Akampana killed | Yuddha-Kanda-Sarga-056 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அகம்பனனுக்கும், ஹனுமானுக்கும் இடையில் நடந்த பெரும்போர்; அகம்பனனைக் கொன்ற ஹனுமான்...
அகம்பனன், யுத்தத்தில் வானரசத்தமர்களால் {வலிமைமிக்க வானரர்களால்} செய்யப்பட்ட அந்த மஹத்தான கர்மத்தைக் கண்டு, தீவிரமான கோபத்தால் பீடிக்கப்பட்டான்.(1) சத்ருக்களின் கர்மத்தைக் கண்டு, குரோதத்தில் மூர்ச்சித்த ரூபத்துடன், தன் பரம கார்முகத்தை {கோபத்தில் மெய்மறந்த வடிவத்துடன், தன் பெரும் வில்லை} அசைத்தபடி சாரதியிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) “சாரதியே, பலவான்களான இவர்கள், ரணத்தில் {வானரர்கள், போரில்} ஏராளமான ராக்ஷசர்களைக் கொல்வதெங்கேயோ, அங்கே ரதத்தைத் துரிதமாகச் செலுத்துவாயாக.(3) பலவான்களும், பயங்கரக் கோபம் கொண்டவர்களுமான இந்த வானரர்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு, அதோ என் முன் நிற்கின்றனர்.(4) சமரில் சிலாகித்துக் கொள்ளும் {தற்புகழ்ச்சி செய்யும்} இவர்களைக் கொல்ல நான் இச்சிக்கிறேன். இவர்கள் சர்வ ராக்ஷச பலத்தையும் {படையையும்} சிதைப்பதாகத் தெரிகிறது” {என்றான் அகம்பனன்}.(5)
பிறகு, இரதிக்களில் {தேர்வீரர்களில்} சிறந்தவனான அகம்பனன், வேகமான அஷ்வங்களால் {குதிரைகளால்} இழுக்கப்படும் ரதத்தில் சென்று, தூரத்தில் இருந்தே, தன் சரஜாலங்களால் ஹரிக்களை {கணை வலைகளால் குரங்குகளைத்} தாக்கினான்.(6) போரில் நிலைநிற்க முடியாத வானரர்களால் தாக்குப்பிடிக்கவே முடியவில்லை எனும்போது, எப்படி யுத்தம் செய்ய முடியும்? அகம்பனனின் சரங்களால் பங்கமடைந்த அவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.(7)
மஹாபலவானான ஹனுமான், தன் ஞாதிகள், மிருத்யுவின் {தன் உற்றார் உறவினர், மரணதேவனின்} வசமடைவதைப் போல, அகம்பனனின் வசத்தில் சிக்கியதைக் கண்டு அவர்களை அணுகினான்.(8) வீரர்களான அந்தப் பிலவகரிஷபர்கள் {தாவிச் செல்பவர்களில் சிறந்தவர்கள்} அனைவரும், அந்த மஹாபிலவகனை {தாவிச் செல்பவர்களில் பெரியவனான ஹனுமானைக்} கண்டு, ஒன்றாகக் கூடி, அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(9) பிலவக ரிஷபர்களான {தாவிச் செல்பவர்களில் காளைகளான} அவர்கள், துணிவுடன் நிற்கும் ஹனூமந்தனைக் கண்டு, அவனது பலத்தை ஆசரித்து {ஹனுமானின் பலத்தில் கொண்ட நம்பிக்கையில்} தாங்களே பலவான்கள் ஆகினர்.(10)
அகம்பனன், சைலத்தை {மலையைப்} போல உறுதியாக நின்று கொண்டிருந்த ஹனூமந்தன் மீது, மஹேந்திரனைப் போல சரத் தாரைகளால் {கணை மழையால்} தாக்கினான்.(11) அந்த மஹாபலவான் {ஹனுமான்}, பாண ஓகங்களால் {கணை வெள்ளத்தால்} சரீரம் சிதைக்கப்பட்டாலும், அதைக் குறித்துச் சிந்தியாமல், அகம்பனன் வதத்திலேயே மனத்தைச் செலுத்தினான்.(12) மஹாதேஜஸ்வியும், மாருதாத்மஜனுமான {வாயுவின் மைந்தனுமான} அந்த ஹனுமான், சிரித்துக் கொண்டே மேதினியை நடுங்கச் செய்து, அந்த ராக்ஷசனை நோக்கிப் பாய்ந்தோடினான்.(13) தேஜஸ்ஸில் ஒளிர்ந்தபடியும், நாதம் செய்தபடியும் இருந்த அவனது ரூபம், எரியும் விபாவசுவின் {நெருப்பைப்} போல வெல்வதற்கரியதாக மாறியது.(14) ஆயுதமேதுமற்றவனாகத் தன்னை அறிந்த ஹரிபுங்கவன் {குரங்குகளில் முதன்மையான ஹனுமான்}, குரோதத்தால் நிறைந்து, வேகமாக ஒரு சைலத்தை {மலையைத்} தூக்கினான்.(15)
வீரியவானான அந்த மாருதி {வாயு மைந்தன் ஹனுமான்}, மஹா சைலத்தை ஒரே கையால் தூக்கி, மஹாநாதம் செய்தபடியே அதைச் சுழற்றத் தொடங்கினான்.(16) பிறகு, பூர்வப் போரில், புரந்தரன் {முன்னர் நடந்த போரில், இந்திரன்}, வஜ்ரத்துடன் நமுசியை எப்படியோ, அப்படியே அந்த ராக்ஷசேந்திரன் அகம்பனனை நோக்கி விரைந்து சென்றான்.(17) உயர்த்தப்பட்ட அந்த கிரிசிருங்கத்தைக் கண்ட அகம்பனனும், தூரத்தில் இருந்தே அர்த்தச்சந்திர மஹா பாணங்களை ஏவினான்.(18) ஹனுமான், ராக்ஷச பாணங்களால் பிளக்கப்பட்டு, ஆகாசத்தில் இருந்து துண்டுகளாக கீழே விழும் அந்தப் பர்வத உச்சியைக் கண்டு குரோதத்தில் மூர்ச்சித்தான்.(19)
கோபமும், செருக்கும் கொண்ட அந்த ஹரி {குரங்கான ஹனுமான்}, மஹா கிரியைப் போன்ற அஷ்வ கர்ணத்தை {அஷ்வகர்ண மரத்தை} அணுகி விரைவாக அதை வேருடன் பிடுங்கினான்.(20) பெரும்பலவானான அவன் மஹாஸ்கந்தங்களுடன் {பெருங்கிளைகளுடன்} கூடிய அந்த அஷ்வ கர்ணத்தை எடுத்து, இறுகப் பற்றிக் கொண்டு, பெரும் பிரீதியுடன் சிரித்துக் கொண்டே அதைச் சுழற்றி பூதலத்தில் வீசினான்.(21) பரம குரோதத்துடன் ஓடிச் சென்ற ஹனுமான், மரங்களை முறித்துத் தனது சரணங்களால் பூமியைப் பிளந்தான்.(22) மதிமிக்கவனான ஹனுமான், கஜங்களையும் {யானைகளையும்}, கஜங்களின் மீது ஏறியிருந்தவர்களையும், தேர்களையும், அதில் இருந்த சாரதிகளையும், ராக்ஷசர்களின் பயங்கரமான காலாட்படையையும் தாக்கினான்.(23)
குரோதத்தால் நிறைந்தவனும், மரங்களைக் கொண்டு பிராணன்களை அபகரிப்பவனான அந்த ஹனூமந்தனை அந்தகனைப் போலக் கண்டு ராக்ஷசர்கள் ஓடினார்கள்.(24) வீரனான அகம்பனன், ராக்ஷசர்களை அச்சுறுத்தும் வகையில், குரோதத்துடன் விரைந்து வரும் அவனை {ஹனுமானைக்} கண்டு, பெரிதும் கலக்கமடைந்து, பெரும் நாதம் செய்தான்.(25) அந்த அகம்பனன், கூரியவையும், தேகத்தைப் பிளக்கவல்லவையுமான பதினான்கு பாணங்களால், மஹாவீரியம் கொண்ட ஹனூமந்தனைத் துளைத்தான்.(26) இவ்வாறு பலமுறை சரமழையால் தைக்கப்பட்டவனும், வீரனுமான அந்த ஹனுமான், அப்போது, மரங்களுடன் கூடிய மலையைப் போலத் தெரிந்தான்.(27) மஹாவீரியனும், மஹாகாயனுமான மஹாபலவான் {பேருடல் படைத்தவனும், பெரும் பலமிக்கவனுமான ஹனுமான்}, புஷ்பித்த அசோகத்துக்கு {அசோக மரத்துக்கு} ஒப்பாகவும், தூமமற்ற பாவகனை {புகையற்ற நெருப்பைப்} போலவும் ஒளிர்ந்தான்.(28)
பிறகு, உத்தம வேகம் கொண்டவனாக, வேறொரு விருக்ஷத்தை {மரத்தை} வேருடன் பிடுங்கி, ராக்ஷசேந்திரனான அகம்பனனின் சிரசில் {தலையில்} விரைவாக அடித்தான்.(29) மஹாத்மாவான அந்த வானரேந்திரன் {ஹனுமான்}, குரோதத்துடன் வீசிய விருக்ஷத்தால் ஹதம் செய்யப்பட்ட அந்த ராக்ஷசன் {அகம்பனன்} மரித்து விழுந்தான்.(30)
இராக்ஷசேந்திரனான அந்த அகம்பனன், பூமியில் மாண்டு கிடப்பதைக் கண்ட சர்வ ராக்ஷசர்களும், நிலநடுக்கத்தில் உள்ள மரங்களைப் போலக் கலக்கமடைந்தனர்.(31) தோல்வியடைந்த அந்த ராக்ஷசர்கள் அனைவரும், திகிலடைந்தவர்களாக, அந்த வானரர்களால் விரட்டப்படுபவர்களாக ஆயுதங்களைக் கைவிட்டு, லங்கையை நோக்கி ஓடினர்.(32) கேசம் {தலை முடி} அவிழ்ந்து, குழப்பமடைந்து, மானபங்கமடைந்து, தோல்வியடைந்து அங்கங்கள் முழுவதும் வியர்வையால் நனைந்து, பெருமூச்சு விட்டபடியே அவர்கள் ஓடினர்.(33) பயத்தால் மயங்கியவர்களாக, அன்யோன்யம் உரசிக் கொண்டும், மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டும், அவர்கள் நகரத்திற்குள் நுழைந்தனர்.(34)
அந்த ராக்ஷசர்கள் லங்கைக்குள் பிரவேசித்ததும், மஹாபலவான்களான சர்வ ஹரயர்களும் {குரங்குகளும்} ஒன்றுகூடிச் சென்று, ஹனூமந்தனைப் பூஜித்தனர்.(35) சத்வசம்பன்னனான {வலிமைமிக்கவனான} அந்த ஹனுமானும், மகிழ்ச்சியடைந்து அந்த ஹரிக்கள் {குரங்குகள்} அனைவரையும் பதிலுக்குப் பூஜித்தான்.(36) வெற்றியடைந்த ஹரயர்கள் {குரங்குகள்}, தங்கள் வலிமைக்குத் தக்க கூச்சலிட்டபடியே, அங்கே பிராணனுடன் எஞ்சியிருந்த ராக்ஷசர்களை மீண்டும் இழுத்தனர்.(37)
போரில் ராக்ஷசர்களைக் கொன்ற மஹாகபியான அந்த மாருதி {வாயு தேவனுக்குப் பிறந்த பெருங்குரங்கான ஹனுமான்}, அமித்ரனும் {பகைவனும்}, பயங்கரனும், பலவானுமான மஹாஸுரனைப் படை முனையில் கொன்ற விஷ்ணுவைப் போல, வீர சோபையுடன் ஒளிர்ந்தான்.(38) அப்போது, அதிபலவானான ராமனுடனும், லக்ஷ்மணனுடனும் தாமே வந்த தேவகணங்களும், அதேபோல, சுக்ரீவனை முன்னிட்டுக் கொண்டு வந்த பிலவங்கமர்களும் {தாவிச் செல்பவர்களான குரங்குகளும்}, அதேபோல, மஹாபலவானான விபீஷணனும் அந்தக் கபியை {குரங்கான ஹனுமானை} பூஜித்தனர்.(39)
யுத்த காண்டம் சர்க்கம் – 056ல் உள்ள சுலோகங்கள்: 39
Previous | | Sanskrit | | English | | Next |