொன்றது மூன்று, இப்போது இங்கே சுக்ரீவன் மஹோதரனை வாளால் வெட்டிக் கொல்வது நான்கு.

அவனைக் கொன்ற ஹரி {குரங்கான சுக்ரீவன்} வானரர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி நாதம் செய்தான். தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்} கோபமடைந்தான். ராகவன் மகிழ்ச்சியாகத் தெரிந்தான்.(35ஆ,36அ) சர்வ ராக்ஷசர்களும் விசன்ன வதனர்களாக மனம் சோர்ந்தனர். பயத்தால் பீடிக்கப்பட்ட உள்ளங்களுடன் கூடிய அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர்.(36ஆ,37அ) சூரியாத்மஜன் {சூரியனின் மகனான சுக்ரீவன்}, ஏகதேசம் மஹாகிரியின் நொறுங்கிய ஒரு பகுதியைப் போன்ற அந்த மஹோதரனை பூமியில் வீசிவிட்டு, அணுகுதற்கரிய, சொந்த தேஜஸ்ஸுடனும் கூடிய சூரியனைப் போல அங்கே மகிமையில் ஒளிர்ந்தான்.(37ஆ,இ) அப்போது, மஹாத்மாவான வானரேந்திரன், சமர்முகத்தில் விஜயத்தை அடைந்ததைக் கண்ட ஸுர {தேவ}, சித்த, யக்ஷ சங்கங்களும் {கூட்டங்களும்}, அவனிதலத்தில் இருந்த பூதசங்கங்களும் {பூமியில் இருந்த உயிரினக் கூட்டங்களும்} பெரும் மகிழ்ச்சியடைந்தன.(38)

யுத்த காண்டம் சர்க்கம் – 097ல் உள்ள சுலோகங்கள்: 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை